|
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சீற்றம் கொள்ளாமல் தமிழர்களது நம்பிக்கையை மேற்குலகம் பெறுவது அவசியமானது என்று தமிழீழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.சிறிலங்கா அரச தலைவர் தேர்தலை விடுதலைப் புலிகள் புறக்கணிப்பு செய்தமையை மேற்குலகம் கடுமையாக விமர்சனம் செய்து வந்தது.
சிறிலங்கா அரச தலைவராக ராஜபக்ச பொறுப்பேற்றிருந்தாலும் அண்மைக்காலமாக நோர்வே மற்றும் இந்திய நாடுகள் ரணில் விக்கிரமசிங்கவை உத்தியோகப்பூர்வமாக அழைத்து அவரைக் கொண்டு அரசியல் காய்களை இலங்கைத் தீவில் நகர்த்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இம்மாத இறுதியில் அமெரிக்காவுக்கு ரணில் விக்கிரமசிங்க பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்படியானால் ரணில் விக்கிரமசிங்கவினால் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டு விட முடியுமா? விடுதலைப் புலிகளின் தேர்தல் புறக்கணிப்புக்கு என்னதான் காரணம்? ஆகிய கேள்விகளுக்கான பதிலளிக்கும் வகையிலும் இலங்கைத் தீவில் மேற்குலகம் செய்ய வேண்டிய நியாயமான செயற்பாடு என்ன? என்பது தொடர்பாகவும் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16.04.06) வழங்கிய அரசியல் ஆய்வின் எழுத்து வடிவம்: பொதுவாக வெளிப்படையாகக் காண்கிற விடயங்களுக்கு ஒரு பிரேத பரிசோதனையை அரசியல் ரீதியாக செய்வது அவசியமானது. தற்போது மேற்குலகின் சீற்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கச் செய்கிறது. சிறிலங்கா அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கோரியதையடுத்து- ரணில் விக்கிரமசிங்கவின் தோல்விக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்கிற வகையில் விடுதலைப் புலிகள் மீதான சீற்றத்தை மேற்குலகம் அவ்வப்போது வெளிப்படுத்தத் தவறவில்லை. இவற்றிற்குப் புறம்பாக ஓர் அரசியல் உண்மை உண்டு. மகிந்த ராஜபக்ச உண்மையில் ஓர் அரசியல் தீர்வை முன்வைக்க மாட்டார் என்று மேற்குலகம் நம்புகிறது. அதனோடு எமக்கு கருத்து முரண்பாடு இல்லை. மகிந்த ராஜ்பக்சவால் ஒரு அரசியல் தீர்வைக் காண முடியாது என்பதை திட்டவட்டமாக நம்புகிறேன். இந்த விடயத்தில் மேற்குலகத்தின் கருத்தோட்டமும் எமது கருத்தோட்டமும் ஒரே மாதிரியாகவே உள்ளது. ஆனால் பிரச்சனை என்னவெனில்- ரணில் விக்கிரமசிங்கவின் தோல்விக்கு புலிகளின் புறக்கணிப்புத்தான் காரணம் என்கிற வகையில் ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வியின் பெயரால் புலிகள் மீது சீற்றங்களை அவ்வப்போது மேற்குலகம் வெளிப்படுத்தி வருவதுதான். அது பலவேளைகளில் தருணம் வருகிற போதெல்லாம் வெளிப்பட்டு வருகிறது. இதன் அரசியல் பின்னணியை ஆராய வேண்டியது அவசியமானது. புலிகளுடன் தேர்தல் உடன்பாடு ஒன்றை செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் ஒன்று ரணிலுக்கு இருக்கவே செய்தது. சந்தர்ப்பம் மட்டும் அல்ல ஒரு வாய்ப்பும் இருக்கவே செய்தது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க