|
ஜெனீவா பேச்சுகளில் கண்காணிப்புக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கை முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் போருக்கான அறைகூவல் தினமும் விடுக்கப்படுகிறது. புலிகள் தான் இதனை சரியாகப் புரிந்து கொள்ளவில்லைப் போல் தென்படுகிறது. போர் நிறுத்த உடன்பாடு அமுலிலுள்ளதாலும் போர் நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கல் தொடர்பாக ஜெனீவாவில் பேசப்படுவதாலும், போருக்கான அறைகூவலை எவரும் விடுக்க முடியாதெனப் புலிகள் கருதுவது போல் தெரிகிறது.
தினமும் நடைபெறும் சம்பவங்கள் போர் நிறுத்த உடன்பாடு குறித்து மட்டுமல்ல முழுச் சமாதான முயற்சியிலுமே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் நிறுத்த உடன்பாட்டின் ஒரு தரப்பு என்பதற்காக போராளிகளும் பொது மக்களும் தினமும் கொல்லப்படுவது எந்த விதத்தில் நியாயம். இறுதியாகக் கூட திருகோணமலையில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில், தமிழ்த் தேசியத்தின் குரலாக ஒலித்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலைகள் இனியும் தொடரும். இனந்தெரியாதோரின் தாக்குதல்கள் ஒருபோதும் முடிவுக்கு வராது. ஆனாலும் புலிகள் அரசுடன் பேசத்தான் போகிறார்கள். அது எதற்கென்பது தான் இன்று தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பப்படும் மிகப்பெரும் கேள்வியாகும். `வெள்ளைப் புலி'களை வெளியேற்றுமாறு நேற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜே.வி.பி.யும் ஹெல உறுமயவும் படுதோல்வி அடைந்துவிட்டதால் இலங்கையில் இனி இனவாதத்திற்கு இடமில்லையெனக் கூறுவோரின் எண்ணிக்கை அதிகம். ஆனாலும் இனவாத முகமூடியுடன் திரியும் இனபேதமற்றவர்களின் எண்ணிக்கை அதிகமென்பதால் வடக்கு - கிழக்கில் மர்மக் கொலைகளும் இனந்தெரியாதோரின் தாக்குதல்களும் அதிகரித்தே செல்கின்றன. சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன், நோர்வேயின் அனுசரணையுடன், நோர்டிக் நாடுகளைச் சேர்ந்தவர்களின் கண்காணிப்புடன் போர் நிறுத்த உடன்பாடு தொடர்ந்தும் அமுலிலிருப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கையில் இன்று மிகப்பெரும் நகைச்சுவையென்றால் இதுவாகத் தானிருக்கும். சர்வதேச சமூகமே இலங்கையில் தனது முழுக்கவனத்தையும் செலுத்துகையில் இந்த நிலையென்றால், யுத்த நிறுத்தம் முறிந்து, நோர்வேயின் அனுசரணை இல்லாது போய், கண்காணிப்புக் குழுவும் விலகும் பட்சத்தில் இங்கு நடக்கப்போகின்றவை எப்படியிருக்கப் போகின்றன?. தற்போதைய நிலையை விட இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச சமூகம் வேறெப்போதும் அக்கறை செலுத்தியது கிடையாது. ஆனால் அந்தச் சர்வதேச சமூகத்திற்கே சவால் விடும் வகையிலேயே தினமும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒட்டுப்படைகளைப் பயன்படுத்தி இராணுவத்தினர் மேற்கொள்ளும் தாக்குதல்களை இதுவரை புலிகள் அம்பலப்படுத்தி வந்தனர். ஆனால் இன்று வடக்கு, கிழக்கில் நடைபெறும் சம்பவங்களுடன் படைத்தரப்புக்குள்ள தொடர்புகள் குறித்து சர்வதேச சமூகம் அறியத் தொடங்கிவிட்டது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேயே ஒட்டுப்படைகள் நிலைகொண்டிருப்பதை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் அம்பலப்படுத்தத் தொடங்கிவிட்டது. இதனை மறுக்கும் அரசின் கூற்றையும் கண்காணிப்புக் குழு நிராகரிக்கிறது. கருணா குழுவென்பது புலிகளின் உள்விவகாரமென்பதால் அவர்களது ஆயுதக் களைவுடன் படையினருக்கு தொடர்பில்லையெனவும் அரசு கூறுகிறது. அவர்கள் பிரச்சினையை அவர்களே தீர்க்க வேண்டுமெனவும் அரசு கூறுகிறது. ஆனால், கருணா குழுவை தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் வைத்திருப்பதன் மூலம் அரசும் படைகளும் இவ்விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளன. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் ஒட்டுப்படைகள் இயங்குவதாக ஆரம்பத்திலிருந்தே புலிகள் குற்றஞ்சாட்டி வந்த போது அதுகுறித்து மௌனம் சாதித்து வந்த கண்காணிப்புக் குழு, இன்று ஒட்டுப்படைகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலேயே இயங்குகின்றன என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாராயுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவி புலிகள் மீது தாக்குதல்களை நடத்துவதன் மூலம் ஒட்டுப் படைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள்தான் இருக்கிறதெனக் காட்ட படைத்தரப்பு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால், தாக்குதல் நடைபெறும் இடங்கள் யாவும் படையினரதும் புலிகளதும் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எல்லையிலுள்ளதுடன் படையினரின் முகாம்களுக்கு அருகிலுமேயுள்ளது. இதனை ஆதாரங்களுடன் புலிகள் கண்காணிப்புக் குழுவிடம் தெரிவித்த அதேநேரம் அண்மையில் வாழைச்சேனையில் இரு கிராமங்களை படையினரும் ஒட்டுப் படைகளும் சுற்றிவளைத்து அப்பகுதி மக்களை ஓரிடத்திற்கு கொண்டு சென்று கூட்டமும் நடத்தியிருந்தனர். இதன்போது ஒட்டுப் படைகள் பகிரங்கமாகவே ஆயுதங்களுடன் அங்கு நடமாடியது. பின்னர் அப் பகுதிக்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட கண்காணிப்புக் குழுவினர் அவர்களை நேரில் எதிர்கொண்டு வினவிய போது, தாங்கள் கருணா குழுவைச் சேர்ந்தவர்களென்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதுபோல் பல்வேறு தகவல்களையும் ஆதாரங்களுடன் திரட்டியுள்ள கண்காணிப்புக் குழு, ஒட்டுப் படைகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் இயங்குகின்றன என்பதை அடுத்த சுற்று ஜெனீவாப் பேச்சுக்களில் ஆதாரங்களுடன் முன்வைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. போர் நிறுத்த உடன்பாட்டின் படி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் புலிகள் மீண்டும் அரசியல் பணிகளுக்கு வருவதற்கு பல நிபந்தனைகளை முன்வைத்து அதனைத்தடுத்துள்ள அரசு, போர் நிறுத்த உடன்பாட்டுக்கு மாறாக ஒட்டுப்படைகளை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் தங்க வைத்துள்ளது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் புலிகள் வந்துவிட்டால் ஒட்டுப்படைகளின் செயற்பாடுகளை புலிகள் அம்பலப்படுத்தி விடுவார்களென்பதில் இவர்கள் மிகக் கவனமாயிருப்பதால், புலிகள் இப் பகுதிகளினுள் வருவதை எப்படியாவது தடுத்து விடுவார்கள். இது ஒப்பந்தத்திற்கு முற்று முழுதாக முரணான போதும் இதன் மூலம் பல இலாபங்களை பெறலாமெனப் படைத் தரப்பு கருதுகிறது. போர் நிறுத்த உடன்பாட்டின்படி புலிகளின் கடல் நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் அவர்கள் அரசியல் பணிகளில் ஈடுபட முடியுமென்பதால் வடக்கு-கிழக்கிற்கிடையிலான அவர்களது தரைவழிப் போக்குவரத்தும் நடைபெற்றது. மிக முக்கிய தலைவர்களுக்கும் தளபதிகளுக்கும் ஹெலிகொப்டர் பயணங்களும் அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டதால் வடக்கு-கிழக்கிற்கிடையிலான புலிகளின் முக்கியஸ்தர்களது போக்குவரத்துகளும் நீண்டகாலம் நடைபெறவில்லை. இதனால் தங்களது போராளிகளின் பாதுகாப்பான கடல்வழிப் பயணத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்யுமாறும் இல்லையேல் தங்களது படகுகள் மூலம் தாங்கள் கடல் வழிப் பயணத்தை மேற்கொள்ளப் போவதாகவும் புலிகள் நோர்வே அனுசரணையாளர்களுக்கு அறிவித்துள்ளனர். கிழக்கில் ஒட்டுப் படைகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகையில் ஜெனீவாப் பேச்சுக்குச் செல்லும் தங்களது தலைவர்களின் பாதுகாப்பு குறித்து புலிகள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒட்டுப் படைகள் இயங்குவதை கண்காணிப்புக் குழு நிரூபித்து வருகையில் கொழும்பினூடாகச் செல்லும் தங்கள் தலைவர்களது பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை புலிகள் கோரியுள்ளனர். ஒட்டுப்படைகளை பயன்படுத்தி