பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow இரட்டை வேட அணுகுமுறைஅமைதித் தீர்வுக்கு வழியல்ல
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இரட்டை வேட அணுகுமுறைஅமைதித் தீர்வுக்கு வழியல்ல அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 27 March 2006

""நான்கு ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த அமைதிச் சூழலின் பயன்கள் எவையும் கிடைக்காமல் மீண்டும் தமிழ் மக்களை போர் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் நிலைமை உருவாகியிருக்கின்றது.''

இவ்வாறு விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்திருக்கின்றார்.
ஒருபுறம் சமாதானப் பேச்சுகள் அமைதி முயற்சிகள் என்ற போக்குத் தென்பட்டாலும் மறுபுறம் அந்த அமைதி முயற்சிகளுக்கு ஆப்பு வைத்து, இலங்கைத் தீவைக் கொடூரப் போருக்குள் தள்ளிவிடும் கைங்கரியமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதைத்தான் புலிகளின் மூத்த உறுப்பினர் சுட்டிக்காட்டுகின்றார்.
அமைதி முயற்சிகளுக்கு வாய்ப்பளித்து, யுத்த நிறுத்தம் பேணி, சமாதானப் பேச்சுகளுக்கு வந்திருக்கும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சர்வதேச ரீதியில் வசைபாடும் திருக்கூத்தும் பெரிய எடுப்பில் திட்டமிட்ட வகையில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. இப்போக்குப்புலிகளை வீணாகச் சீண்டி, ஆத்திரத்தை ஊட்டி, அவர்களைச் சண்டைக்கு இழுக்கும் தந்திரோபாயமின்றி வேறில்லை.
இலங்கைத் தீவில் தங்கியிராமல் உலகம் முழுவதும் சுற்றிப் பறந்து வரும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச ரீதியில் புலிகளுக்கு எதிரான பிரசாரப் பணியைப் பொறுப்பேற்று, முழுவீச்சில் அவ்விடயத்தில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றார்.
தமக்கு முன்னர் இப்பணியை வெளிவிவகார அமைச்சுப் பொறுப்பை ஆற்றிய லக்ஷ்மன் கதிர்காமர் போன்றே இவரும் ஒவ்வொரு நாடு நாடாக அவற்றின் தலைநகரங்கள் தோறும் பிரசன்னமாகி, புலிகள் எதிர்ப்புப் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றார். அதுவும் வழமையான தந்திரோபாயங்களைப் பின்பற்றி.
இலங்கை அரசாங்கம் மீது அழுத்தம் தருவதை விடுத்து "பயங்கரவாதிகளான'' புலிகளை ஒடுக்குவதில் மூச்சாக ஈடுபடுங்கள் என சர்வதேசத்தைக் கெஞ்சி வருகின்றார் அவர்.
சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியம் அமைந்துள்ள பிரஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கமிட்டிக்கு முன்னால் அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றினார். புலிகள் "பயங்கரவாதிகள்' என்றும், "ஜனநாயக விரோதிகள்' என்றும், "கொலைகாரர்கள்' என்றும் அங்கு வாங்குவாங்கென்று திட்டித் தீர்த்திருக்கின்றார் அவர்.
அதேநேரம் இலங்கை இராணுவத் தளபதியும் எல்லை மீறி, அரசியலுக்குள் தலையிட்டு, புலிகளுக்கு எதிராக "அபஸ்வரம்' பாடி வருகின்றார்.
நீண்ட தேக்கத்தின் பின்னர் கடந்த மாதம் ஜெனிவாவில் அரசு புலிகள் பேச்சு நடைபெற்றது. அந்தப் பேச்சில் எட்டப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
அதனை நிறைவேற்றத் தவறியமையால் தமிழர் தாயகத்தில் பதற்றம் பரவி வருகின்றது.
எட்டப்பட்ட முடிவை நடைமுறைப்படுத்தாமல் அரசுத் தரப்பு இழுத்தடித்துவர, மறுபக்கத்தில் சர்வதேச ரீதியில் புலிகளின் பெயரைக் கெடுத்து, குட்டிச்சுவராக்கி, புலிகளின் செல்வாக்கை இழக்க வைக்கும் எத்தனங்களும் அரசுத் தரப்பினால் படுமும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
இவை, பேச்சு முயற்சிகளின் மீதும், பேச்சு மூலமான தீர்வில் இலங்கை அரசுக்குள்ள பற்றுறுதி குறித்தும், புலிகளுக்கு அளவிலா சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
அமைதி வழித் தீர்வுக்கு எதிராகக் கடுமையான பௌத்த சிங்கள மேலாண்மை வாதப் போக்கை ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. போன்றன கடைப்பிடித்து வருகின்றன. அவற்றுடனான கூட்டை நட்புறவை கூட ஜனாதிபதி மஹிந்தர் இன்னும் துறக்கவில்லை.
அரசுக் கூட்டுக்குள் கூட்டமைப்புக்குள் இந்தக் கட்சிகள் நேரடியாகப் பங்களிக்கா விட்டாலும் இலங்கைத் தீவின் இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணும் எத்தனத்தில் இந்த மேலாண்மை வாத சக்திகளின் செல்வாக்கு குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல.
இத்தகைய பேரினவாதக் கட்சிகளின் குழப்பகரமான அடக்குமுறைச் சிந்தனைப் போக்குக்குள் சிக்கி நின்று கொண்டு சர்வதேச ரீதியில் தமிழர்களின் ஏக, அதிகாரபூர்வ பிரதிநிதிகளான புலிகளை தனது வெளிவிவகார அமைச்சர் மூலம் திட்டித் தீர்த்து அவர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தி, அழிவுப் பிரசாரம் செய்து கொண்டு யுத்த வெறியும் தீவிரமும் கொண்ட அதிகாரியை இராணுவத் தளபதியாக வைத்து இராணுவ ரீதியான அச்சுறுத்தல்கள், நெருக்குவாரங்களைப் புலிகளுக்குக் கொடுத்துக் கொண்டு அமைதி முயற்சிகளை முன்னெடுப்பது போல இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்குப் "படம்' காட்டுகின்றது
அமைதி முயற்சிகள் ஆக்கபூர்வமான திசையில் நகர்வதற்கு அரசுத் தரப்பின் இந்த இரட்டை வேட அணுகுமுறை உதவப் போவதில்லை.
நான்கு வருட அமைதி முயற்சிகளை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் எத்தனங்களாகவே இவை கொள்ளப்படத்தக்கவை.


uthayan
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..