|
ஜெனீவாவில் இடம்பெற்ற சிறிலங்கா அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகள் தெளிவானதொரு இராஜதந்திர வெற்றியைப் பெற்றுக்கொண்டனர் என்பதில் சந்தேகமில்லை.
யுத்தநிறுத்த உடன்பாட்டை நிராகரித்து வந்த மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை யுத்த நிறுத்த விதிகளுக்கு உட்பட்டதானதொரு இணக்கப்பாட்டிற்குக் கொண்டுவந்தமை மூலம் இவ் வெற்றி பெறப்பட்டது.விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த உடன்பாட்டை அமுலாக்கம் செய்யும் விடயத்தில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் சிறிலங்கா அரச தரப்புக்குழு பேச்சுவார்த்தை ஆரம்பித்தபோதிலும் சரி, பேச்சுவார்த்தை மேசையிலும் சரி, பேச்சுவார்த்தை முடிவுற்ற வேளையிலும் சரி தீவிரமாக முயன்றது என்பதே நிதர்சனமாகும். பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் தொடக்கவுரை ஆற்றிய அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவரான நிமால் சிறிபால டி சில்வா, சிறிலங்கா அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்த உடன்பாடானது சிறிலங்காவின் அரசியல் யாப்பிற்கு விரோதமானது. நாட்டின் பாதுகாப்பிற்கும், இறைமைக்கும் கேடானது எனத் தனது உரையில் தெரிவித்தார். இதே சமயம் பேச்சுவார்த்தை மேசையில் அரச தரப்பில் கலந்து கொண்ட சட்டத்தரணி எச்..எல்.டி.சில்வா இவ் யுத்த நிறுத்த உடன்பாடானது சிறிலங்கா அரசியல் யாப்பிற்குட்பட்டதல்ல. இத்தகையதொரு உடன்பாடு சனாதிபதியால் ஒப்பமிடப்படும்போதே அங்கீகாரம் பெற்றதாகும். அவ்வாறில்லாத நிலையில் சட்டபூர்வமானதல்ல எனத் தீவிரமாக வாதிட்டுக்கொண்டிருந்தார். மூன்றாவதாக இருநாள் பேச்சுவார்த்தை முடிவில் கூட்டறிக்கை தயாரிக்க முற்படுகையில் 'யுத்த நிறுத்த உடன்பாடு" என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதைச் சிறிலங்கா அரச குழுவினர் தீவிரமாக எதிர்த்தனர். 'யுத்த நிறுத்தம்" என்ற தொடரையே பயன்படுத்தவேண்டும் என அவர்கள் வாதிட்டனர். அரச தரப்பினரின் இத்தகைய நிலைப்பாடு காரணமாக ஜெனீவாப் பேச்சுக்கள் திட்டமிட்டதற்கும் மாறாக மூன்று மணிநேரம் தாமதமாகவே முடிவிற்கு வந்தது. அதாவது அரசாங்கத்தரப்பினர் யுத்த நிறுத்த உடன்பாட்டை வலுவிழக்கச் செய்வதில் தம்மாலான முயற்சிகள் அனைத்தையும் இயன்றவரை செய்தார்கள் என்பதே நிதர்சனமானதாய் இருந்தது. சிறிலங்கா அரச தரப்பு கூறிக் கொள்வது போன்று 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி சிறிலங்கா அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்பாடானது அரசியல் யாப்பிற்குட்பட்டதா? இல்லையா? என்பது ஆரம்பம் முதலே சிங்களத்தரப்பில் ஒரு தரப்பினரால் எழுப்பப்படும் கேள்வி ஒன்றாகவே இருந்து வருகின்றது. இது தொடர்பாக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டும் உள்ளது. இவர்கள் தமது அரசியல் இருப்பு, தேவை என்பனவற்றிற்காக இக்கேள்விகளை எழுப்புகின்ற போதும் இது முடிவற்று நீடித்துச்செல்வதாகவுமே உள்ளது. ஆனால் இவ் உடன்பாடு சிறிலங்கா அரசியல் யாப்பிற்குட்பட்டதா? இல்லையா? என்பது ஒரு புறமிருக்க சிறிலங்கா அரசால் நடைமுறையில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கு