|
மட்டக்களப்பில் துணைப்படைகளைப் பயன்படுத்தி போராட்டத்தை நசுக்க முற்படும் அதேவேளை, திருமலையில் காடையர்களைப் பயன்படுத்தி தமிழர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. தமிழர்களுக்கெதிராக மீண்டுமொரு முறை திட்டமிடப்பட்டு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. திருகோணமலையில் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தாக்குதல்களின் பின்னணியிலேயே கடந்த புதன்கிழமை மாலை இனப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்வேறு செய்திகள் எச்சரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளன.
தமிழர் தாயகத்தின் தலைநகரமான திருகோணமலையில் தமிழர்களை ஒரு போதும் நிம்மதியாக இருக்க விடப் போவதில்லையென இனவாதிகள் தங்கள் செயல்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். திருகோணமலையை ஆக்கிரமித்து சிங்கள மயப்படுத்தும் திட்டத்திற்கு எது தடையாக இருந்தாலும் அதனை அப்புறப்படுத்துவோமென இந்தப் படுகொலை மூலம் மற்றொரு செய்தியையும் கூறுகின்றனர். திருகோணமலையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு இனவாதிகளுக்கு பேரிடியாக அமைந்தது. திருமலை நகர சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியது. இதன் வெற்றிக்காக அயராது உழைத்த, திருமலை தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் வ.விக்னேஸ்வரனின் படுகொலை, நிலைமையை மிக மோசமடையச் செய்தது. கிழக்கில் ஒட்டுப் படைகளின் நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டத்துடனும் அதன் எல்லைப் புறமான வெலிக்கந்தையுடனும் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. இருக்கும் சிலரை வைத்துக் கொண்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவே ஒட்டுப் படையாக பெருமளவில் செயற்படுவதாக தமிழ் தரப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. கருணா குழுவென்ற பெயரில் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட நிழல் யுத்தத்தில் இதுவரை நானூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு விட்டனர். இவர்கள் அனைவரும் தமிழர்களே. கருணா குழுவைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இந்த நிழல் யுத்தமே இன்றைய மோசமான நிலைமைக்குக் காரணம். தமிழர்களைப் பயன்படுத்தி தமிழர்களுக்கெதிராகவும் அவர்களது தாயக விடுதலைப் போராட்டத்திற்கெதிராகவும் சிங்களவர்கள் மேற்கொள்ளும் இன அழிப்பை உலகம் புரிந்து கொள்ள வேண்டும். தினமும் கருணா குழுவின் பெயரால் பலர் கொல்லப்படுகிறார்கள். இதன் மூலம் கிழக்கில் இன அழிப்பு வேகமாகி வருவதை இந்த ஒட்டுப் படைகள் உணரும் நிலையிலில்லை. விடுதலைப் புலிகளுக்கிடையிலான உள்மோதலாலேயே இந்தப் படுகொலைகள் நடைபெறுவதாக இராணுவ தரப்பு கூறிக் கொண்டு ஒட்டுப் படைகளைத் தூண்டி படுகொலைகளைச் செய்வதை கிழக்கு மக்களும் நன்குணர்வர். ஒருபுறம் சமாதானப் பேச்சுகளெனக் கூறிக் கொண்டு மறுபுறம் நிழல் யுத்தத்தில் அரசு ஈடுபட்டிருப்பதை புலிகள் பல தடவைகள் அம்பலப்படுத்தியுள்ளனர். ஒட்டுப் படைகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்குவதாக கிழக்கு