இவ்விடயத்தை வேறு விதமாக யோசித்து இருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விடுதலைப் புலிகள் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருந்தமையை முதலில் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே விடுதலைப் புலிகளிடம் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு மனப்பாங்கு இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்குக் காட்டிய எதிர்ப்பு என்பது மேற்குலகத்துக்கு புலிகள் காட்டிய எதிர்ப்பு என்று சிலர் தவறுதலாகக் கூறுகின்றனர். நிச்சயமாக அப்படி இல்லை. இதில் ரணில் விக்கிரமசிங்கவின் அணுகுமுறையானது விநோதமான பரிணாமத்தைப் பெற்றிருந்தமைதான். மேற்குலகத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் நேரடியாக எதிர்த்தார்கள் என்று ஒருபோதும் கூறமாட்டேன். நிச்சயமாக அதில் நான் ஒரு வினோதமான உண்மையைக் காண வேண்டியது அவசியமாகும். ரணில் விக்கிரமசிங்க பின்வருமாறுதான் யோசித்தார். அதாவது விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது பிற்காலத்தில் நடைபெறக் கூடிய பேச்சுவார்த்தைகளிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளிலும் விடுதலைப் புலிகளின் பேரம் அதிகரித்துவிடும் என்று ரணில் விக்கிரமசிங்க அஞ்சியிருந்தார். எனவே விடுதலைப் புலிகளின் துணையின்றி வரக்கூடிய வெற்றிக்கான வாய்ப்புக்களை வேறுவிதமாக திரட்டுவதற்கு வேறு சில முயற்சிகளை அவர் அதிகம் செய்தார். அவ்வாறு அவர் செய்த பல முயற்சிகளின் பின்பு விடுதலைப் புலிகளின் பேரம் பேசுவதற்கான சக்தியை இல்லாது செய்வதற்கு பலவிதமான வழிகளை அவர் எடுத்த பின்புதான் விடுதலைப் புலிகளை நாட விரும்பினார். இதனால் விடுதலைப் புலிகள் விரக்தியடைந்திருந்தனர். விடுதலைப் புலிகளை ஏமாற்றுவதில் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெளிவான கண்ணோட்டம் இருக்கவே செய்தது. ரணில் விக்கிரமசிங்கவினால் விடுதலைப் புலிகள் ஏமாற்றப்படுவதை சிறிதும் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் எப்போதும் எதிரிகளை மன்னிக்கும் சுபாவம் உள்ளவர்கள். ஆனால் எதிரிகளை மன்னித்தாலும் தமக்கு அருகில் நின்று கொண்டு குழி பறிப்பவர்களை நிச்சயமாக மன்னிப்பதில்லை. ரணில் விக்கிரமசிங்க அருகில் நின்று கொண்டு குழிபறிக்கிற நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது விடுதலைப் புலிகளால் அதிகம் உணரப்பட்டது. எனவே சேர்ந்திருந்து குழிபறிக்கும் விவகாரம் என்று வருகிறபோது விடுதலைப் புலிகள் அதில் கடுமையாகவே நடக்க முற்பட்டார்கள். அதுவே புறக்கணிப்பின் உண்மையான காரணமாகும். விடுதலைப் புலிகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் தேர்தல் உத்திகளை வகுத்த பின்புதான் இறுதியாக விடுதலைப் புலிகளை ரணில் நாட முற்பட்டிருந்தார். அப்படியான நாடுதலில் ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கிற அமைப்பு என்கிற வகையில் அவர்கள் அதிகம் சீற்றமடைந்திருந்தனர்.
