பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

அரச தூதுக்குழுவின் விளக்கம் வியப்பெதையும் தரவில்லை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 05 March 2006

ஜெனீவா மாநாட்டில் நம்பிக்கை ஒளிக்கீற்று ஏற்பட்டுள்ளது என்று நாம் உச்சரிப்பதற்கு முன்பேயே ஏமாற்றம் தலைவிரித்துத் தாண்டவமாடத் தொடங்கியுள்ளது.

அரசுக்கும் புலிகளுக்குமிடையே ஜெனீவாவில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களின் போது போர் நிறுத்த உடன்படிக்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று நேற்று 26.02.2006 தெரிவித்துள்ளதையே நாம் இங்கு குறிப்பிடுகிறோம். இதற்குப் பதிலடியாக திருத்தம் ஏதுமில்லை திருத்தப்போவதுமில்லை. புலிகள் மிகத்திடமான அறிவிப்பு என்று விடுதலைப் புலிகளின் பேச்சுக் குழுத் தலைவரும் மதியுரைஞருமான அன்ரன் பாலசிங்கம் அடித்துக் கூறியுள்ளார்.

முனைவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வழிமொழி கூறும் முறையில் ஜெனீவாப் பேச்சுக்களில் இரண்டு தரப்பினராலும் எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதாகவே பொருள் கொள்ள வேண்டும் என இலங்கை அரசுக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ள கருத்துகள் எமக்கு மிகுந்த வியப்பினைத் தருகிறது. இது அரச குழுவின் போலித்தனத்தையே காட்டுகிறது என்று சு.ப.தமிழ்ச்செல்வன் காட்டமாகக் கொடுத்துள்ள பதில் நாம் எல்லோரும் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக உணர்த்தி நிற்கிறது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் அனுபவமுள்ள எமக்கு அரசின் முரண்பட்ட தன்மையோ குத்துக்கரணம் அடிக்கும் போக்கோ வியப்பினைத் தரவில்லை. மாறாக இதுவே தொடர்ச்சியாக சிங்களத் தலைமைப்பீடத்தின் போக்கு என்பதை மேலும் வலியுறுத்தி நிற்கிறது.

1926 யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னாள் அவைத் தலைவர் (சபாநாயகர்) சேர்.வைத்தியலிங்கம் துரைசாமியின் இல்லத்தில் மகேந்திரா ஒப்பந்தம் என்ற பெயரில் நடைபெற்ற முதல் தமிழ், சிங்கள ஒப்பந்தமும் மை காய்வதற்கு முன்பேயே கிழித்தெறியப்பட்ட வரலாறு உண்டு. இவ்வொப்பந்தத்தில் தீவிர அக்கறை காட்டிய சிலாபத் தொகுதியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் சி.இ.கொரியா வருத்தம் தெரிவித்த நிகழ்ச்சியும் எம் நினைவிற்கு வருகிறது. இதனை அடுத்து 1957 இல் செய்யப்பட்ட பண்டா- செல்வா ஒப்பந்தமும் புத்தகுருமார்கள் ஏற்படுத்திய நெருக்கடி காரணமாக பண்டாரநாயக்க ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்த வரலாற்றினையும் நாம் மறப்பதற்கில்லை. எனினும் கிழித்தெறிந்த நிலையில் மனச்சாட்சி அவரை உறுத்தியதன் காரணமாக ஒரு மன்னிப்புக் கடிதத்தை அன்றைய நிதி அமைச்சர் சான்லி டி சோய்சா ஊடாகக் கொடுத்து அனுப்பிய போது தந்தை செல்வாவிற்கு அருகில் நான் அமர்ந்திருந்தேன். பண்டாரநாயக்கா தன் தவறை உணர்ந்தமைக்கு நன்றி. ஆனால் இவ் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதன் விளைவு நாடு இரத்தக்களரியில் மூழ்கும் என்று தந்தை செல்வா எச்சரித்ததற்கு அமைய 1958 இல் மிகப் பெரும் இனப்படுகொலை ஏற்பட்டதை வரலாற்று உணர்வோடு நினைவு கொள்ளுவோமாக. இந்த வொப்பந்தத்தை அடுத்து 1965 இல் டட்லி செல்வா ஒப்பந்தம் உருவாகியது. இந்த வொப்பந்தமும் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு கிழித்தெறியப்பட்டது. இவ் வொப்பந்தத்தை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட உள்ளூராட்சி அமைச்சர் முருகேசு திருச்செல்வம் (அரசு வழக்கறிஞர்) ஒப்பந்தம் நிறைவேற்றப்படாததன் காரணமாகப் பதவி துறந்தார். 1970 களில் சிறிமாவிற்கும் தந்தை செல்வாவிற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதுவும் நடைமுறைப்படுத்தப்படாமல் தோல்வி கண்டது. மேற்குறித்த ஒப்பந்தத்தை அடுத்து தந்தை செல்வா மறைந்த நிலையில் ஜே.ஆர். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கிடையில் நடைபெற்ற மாவட்ட சபை ஒட்டிய ஒப்பந்தமும் ஒப்பேறாமல் முடிவுற்றது.

