உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மற்றொரு சதி! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 30 March 2006

சிறிலங்கா இராணுவத்தில் முஸ்ஸிம்களுக்கெனத் தனிப்பிரிவுவொன்றை உருவாக்கும் சிறிலங்கா அரசின் தீர்மானம் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் மேலும் சிக்கல்களையும், நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் ஒன்றாக மட்டுமல்ல, இலங்கைக்கு வெளியிலும் இவ்விவகாரம் கவனத்திற்கொள்ளத்தக்க தொன்றாகவே இருக்கும்.

இராணுவத்தில் உருவாக்கப்படும் முஸ்லிம் படைப்பிரிவு தனியானதொரு படைப்பிரிவு அல்ல என்றும், அப்படைப்பிரிவில் பெரும்பான்மை இனத்தவரும் சிப்பாய்களாகவோ அன்றி அதிகாரிகளாகவோ இருப்பார்கள் என்றும், சிறிலங்கா இராணுவ ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டதாகவே இது இயங்கும் என்றும் சிறிலங்கா இராணுவத்தரப்பும் அரசதரப்பும் கூறிக்கொள்ளலாம்.

ஆனால் உண்மையில் கிழக்கில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளைப் பாதுகாப்பதென்ற பெயரில் முஸ்லிம் படைப்பிரிவு ஒன்றை அமைக்கவும் அதனைத் தமிழ் மக்களுடன் மோதவிடவும் சிறிலங்கா அரசாங்கம் தயாராகிவிட்டது என்பதே உண்மையாகும்.

இது முஸ்லிம்களின் தனிப்படைப்பிரிவு அல்ல என அரசதரப்பு கூறுவதானால் ஏன் இராணுத்தினருக்கான முஸ்லிம் இளைஞர்கள் சேர்ப்பு என்ற அறிவித்தல் வெளிவரவேண்டும்? பொதுவில் இராணுவத்தினருக்கு ஆட்சேர்ப்பு என்று அறிவித்ததோடு இராணுவத்தில் இணையவிரும் முஸ்லிம்களைச் சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா?

ஆனால், அரசால் முஸ்லிம்- தமிழர் இடையில் காணப்படும் சிறிய முரண்பாடுகளைப் பெரிதாக்கி இருதரப்பினர் இடையேயும் பெரும்பகையை வளர்த்துவிடும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே இதுவாகும். அடுத்ததாக சிறிலங்கா இராணுவத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை நிறைவு செய்வது ஆகும். அதாவது முஸ்லிம் இனத்தையும் யுத்தத்தில் பெருமளவில் பலியிட அது தயாராகின்றது என்பதாகும்.

ஆனால் திடீரென தற்பொழுது அரசாங்கம் இம்முயற்சியை மேற்கொண்டமைக்கும் காரணமுண்டு. அதாவது ஜெனீவாவில் பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாட்டில் பிரதானமாக அமுல்படுத்தப்பட வேண்டிய ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களைக் களைதல் வேண்டும் என எழும் அழுத்தங்களைத் தவிர்த்துக் கொள்ளுதலும் இதன் பிரதான நோக்கமாகும்.

குறிப்பாக முஸ்லிம் ஒட்டுக்குழுக்கள் குறித்த விடயத்தை தவிர்த்துக்கொள்ள அரசிற்கு இது வாய்ப்பதாக இருக்கும். அதாவது தற்பொழுது ஒட்டுக்குழுவாகச் செயற்படும் முஸ்லிம் இளைஞர்களை நிரந்தர படைகளில் சேர்த்துக்கொள்வதன் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் ஒட்டுக்குழுக்கள் இல்லை என்ற ரீதியில் சாதிக்க அரசிற்கு வாய்ப்பளிக்கும். இதேசமயம் முஸ்லிம் குழுக்களை தமது விருப்பிற்கு ஏற்றவகையில் செயற்படவும் அனுமதிக்கலாம்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்நடவடிக்கை எதற்கு விரோதமாக இருக்கிறதோ, இல்லையோ இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் பெரும் தாக்கத்தையும் நெருக்கடிகளையும் நிச்சயம் தோற்று விப்பதாக இருக்கும். அது இலங்கையில் அமைதியென்பதை இல்லாது ஒழித்துவிடத்தக்கதுமாகும்.

ஆனால் சிறிலங்கா ஆட்சியாளர்கள் இவற்றைத் தெரியாமல் மேற்கொள்ளவில்லை. தமிழ்- முஸ்லிம் மக்கள் இடையிலான சிறிய முரண்பாடுகளைப் பெரிதாக மாற்றி இருதரப்பினரிடையேயும் எவ்வேளையிலும் இணக்கம் காணமுடியாத முரண்பாட்டைத் தோற்றுவிக்கவே சிங்கள ஆட்சியாளர்கள் முற்பட்டு நிற்கின்றனர். இது தமிழர் தாயகத்தைத் துண்டாடுவதில் இருந்து தமிழரின் உரிமைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவது வரையிலான நீண்ட திட்டத்தின் அடிப்படையிலானதாகும்.

இதேவேளை முஸ்லிம் தலைமைகள் இதனைப்புரிந்து கொண்டுள்ளனவா? அன்றி புரிந்து கொள்ளவில்லையா? என்பது குறித்து எம்மால் உறுதியாக எதனையும் கூறமுடியாது. சில தலைமைகள் வரவேற்று வீரம் பேச முற்பட்டுள்ளதாகவும், சில தலைமைகள் அபிப்பிராய பேதம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் முஸ்லிம் படைப்பிரிவு தேவையற்றது என முஸ்லிம் தரப்பில் இருந்து எவரும் குரல் எழுப்பியதாக இல்லை.

இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்நடவடிக்கையானது தமிழ் முஸ்லிம் மக்கள் உறவிலும் இனப்பிரச்சினைத்தீர்விலும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் விவகாரமாக மட்டுமல்ல தென்னாசியப் பிராந்திய அரசியலிலும் இராணுவச் சூழலிலும் தாக்கத்தை விளைவிக்கத்தக்கதாக இருக்கும். குறிப்பாக பாகிஸ்தான் புலனாய்வுத்துறையின் உதவியுடன் இயங்கும் ஜிகாத் குழுவை சிறிலங்கா இராணுவத்தில் இணைத்துக் கொள்ளும் நிலையில், முஸ்லிம் படைப்பிரிவு என்பது இலங்கையின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட விவகாரம் ஒன்றாகவும் மாறக்கூடும். 


ஈழநாதம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..