|
Sunday, 16 April 2006 |
|
நேற்று நடந்த பல சம்பவங்கள் இலங்கைத்தீவை நியமான யுத்தத்திற்கு மிக அருகில் மீண்டும் தள்ளியுள்ளன. கடந்த சில நாட்களாக அதிகரித்திருக்கும் சிறிலங்கா இராணுவத்தின் தமிழர்கள் மீதான தாக்குதல்களால் சீற்றமுற்றிருந்த விடுதலைப்புலிகளின் தலைமை நெகிழ்ச்சிப் போக்கை கைவிடுவதற்கு தீர்மானித்திருந்தது.
ஆயினும் சர்வதேச சமூகம் அளித்த சில வாக்குறுதிகளின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் ஜெனீவாவிற்கு பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு சம்மதித்திருந்தனர். பேச்சுவார்த்தைக்கான நாட்களாக ஏப்ரல் 24 மற்றும் 25ஆம் திகதிகள் தீர்மானிக்கப்பட்டிருந்தன.ஆனால் நேற்று கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தென்தமிழீழத் தளபதிகளின் வன்னி நோக்கிய கடற் பயணம் ரத்து செய்யப்பட்டது. விடுதலைப்புலிகளின் தளபதிகள் பயணம் செய்யும் படகை தாக்குவதற்கு சிறிலங்கா கடற்படையினர் திட்டமிட்டிருந்ததே இதற்கு காரணம் ஆகும். 1987 ஆம் ஆண்டு திருகோணமலை, மட்டக்களப்பு தளபதிகளாக இருந்த குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை கடலில் வைத்துக் கைது செய்ததன் மூலம் அவர்களின் வீரச்சாவிற்கும், அதைத் தொடர்ந்து ஈழ - இந்திய யுத்த்திற்கும் சிறிலங்கா அரசு வழிகோலியது. அதே போன்று தற்பொழுது திருகோணமலை, மட்டக்களப்பு தளபதிகளாக இருக்கின்ற சொர்ணம், பானு ஆகியோருக்கும் கடற் பயணத்தின் போது ஏதாவது தீங்கு இழைக்கவும், அதன் மூலம் விடுதலைப்புலிகளை யுத்தத்திற்கு தூண்டுவதற்கும் சிறிலங்கா அரசு சதித் திட்டம் தீட்டலாம். ஆகவே விடுதலைப்புலிகள் இந்தத் தளபதிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயத்தில் எவ்வித விட்டுக்கொடுப்பிற்கும் சம்மதிக்க மாட்டார்கள்.
அத்துடன் நேற்று மீண்டும் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவம் படையிணி மன்னாரில் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் ஒரு போராளி வீரச்சாவடைந்தார். இச் சம்பவத்தில் ஒரு பொதுமகனும் கொல்லப்பட்டுள்ளார். இதே வேளை "பொங்கியெழும் மக்கள் படையும்" படையினருக்கு எதிராக வவுனியாவிலும் திருகோணமலையிலும் கிளைமோர் தாக்குதல்களை நடத்தியது. இதில் வவுனியாவில் 5 படையினரும் திருகோணமலையில் 2 விமானப் படையினரும் இத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். 11 படையினர் படு காயமுற்றனர். "பொங்கியெழும் மக்கள் படையால்" சாதாரண படையினரை விட கடற்படையினரும் விமானப்படையினரும் இலக்கு வைக்கப்படுவது சிறிலங்கா இராணுவத்திற்கு பெருத்த நெருக்கடி ஒன்றை உருவாக்கி உள்ளது. "மக்கள் படை" சில மாதங்களிற்கு முன்பு நடத்திய தாக்குதல்களிலும் அதிகமான கடற்படையினர் கொல்லப்பட்டனர். இம் முறை பல கடற்படையினர் கொல்லப்பட்டு, தற்பொழுது இரண்டு விமானப் படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு சாதாரண சிப்பாயை விட கடற்படை மற்றும் விமானப்படை சிப்பாயை உருவாக்குவது மிகவும் கடினமானதாகும். பெருத்த பொருட் செலவையும், கடின பயிற்சியையும், நீண்ட காலத்தையும் உள்ளடக்கிய ஒன்றாகும். அத்துடன் அதிகமான கல்வித் தகமை கொண்டவர்களே கடற்படை, விமானப்படையில் பணியாற்ற முடியும். இவைகள் அனைத்தும் கடற்படையை விட விமானப் படையில் மேலும் அதிகம். ஆகவே தற்போது சிறிலங்கா படைத்துறைக்கு ஏற்படும் இழப்புக்களானது உண்மையில் ஈடு செய்வதற்கு கடினமானதே.
இவைகளுக்கு மத்தியில் சமாதானம் செய்ய வந்த சர்வதேச சமூகம் சலிப்படைந்து வெளியேறும் நிலைக்கு வந்துள்ளது. "அதிகரித்துவரும் வன்முறைகளால் ஜெனிவா பேச்சுக்கள் ஆபத்துக்குள்ளாகலாம்" என்றும் "சம்பந்தப்பட்ட் தரப்புகளான சிறிலங்கா அரசு, விடுதலைப்புலிகள் என்போரால் மட்டுமே பாதுகாப்பு நிலமைகளை உறுதிப்படுத்த முடிவதுடன் ஜெனிவா பேச்சுக்களையும் பாதுகாக்க முடியும்" என்றும் எரிக் சொல்கைம் தெரிவித்தார். "இரு சாராரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறார்கள். இரு சாராருக்குமே தற்போது சமாதானத்தில் போதிய ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை" என்று கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தெரிவித்தார். இந்தக் கூற்றுக்கள் அவர்கள் மிக விரக்தி அடைந்துள்ளதையே காட்டுகிறது. இதுவரை சர்வதேச சமூகத்தால் சிறிலங்காவின் பேரினவாத அரசிடம் இருந்த தமிழினத்திற்கு ஒரு சிறு நியாயத்தைக் கூட பெற்றுத் தர முடியாவில்லை. மாறாக எவ்வித பிரயோசனமும் அற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளச் செய்து, காலத்தை கடத்துவதன் மூலம் தமிழர் தரப்பை பலவீனப்படுத்திகின்ற வேலையையே சர்வதேச சமூகம் செய்து வருகின்றது. இவ்வாறான ஒரு நிலையில் சர்வதேச சமூகம் வெளியேறுவதை தமிழர்களும் விரும்புவார்கள். webeelam
|