1984 இல் திம்பு மாநாடு நடைபெற்றது. திம்புத்தீர்மானம் எமக்குத் தெம்பு தரும் என்று எண்ணியிருந்தோம், அது வம்பில் முடிந்தது. 1987 இல் ஜே.ஆர். ராஜீவ்காந்தி இலங்கை, இந்திய வொப்பந்தமும் இழுத்தடிக்கப்பட்டு திலீபன், குமரப்பா உட்பட பெரும் எம் போர் வீரர்களின் இழப்பிற்கு ஆளாகி ஆயிரக்கணக்கில் தமிழ் மக்களும் சாகடிக்கப்பட்டு இந்தியப்படை வீரர்களும் அதேயளவு கொல்லப்பட்டு இவ் வொப்பந்தம் நிறைவேற்றப்பட்டது நிர் மூலமாக்கப்பட்டது. இவ் வொப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது இது தமிழர் மீது திணிக்கப்பட்ட நிர்ப்பந்தம். இது காலப்போக்கில் தீப்பந்தமாகப் பற்றி எரியும் என எச்சரித்ததற்கு அமைய நாம் விரும்பாத நிலையில் இத் தீப்பந்தம் ராஜீவ்காந்தியின் உயிரையும் உள்வாங்கி பற்றி எரிந்து ஒரு சகப்பான முடிவினைக் கண்டது.

மேற்குறித்தவை நீங்கலாக எம் தலைவர் பிரபாகரனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 இல் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நான்கு ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் நல்லது எதனையும் கண்டதில்லை.

இக்கால இடைவெளியில் ஐக்கிய தேசியக் கட்சி அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஆறு சுற்றுப் பேச்சுக்கள் இடைநடுவில் நின்று போனது எமக்குக் கிடைத்த மிகப் பெரும் கசப்பான அனுபவமாகும்.

எனவே தான் ஜெனீவாப் பேச்சுவார்த்தை ஏதோ நல்லதைத் தமிழினத்திற்கு வழங்கும் என நாம் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் ஓரிரு நாட்களுக்கிடையே எம் எதிர்பார்ப்பை சிதறடிக்கின்ற முறையில் ஜெனீவாவில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் திருத்தங்கள் கொண்டு வர இருப்பதாக அரசு அறிவித்துள்ள செய்தி எம்மை அதிர்ச்சியிலும் ஆபத்திலும் ஆழ்த்துகின்ற செய்தியாக விளங்குகிறது. அரசின் இப்போக்கினை மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களும் அரசியற் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனும் வன்மையாக கண்டித்துள்ளது உண்மை. ஆனால் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கும் முறையில் மகிந்த அரசிடம் மனமாற்றம் ஏற்படுமா என்பது மிகப் பெரும் கேள்வியாகும். இல்லை" என அரசின் சார்பில் ஜெனீவா சென்றுள்ள சட்டத்தரணி எச்.எல்.டி. சில்வா ஆணித்தரமாக அறைகிறார். "ஜெனீவா கூட்டறிக்கைக்கு ஜே.வி.பி. கண்டனம்" என்ற செய்தியும் "ஜெனீவா இணக்கப்பாட்டிற்கு ஹெல உறுமய கண்டனம்" என்றும் ஊடகங்களில் முதற்பக்கச் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இவை அனைத்திற்கும் மேலாக ஜெனீவாப் பேச்சுகளை முடித்துக் கொண்டு அரச தரப்புக் குழு நாடு திரும்பும் முன்னரே கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் தயா சந்தகிரி தலைமையிலான பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று ஆயுதங்கள் கொள்வனவிற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. அமைதி ஏற்படுத்துவதுதான் அரசின் நோக்கம் எனின் இவ்வாயுதக் கொள்வனவு ஏன் என்ற கேள்விக்கு அரசு தரும் பதில் என்ன? இவை நீங்கலாக தமிழர் தாயகப் பகுதிகளில் மேலும் நெருக்கடிகளை உருவாக்குகின்ற முறையில் புதிய படைமுகாம்களையும் காவலரண்களையும் அமைத்துக் கொண்டு வருவதும் மீனவர் மீதான தாக்குதல்கள் தொடர்வதும் இயல்புநிலையை உருவாக்குவதில் அரசிடம் இதய மாற்றம் இல்லை என்பதனை இடித்துரைக்கிறது.