இரு உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்ட முடியும். இதில் முதலாவதாக, இவ் உடன்பாட்டை சிறிலங்காவின் பிரதமராக இருந்த- அதாவது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ரணில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்டிருந்தார் என்பது. இதன் மூலம் பெரும்பான்மை பெற்ற அரசாங்கம் உடன்பாட்டை அங்கீகரித்திருந்தது என்பது. அத்தோடு நாட்டின் சனாதிபதியாகவும், முப்படைகளின் தளபதியாகவும் இருந்த சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இது அரசியல் யாப்பிற்கு விரோதமானது என்றோ இவ் உடன்பாட்டினை தனது உடன்பாடு இன்றி அமுலாக்கம் செய்ய முடியாது என நிராகரிக்கவோ இல்லை என்பது. அதாவது அதியுயர் அதிகாரபீடத்தில் இருந்தவரும், உடன்பாட்டை நிராகரிக்கவில்லை. இரண்டாவது ஆழிப்பேரலை மீள்கட்டுமானப்பணிக்கென உருவாக்கப்பட்ட பொதுக்கட்டமைப்பை அரசியல் யாப்பிற்கு விரோதமானதெனத் தீர்ப்பளித்த சிறிலங்கா உயர் நீதிமன்றம், யுத்த நிறுத்த உடன்பாடு அரசியல் யாப்பிற்குட்பட்டதென தனது தீர்ப்பில் குறிப்பிட்டமையாகும். ஆகையினால் இவ் உடன்பாடானது சிறிலங்காவின் அதியுயர் பீடங்களான பிரதமர், சனாதிபதி, உயர்நீதிமன்றம் ஆகியவற்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதென்பது வெளிப்படையானது. இந்நிலையில் இவ் யுத்த நிறுத்த உடன்பாடு அரசியல் யாப்பிற்குட்பட்டதா இல்லையா? என்பதெல்லாம் விவாதத்திற்குரியதொரு விடயம் அல்ல. இது ஒரு புறமிருக்க சிறிலங்கா அரசாங்கத்துடன் யுத்த நிறுத்த உடன்பாடு செய்துகொண்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கம் சிறிலங்கா அரசின் அரசியல் யாப்பிற்கோ, சட்டதிட்டங்களுக்கோ உட்பட்டதுமல்ல, கட்டுப்பட்டதுமல்ல. அது சிறிலங்கா அரசியல் யாப்பை உதறித்தள்ளித் தமிழ் மக்களுக்கென தனியானதொரு ஆட்சி அதிகாரத்தை உருவாக்குவதற்காகப் போராடும் அமைப்பாகும். இவ் அமைப்பு சிறிலங்கா ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதானதொரு உடன்பாட்டில் கையொப்பம் இட வேண்டும் என்பதோ, அவ் அமைப்பு கையொப்பமிட்ட உடன்பாடு சிறிலங்கா அரசியல் யாப்பிற்குட்பட்டதா இல்லையா என ஆராய்வதோ சிறுபிள்ளைத்தனமானதாகும். ஏனெனில் சிறிலங்கா அரசியல் யாப்பை ஏற்காததொரு அமைப்புடன் அவ் அரசியல் யாப்பிற்கு உடன்பட்டதானதொரு உடன்பாட்டை எவ்வாறு செய்ய முடியும்? விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று தமிழர் தாயகப்பிரதேசத்தில் 70 சதவீதம் வரையிலான நிலப்பிரதேசத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. அங்கு புதிய அரசு ஒன்றிற்கான அடித்தளத்தை இட்டு நிர்வகித்தும் வருகின்றது. இவை யாவுமே சிறிலங்காவின் இறையாண்மைக்கும், அதன் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும், அரசியல் யாப்பிற்கும் மாறானவை என்பது வெளிப்படையானது. இதனைத்தவிர வடக்கு-கிழக்கில் தனது கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பினர் தமது அரசின் அதிகாரத்தை நிலை நிறுத்த முடியாதவாறு அப்பகுதிகளைப் புலிகள் பாதுகாத்தும் வருகின்றனர். அதாவது இலங்கையின் ஒரு பகுதி சிறிலங்கா அரசின் ஆயுதப்படையினரின் பாதுகாப்பில், கட்டுப்பாட்டில் இருப்பதாக இல்லை. அங்கு