மக்களும் புலிகளும் கூறிவந்த போது முதலில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு நம்ப மறுத்தது. கள நிலை தெரியாமல் அவர்களும் தடுமாறிக் கொண்டிருந்தனர். எனினும், பல்வேறு சம்பவங்கள் மற்றும் சந்தர்ப்பங்களில் ஒட்டுப் படைகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் இயங்குவதைக் கண்டனர். இதனை அவர்கள் வெளிப்படையாகக் கூறத் தொடங்க, இலங்கை அரசும் இராணுவமும் வெகுண்டெழுந்தன. கண்காணிப்புக் குழுவுடன் அரசும் படைத்தரப்பும் இதற்காக கடும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளன. இது கண்காணிப்புக் குழுவினருக்கு எதிரான பிரசாரங்களுக்கும் வழி வகுத்துள்ளது. ஒட்டுப் படைகளின் ஆயுதங்களை களைவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். ஜெனீவாப் பேச்சுகளின் உடன்பாட்டின் மூலம் ஒட்டுப் படைகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள்ளிருப்பதை அரச தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், இராணுவமோ, ஒட்டுப் படைகள் குறித்து கேள்வியெழுப்புகிறது. சமாதான முயற்சிகள் சீர்குலைந்து போர்நிறுத்த உடன்பாடு முறிவடையும் நிலைக்கு இந்த ஒட்டுப் படைகளின் விவகாரம் காரணமாகி விட்டது. சமாதானப் பேச்சுகளில் புலிகள் பேரம் பேசும் பலத்தை பெற்றிருப்பதால் ஒட்டுப் படைகளைப் பயன்படுத்தி புலிகளை மேலும் பலவீனமாக்கி புலிகளின் பேரம் பேசும் பலத்தை இல்லாது செய்துவிடலாமென அரசும் படைத் தரப்பும் கருதுகின்றன. தமிழர்களை, தமிழர்களைப் பயன்படுத்தியே கொல்லவும் அந்தக் கொலைகளை அவர்களது இயக்க விவகாரமாக்கவும் முயலும் படைத்தரப்பும் அரசும் இதன் விளைவாக படைத் தரப்பு தாக்கப்படும் போது துள்ளிப் பாய்கின்றன. தமிழர்களுக்கெதிராக காடையர்கள் மூல வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இராணுவமும் தமிழர்களைத் தாக்குகிறது. மட்டக்களப்பில் ஒட்டுப் படைகளைப் பயன்படுத்தி தாயகப் போராட்டத்தை நசுக்க முயலும் அதேநேரம், தாயகத் தலைநகரில் காடையர்களைப் பயன்படுத்தி தமிழர்கள் மீது இனவன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. திருகோணமலையில் கடந்த ஜனவரி மாதம் ஐந்து அப்பாவி மாணவர்களை விஷேட அதிரடிப் படை திட்டமிட்டு படுகொலை செய்தது. ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரே இந்தப் படுகொலையின் பின்னணியிலிருந்தது அப்பட்டமாகத் தெரியவந்தது. அதிரடிப் படையினர் தான் இந்தப் படுகொலையைச் செய்ததாக ஜனாதிபதியே ஒப்புக் கொண்டிருந்தார். இந்த நிலையிலேயே மாமனிதர் விக்னேஸ்வரனின் படுகொலை தமிழ் மக்களை கொந்தளிக்கச் செய்தது. இப்படுகொலையும் அப்பாவி மாணவர்களது படுகொலை போன்றது. நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதுடன் இதன்மூலம் ஏற்படப் போகும் விளைவுகள் அடுத்த கட்ட ஜெனீவாப் பேச்சுகளை பாதிக்கச் செய்ய வேண்டுமென்பதும் திட்டமாகும். இந்தப் படுகொலைகள், ஒட்டுப் படைகளின் செயற்பாடுகளுக்கு பொறுப்பானவர்கள் யாரென்பதெல்லாம் மிகத் தெளிவாகத் தெரிந்த விடயம். தமிழர்களின் பலத்தை இனவாதிகள் தொடர்ந்தும் குறைத்து மதிப்பிடுவதாலேயே இந்த நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றன என்பதை