தம்மை பொருட்படுத்தாது தம்மிடம் இருந்த பேரம் பேசும் சக்தியைக் குறைத்துவிட்டு தேர்தல் அரங்கத்துக்கு ரணில் விக்கிரமசிங்க வருவதை விடுதலைப் புலிகள் சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. இந்தப் பின்னணியில்தான் அந்தப் புறக்கணிப்பு நடந்து முடிந்தது. ரணில் பதவியில் இருந்திருந்தால் இந்தப் பிரச்சனைகள் இருந்திருக்காது என்று மேற்குலகம் எண்ணுகிறது. ராஜபக்ச பதவிக்கு வருவதற்கு விடுதலைப் புலிகளே காரணம் என்பதால் இந்த விளைவுகளுக்குப் புலிகள்தாம் பொறுப்பேற்க வேண்டும் என்கிற வகையில் மேற்குலகத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது. இத்தகைய அரசியல் விடயங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கதான் நிச்சயம் பொறுப்பாவார். தமிழர்களின் விட்டுக்கொடுக்க முடியாத உரிமை விவகாரத்தில் அவர் அரசியல் விளையாட்டுகளை அவர் செய்ய முற்பட்டதன் விளைவாக இது ஒருபுறம் அரங்கேறியது. ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வந்திருந்தாலும் கூட இப்பிரச்சனையை அவரால் தீர்த்து வைத்திருக்க முடியாது. ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றதும் ராஜபக்ச, ஜே.வி.பி. அணி மிகவும் பலமாக இருந்தது. நாட்டில் பலம் பொருந்திய ஒரு எதிர் அணியை ரணில் விக்கிரமசிங்க எதிர்கொள்ள வேண்டியதிருந்திருக்கும். அப்படியான பின்னணியில் அதைச் சாக்காகக் கூறி ரணில் விக்கிரமசிங்கவும் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விடயத்தில் அதிகம் வழுக்கிக் கொண்டே சென்றிருக்க முடியும். எனவே ராஜபக்சவையும் ஜே.வி.பி.யையும் எதிர்த்து ரணில் விக்கிரமசிங்கவினால் ஒரு தீர்வை ஒருபோதும் வைத்திருக்க முடியாது. ஒருவேளை சந்திரிகாவோடு சேர்ந்திருக்கக் கூடிய ஒருசில சுதந்திரக் கட்சிக்காரர்களும் ரணில் விக்கிரமசிங்கவும் தீர்வு பற்றி ராஜபக்சவுக்கும் ஜே.வி.பி.க்கும் எதிராக சிந்தித்திருக்க முடியும்தான். ஆனால் எதிர்ப்பு மிகவும் பலமானதாக இருந்திருக்கும். அதன் பின்னணியில் அவர்களால் ஒன்றுமே செய்ய முடிந்திருக்காது. ஆனால் ஒன்றே ஒன்றை மட்டுமே செய்திருக்க முடியும். இந்தப் பிரச்சனையை ஓராண்டுக்கு இழுத்துக் கொண்டு போயிருக்க முடியும். அதற்கு மேல் அவரால் தீர்வு கண்டிருக்க முடியாது. எனவே, ரணில் பதவியில் இருந்தால் என்ன? ராஜபக்ச பதவியில் இருந்தால் என்ன? எந்த ஒரு சிங்களத் தலைவர் பதவியில் இருந்தால் என்ன? நிச்சயமாகத் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வை காணவே முடியாது. தமிழ் மக்கள் எப்போதுமே சிங்களத் தலைவர்கள் மீது நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள். அதை ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார். எந்த ஒரு சிங்களத் தலைவர் மீதும் எந்த ஒரு சிங்கள அரசியல்வாதி மீதும் எந்த ஒரு சிங்கள புத்திஜீவி மீதும் எந்த ஒரு சிங்கள மதத்தலைவர் மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கையை வைத்திருக்கவில்லை. அதில் இறுதி நபராகவே ரணில் விக்கிரமசிங்க காணப்படுகிறார். ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தை அவர் நிச்சயமாகத் தவறவிட்டிருந்தார். அதன் பின்னணியில் பார்த்தால் இப்போது தமிழ் மக்கள் முற்று முழுதாக சிங்கள மக்கள் மீது நம்பிக்கை வைக்க முடியாத நிலையிலேயே இருக்கின்றனர். சிங்களத் தலைவர்கள் எவரையும் நம்ப முடியாத பின்னணியில் ஒரு சுமூகத்தீர்வு என்பது வரலாற்றில் ஒருபோதும் எட்டமுடியாது. தமிழரின் நம்பிக்கையைப் பெறக்கூடிய எந்த ஒரு சிங்கள அரசிய தலைவரும் மதத் தலைவரும் புத்திஜீவிகளும் இல்லை என்கிற பின்னணியில் இப்படியான காத்திரமான நெருக்கமான கட்டங்களில் மேற்குலகத்தின் பிரசன்னம் அல்லது மத்தியஸ்தம் என்பது பேச்சுவார்த்தைகளை ஓரளவுக்கு நகர்த்திச் செல்லக் கூடிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. சிங்களத் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்த நிலையில் ஒரு மத்தியஸ்தர் மூலமே பேசவேண்டும் என்று ஒரு நிலை வரலாற்றில் ஏற்பட்டிருக்கும் பின்னணியில் மேற்குலகமும் தனது நம்பிக்கைக்குப் பாத்திரம் அல்ல என்று புலிகள் கருதுவார்களேயானால் தமிழ் மக்கள் நம்புவார்களேயானால் அது மோசமான இடங்களுக்கே போய்ச்சேர வேண்டியதிருக்கும். தனது நம்பிக்கையைப் பெற வேண்டிய பொறுப்பு மேற்குலகத்துக்கு இருக்கிறது. ரணிலை புலிகள்தான் தோற்கடித்தார்கள் என்ற பார்வையிலிருந்து மேற்குலகம் பார்ப்பதை விடவும் ரணில்தான் இந்தப் பிரச்சனைகளைக் குழப்பியடித்தவர் என்ற பார்வையிலிருந்து பார்ப்பது அவசியம். ரணில் விக்கிரமசிங்க தீர்வு காண வேண்டும் என்பதை விடவும் புலிகளை பலவீனமான நிலையில் வைத்துக் கொண்டு பேசுவதையே விரும்பினார். ஒருவர் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று விரும்பினால் எதிரே இருப்பவர் நம்பிக்கையைப் பெறுவதும் அவரிடம் பரஸ்பரமாக நடந்து கொள்வதும் அவசியமானது. நம்பிக்கைகளை இழந்த பின்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண்பது என்பது கனவிலும் நடைபெற முடியாத ஒருவிடயமேயாகும். ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கையைப் பெறத் தவறினார் என்பது மட்டுமல்ல. அவற்றிற்கு விரோதமாகவும் நடந்து கொண்டிருந்தார். இந்தப் பின்னணியில் எதிர்காலத்தில் எந்த ஒரு சிங்களத் தலைவரையும் தமிழ் மக்கள் நம்ப முடியாது என்கிற புதிய உதாரணம் ஏற்பட்டுள்ள நிலையில் மேற்குலகத்தின் பொறுப்பு அதிகமாகும். ஆகவே புலிகள் மீது கடும் வசனங்களைக் கூறுவதோ அல்லது பிரச்சனை வரும்போது ரணிலைத் தோற்கடித்தவர்கள் என்கிற வகையிலான சீற்றங்களைக் காட்டுவதோ பிரச்சனைகளை மேலும் மேலும் தமிழ் மக்களை நம்பிக்கையற்ற இடங்களுக்கு இட்டுச் செல்லும். இப்போது மேற்குலகத்துக்கு மட்டுமே ஒரு பணி இருக்கிறது. சிங்களத் தலைமைகளைப் போல் மேற்குலகமும் நம்பிக்கை இழக்கப் போகிறதா? இல்லையா? என்பதுதான் அந்தக் கேள்வி. அந்த நம்பிக்கையைப் பெறக் கூடிய சக்தியாக மேற்குலகம் இருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய அரசியல் யதார்த்தமாகும். இலங்கையில் ராஜபக்ச பதவியில் இருந்தால் என்ன? ரணில் பதவியில் இருந்தால் என்ன? அல்லது இனி எந்த ஒரு சிங்களத் தலைவர்தான் பதவியில் இருந்தால் என்ன? அவரால் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்பது மட்டுமல்ல. இனப்பிரச்சனையைத் தீர்க்கத் தயாரில்லை என்பதுடனும் அவர்களது அரசியல் விளையாட்டில் தமிழர்களைப் பலியிட நினைக்கிறார்கள் என்ற உணர்வை தமிழ் மக்கள் பெற்றுள்ளனர். அதை அவர்களும் நிரூபித்தும் இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் நாம் இனி நடக்கப் போகும் விவகாரங்களை கவனிக்க வேண்டும். தமிழ் மக்களின் நம்பிக்கையை யார் பெறுவது என்பதுதான் உடனடியான பிரச்சனை. தமிழ் மக்களின் நம்;பிக்கையைப் பெறாமல் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குகிற விடுதலைப் புலிகளின் நம்பிக்கையைப் பெறாமல் எந்த ஒரு பிரச்சனைக்கும் இலங்கைத் தீர்வில் எவருமே தீர்வு காண முடியாது என்றார் மு.திருநாவுக்கரசு. நெருடல் இணையம்
|