|
போரா? சமாதானமா? என்ற இருவழிகளின் தமிழினம் தமது உரிமையை பெற்றுக் கொள்வதற்கான நம்பிக்கையூட்டக் கூடிய வழிமுறையாகத் தென்படுவது போர் தான். ஏனெனில் அகிம்சை வழி, அறவழிப் போர், சமாதானப் பேச்சுக்கள், சர்வகட்சி மாநாடுகள் எல்லாம் தமிழ் மக்களது உரிமைகளை வழங்குவதற்கான எவ்வித அடிப்படை அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை. எனவே தான் தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஆயுத வழிப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியிருந்தனர் அது தமிழினத்திற்கு விடுதலையை பெற்றுக் கொடுப்பதற்கான சூழலை உருவாக்கியது.
ஆனால் சமாதானப் பேச்சுக்கள் என்பது விடுதலையை விரைபுபடுத்துவதற்கான வழிமுறைகளுக்கு கதவடைப்புச் செய்தது. சிங்கள தேசம் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான உரிமைகளை வழங்காது மறுதலிக்கும் அதேவேளை தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியான வன்முறைக் கலாசாரத்தைக் கட்டவிழ்த்தி வருகின்றது. அது மாத்திரமன்றி இவ்வாறான வன்முறைக் கலாசாரங்களை சர்வதேச அரங்கில் நியாயப்படுத்தும் போக்குக் காணப்படுகின்றதே தவிர தொடரும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான எத்தகைய அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை. இந்நிலையில் மீளவும் தமது ஆயுத வழிமுறையில் விடுதலையை விரைந்து பெறுவதற்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் மாவீரர் தினச் செய்தியில் தேசியத் தலைவர் தெரிவித்திருக்கும் அந்தச் செய்தியின் உள்ளார்ந்த கருத்தை இன்னும் சிங்கள அரசாங்கமும் மகிந்த ராஜபக்சவும் உதாசீனப்படுத்த நினைத்தால் மிகப் பெரியதொரு வில்லங்கத்தில் சிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். ஏனெனில் மகிந்த ராஜபக்வுக்கு ஒரு இறுதிச் சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறோம் எனத் தேசியத் தலைவர் மாவீரர் தினச் செய்தியில் தெரிவித்திருந்தார். அந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு போர் நிறுத்தத்தைப் பலப்படுத்தி சமாதான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டியது சிங்களத்தின் தலையாய கடமை. ஆனால் நிலவரங்கள் புறநடையாகவுள்ளன. போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலுள்ள போதும் அதனை முழுமையாக அமுல்படுத்துவதற்கான எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. சமாதான வழிமுறைகள் தொடரப்பட வேண்டுமானால் அமுலிலுள்ள போர் நிறுத்தம் உடன்பாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கமைய அமுல்படுத்தப்பட வேண்டும். ஆனால் புறநடையான சமாதான சூழலை சிதறகடிக்கின்ற வகையில் வன்முறை கலாசாரம் வளருமானால் நம்பிக்கையற்றதொரு சூழல் உருவாகும். ஜெனீவாவில் இரு தரப்புப் பேச்சுக்கள் என்பது போர் நிறுத்த அமுலாக்கம் குறித்த பேச்சுக்களை முன்னெடுக்கும் வகையில் முக்கியத்து வப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் சிங்கள அரசாங்கம் இணங்கிக் கொண்ட விடயங்கள் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையிலும் இன்னும் அமுல்படுத்தாத சூழல் தொடர்வதும், சமாதான வழிமுறைகளில் தமிழினம் தொடர்ந்து நம்பிக்கை வைப்பதற்கான சூழலை கொண்டிருக்கவில்லை. ஒட்டுக்குழு ஆயுதக்களைவு விடயத்தில் படைத்தரப்பு கூறி வரும் உண்மைக்குப் பறும்பான கருத்துக்களும் மகிந்தரின் மௌனமும், தமிழினம் சிங்கள தேசத்தின் மீது நம்பிக்கை வைக்கும் சூழலைக் கொண்டிருக்கவில்லை. எனவே இனியும் பேச்சுக்கள் என்ற போர்வையில் இனவாதிகளின் பின்னால் ஏமாறாமல் விடுதலையை விரைந்து எடுப்பதற்கான சிறந்த வழிமுறையாகத் தென்படும் ஆயுதப் போராட்டத்தை மீளவும் முன்னேடுக்க வேண்டிய சூழல் உருவாகி வருகின்றது. இதனடிப்படையில் தேசியத் தலைவர் கடந்த மாவீரர் தினச் செய்தியில் தெரிவித்திருந்த மகிந்தருக்கான இறுதிச் சந்தர்ப்பத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு சூழ்நிலை ஏற்படலாம். எனவே இந்த இறுதிச் சந்தர்ப்பத்தை சிங்கள தேசம் புரிந்து கொண்டு விரைவாக தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் நோர்வேயின் புதிய சிறப்புத் தூதுவர் வருகை. சொல்ஹெய்மின் வருகை என்பவற்றை அர்த்தம் நிறைந்ததாக்க வேண்டியபொறுப்பு சிங்களத்திடமே தங்கியுள்ளது. eelanatham
|