பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

ஜெனீவா வாக்குறுதியை அரசு நிறைவேற்றுமா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 05 March 2006

துணைப்படைகளின் ஆயுதக் களைவு விடயத்தில் அரசு செய்யப்போவது என்ன?ஜெனீவாப் பேச்சில் வழங்கிய வாக்குறுதியை அரசு நிறைவேற்றுமா? இது தான் இன்றைய மிகப்பெரும் கேள்வியாகும். ஜெனீவாப் பேச்சுக்கு முன்னர் ஒரு நிலை, பேச்சில் இன்னொரு நிலை, அங்கிருந்து நாடு திரும்பியதும் வேறு நிலையென்ற நிலைப்பாட்டில் அரசு இருப்பதால், ஜெனீவாப் பேச்சில் வழங்கிய வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் சாத்தியங்கள் மிகமிகக் குறைவாகவேயுள்ளது.

போர்நிறுத்த அமுலாக்கலை உறுதிப்படுத்துவதே ஜெனீவாப் பேச்சாகும். மோதலைத் தவிர்த்து போர்நிறுத்த உடன்படிக்கையை முறியவிடாது பாதுகாத்து இயல்பு நிலையை உருவாக்குவதே ஜெனீவாப் பேச்சுகளின் முக்கிய அம்சமாகும்.

2002 இல் கைச்சாத்திடப்பட்டு நான்கு வருடங்கள் கழிந்த நிலையிலும் உடன்பாட்டிலுள்ள பல அம்சங்களை அரசு தரப்பு அமுல்படுத்தாததுடன் இந்த உடன்பாட்டை சாதகமாகப் பயன்படுத்தி நிழல் யுத்தத்தை நடத்தி வந்த நிலையிலேயே ஜெனீவாப் பேச்சுக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நடைபெறும் யுத்தத்தில் படையினர் மூலம் சாதிக்க முடியாதவற்றை யுத்தநிறுத்த காலத்தில் ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி சாதிக்கலாமென அரசும் படைத்தரப்பும் போட்ட தப்புக் கணக்கு நிறைவேறவில்லை. ஆனால், இந்தத் தப்புக் கணக்கு மூலம் இவர்கள் சர்வதேசத்தின் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்ட நிலையிலேயே ஜெனீவாப் பேச்சுக்குத் சென்றனர்.

கிழக்கில் தோன்றிய நிழல் யுத்தம் நிஜப் போரை தோற்றுவிப்பதைத் தவிர்க்கவே ஜெனீவாப் பேச்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும், பேச்சுக்குப் பின்னரான அரசின் நிலைப்பாடானது அரசின் நம்பகத் தன்மை குறித்து பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இருக்கும் போர்நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்தாது அது தொடர்பாக பேசப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை பயன்படுத்தி, அந்த உடன்பாட்டில் திருத்தங்கள், செய்யப்பட்டுள்ளதாக வியாக்கியானங்கள் செய்வதன் மூலம் அந்த உடன்பாட்டை எவ்விதத்திலும் அமுல்படுத்தப்போவதில்லையென அரசு மறைமுகமாக உணர்த்தி வருகிறது.

ஆனாலும், இந்தப் பேச்சுகளின் போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின் மூலம் போர் நிறுத்த உடன்பாட்டை அரசு தரப்பு முழுமையாகவே ஏற்றுக்கொண்டுள்ளது. இது அரசின் முக்கிய பங்காளிக் கட்சிகளை கடுமையாகச் சீற்றமடையச் செய்துள்ளது.