அவர்கள் மூலம் கிழக்கில் மக்களை மிரட்டியும் பயமுறுத்தியும் காரியங்களை சாதிக்க முடியுமென நினைத்தவர்களுக்கு அம்பாறையிலும் திருகோணமலையிலும் பெரும் அடி விழுந்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாறை தமிழ் பிரதேசங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. திருகோணமலை நகர சபையிலும் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. திருமலை நகரை கபளீகரம் செய்ய முனையும் பேரினவாதிகளுக்கு இது பேரிடியாகிவிட்டது. இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமோக வெற்றிக்கு அடித்தளமிட்டவர்களில், திருமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் வ.விக்னேஸ்வரன் மிகவும் முக்கியமானவர். இவரைப் படுகொலை செய்ததன் மூலம் நகர சபையின் செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த சூழ்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. இவையெல்லாவற்றுக்கும் ஒட்டுப்படைகளை காரணம் காட்டி இதன் பின்னணியில் பேரினவாதிகளிருப்பது வெளிப்படை. அம்பாறையிலும் திருமலையிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி மூலம் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளென்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், புலிகள் தான் ஏக பிரதிநிதிகளென்பதை நிரூபிக்க எத்தனை தேர்தல்கள் தேவை. மயிரிழையில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி புரிபவர்களுக்கும் இலங்கை நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வரும் சர்வதேச சமூகத்திற்கும் புலிகள் தான் வடக்கு-கிழக்கின் ஏக பிரதிநிதிகளென்பது புரியாதது புதிராகவுள்ளது. இந்த நிலையில், ஒட்டுப்படைகளின் பெயரில் நடைபெறும் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பனிச்சங்கேணியில் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவல் தாக்குதல் நடைபெற்றது போல் நேற்று சனிக்கிழமை கட்டைபறிச்சான் பகுதியிலும் புலிகளின் முன்னரங்கக் காவலரண்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாவற்றுக்கும் கருணா குழுதான் காரணமென படைத்தரப்பு கூறுகிறது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து சென்றே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினரே இந்தத் தாக்குதலின் பின்னணியிலிருப்பதாக புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். விக்னேஸ்வரனின் கொலையும், வெளியார் எவரும் ஆயுதங்களுடன் புகமுடியாத உள்துறை முக வீதியிலேயே நடைபெற்றுள்ளதால் இதற்கும் படையினரே காரணமெனவும் இதன் பின் விளைவுகள் மோசமாயிருக்கப் போவதாகவும் புலிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர். ஆனாலும், வழமை போல் இதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லையென படைத்தரப்பு கூறியுள்ளது. ஜெனீவாவில் நடைபெறவுள்ள அடுத்த கட்டப் பேச்சுக்கு முன்னர் புலிகள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஜெனீவா பேச்சுகள் இந்தச் சுற்றுடன் முடிவுக்கு வந்துவிடுமென்றே கருதப்படுவதால் பேச்சுக்கு முன்னர் புலிகளைப் போருக்கிழுக்க தீவிர முயற்சிகள் நடைபெறுகின்றன. ஜெனீவாப் பேச்சில் கண்காணிப்புக் குழு சமர்ப்பிக்கப் போகும் அறிக்கையும் முக்கியத்துவமானதாயிருக்கப் போகிறது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருந்துதான் ஒட்டுப்படைகள் இயங்குகின்றனவென்றால் அதற்கு இராணுவத்தினரின் நேரடி உதவிகளிருப்பதையும் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை சுட்டிக் காட்டப் போகின்றது. இதன் மூலம் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி, சமாதான முயற்சிகளை சீர்குலைத்து, ஒட்டுப்படைகளை வழிநடத்தி, மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்தது யாரென்பதை முழு உலகிற்கும் அம்பலப்படுத்தும் அவசியம் புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது. விதுரன்
|