உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

அபாய எச்சரிக்கை! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 08 March 2006

வவுணதீவில் விடுதலைப் புலிகளின் காவலரண்மீது தாக்குதல் நடத்தியமை பாரதூரமான விடயமாகும் என்ற போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத்தலைவர் ஹொக்லண்டின் அறிவிப்பு ஒரு அபாய எச்சரிக்கை மணி போன்றதாகும்.

அதாவது இத்தகைய தாக்குதல்கள் தொடரும் பட்சத்தில் சமாதானத்திற்கு சாவுமணி அடிக்கப்படும் என்பது அவரது அறிவிப்பின் வெளிப்பாடாகும்.

வவுணதீவுத் தாக்குதல் திட்டவட்டமான போர் நிறுத்தமீறல் என்பது வெளிப்படையானதொன்று. ஜெனீவா இணக்கப்பாட்டின் பின்னான இத்தாக்குதல் ஆயுதக்குழுக்கள் தொடந்தும் செயற்படப் போவதற்கான அறிவிப்பாகவே கொள்ளத்தக்கது. வேறு விதமாகக் கூறுவதானால் ஆயுதக்குழுக்களைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது.

சிறிலங்காவில் போரா, சமாதானமா? என்பதைத் தெரிவு செய்யவேண்டிய நிர்ப்பந்தம்ஃ கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு அடிக்கடி ஏற்படுவதாகவுள்ளது. இந்த வகையில் தற்பொழுதும் அத்தகையதொரு சூழ்நிலையிலேயே அரச சிக்கிக்கொண்டுள்ளது போல் ஒரு தோற்றப்பாடு வெளிப்படுத்தப்படுவதாய் உள்ளது.

அதாவது ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டினை அமுல் செய்வதில் ஆளும் கூட்டணிக்கட்சிகளிடையில் பிணக்கு உருவாகியுள்ளது போன்ற நிலை வெளிப்படுத்தப்படுகின்றது. அதாவது ஒட்டுக்குழுக்கள் விவகாரத்தில் அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டால் அரசாங்கத்திற்கான ஆதரவுகள் விலக்கப்படும் என்ற அளவில் கூட்டணிக் கட்சிகள் சில எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதேசமயம் ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களைக் களைவதை விடுத்து இராணுவத்தைப் பலப்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்தவேண்டும் என்பதே ஜே.வி.பி. ஜாதிக ஹெல உறுமய போன்ற அரசிற்கு ஆதரவளித்து வரும் கட்சிகளின் நிலைப்பாடாகும். இதனையே இரு தினங்களுக்கு முன்னர் நடந்த சர்வகட்சி மாநாட்டிலும், இக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

மகிந்த ராஜபக்சு தலைமையிலான அரசாங்கத்தைப் பொறுத்து தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்திற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் இல்லை. அவரின் மகிந்த சிந்தனையும் இதற்கு எதிரானதாக இல்லை. ஆனால் இன்றுள்ள அரசியல் சூழ்நிலை என்பதே அரசின் விருப்புக்களுக்கு மாறானதாக விரோதமாகவுள்ளது.

இனப்பிரச்சினைக்கான சமாதான முயற்சியில் நோர்வே அரசு ஏற்பாட்டாளராகச் செயற்படினும், இணைத் தலைமை நாடுகள் எனக் குறிப்பிடப்படும் சிறிலங்காவிற்கு நிதியுதவி வழங்கும் நாடுகள் முக்கிய பங்குதாரர்களாகவுள்ளனர். நோர்வே உள்ளிட்ட இவ் இணைத் தலைமை நாடுகளின் விருப்பு, வெறுப்புக்கள் சிறிலங்கா அரசியலிலும், சமாதான முயற்சிகளிலும், பிரதிபலிக்கத் தக்கவையாகும்.

இந் நாடுகள் தற்பொழுது இலங்கையில் யுத்தம் ஒன்று நடைபெறுவதை விரும்பவில்லை. அத்தோடு யுத்தத்தைத் தடுப்பதற்கான வழிமுறையாக இராணுவத் துணைக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அவை கொண்டவையாகவுள்ளன.

ஆனால் ஜெனீவாப் பேச்சுவார்த்தையின் இணக்கப்பாட்டை அமுல் செய்வதற்கு மகிந்த அரசால் முடியப்போவதில்லை. அத்தோடு அதனை அரசாங்கம் விருப்பப்போவதும் இல்லையென்பது வெளிப்படையானது. ஆனால் அரசாங்கத்தால் அதனை வெளிப்படையாக முன்வைத்து பிரச்சார முயற்சியில் ஈடுபடமுடியாத நெருக்கடி நிலையில் அது உள்ளது.

ஆகையினால் அரசாங்கமானது போரா, சமாதானமா என்பதைத் தீர்மானிக்கவேண்டியதாகியுள்ளது. வேறொரு விதத்தில் கூறுவதானால் ஆட்சி அதிகாரத்தில் பங்காளிகளின் கோரிக்கைகளை நிறைவு செய்வதா? ஆட்சியை நடத்திச் செல்வதற்கு உதவியவர்களின் பேச்சிற்குக் கட்டுப்பட்டு பேச்சுக்களை ஆரம்பிப்பதா? என்பதே கேள்வியாகும்.

ஆனால் இதில் எது ஒன்றை மேற்கொள்ளினும் அரசாங்கம் நெருக்கடிகளைச் சந்திக்கும் என உறுதிபடக் கூறலாம். ஆயினும் அரசாங்கத்தில் தெரிவானது ஜே.வி.பியையும் ஜாதிக ஹெல உறுமயவையும் திருப்திப்படுத்துவதாகவே இருக்கமுடியும். ஏனெனில் மகிந்த சிந்தனை அடிப்படையில் அவற்றிற்கு நெருக்கமாகவே சிறிலங்கா அரசாங்கம் உள்ளது. நன்றி: ஈழநாதம்


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..