|
ஜெனீவாப் பேச்சுக்கு பின்னரான நிலைமைகள் அடுத்த சுற்றுப் பேச்சுக்கு ஏதுவாக இல்லை. முதல் சுற்றுப் பேச்சுகளில் காணப்பட்ட உடன்பாடுகள், 2 ஆம் சுற்றுப் பேச்சுக்கு முன்னரல்ல அதற்குப் பின்னரும் அமுல்படுத்தப்படும் சாத்தியமில்லையென்பது தெளிவாகிவிட்டதால் பாதுகாப்பு நிலைமை மோசமடையத் தொடங்கியுள்ளது.
முதல் சுற்றுப் பேச்சின் முக்கிய விடயமாக ஒட்டுப்படைகளின் ஆயுதக் களைவே இருந்தது. இதனை அடுத்த சுற்றுப் பேச்சுகளுக்கு முன்னர் அமுல்படுத்துவதாகக் கூறிவிட்டு வந்த அரச தரப்பு, தற்போது அங்கு உடன்பட்டவற்றுக்கு தலைகீழாக நடந்துகொள்வதுடன் முதல் சுற்றுப் பேச்சுக்கு புதுப்புது வியாக்கியானமும் கொடுக்கிறது. போர்நிறுத்த உடன்பாடு உறுதியாகக் கடைப்பிடிக்கப்படுவதன் மூலமே சமாதான முயற்சிகள் ஆரம்பமாகும். ஆனால், போர்நிறுத்த உடன்பாட்டையே ஆட்டம் காணச் செய்யும் விதத்தில் துணைப்படைகளின் செயற்பாடுகளிருப்பதால், இவர்களது ஆயுதக் களைவும், உடன்பாட்டின் முழுமையான அமுலாக்கலுமே சமாதான முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்கும். இந்த நிலையில் ஜெனீவாப் பேச்சுகளுக்கு பின்னர் ஜெனீவா உடன்பாடு தொடர்பாக சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சிகளில் அரசும் தென்பகுதி ஊடகங்களும் தீவிர கவனம் செலுத்திவருகின்றன. சிறுவர்களைப் புலிகள் தொடர்ந்தும் படைகளுக்குச் சேர்ப்பதாகவும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் புலிகள் மிரட்டிப் பெருமளவில் பணம் சேர்ப்பதாகவும் தீவிர பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு சில சர்வதேச அமைப்புகளும் சில சர்வதேச ஊடகங்களும் முக்கியத்துவமளிப்பதால் ஜெனீவா உடன்பாட்டை விடுத்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை புலிகளுக்கு எதிராகத் திருப்பும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவும், ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் இலங்கையின் ஜயந்த தனபாலவுக்கு சார்பாக பிரசாரங்களை முன்னெடுப்பதாகக் கூறி பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் சென்றுவிட்டு புலி எதிர்ப்புப் பிரசாரத்திலேயே தீவிரம் காட்டுகின்றார். தன்னை மற்றொரு கதிர்காமராக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். இவற்றின் மூலம் ஜெனீவாப் பேச்சுகளின் முக்கியத்துவத்தை குறைக்க அரசு முயலும் அதேநேரம், முதல் சுற்றுப் பேச்சில் காணப்பட்ட உடன்பாட்டை அமுல்படுத்தாது அடுத்த சுற்றுப் பேச்சில் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு தொடர்பில்லாத விடயங்கள் குறித்து ஆராயமுயன்று வருகின்றது. இந்த நிலையில் தான், பிரிட்டன் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பி.பி.சி.தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்த கருத்துகளை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு முற்று முழுதாக நிராகரித்துள்ளது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒட்டுப்படைகள் எதுவுமே இல்லை, அவர்களுக்கும், அரசுக்கும் எதுவித தொடர்புமில்லையென்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், அவரது இந்தக் கூற்றை கண்காணிப்புக் குழு முற்றாக மறுத்துள்ளதுடன், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே துணைப் படைகளின் செயற்பாடுகள் மிகத் தீவிரமாயுள்ளதாகவும் இதில் தாங்கள் மிகத் தெளிவாயிருப்பதாகவும் கண்காணிப்புக் குழு கூறியுள்ளது. இதன் மூலம் மூன்று விடயங்கள் அம்பலமாகியுள்ளன. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒட்டுப் படைகள் இயங்குகின்றன, அவற்றுக்கு அரசு பூரண ஆதரவு வழங்குகின்றது, அவர்களைக் கைவிட அரசு தயாராயில்லையென்பதாலேயே ஒட்டுப் படைகள் விவகாரம் குறித்து அரசு அப்பட்டமான பொய்கூறுகின்றதென்பது தெளிவாகியுள்ளது. அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கு கண்காணிப்புக்கு குழு தெரிவித்த மறுப்பானது, போர்நிறுத்த உடன்பாட்டிற்கு இன்று எந்தத் தரப்பு அச்சுறுத்தலாயிருக்கின்றதென்பது தெளிவாகும். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒட்டுக் குழுக்கள் பெருமளவில் இயங்குவதாக கண்காணிப்புக் குழு தெரிவித்திருப்பதும் அதற்கான முழு ஆதாரங்களும் தங்களிடமிருப்பதாக அவர்கள் கூறுவதும் ஒட்டுப்படைகளின் செயற்பாடுகள் குறித்து முதல்கட்ட ஜெனீவாப் பேச்சுகளில் ஒட்டுப்படைகள் தொடர்பாக விடுதலைப் புலிகளால் அரச தரப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட 32 பக்க ஆதாரபூர்வமான ஆவணத்தின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துகிறது. ஒட்டுப்படைகளின் தாக்குதல்கள் இன்று போர்நிறுத்த உடன்படிக்கையை முற்றாக ஆட்டம் காணச் செய்து சமாதான முயற்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில்தான் பிரிட்டனில் வைத்து அமைச்சர் மங்கள சமரவீர, பொல்லுக் கொடுத்து அடிவாங்கியுள்ளார். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒட்டுக்குழுக்கள் தீவிரமாகச் செயற்படுகின்றன என்றால், அவர்களை இராணுவத்தினருக்கு எப்படித் தெரியாதுபோனது? அவர்களது முகாம்களும் இராணுவத்தினருக்கு தெரியாது. அவர்களால் எப்படிச் செயற்பட முடியுமென்ற கேள்வியையும் எழுப்பி அதற்கான பதிலையும் கண்காணிப்புக் குழு பெற்றிருக்கும். ஆனால், அதனை அவர்கள் பகிரங்கப்படுத்தாதிருக்கலாம். கண்காணிப்புக் குழு இதுவரை காலமும் இதனைத் தெரிந்து வைத்திருந்தும் இது குறித்து பகிரங்கமாக அறிவிக்காத போதும் அமைச்சர் மங்கள சமரவீர, இதனைப் பகிரங்கப்படுத்துவதற்கான வாய்ப்பை கண்காணிப்புக் குழுவுக்கு வழங்கியுள்ளார். இதன் மூலம் கிழக்கில் கருணா குழு இராணுவத்தினருடன் சேர்ந்தியங்குவது அம்பலமாகியுள்ளது. மிகக் குறைந்த ஆட்களுடன் எப்படி அவர்களால் பல புலனாய்வுத் தகவல்களைப் பெறமுடியும்? எப்படி இராணுவ சோதனை நிலையங்களூடாக ஆயுதங்களுடன் சென்று தாக்குதல்களை நடத்திவிட்டு மீண்டும் அதே சோதனை நிலையமூடாகத் திரும்பிச் செல்ல முடியும்? என்ற கேள்வியும் எழுகிறது. எந்தெந்த ஒட்டுப்படைகள் எவரெவர் தலைமையில் எங்கெங்கிருந்து இயங்குகின்றன என்பதையெல்லாம் புலிகள் பூரண விபரத்துடன் அரசிடம் கையளித்ததுடன், இந்த ஒட்டுப்படைகளை இயக்கும் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் விபரங்களையும் புலிகள் அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். ஒட்டுப்படைகளை அரசின் ஆதரவுடன் இராணுவமே இயக்குகின்றதென்பது அரசிற்கும், இராணுவத்திற்கும் மட்டுமல்லாது முழு உலகத்திற்கும் தெரியும். அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் கூட கருணாகுழு, ஈ.பி.டி.