சிறிலங்கா அரசின், ஆட்சி அதிகாரம் செல்லுபடியானதாயும் இல்லை. இந்நிலையில் சிறிலங்கா அரசின் அரசில் யாப்பைப் பாதுகாப்பதற்காக இதுவரை பெற்றுக் கொண்ட ஆதாயத்தையும் விடுதலைப் புலிகள் அமைப்பு உதறித்தள்ளிவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரும் என்றா எதிர்பார்க்க முடியும்.? அது மட்டுமன்றி இலங்கை இனப் பிரச்சினைக்கு எத்தகையதொரு தீர்வு எட்டப்படுவதாயினும் இது தற்போது நடைமுறையில் உள்ள சிறிலங்கா அரசியல் யாப்பிற்கு உட்பட்டதாக இருக்கப் போவதில்லை என்பதுவும் யாதார்த்த பூர்வமானது. இதனை சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டுள்ளது என்றே கூறலாம். ஆகையினால் அரச தரப்பு யுத்த நிறுத்த உடன்பாடு அரசியல் யாப்பிற்குட்பட்டதா? இல்லையா? என வாதிட முனைவதும் அது அரசியல் யாப்பிற்கு முரண்பாடு எனக் கூறுவதிலும் அர்த்தமெதுவும் இல்லை. சிறிலங்கா அரசிற்கும்- விடுலைப் புலிகளுக்கும் இடையிலான உடன்பாடு செய்து கொள்ளப்பட்ட காலகட்டத்தில் இருந்த கள யதார்த்தத்திற்கேற்ப செய்துகொள்ளப்பட்டதென்பதே உண்மையாகும். அதிலும் குறிப்பாக அன்றைய கள யதார்த்தம் சர்வதேச ரீதியில் மதிப்பீடு செய்யப்பட்டதென்பதே சரியானதாகும். அவ்வாறு இல்லாதுவிடில் நோர்வே அரசு இதில் சமாதான ஏற்பாட்டாளராகப் பாத்திரம் வகிக்கவோ, சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் இவ் உடன்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கவோ தயாராக இருந்திருக்க மாட்டார்கள். சிறிலங்கா அரசும் யுத்த நிறுத்த உடன்பாட்டை செய்து கொள்ளவேண்டிய தேவை இருந்திருக்காது. அத்தோடு சர்வதேச சமூகமும் இவ் உடன்பாட்டில் நேரடியாகச் சம்பந்தப்பட்டதன் காரணமாக இதனை ஓர் சிறிலங்கா அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதான தொரு உடன்பாடாகக் கொள்வதற்குமில்லை. அவ்வாறு உட்பட்டதானால் அவ் உடன்பாட்டில் சர்வதேசத்தின் பங்கு பணி இல்லாது இருத்தல் வேண்டும். ஆனால் இவ் உடன்பாட்டில் நோர்வே உட்பட ஐந்து ஸ்கன்டிநேவியன் நாடுகள் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளன. அத்தோடு இவ் உடன்பாடு பல சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெனீவாவிற்கு வருகை தந்த அரச தரப்புக்குழு இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டதோ இல்லையோ ஆனால் யுத்தநிறுத்த உடன்பாட்டின் அரசியல் யாப்பு அங்கீகாரம் குறித்து அவர்கள் பேசியதும் சிறிலங்கா அரசியல் சட்டப்புத்தகத்திற்குள் யுத்த நிறுத்த உடன்பாடு அடங்குகின்றதா என தேடிப்பார்த்ததும் அவர்களின் சிறுபிள்ளைத்தனமான செயலாகவே இருந்தது. சில வேளைகளில் சிறிலங்கா அரசாங்கம் தற்போதைய கள யதார்த்தம் தமக்குச் சாதகமானதாக உள்ளதெனவும் விடுதலைப்புலிகள் மீது தம்மால் மேலாதிக்கம் செலுத்த முடியுமெனக் கருதுவார்களேயானால் அவர்கள் யுத்த நிறுத்தத்திலிருந்து வெளியேறி யுத்தத்தின் மூலம் அதனைத் தீர்மானிக்க முற்படுவதே பொருத்தப்பாடானதாக இருக்கும். இதேவேளை ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் அரசியல் யாப்பு, இறைமை என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் பயனற்ற நிலையில் யுத்த நிறுத்த உடன்பாட்டை வலுவிழக்கச் செய்யும் வகையில் அரசாங்கம் மேற்கொண்ட வழிமுறையே பேச்சுவார்த்தை முடிவில் தயாரிக்கப்படவிருந்த கூட்டறிக்கையில் யுத்த நிறுத்த உடன்பாட்டிற்குப்பதில் யுத்தநிறுத்தம் என்ற பதத்தைப் பயன்படுத்துமாறு வலிந்து நின்றதாகும். சிறிலங்கா அரசின் இந்நிலைப்பாடானது யுத்தநிறுத்த உடன்பாட்டை இரு வழிகளில் முடக்கத்திற்கு உள்ளாக்கத்தக்கதாகும். இதில் 1. யுத்த நிறுத்த உடன்பாட்டு விதிகள் செயலற்றவையாகிவிடும். 