|
முதல் சுற்றுப் பேச்சுக்கு பின் ஒட்டுப்படையை ஒரு படையாக காட்டும் வித்தை நாடு மற்றொரு யுத்தத்தை நோக்கிச் செல்கிறது. அடுத்த ஜெனீவாப் பேச்சுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் போதே இன்னொரு போருக்கான ஏற்பாடுகளும் நடைபெறுகிறது.
முதல் கட்ட ஜெனீவாப் பேச்சுக்களில் எட்டப்பட்ட உடன்பாடே அமுல்படுத்தப்படாத நிலையில் இன்னொரு ஏமாற்றுக்காக அடுத்த கட்டப் பேச்சுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுப்படைகளின் ஆயுதக் களைவே முதற்கட்டப் பேச்சில் காணப்பட்ட உடன்பாடாகும். ஆனால் அந்தப் பேச்சுக்களின் பின்னர் ஒட்டுப்படையை ஒரு படையணியாகக் காண்பிக்கும் வித்தை நடக்கிறது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகள் நிராயுதபாணிகளாக அரசியல் பணியில் ஈடுபட்ட போது இந்த ஒட்டுப்படைகள் புலிகளை விரட்டி விரட்டித் தாக்கின. இராணுவ புலனாய்வுப் பிரிவின் உதவியுடனேயே இந்தப் படைகள் தங்களைத் தாக்குவதாக புலிகள் தொடர்ந்தும் முறைப்பாடு செய்தனர். ஒரு கட்டத்தில், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக புலிகள் வெளியேறும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இது ஒட்டுப்படைகளுக்கும் அவர்களை இயக்குவோருக்கும் வாய்ப்பானது. போர் நிறுத்த உடன்பாட்டின்படி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகளின் அரசியல் பணி அனுமதிக்கப்பட்டது. அதேநேரம், இந்த உடன்பாட்டின்படி வடக்கு - கிழக்கில் ஒட்டுப் படைகளுக்கு இடமில்லை. அவர்கள், ஆயுதங்கள் களையப்பட்டு இப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நோர்வே அனுசரணையாளர்களும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும் பார்த்திருக்க ஒப்பந்தமே தலைகீழாகியுள்ளது. எவர்களால் வெளியேற்றப்பட வேண்டியவர்களோ அவர்களின் உதவியுடன் ஒட்டுப்படைகள் வெளியேறவில்லை. எவர்கள் வெளியேறக் கூடாதோ அவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலால் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். ஆனாலும் இந்த உடன்பாடு இப்போதும் அமுலிலுள்ளது. சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் நோர்வேயின் அனுசரணையுடனும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்தே இன்று கேள்வியெழுந்துவிட்டது. இந்த ஒப்பந்தம், யுத்தத்தை நிறுத்தி சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்தி சமாதானப் பேச்சுக்களுக்கு வழிவகுக்குமென்ற நோக்கில்தான் எட்டப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதை விடுத்து இந்த ஒப்பந்தத்தின் ஆயுள் காலம் குறித்து பேச வேண்டிய நிலைமை உருவாக்கப்பட்டு விட்டது. ஆனாலும் இது குறித்த முதல் கட்ட ஜெனீவாப் பேச்சுக்களின் விளைவுகள் தோல்வியடைந்து வருவதால், அடுத்த கட்டப் பேச்சுக்கள் நடந்தாலும் அதற்கடுத்த கட்டம் பேச்சுகளாயிராது என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஜெனீவாப் பேச்சுக்களின் உடன்பாடு ஆயுதக் களைவு பற்றியதாகும். ஆனாலும் அது அமுல்படுத்தப்படவில்லை. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளென்ற பெயரிலேயே கருணா குழு செயற்படுகிறது. தற்போது மட்டக்களப்பு நகரில் முகாம்களையும் அமைத்து ஆயுதங்களுடன் வெளிப்படையாகவே இயங்குகிறது. ஜெனீவாப் பேச்சுக்குப் பின்னர் தான் இவ்வாறான நிலைமை உருவாகியது. பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை பகுதியில் இராணுவ முகாம்களுக்கிடையே பதுங்கியிருந்து செயற்பட்ட கருணா குழு இன்று மட்டக்களப்பில் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் முகாம்களை அமைத்துள்ளது. `கருணா குழு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே செயற்படுகிறது', கருணா குழுவுக்கு அரசோ, படையினரோ ஆதரவு வழங்கவில்லையென்றால், அவர்களால் எப்படி அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் முகாம்களை அமைத்து ஆயுதங்களுடன் சுதந்திரமாகச் செயற்பட முடியும். ஜெனீவாப் பேச்சில் ஒட்டுப் படைகளின் ஆயுதக் களைவு குறித்து உடன்பாடு காணப்பட்ட பின்னர் கிழக்கில் தற்போது புலிகளின் பகுதிகளினுள் ஊடுருவி மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கருணா குழுவும் இராணுவமும் இணைந்தே தங்கள் பகுதிகளினுள் ஊடுருவி வந்து தாக்குதல்களை நடத்திவிட்டு தப்பிச் செல்வதாக புலிகள் தொடர்ந்தும் கூறுகின்றனர். இந்தத் தாக்குதலின் நோக்கமென்ன என்பதே மிகப் பெரும் கேள்வியாகும். வெறுமனே புலிகள் மீது தாக்குதலை நடத்தி அவர்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்துவது இதன் நோக்கமாயிராது. ஏனெனில், இவ்வாறான சிறு சிறு தாக்குதல்கள் மூலம் புலிகளுக்கு பெரும் இழப்புக்களை ஏற்படுத்திவிட முடியாது. அதற்கு பெரும் தாக்குதல்களை நடத்த வேண்டும்.அப்படியாயின் இந்தத் தாக்குதல்களின் நோக்கமென்ன? ஒட்டுப்படைகளால் புலிகளைப் போருக்கும் இழுக்க முடியாது. அரச படைகளின் தயவில் தங்கியிருந்து கொண்டு, அரச படைக்கே பெரும் சவாலாகிவிட்ட விடுதலைப் புலிகளை, நூறுக்கும் குறைவானவர்களைக் கொண்ட ஒட்டுப்படைகளால் எப்படி போருக்கிழுக்க முடியும். அதேநேரம், இந்த ஒட்டுப்படைகளை ஆதரிக்கும் அரசோ அல்லது அரச படைகளோ மற்றொரு யுத்தத்திற்கு தயாரில்லையென்பதால், ஒட்டுப்படைகளைப் பயன்படுத்தி புலிகளை மற்றொரு போருக்கு இழுக்கும் சாத்தியமுமில்லை. அவ்வாறாயின், போர் நிறுத்த உடன்பாட்டையும் அதனை அமுல்படுத்த வேண்டுமென்ற ஜெனீவா உடன்பாட்டையும் மீறி ஒட்டுப்படைகளைப் பயன்படுத்தி புலிகள் மீது ஏன் தாக்குதலை நடத்த வேண்டுமென்ற கேள்வி எழுகிறது. ஒட்டுப்படைகள் ,இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவத்துடன் சேர்ந்தே இயங்குவதாக புலிகள் குற்றஞ்சாட்டி வருவதால், இந்த ஒட்டுப்படைகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலன்றி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்தே இயங்குவதானதொரு மாயையை ஏற்படுத்துவதற்காகவே தற்போது புலிகளின் பகுதிக்குள் அடிக்கடி ஊடுருவல் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. புலிகளின் பகுதிக்குள் இருந்தே ஒட்டுப்படைகள் புலிகள் மீது தாக்குதல்களை நடத்துவதாகக் கூறுவதால் இவர்களுக்கு அரச படைகளின் ஆதரவெதுவுமில்லையென்பதையும் இவர்கள் காட்ட முற்படுகின்றனர். ஜெனீவா உடன்பாட்டுக்கமைய ஒட்டுப்படைகளிடமிருந்து பலவந்தமாக ஆயுதங்களை களைவதற்கு இராணுவ நடவடிக்கை தேவை. எனினும், இராணுவ நடவடிக்கையென்பது போர் நிறுத்த உடன்பாட்டை மீறுமொரு செயல். இராணுவ நடவடிக்கை எதிலும் இராணுவம் ஈடுபட முடியாதென்பதை போர் நிறுத்த உடன்பாடு தெளிவாகக் கூறுவதாகவும் இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர். அத்துடன், இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளில் இயங்கும் கருணா குழுவிடமிருந்து ஆயுதங்களை களைவதாயின் இராணுவத்தினர் புலிகளின் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். ஆனால், அதற்கும் போர் நிறுத்த உடன்பாடு தடையாகவேயிருப்பதாகக் கூறுவதன் மூலமும், ஒட்டுப் படைகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலில்லை, புலிகளின் பகுதிகளிலேயே இருக்கின்றன என்று கூற முற்படுவதன் மூலமும் ஜெனீவா உடன்பாட்டின்படி ஒட்டுப் படைகளின் ஆயுதங்களைக் களைய வேண்டிய தேவையோ அல்லது பொறுப்போ அரசுக்கோ அல்லது படைத் தரப்புக்கோ இல்லையெனவும் கூற முற்படுகின்றனர். அடிக்கடி புலிகளின் பகுதிக்குள் ஊடுருவி நடைபெறும் இந்தத் தாக்குதல்கள் மூலம் ஒட்டுப் படைகள் புலிகளின் பகுதிக்குள்தான் இருக்கின்றன என்பதைக் கூற முற்படும் அதேநேரம், இவ்வாறான தாக்குதல்கள் மூலம் இந்த ஒட்டுப் படைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகளுக்கே பெரும் சவாலாகி வருகின்றார்களென்றதொரு தோற்றப்பாட்டையும் ஏற்படுத்தவும் இவர்கள் முற்படுகின்றனர். புலிகளின் பகுதிக்குள்ளிருந்தே ஒட்டுப் படைகள் செயற்படுகின்றன. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அவர்களில்லையெனக் கூறுவோர் ஒன்றை கவனிக்கத் தவறிவிட்டனர். அது, இந்த ஒட்டுப் படைகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருந்துதான் இயங்குகின்றன என்பது மட்டுமல்லாது, இராணுவத்தினருடனும் சேர்ந்தே இயங்குகின்றன என்பதை நிரூபித்து வருகிறது. அதாவது, புலிகளின் பகுதிக்குள் ஊடுருவி ஒட்டுப் படைகள் நடாத்தும் தாக்குதலெல்லாம் இராணுவ சூனியப் பிரதேசத்தைத் தாண்டிய பின்வரும் புலிகளின் பிரதேசத்திலுள்ள முன்னரங்க காவல் நிலைகள் மீது தான் என்பதை தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அத்துடன், இவ்வாறான ஊடுருவல் தாக்குதல் நடைபெற்ற பகுதிக்கு மிகச் சமீபமாக ஏதாவதொரு படைமுகாம் அமைந்திருக்குமென்பதும் முக்கிய விடயமாகும். புலிகளின் பகுதிக்குள் ஒட்டுப் படைகளிருந்தால் அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதியினுள் இருக்கும் பல முக்கிய முகாம்கள் மீதே தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும். அது, இராணுவ முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து பல கிலோ மீற்றர் தூரத்திற்கப்பால் நடைபெற வேண்டும். அத்துடன், புலிகளின் பிரதேசத்திற்குள்ளிருக்கும் ஒட்டுப் படைகள் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதாயின் அவர்களுக்கு பின்புறமாகவே வந்தே தாக்குதல் நடத்த வேண்டும். ஆனால், நடைபெறும் தாக்குதல்களெல்லாம் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளின் முன்புறமாகவே நடைபெறுகிறது. இதைவிட, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்தான் ஒட்டுப்படைகள் இருக்கின்றனவென்றால், அவர்கள் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அதனைத் தாண்டி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேதானே செல்ல வேண்டும். ஆனால், நடைபெறும் தாக்குதல்கள் அப்படிப்பட்டவையாக இல்லையே! தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருந்தால்தானே ஒட்டுப்படைகளின் ஆயுதக் களைவு பற்றி பேச வேண்டும். அவர்கள்தான் அங்கு இல்லையென அடித்துக் கூறிவிட்டால், ஆயுதக் களைவுப் பிரச்சினையே எழாதென அரசும் படைத் தரப்பும் கருதுகின்றன. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள் மிகமிக இரகசியமாக இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்பின் மத்தியிலிருந்த ஒட்டுப் படைகளின் முகாம்களைக் கூட மிகச் சுலபமாக அழித்த புலிகள், தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒட்டுப் படைகளின் நிழல் படுவதைக் கூட விட்டு வைப்பவர்களா என்ற கேள்வியும் எழுகிறது. `கட்டுநாயக்கா' கதைகளையெல்லாம் மறந்துவிட்டு இன்று அரசும் படைத்தரப்பும் கட்டுக் கதை விடுகின்றன. இதனை சிங்களவர் கேட்பார்கள். ஆனால், நோர்வேகாரர்களும் கேட்பார்களா என்பதுதான் கேள்வி. ஒருபுறம் நிலைமை இவ்வாறிருக்கையில் மறுபுறம் போர் நிறுத்த உடன்பாடு மற்றொரு விதத்தில் மிக மோசமாக மீறப்படுகிறது. உடன்பாட்டின்படி ஒட்டுப் படைகளின் ஆயுதங்கள் களையப்பட்டு வடக்கு, கிழக்கிற்கு வெளியே அவர்கள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அதேநேரம், உடன்பாட்டின்படி புலிகள் அரசியல் பணிகளுக்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருக்க வேண்டும். அரசியல் பணிகளில் புலிகள் ஈடுபடுவதற்கு உடன்பாட்டில் நிபந்தனைகளெதுவுமில்லை. ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தலால் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறிய புலிகள் மீண்டும் அங்கு செல்ல பல்வேறு நிபந்தனைகளையும் விதித்து படைத்தரப்பு தடுத்துள்ளது. சாணேற முழம் சறுக்குவதுபோல், உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்த பலத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகையில் படைத்தரப்பின் நடவடிக்கைகள் புதிய புதிய சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன. ஒட்டுப் படைகளின் ஆயுதக் களைவுக்கு ஒரு கதைகூறும் படைத்தரப்பு, புலிகள் அரசியல் பணிக்காக வருவதற்கு வேறு கதை கூறுகிறது. இது நிலைமையை மேலும் மேலும் மோசமடையச் செய்யப் போகிறது. சமாதானத்திற்கான சாத்தியக் கூறுகளையே இல்லாது செய்கிறது. போருக்கு வாருங்களென அறைகூவல் விடுக்கப்படாது போருக்கான தூண்டுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் சுற்றில் உடன்பாடு கண்ட விடயங்கள் அமுல்படுத்தப்படாவிட்டால் 2 ஆவது சுற்று ஜெனீவா பேச்சுக்களை ஒத்திவைக்க வேண்டியிருக்குமென புலிகள் கடுமையாகக் கூறியுள்ளனர். ஆனால், இதனை அரசு தனக்குச் சாதகமாகவே பயன்படுத்தப் பார்க்கும். அடுத்த சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்று அது முறிவடைந்தால் உடனடியாக போர் வெடித்து விடலாமென்ற அச்சமும் அரசுக்கிருக்கையில் முதற் சுற்றுப் பேச்சுக்களில் உடன்பாடு காணப்பட்ட விடயங்களை அமுல்படுத்தாவிடின், 2 ஆவது சுற்று பேச்சுக்கள் ஒத்திவைக்கப்படுமெனப் புலிகள் கூறியதன் மூலம் போரும் ஒத்திவைக்கப்படுமென அரசு நிம்மதிப் பெருமூச்சு விடப் போகிறது. vithuran
|