|
மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வவுணதீவு பிரதேசத்திலுள்ள விடுதலைப்புலிகளின் முன்னரங்கக் காவலரண் மீது சிறிலங்கா படையினரும், தேசவிரோத ஆயதக்கும்பலும் மேற்கொண்ட தாக்குதலானது போர் நிறுத்தமீறல் மட்டுமன்றி ஜெனீவாவில் சிறிலங்கா அரசு கடந்த 22.23ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பட்டுக்கொண்ட விடயத்தையும் முழு அளவில் மீறி நிற்கின்றது.
போர் நிறுத்த உடன்படிக்கை அமுல்படுத்தப்பட வேண்டுமென்பதில் சர்வதேச சமூகமும் மிகுந்த அக்கறை செலுத்தியதுடன் வலியுறுத்தியும் வரும் நிலையில் சிறிலங்கா அரசு இன்னும் இதயசுத்தியுடன் செயற்படவில்லை என்பதையே வவுணதீவில் போராளிகள் மீதான தாக்குதல் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையில் இன்று பிரதான விடயமாகவிருப்பது ஒட்டுப்படைகளின் விவகாரம். உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இவர்களது ஆயுதங்கள் களையப்பட்டு நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும். அத்துடன் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். இது நடைமுறைச் சாத்தியமற்று போகும் நிலையில் சமாதானத்துக்கான அடி எடுப்புக்கள் என்பது அர்த்தமற்றதாகி விடும். போர் நிறுத்த உடன்படிக்கைக்கு அமைய ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும் என்பது போர் நிறுத்தம் வலியுறுத்தும், அதேவேளை அவ்வாறான சூழலை உருவாக்கப் போவதாக அரச குழுப்பிரதிநிதிகள் ஜெனீவாவில் தெரிவித்திருந்த போது வடக்குக் கிழக்கில் நிலைமைகளை அவதானிக்கின்ற போது அவ்வாறான சூழலுக்கு அவர்கள் வரவில்லை என்பதையே சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. திருமலையில் ஆதியம்கேணியிலிருந்து இறால்குழி நோக்கிச் சென்று கொண்டிருந்த போராளிகள் ஐவர் கடந்த பெப். 25ம் திகதி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை படையினரே கைது செய்தற்கான ஆதாரங்கள் நிறையவேயுள்ளன. பொது மக்கள் நேரடியாகக் கண்டுள்ளனர். நேற்று முன்தினம் வவுணதீவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வவுணதீவுப் படைமுகாம், மற்றும் சோதனைச் சாவடியிலிருந்து வந்தவர்களே போராளிகள் மீது தாக்குதலை நடாத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். துணை ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைக் களையாது இன்னுமின்னும் விடுதலைப்புலிகள் மீது வலிந்து தாக்குதல் நடாத்தி ஒரு சினமூட்டும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுமாகவிருந்தால் இரண்டாம் கட்ட ஜெனீவாப் பேச்சுக்கள் என்பது நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுகின்றது. போர் நிறுத்த அமுலாக்கம் குறித்த பேச்சுக்கள் எனக் கூறிக் கொண்டு போர் நிறுத்த உடன்படிக்கையை சிதைக்கின்ற பேராபத்து விளைவிக்கின்ற செயல்களில் சிங்கள இராணுவமும் தேசவிரோத ஆயுதக்கும்பலும் தொடர்ந்து இயங்குமானால் மீண்டும் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் இன்னும் தமிழர் தாயகம் உயிர்களை பலியிட்டுக் கொண்டிருப்பதற்கு தயாரில்லை. சிங்கள தேசம் சமாதானத்துக்கான எந்த அணுகுமுறைகளையும் கொண்டிருக்கவில்லை. தென்னிலங்கையில் இனவாத சத்திகளே தீர்மானிக்கின்ற சக்திகளாக பலமடைந்து வருகின்றனர். ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டிய விடயத்தில் கூட இந்த சக்திகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படக் கூடாது என இவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே படைத்தரப்பைக் கட்டுப்படுத்தி ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களைக் களைய வேண்டிய பொறுப்பு சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குரியது. இதிலிருந்து மகிந்தர் நழுவி நிற்பாரானால் நாடு பெரும் அழிவுகளை எதிர்நோக்கவேண்டியே வரும். அற்ப சொற்ப சலுகைகளுக்காக செயற்படும் ஆயுதக் குழுக்கள் மூலம் விடுதலைப் புலிகளையோ, அல்லது தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தையோ சிதறடிக்க முடியாது என்பதை மகிந்தர் உணரத்தவறின் சிங்கள தேசம் பின்னர் தவறை உணர வேண்டி வரும். எனவே இறுதிக் கட்டத்துக்கு தமிழர் தாயகம் வந்து விட்டது. இனியும் பேசிப் பயனில்லை என்பதுதான் அதன் அர்த்தம். தமிழினம் தமது தாயகத்தினை முழுமையாக மீட்டெடுப்பதற்கு அடுத்தகட்ட போராட்டத்திற்;கு தயாராக வேண்டியது அவசியமானது. நெருடல் இணையம்
|