2. யுத்த நிறுத்த உடன்பாட்டின் பிரகாரம் நோர்வே மற்றும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் வகிக்கும் பாத்திரங்கள் உத்தரவாதப் படுத்தப்படாதவை ஆகிவிடும். அதாவது யுத்த நிறுத்தம் என்பது தனியாக சிறிலங்கா அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதலை மட்டுமே குறிக்கத்தக்கதாகும். ஆகையினால் கூட்டறிக்கையில் யுத்த நிறுத்தம் எனக்குறிப்பிடும் பட்சத்தில் இயல்பு வாழ்வைத் தோற்றுவித்தல் உட்பட யுத்த நிறுத்த உடன்பாட்டு ஏனைய விதிகளில் யாவும் செயலற்றதாகிவிடும். குறிப்பாக இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் மக்களின் மீள்குடியேற்றம், இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் அரசியல் பணி என்பவை கூட நிராகரிக்கப்பட்டவை போன்றதாகி விடும். இதன் ஒட்டுமொத்த விiவானது யுத்தநிறுத்த உடன்பாட் டையே செயலற்றதாக்கிவிடும். இந்நிலையானது ஒருவகையில் யுத்த நிறுத்த உடன்பாட்டின் பிரகாரம் நோர்வே ஏற்பாட்டாளருக்குக் கிடைக்கப்பெற்ற அங்கீகாரங்கள், கண்காணிப்புக் குழுவினருக்குக் கிடைக்கப்பெற்ற அங்கீகாரங்கள் என்பனவும் கேள்விக்குள்ளாகிவிடக் கூடும். இந்நிலையில் யுத்த நிறுத்தம் தொடர்பான விதிகள் நோர்வேயின் பாத்திரம், கண்காணிப்புக்குழுவின் பங்கு என்பன தொடர்பாக மீண்டும் சிறிலங்கா அரசுடன் உடன்பாடுகள்ஃ இணக்கப்பாடுகள் செய்து கொள்ளப்பட வேண்டிய நிலை கூட உருவாகியிருக்கும். ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்நிலைப்பாடானது விடுதலைப் புலிகளினால் மட்டுமல்ல நோர்வேத்தரப்பினாலும் நிராகரிக்கப்பட்டது. அதாவது சிறிலங்கா அரச தரப்புக்குழு யுத்த நிறுத்த உடன்பாட்டைச் செயலிழக்கச் செய்யும் வகையில் மேற்கொண்ட இறுதி முயற்சியும் தோல்வியில் முடிவுற்றது. மாறாக அரசதரப்பு தனது நிலைப்பாட்டில் வெற்றி பெற்றிருப்பின் 2002 ஆம் ஆண்டு யுத்தநிறுத்த உடன்பாடு செயலற்றதாகிவிடும். யுத்தநிறுத்த உடன்பாட்டை வலுப்படுத்தும் வகையில் ஜெனீவாவில் இணக்கம் காணப்பட்டவற்றையே யுத்த நிறுத்த உடன்பாட்டைத் திருத்தி அமைத்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்யத்தயங்காத அரசதரப்பு யுத்த நிறுத்த உடன்பாட்டில் புலிகள் சிறுமாற்றம் செய்ய உடன்பட்டிருப்பின் கூட உடன்பாடே தோல்வியில் முடிவடைந்து விட்டதாகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருப்பார்கள். இந்த வகையில் ஜெனீவாப் பேச்சுவார்த்தை மூலம் யுத்த நிறுத்த உடன்பாடே விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்டது எனக் கூறினால் கூடத்தவறாக மாட்டாது. ஆனால் யுத்த நிறுத்த உடன்பாட்டை அதன் அமுலாக்கம் இன்றி எவ்வளவு காலத்திற்குப் புலிகளாலும் பாது காக்க முடியும்? என்பதும் கேள்விக்குரியதே.
ஜெயராஜ்
|