`மகிந்தவின் சிந்தனை' போர்நிறுத்த உடன்பாட்டை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அந்த `சிந்தனை'யின் அடிப்படையில் பேசச்சென்ற அரச குழு எவ்வாறு போர்நிறுத்த உடன்பாட்டை ஏற்றுக்கொண்டதென, அரசின் பங்காளிகளான ஜே.வி.பி.யும், ஜாதிக ஹெல உறுமயவும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

போர்நிறுத்த உடன்பாட்டில் திருத்தங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்துவதாகக் கூறி ஜெனீவா சென்ற அரச குழுவால் அதில் திருத்தங்களையோ மாற்றங்களையோ செய்ய முடியாதவாறு இறுக்கமான பூட்டுப்போட்ட புலிகள், எது அரசியலமைப்புக்கு முரணானது, சட்டவிரோதமானதென அரசு தரப்பு கூறியதோ அதனையே முழுமையாக ஏற்றுக்கொள்ளச் செய்ததன் மூலம் அரசு தரப்புக்கு பெரும் அடி கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தான் எல்லாவற்றையும் ஏற்று அவற்றை முழுமையாக அமுல்படுத்துவதாகக் கூறிவிட்டு நாடு திரும்பிய அரச குழு, புலிகளின் பொறிக்குள் அரச குழு சிக்கிவிட்டதாக எழுந்த கடும் விமர்சனத்தையடுத்து, போர்நிறுத்த உடன்பாட்டில் மாற்றங்களைச் செய்யாவிடினும் ஜெனீவாப் பேச்சின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில சொற்பதங்களும் வாசகங்களும் போர்நிறுத்த உடன்பாட்டில் திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதையே சுட்டிக்காட்டுவதாக பெரும் `ஜோக்' அடித்துள்ளது.

அரசு மற்றும் புலிகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட உடன்படிக்கை வேறு, அது தொடர்பாக பேசுவதற்காக வெளியிடப்படும் கூட்டறிக்கைகள் வேறு. ஜெனீவாப் பேச்சின் கூட்டறிக்கையானது, இந்த பேச்சு நடைபெற்றதைக் குறிப்பிடுமொரு அறிக்கையே தவிர, போர்நிறுத்த உடன்பாட்டின் இணைப்போ அல்லது பின்னிணைப்போ அல்ல.

போர்நிறுத்த உடன்பாடு அல்லது அதன் அமுலாக்கலென வரும்போது, 2002 இல் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் செய்துகொண்ட உடன்படிக்கையே எடுத்துக் கொள்ளப்படும். இதனையே நோர்வே அனுசரணையாளர்களும் அங்கீகரிப்பர்.

ஆனாலும், ஜெனீவாவில் புலிகளிடம் அரச தரப்பு பிடிகொடுத்து விட்டதாக தெற்கில் எழுந்துள்ள கடும் குற்றசாட்டுக்களைச் சமாளிக்கவே, கூட்டறிக்கையிலுள்ள சில சொற்பதங்கள் மற்றும் வாசகங்கள் மூலம் போர்நிறுத்த உடன்பாட்டில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுவதாக அரசதரப்பு கதைவிடுகிறது. ஆனாலும், அதனை ஏற்றுக்கொள்ள இனவாதிகள் தயாரில்லை. கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

ஜெனீவாப் பேச்சுகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக கூட்டப்படவிருந்த சர்வகட்சி மாநாட்டை இரு தடவைகள் ஒத்திவைக்குமளவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இம்மாத பிற்பகுதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், தனித்து போட்டியிடும் அரசின் முக்கிய பங்காளிக் கட்சிகள் அரசுக்கெதிரான முக்கிய அஸ்திரமாக இதனையே பயன்படுத்துகின்றன.

இதேநேரம், அரச தரப்பு கூறிவருவது அப்பட்டமான பொய்யென்றாலும் நகைப்புக்கிடமானதென்றாலும், அரச தரப்பு கூறுவதை புலிகளும் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஆனால், அதற்கான காரணம் வேறு. சர்வதேசத்தையே அரசு ஏமாற்றுகிறதென்பதை முழு உலகிற்கும் அம்பலப்படுத்துவதற்காகவே அவர்கள் இங்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புலிகளின் இந்த எதிர்ப்பானது, அரசு கூறுவது போல் சில திருத்தங்களும் செய்யப்படவில்லையென்பதை மேலும் தெளிவுபடுத்துவதால் தென்னிலங்கையில் அரசுக்கெதிராக மேலும் மேலும் எதிர்ப்பு கிளம்புகிறது. புலிகளின் கருத்தையே ஐக்கிய தேசியக் கட்சியும் கொண்டிருப்பதால் அவர்களது பிரசாரமும் அரசை மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது. இதன் மூலம் அரசின் பங்காளிக் கட்சிகள் அரசிற்கான ஆதரவைக் கூட விலக்கிக் கொள்ளும் நிலை எழுந்துள்ளது.

