பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மகிந்தவின் வெட்கமும் துக்கமும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 18 April 2006

'நாட்டின் தலைவரென்ற ரீதியில் பெருமையுடன் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் வெட்கமும் அவமானமும் வேதனையும் கொண்டவனாக இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறேன்" என அண்மையில் ஒரு நிகழ்வில் சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறினார். அதாவது 1983 ஆம் ஆண்டு ஜுலை இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு உரையாற்றினார்.

ஆனால், உண்மையில் அவர் ஒரு துன்பகரமான உணர்வுகள் கலந்த மனநிலையுடன் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறுவதெல்லாம் உலகை ஏமாற்றும் தந்திரோபாயம் என்பது அவர் அவ்வாறு கூறியதற்கு முன்னரும் பின்னருமாக பல தடவைகள் வெளிப்பட்டிருக்கிறது.

1983 ஆம் ஆண்டு ஜுலைக்கலவரம் என்பது சிறிலங்கா நாட்டின் தலைவருக்கு மட்டுமல்ல சிங்கள இனத்திற்கே வெட்கமளிக்கக்கூடிய ஒருவிடயம் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.

ஆனால் அவ்வாறு சாதாரண சிங்கள மக்களில் பெரும்பாலானோர் வெட்கப்படும் அளவுக்கு சிறிலங்காவின் தலைவர்கள் அதற்கு வெட்கப்படவில்லை என்பதே உண்மை.

அவ்வாறு யாராயினும் வெட்கப்பட்டிருப்பார்களாயின் கடந்த 23 வருடகாலத்தில் நடைபெற்ற பெரும் துன்பகரமான சம்பவங்கள் எல்லாம் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை.

1983 இல் இக்கலவரத்தை நடத்தியது ஐக்கிய தேசியக் கட்சி என்ற ரீதியில் அதனைக் குத்திக்காட்டும் அரசியல் நோக்கோடும், தாம் ஒரு நீதியான தலைவர் என்று உலகிற்குக் காட்டும் தந்திரோபாயமாகவுமே இந்த நட்ட ஈடும் உரையும் என்பது வெளிப்படை.

1983 ஜுலைக் கலவரத்தில் அதாவது 23 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கொடூரத்திற்கு இன்னமும் கூட முழுமையாக இழப்பீடு வழங்கப்படவில்லை. அதாவது மகிந்த ராஜபக்ஷ கேட்டவர்களுக்கெல்லாம் வாக்குறுதிகளை மட்டுமே அள்ளி வழங்குபவர் என்பதும் அதனைச் செயலில் காட்டமாட்டார், காட்டமுடியாது என்பதும் விரைவில் நிரூபிக்கப்படும். அவர் வழங்கும் வாக்குறுதிகளை சிறிலங்காவின் பொருளாதாரம் தாங்காது என்பது இதற்குக் காரணமாகும்.

இப்பொழுதும் கூட பாதிக்கப்பட்டோரில் மிகக்குறைந்த வீதத்தினரே நட்ட ஈட்டைப் பெற்றுள்ளனர். பல ஆயிரக்கணக்கானோருக்கு நட்டஈடு இன்னமும் கிடைக்கவில்லை. ஆனால் அதனை மகிந்த ராஜபக்ஷவினால் வழங்கவும் முடியாது.

இவ்வாறான நிலையில் அவர் ஆட்சிப்பீடமேறிய பின் அவரது கட்டுப்பாட்டின் கீழுள்ள படைகள் நடத்திவரும் படுகொலைகள், வன்முறைகள் அவருக்கு மேற்கூறிய அவமானம், வெட்கம், துக்கம் என்பவற்றை ஏற்படுத்தவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறான கொடூரமான சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ துடிதுடித்துப் போவதாகக் காட்டிக்கொள்கிறார். சனாதிபதி செயலகம் உடனடியாகவே கவலையும் கண்டனமும் தெரிவிக்கிறது. ஓர் உயர் மட்டக்குழு சம்பவ இடத்திற்கு மகிந்தவால் அனுப்பப்படுகிறது.

'நிலைமை கட்டுப்பாட்டிற்குள். புலிகளின் சதி முறியடிக்கப்பட்டது.... விசாரணைகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்...." என அந்த உயர்மட்டக்குழு அறிவிக்கின்றது.

சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கூட 'குற்றம் செய்தவர் எந்த உயர் பதவியிலிருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிடுகிறார். அத்துடன் விவகாரமும் முடிந்து விடுகின்றது.

திருகோணமலையிலே அப்பாவி மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்தச் சம்பவத்திற்கு குறிப்பிட்ட சிறு தொகையில் திருகோணமலைக்கு அனுப்பப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் தான் காரணம் என்பது வெளிப்பட்டது.

அந்தச்சிறப்பு அதிரடிப்படையினரை அங்கு அனுப்பி வைத்தவர் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு ஆலோசகரான கொட்டகதெனிய. இவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அமைதியுடன் இவர்களை அனுப்பிவைக்கவில்லை. திருகோணமலையில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையில் சிறப்பு  அதிரடிப்படையினர் அங்கு தேவையென சிலர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் அதற்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதி பெறப்பட்டதாகவும் கூறினார்.

ஆனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோ அது குறித்துப்பேசி விவாதமொன்றை ஆரம்பிக்கத்தான் விரும்பவில்லை என்று கூறினார். எவ்வாறாயினும் இந்தச்சம்பவம் குறித்து பின்னர் கருத்துக் கூறிய கொட்டகதெனிய சம்பந்தப்பட்ட இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களைச் சுட்டுக்கொள்ள சிறப்பு அதிரடிப்படைக்கு உரிமையில்லையெனத் தெரிவித்தார்.

ஆனால் இன்றுவரை இச்சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புபற்ற சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? இவர்களை அனுப்பிவைத்த பாதுகாப்பு ஆலோசகர் கொட்டகதெனியா பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடனா அல்லது அனுமதியின்றியா இவ்விடத்திற் செயற்பட்டிருக்கிறார் என்பது வெளிப்படுத்தப்படவில்லை.

அதற்குப் பின்னர் மட்டக்களப்பு நகரில் கிறிஸ்மஸ் ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் கொலை தொடர்பான விசாரணைகளிலும் இன்று வரை எதுவித முன்னேற்றமும் இல்லை.

இப்பொழுது திருகோணமலையில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நடைபெற்ற திருகோணமலை தமிழ் மக்கள் பேரவைத்தலைவர் விக்கினேஸ்வரன் அவர்களின் படுகொலை நடந்திருக்கிறது.

'அதியுயர் பாதுகாப்பு யாருக்கு?" என்பது இப்பொழுது தெரிகின்றது. அது தமிழ்த் தேசிய உணர்வாளர்களைச் சுட்டுக் கொல்பவர்களுக்கே பாதுகாப்பு அளிக்கும் வலயம் என்பது வெளிப்பட்டிருக்கிறது.

இக்கொலை தொடர்பாக 'உண்மையான விசாரணைகள்" நடைபெற்று வருவதாகச் சிறிலங்காவின் மக்களையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்கும் அதியுயர் பதவி வகிக்கும் பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ தெரிவித்திருக்கிறார்.

அவர் தமது விசாரணைகளுக்கு 'உண்மையான" என்ற அடைமொழியைச் சேர்த்திருப்பதானது அவரது திணைக்களம் 'பொய்யான" விசாரணைகளையும் நடத்தக் கூடியது என்பதை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் தான் ஒரு 'நேர்மையான" அதிகாரி என்பதைப் புலப்படுத்தியிருக்கிறார்.

அவரது உயர்மட்ட விசாரணையின் பெறுபேறு குற்றவாளியின் படத்தை வரைந்து வைத்திருப்பது மட்டுமே. 'உண்மையாகவே" அவர் விசாரணை நடத்தி அதனை மட்டுமே அவர் கண்டுபிடித்திருப்பின் சிறிலங்கா மக்கள் பாதுகாப்பற்ற பரிதாபத்திற்குரிய மக்களே. ஏனெனில் அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் திணைக்களத்தின் செயற்திறமை அவ்வளவுதான்.

கடந்த புதன்கிழமை திருகோணமலையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் 1983 ஜூலைக் கலவரப் பாணியில் நிகழ்த்தப்பட்டன. மகிந்த ராஜபக்ஷ தனது பாணியில் அமைச்சர் போகல்லாகம தலைமையிலான குழுவொன்றை உடனடியாகவே அனுப்பி வைத்தார். அவரும் சில கூட்டங்களை நடத்திவிட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் என அறிவித்திருக்கிறார்.

'தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் ஓய்ந்தபின் ஊரடங்கு" 'வாகனங்களில் ஏற்றி வரப்பட்ட குண்டர்கள் தாக்குதல்" என்பன வெல்லாம் தான் மகிந்த ராஜபக்ஷ அவமானப்பட்ட 1983 ஜூலைக்கலவரத்திலும் நடந்தேறியது.

ஆனால் மகிந்த ராஜபக்ஷ கூட்டத்தில் ஆற்றிய உரையென்றாலென்ன அவர் வழங்கிய நட்ட ஈட்டுக்கொடுப்பனவு என்றால் என்ன? அவர் போடும் நாடகமென்றால் என்ன? இவையெல்லாம் இவருக்கு முன்னர் ஆட்சி செய்தவர்களின் அடியொற்றியவையே. இவையெல்லாம் தமிழ் மக்கள் ஏற்கெனவே அனுபவித்தவையே.

முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 1981 இல் எரிக்கப்பட்ட யாழ். நூல் நிலையத்திற்கு புத்தகமும் செங்கல்லும் சேர்த்தது போன்றதே இதுவும். ஆனால் 'ஆத்திரமூட்டும் சம்பவங்கள் மத்தியிலும் சிறிலங்கா அரசாங்கம் காக்கும் பொறுமைக்கு 'பாராட்டுப் பத்திரம் வாசிப்பவர்கள்தான் அறிந்து செய்கிறார்களா? அறியாமல் செய்கிறார்களா? என்பது புரியாம லிருக்கின்றது. ஆனால் இதன் மூலம் அவர்கள் துன்பம் அனுபவிக்கும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட முடியாது.


வேலவன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..