காசில்லா நிலையில் கடன் அடிப்படையில் பாகிஸ்தானிடம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய படைத்தளபதியைப் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது சிங்கள அரசு. இதே அரசிற்கும் இந்தியாவிற்குமிடையில் மீண்டும் கடற்படைக் கூட்டுப் பயிற்சி நடைபெறவிருப்பதாக இந்தியாவின் கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா அறிவித்துள்ளார். எந்நிலையிலும் இந்தப்படை இலங்கை அரசிற்குத் துணைபோகக் கூடாது என வைகோ அவர்களும் பழநெடுமாறனும் டாக்டர் ராமதாஸும் திருமாவளவனும் உள்ளத்தூய்மையோடு விடுத்த வேண்டுகோளை இந்திய அரசு தட்டிக்கழிக்கிறதா. அல்லது புறக்கணிக்கிறதா என்பதனை நாம் அறிய முடியாத நிலையில் தத்தளிக்கிறோம். இந்தியாவின் இப்போக்கினை நினைவு கொண்டுதான் "இந்தியத் தலைவர் மனங்கொள்ள வேண்டிய யதார்த்தமான விடயம்" என்று ஒரு ஊடகம் உருக்கமாக ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. மற்றொரு ஊடகம் "ஜெனீவாவில் நடந்த பேச்சால் ஊர் இழந்தோர் பெற்ற பயன் யாதோ" என்ற கேள்வியினைக் கேட்டு ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போரின் துயரினை அனுபவித்து வருபவர்கள். அவர்களின் வாழ்விடங்கள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் எதிர்காலம் என்னவென்று ஏக்கத்துடன் வினாவினை விடுத்துள்ளது.

ஜெனீவா ஒப்பந்தத்தில் எமக்குப் பெரும் நம்பிக்கை இல்லாவிடினும் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களைய ஒத்துக் கொள்வதாக அரசு அறிவித்த போதும், "ஒருபோதும் நாம் ஆயுதங்களைக் கிழே வைக்கப்போவதில்லை. எமது தற்பாதுகாப்பிற்காகவே அவற்றை வைத்துள்ளோம். எம்மீது தாக்குதல் நடாத்தப்பட்டால் எமது ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்தத்தை நாம் தொடரப் போவதில்லை" என்று கருணா என்ற கருநாகம் அனைத்துலக செய்தி நிறுவனமான ராய்ட்டருக்கு (Reutar) வழங்கியுள்ள செய்தி எம் செவிகளுக்கு திராவகம் (ACID) ஊற்றியது போல் தாங்க முடியாத வேதனை தரும் செய்தியாக உள்ளது. ஜெனீவா மாநாட்டில் ஏற்றுக் கொண்டதன் படி கருணா குழு மீதும், ஈ.பி.டி.பி. குழு மீதும், புளொட் குழுமீதும் மற்றும் இன்னோரன்ன ஆயுதக் குழுக்கள் மீதும் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை காலம் விரைவில் உணர்த்தியே தீரும். இதில் அரசு தடம்புரளுமாயின் ஏப்ரலில் மீண்டும் ஜெனீவாவில் மாநாடு நடைபெறுமா என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாக விளங்கப்போகிறது.