ஜெனீவாப் பேச்சுகள் தெற்கு அரசியலில் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்திவிட்ட நிலையில் ஜெனீவா உறுதிமொழிகளை அமுல்படுத்தும் நடவடிக்கையில் அரசு இதுவரை இறங்கவில்லை. ஆயுதக் குழுக்களின் ஆயுதக் களைவே இந்தப் பேச்சுகளின் பிரதான அம்சமாகும். ஆனால், அதனை அமுல்படுத்த இதுவரை அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த ஆயுதக் களைவில் கருணா குழுவே பிரதானமாயுள்ளது. ஆனால், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா குழுவென்று எந்தக் குழுவுமில்லையென இராணுவ தரப்பு கூறி வருகின்றது. இதனால், கருணா குழுவிடமிருந்து அரசு ஆயுதங்களைக் களையும் சாத்தியமில்லையென்பது தெளிவாகிக் கொண்டிருக்கிறது.

கருணா குழுவிடமிருந்து ஆயுதங்களைக் களையுமாறு புலிகள் கோருவது, கருணா குழு சக்திமிக்கதொரு ஆயுதக் குழுவாகவோ அல்லது புலிகளை அச்சுறுத்துமளவிற்கு அவர்களால் செயற்பட முடியுமென்பதாலோ அல்ல. கருணா குழுவென்ற பெயரில், அக்குழுவிலிருக்கும் ஐம்பதுக்கும் குறைவானவர்களைப் பயன்படுத்தி இராணுவப் புலனாய்வுப் பிரிவே புலிகளுக்கெதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருவதாலேயே கருணா குழுவின் ஆயுதக் களைவை புலிகள் வலியுறுத்துகின்றனர்.

கருணா குழுவின் ஆயுதங்கள் களையப்பட்டுவிட்டதென்றால், கருணா குழுவின் பெயரில் இராணுவ புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வரும் தாக்குதல்களும் நிறுத்தப்பட்டு விடும். கருணா குழுவிடம் ஆயுதங்கள் இல்லையென்றால் அவர்களால் அல்லது அவர்கள் பெயரில் எப்படித் தாக்குதல்களை நடத்த முடியும்.

அதன் பின்பும் தாக்குதல்கள் நடைபெற்றால், இராணுவமே நேரடியாகத் தாக்குதல்களில் இறங்கிவிட்டதாகவே அர்த்தமாகும். இதற்காகவே கிழக்கில் ஆயுதக் குழுக்களின் ஆயுதக் களைவை புலிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால், அரசோ அல்லது படைத்தரப்போ அதற்குத் தயாரில்லையென்பது தற்போது வெளிப்படையான உண்மையாகி வருகிறது.

போர்நிறுத்த உடன்பாட்டில் திருத்தங்களைச் செய்யவில்லையே என்பதற்காக தெற்கில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கருணா குழுவின் ஆயுதக் களைவிற்கு அதைவிட கடும் எதிர்ப்பு கிளம்பும். கருணாவிடமிருந்து ஆயுதங்களை களைவதனால் புலிகளிடமிருந்தும் ஆயுதங்களை களையுங்களென்ற கோஷமெழுப்பும் கருணா குழுவை எந்தளவிற்கு பயன்படுத்தி கிழக்கில் நிலைமைகளைக் குழப்ப முடியுமோ அந்தளவிற்கு நிலைமைகளைக் குழப்ப வேண்டுமென்ற நிலையே தென்பகுதியில் காணப்படுகையில் கருணாவை இழக்க அவர்கள் ஒருபோதும் முன்வரமாட்டார்கள்.