புலிகள் மட்டுமன்றி, தமிழர்களும் நன்கறிவர். தமிழர் தாயகப் பகுதிகளில் ஒட்டுப் படைகளின் நடவடிக்கைகளும் காடையர்களின் தாக்குதல்களும் படையினரின் அத்து மீறிய செயற்பாடுகளும் சமாதான முயற்சிகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளும் தமிழர் பலம் குறித்த சிங்களவர்களது தவறான கணிப்பாலேயே ஏற்பட்டுள்ளதால் தமிழர்கள் மீண்டும் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக இடம்பெறும் கிளேமோர் தாக்குதல்களை அரசும் படைத் தரப்பும் மிகைப்படுத்துகின்றன. ஆனால், இதற்கான காரணத்தை அவர்கள் முழுமையாக மறைக்க முற்படுகின்றனர். ஒட்டுப் படைகளால் மேற்கொள்ளப்படும் நிழல் யுத்தமே இன்றைய இந்த நிலைமைகளுக்கு காரணமென்பதை நோர்வே அனுசரணையாளர்கள் வெளிப்படுத்த வேண்டும். நோர்வேக்கு எதிராக ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற இனவாதிகளின் செயற்பாட்டால் நோர்வேயும் அவர்களைத் திருப்திப்படுத்தவே முனைவது போல் தெரிகிறது. கருணா குழு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இயங்கவில்லை என அடியோடு மறுக்கும் அரசும் படைத்தரப்பும், மட்டக்களப்பு நகரில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் கோவிந்தன் வீதியில் படையினரின் பலத்த பாதுகாப்புடன் கருணா குழு பகிரங்கமாகவே முகாமை திறந்த போது என்ன செய்தன. இதன் மூலமாவது, கருணா குழு அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இராணுவத்துடன் தான் சேர்ந்தியங்குகின்றது என்பதை கண்காணிப்புக் குழு முழு உலகத்திற்கும் கூற வேண்டும். அதைவிடுத்து, இங்கு அலுவலகம் திறந்தது ஒரு மாற்றுக் குழுவென சிலர் கூற முற்படுவதை கண்காணிப்புக் குழு எவ்விதத்தில் எடுத்துக் கொள்ளப்போகிறது. தமிழ் மக்களுக்கெதிராகவும் அவர்களது தாயக விடுதலைப் போராட்டத்திற்கெதிராகவும் சிங்கள இனவாதிகள் நன்கு திட்டமிட்டு செயற்படுவதை உலகம் உணர வேண்டும். அழிவுகளின் உச்சத்திலேயே படையினர் மீதான தாக்குதல்கள் நடைபெறுகின்றன. ஆனால், அதனைப் பயன்படுத்தி அப்பாவிப் பொது மக்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்படுகின்றனர். படையினர் மீது கிளேமோர் தாக்குதல்கள் நடைபெறும் போதெல்லாம், கொல்லப்படும் படையினரின் எண்ணிக்கைக்கு ஈடாக தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றனர். கடந்த சில தினங்களில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதல்களில் 18 படையினர் வரை கொல்லப்பட்டனர். அதேநேரம் இந்தக் காலப்பகுதியில் காடையர்களாலும் இனந்தெரியாத ஆயுதபாணிகளாலும் 25 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று நாட்களில் (வியாழக்கிழமை வரை) ஏழுபேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மரண தண்டனைப் பாணியில் இந்தக் கொலைகள் நடைபெறுகின்றன. கிளேமோர் தாக்குதல்களின் பின்பே இந்தப் படுகொலைகளும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதால் இவற்றின் பின்னணியில் இருப்பவர்கள் யாரென்பது தெளிவாகும். பழிக்குப் பழி என்பது போல் 1980 களின் முற்பகுதியில் ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றது போல் படுகொலைகள் தொடர்கின்றன. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் மட்டும் யாழ். குடாநாட்டில் 30 பேர் கொல்லப்பட்டனர். 60 க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டு காணாமல் போயினர். அவர்கள் பற்றிய தகவல்கள் இன்று வரை இல்லை. அதேபோன்றதொரு நிலைமைதான் இன்றும் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இராணுவத்தினரே இந்தப் படுகொலைகளைத் திட்டமிட்டு மேற்கொள்வதாக புலிகள் குற்றஞ்சாட்டினர். தற்போதும் அதே பாணியிலான கொலைகள் ஆரம்பமாகியுள்ளன. நாங்கள் உங்களுக்கெதிராக எதையும் செய்வோம், அதை யாரும் கேட்கக் கூடாது. ஆனால், நீங்கள் எங்களுக்கெதிராக ஏதாவது செய்தால் அதை விட மாட்டோம். அதற்கு இரண்டு மடங்காக பதிலுக்கு செய்வோம் என்ற பாணியில் தமிழர்களுக்கெதிரான தாக்குதல்கள் தொடர்கின்றன. அதேநேரம், ஜெனீவாவில் அடுத்த சுற்றுப் பேச்சுகளில் கலந்து கொள்வதற்காக அரசு மீது புலிகள் சில அழுத்தங்களைப் பிரயோகித்தால் அந்தப் பேச்சுகளில் புலிகளைப் பங்கு பற்ற வைக்க அல்லது பேச்சை முறிக்கும் விதத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் மூலம் புலிகளுக்கு அழுத்தங்களை கொடுக்க சில தரப்புகள் முயல்கின்றன. தமிழர்கள் மீது தொடரும் தாக்குதல்களால் புலிகள் கடுமையான அழுத்தங்களைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புலிகளின் கிழக்குத் தளபதிகளின் வன்னிப் பயணம் தடைப்பட்டதும் திருமலையில் இடம்பெற்ற இனப்படுகொலையும் அடுத்த கட்ட ஜெனீவாப் பேச்சை இல்லாது செய்து விட்டதெனலாம். இதையும் மீறி புலிகள் ஜெனீவாப் பேச்சுக்கு சென்றால், தங்களது அழுத்தங்களுக்கு புலிகள் அடி பணிந்து விட்டதாக அரசும் படைத்தரப்பும் கருதுவது மட்டுமல்லாமல் இவற்றை அதிகரிக்கவே செய்யும். இந்தச் சூழ்நிலையில் இந்தப் போர் நிறுத்தமும் சமாதான முயற்சியும் அர்த்தமில்லை. போர் நிறுத்த காலத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் அநேகம். இலங்கை அரசும் படைகளும் எதுவும் செய்யலாம். ஆனால், புலிகள்தான் எதுவும் செய்யக் கூடாது என்ற மனோநிலை உலக நாடுகள் சிலவற்றுக்குக் கூட இருக்கின்றது. புலிகள் மீது கனடா விதித்த தடை மூலம் சமாதான முயற்சிகளில் தங்களுக்கு நம்பிக்கையில்லையென்பதை கனடாவும் வெளிப்படுத்தியுள்ளது. ஆனாலும், சமாதான முயற்சிக்கு தாங்கள் ஆதரவு போல் அவர்கள் கருத்துக் கூறுவது நகைப்புக்கிடமானது. அமெரிக்காவும் பிரிட்டனும் மட்டுமல்ல, ஏனைய சில நாடுகளும் இப்படித்தான் கருதுகின்றன. பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு முழு உலகமும் தங்களுக்கு ஆதரவு வழங்குமென இலங்கை கருதுவதால் தாங்கள் எதனையும் செய்யலாமென இலங்கை அரசும் கருதுகிறது. திருகோணமலையில் புதன்கிழமை மாலை திட்டமிடப்பட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காடையர்கள் கொண்டுவரப்பட்டு தமிழர்கள் தாக்கப்பட்டனர். அரச பயங்கரவாதம் எப்படியெனத் தமிழர்களுக்கு மீண்டும் காட்டப்பட்டுள்ளது. சொந்த மண்ணிலேயே அவர்கள் வெட்டிச் சரிக்கப்பட்டனர். இந்த நிலையில் இனி ஜெனீவாப் பேச்சு மட்டுமல்ல, எந்தப் பேச்சும் நடைபெற வேண்டுமா என்ற கேள்வியை தமிழர்கள் எழுப்புகின்றனர். இதற்கு பதில் சொல்ல வேண்டியது புலிகளின் பொறுப்பாகும். விதுரன்
|