எனினும், இந்த இருள் சூழ்ந்த நிலையில் இவ்விருளைக் கிழித்துக் கொண்டு சில ஒளிக்கீற்றுகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. "ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள் வட, கிழக்கு மாகாணத்தை தமிழீழம் என்ற பெயர் மாற்றத்துடன் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் ஒப்படைக்க எதுவித எதிர்ப்பும் இல்லை" என இலங்கை வந்துள்ள இந்திய அமைதிப்படையின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய ஜெனரல் அசோக் கே.மேத்தா தெரிவித்துள்ள கருத்து எமக்குத் தெம்பூட்டுகின்ற கருத்தாகும். அவர் மேலும் தெரிவிக்கையில் ஷ்ரீ லங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுக்கள் ஊடே தீர்வு காணப்பட்டால் தமிழீழம் என்ற பெயரில் தான் தீர்வு காணப்படும் என்று அவர் கூறியுள்ள கருத்து நாம் வரவேற்கத்தக்க ஆழம் மிக்க கருத்தாகும். இணைப்பாட்சியில் தான் அவர் தீர்வு காண முனைகிறார் என்பது எமக்குத் தெரிகிறது. எனினும், 1971 ஜே.வி.பி.யின் புரட்சியை ஒடுக்க வருவிக்கப்பட்ட இளம் அதிகாரியாக விளங்கிய இவர் 1987 - 1989 வரை தமிழீழத்தை ஆக்கிரமித்து நின்ற இந்திய அமைதிப்படையின் கட்டளை அதிகாரியாக விளங்கிய அசோக் மேத்தாவின் இக்கூற்றினை நாம் எளிதில் புறக்கணிக்க முடியாது. இவரின் இக்கூற்று சிங்களவர்களுக்குத் தாங்க முடியாத கசப்பூட்டும் செய்தியாகும். எம்மைப் பொறுத்தவரையில் இணைப்பாட்சியில் இனிய வாழ்வு காண முடியாத நிலையில் தமிழீழத்தை நாம் ஓங்கி ஒலிக்கிறோம். இவரின் தீர்வு இணைப்பாட்சிக்குள் அடங்குகின்றது எனினும், எம்மைச் சிந்திக்க வைக்கின்ற பொருள் பொதிந்த கூற்றாக இவர் கூற்று அமைகிறது.

இவர் கூற்றுக்கு வழிமொழி கூறும் முறையில் மூன்றாம் கட்ட ஈழப்போர் இலங்கையில் போட்டி அரசு ஒன்றை உருவாக்கி உள்ளது என்று ஒஸ்லோ பல்கலைக்கழக சமூகவியல் மனிதவள புவியியற்துறைப் பேராசிரியர் கிறிஸ்டியன் ஸ்ரோக்கோ கூறியுள்ள கருத்து "தமிழீழ நாட்டைக் கட்டியெழுப்புதல்" என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் வெளிவந்துள்ள கருத்தாகும். அவர் தன் கட்டுரையில் பின்வரும் வளம்மிக்க கருத்தினை வரைந்துள்ளார். "தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் உண்மையான அரச நிர்வாகம் ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். வருமான சேகரிப்பு, காவல்துறை, நீதித்துறை, பொதுச்சேவைகள், பொருளாதார மேம்பாடு போன்றவற்றில் இந்நிர்வாகம் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றது. இந்த அரசியல் இறைமையின் பிரிவானதுஇலங்கையில் ஒரு போட்டி அரச நிர்வாகம் ஒன்று உண்மையாகவே செயற்பட்டு வருகிறது என்பதை வெளிப்படுத்துகிறது" என்று பேராசிரியர் கிறிஸ்டியன் ஸ்ரோக்கோ ஆவது அறிதல் என்ற அடிப்படையில் அரச அறிவியலில் எதிர்காலத்தை எண்ணிப்பார்த்தல் என்ற கோட்பாட்டிற்கு அமைய (Concept of Futurlogy in Political Science) எதிர்காலத்தில் தமிழீழம் அமையப்போவதை ஆழ்ந்த ஆய்வின் அடிப்படையில் உறுதி செய்துள்ளார்.

நாம் அடிக்கடி வலியுறுத்துகின்ற ஒரு கருத்து, ஏற்கனவே நடைமுறையில் தமிழீழம் செயற்படுகிறது. அதற்கு சட்டவலு கொடுப்பதுதான் எமது கடமை. இதற்கு உலக நாடுகள் துணை நிற்க வேண்டும் என்பதே ஆகும். இதனை நாம் ஆங்கிலத்தில் "There is already a de Facto Government but what we need is de jure recognition" இக்கருத்திற்கு ஆமோதிக்கின்ற முறையில் வழிமொழி கூறுகின்ற முறையில் மேற்குறித்த பேராசிரியர் கருத்து அமைந்துள்ளது எமக்கு உவகை ஊட்டும் நிகழ்ச்சியாகும்.


எம்.கே.ஈழவேந்தன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..