கருணா பிரிந்து சென்றபின் புலிகளின் பலம் மிக மோசமாகக் குன்றிவிட்டதாகவே சிங்களவர் கருதுகின்றனர். அங்குள்ள அரசியல்வாதிகளினதும் நிலைமை அதுவே என்பதால் பலமிழந்த நிலையில் தான் கருணா குழுவை களத்தில் எதிர்கொள்ள முடியாத புலிகள் போர்நிறுத்த உடன்பாட்டைப் பயன்படுத்தி சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் நோர்வேயின் அனுசரணையுடனும் கருணா குழுவிடமிருந்து ஆயுதங்களைப் பறிக்க முற்படுகின்றார்களென்றதொரு தோற்றப்பாடும் தென்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் சமாதான முயற்சிகள் தோற்றாலும், மீண்டுமொரு போர்வெடித்தாலும், சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிட்டவில்லையென்றால் பரவாயில்லை, கருணா குழுவின் ஆயுதங்களைக் களைய அனுமதிக்கக் கூடாதென்ற நிலைப்பாடு தென்பகுதி அரசியல்வாதிகள் மத்தியில் நிலவுகிறது.

போர்நிறுத்த உடன்பாட்டை இலங்கை அரசு இதுவரை முழுமையாக அமுலாக்கவில்லை என்பதை அவர்கள் உணரும் நிலையிலில்லை. பலம் குன்றிய புலிகள் ஜெனீவாப் பேச்சுகள் மூலம் பல காரியங்களைச் சாதிக்கப் பார்ப்பதாகவே கருதுகின்றனர். இதனால் ஜெனீவாப் பேச்சுகளை தோற்கடிப்பதற்காக அரசைக் கவிழ்க்கவும் இனவாதிகள் தயாராகிவிட்டனர். முதலில் ஜெனீவாப் பேச்சை தோற்கடித்து விட்டு பின்னர் ஆட்சியைப் பற்றிச் சிந்திக்கலாமெனவும் அரசின் பங்காளிகள் கருதுகின்றனர்.

சமாதானச் சூழ்நிலையையும் சமாதான முயற்சிகளையும் குழப்பும் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களைவதற்கே இந்த நிலைமையென்றால், உடன்படிக்கையின்படி அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவத்தை வாபஸ் பெறவேண்டுமென்பதற்கும் வடக்கு, கிழக்கில் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலிருந்து படையினரை விலக்க வேண்டுமென்பதற்கும் இவர்கள் எப்படி இணக்கம் தெரிவிக்கப்போகின்றார்கள்.

ஜெனீவாவில் முதற் சுற்றுப்பேச்சுகளில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை அமுல்படுத்தாவிட்டால் அடுத்த சுற்றுப் பேச்சுகளில் அர்த்தமில்லை. ஆனாலும், ஆயுதக் களைவு விடயத்தில் அரச தரப்போ அல்லது படைத் தரப்போ சாதகமாக நடந்துகொள்ளும் சாத்தியமில்லை. அப்படி கருணா குழுவிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட்டால், கருணா குழுவை இராணுவமே இதுவரை தங்களுடன் மறைத்து வைத்திருந்ததாக கருதப்படுமென்பதால் இந்த ஆயுதக் களைவு சாத்தியப்படும் வாய்ப்பேயில்லை.

ஆனாலும், அடுத்த சுற்றுப் பேச்சுக்கு புலிகள் செல்ல வேண்டிய தேவையுள்ளது. போர்நிறுத்த உடன்பாட்டை கடந்த 4 வருடங்களாக அமுல்படுத்தத் தவறிய அரசு, அந்தப் போர்நிறுத்த உடன்பாட்டை அமுல்படுத்துவது தொடர்பாக ஜெனீவாவில் காணப்பட்ட இணக்கத்தையும் அமுல்படுத்தவில்லை என்பதை முழு உலகத்திற்கும் தெரிவிக்க வேண்டிய தேவையுள்ளது.

இது போன்றுதான் சமாதான முயற்சிகளில் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நிலைப்பாடு என்பதால், எமது உரிமையை வென்றெடுக்க நாம் எமது வழியில் செல்ல வேண்டியது அவசியமென்பதை ஜெனீவாவில் கூறவேண்டிய தேவை புலிகளுக்குள்ளது.


vithuran
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..