பி.,புளொட் போன்றன இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒட்டுப்படைகளாகச் செயற்படுவதை தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தற்போதைய களநிலையும் அரசியல் நிலையும் தமிழர்களுக்குச் சாதகமாகச் செல்வதை இனவாதிகள் நன்கறிவர். இதனால்தான் தமிழர்களின் பலத்தை இராணுவ ரீதியில் சிதைக்க ஒட்டுப்படைகளையும் அரசியல் ரீதியில் சிதைக்க ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்றவற்றையும் இனவாதிகள் பயன்படுத்துகின்றனர். இனவாதிகள் நோர்வே அனுசரணையாளர்களுக்கு எதிராக பொங்கியெழுகிறார்கள். ஜெனீவாப் பேச்சுகள் மூலம் இலங்கை அரசை புலிகள் அம்பலப்படுத்த நோர்வே அனுசரணையாளர்கள் இடமளிப்பதாக இனவாதிகள் கலக்கமடைந்துள்ளதால் அவர்களை அப்பணியிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்துவதில் தீவிரம் காட்டுகின்றனர். இதேபோன்று, தங்கள் படைகளால் சாதிக்க முடியாததை ஒட்டுப்படைகள் மூலம் சாதித்து விடலாமென்ற நப்பாசையில் ஒட்டுப்படைகளைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துகின்றனர். ஆனால், இலங்கையில் இரு தேசங்கள், இருபடைகளென்ற சம பல நிலையிலுள்ள புலிகளை, சில நூறுபேரைக் கொண்ட ஒட்டுப்படைகள் மூலம் சீண்ட முயற்சிப்பது வேடிக்கையானது. காலத்தை கடத்தி களநிலையை அல்லது அரசியல் நிலையை மாற்றிவிடலாமென்றும் இனவாதிகள் முயற்சிக்கின்றார்கள். கருணாவின் பிரிவின் பின் கிழக்கில் புலிகள் பலமிழந்துவிட்டதான அவர்களது கணிப்பு சரியென அவர்கள் நினைக்கிறார்கள். ஜெனீவாப் பேச்சுக்கு புலிகள் வரவேமாட்டார்களென நினைத்திருந்த இனவாதிகள், புலிகள் வந்ததால் அவர்கள் பலவீனமடைந்திருப்பது உறுதியென்றும் இதனாலேயே தங்களைப் பலப்படுத்துவதற்காக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த புலிகள் முனைவதாகவும் கருதி கிழக்கில் ஒட்டுப்படைகளைக் கொண்டு உரசிப்பார்க்கிறார்கள். ஜெனீவாவில் எதுவித எதிர்ப்புப் பேச்சும் பேசாது உடன்பாட்டில் கைச்சாத்திட்டவர்கள் நாடு திரும்பியதும் வீரம் பேசுகிறார்கள். நாம் கைச்சாத்திட்டது, திருத்தப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டிலேயே என்று புதுவியாக்கியானமும் கூறுகின்றனர். அடுத்த சுற்றுப்பேச்சு பிரயோசனமற்றதாகவே இருக்கப்போகிறது. முதல் சுற்றுப் பேச்சில் காணப்பட்ட தீர்மானங்களை அரசு ஒருபோதும் நிறைவேற்றாதென்பது தெளிவாகிவிட்டது. ஜெனீவாப் பேச்சின் பின்தான் மட்டக்களப்பின் நகர்ப்பகுதியில் ஒட்டுப்படைகள் பகிரங்கமாக முகாம் அமைத்து பாடசாலை மாணவர்களையும், இளைஞர்களையும் கடத்துகின்றன. ஆயுதங்களை களையவேண்டிய நேரத்தில் அவர்களது பகிரங்க ஆயுதச் செயற்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் போர்நிறுத்த உடன்பாட்டிற்கு மட்டுமல்லாது ஜெனீவாப் பேச்சுக்கும் சவால் விடப்பட்டுள்ளது. இதனால் அடுத்த சுற்றுப்பேச்சை, இலங்கை அரசை அம்பலப்படுத்தும் வாய்ப்பாகவே புலிகள் பயன்படுத்துவர். ஜெனீவாப் பேச்சுகளை தோற்கடிக்க வேண்டுமென்பதில் இனவாதிகள் தீவிரம் காட்டுகின்றனர். இந்தப் பேச்சுகள் வெற்றிபெற்றால் அது தமிழ் தரப்புக்கே வாய்ப்பாகிவிடுமென்பதால் இதனை தோற்கடிப்பதில் தீவிர முனைப்பு காட்டப்படுகிறது. முதல் சுற்றுப்பேச்சில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை அரசு அமுல்படுத்தாததால், இனவாதிகள் விரும்புவதுபோல் அடுத்த சுற்றுப்பேச்சும் தோல்வியடைந்து விடுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனீவாப் பேச்சை தோற்கடிக்கவேண்டுமெனப் பார்க்கிறார்களே தவிர அந்தப் பேச்சுகள் தோல்வியடைந்தால் ஏற்படப்போகும் விளைவுகளைப் பற்றி அவர்கள் சிந்திக்கத் தவறிவிட்டனர். இதனால், யுத்தத்தை இவர்கள் எப்படி வரவேற்கப்போகிறார்ளென்பதை அடுத்த சுற்றுப்பேச்சுகள் தெளிவாக்கும். vithuran
|