பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

போக்குவரத்துப் பிரச்சினை ஆகிவிட்ட இனப்பிரச்சினை தீர்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 April 2006

ஜெனீவாப் பேச்சுக்களைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் சிறிலங்கா அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் தற்பொழுது இடம்பெறும் போக்குவரத்துத் தொடர்பான பிரச்சினை ~அற்பத்தனமான பிரச்சினை என்பது போன்ற போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு பேச்சாளரின் கூற்றுக்கள் மேலெழுந்த வாரியாகப் பார்க்கையில் மிகவும் சரியான தொன்றாகவே இருக்கும்.

அதாவது வடக்குக்கிற்கும், கிழக்கிற்கும் இடையில் அரசாங்கம் ஓர் உலங்குவானூர்தியை ஏற்பாடு செய்துகொடுத்தால் என்ன? அது என்ன அவ்வளவு சிரமம்மிக்கதான தொன்றா? என அவரது மனதில் பட்டிருக்கலாம். இதே சமயம் விடுதலைப் புலிகள் அரசாங்கம் ஏற்பாடு செய்த படகில் ஏறி வடக்கிற்குச் சென்றால் என்ன? அதில் ஏற்பட்டுவிடக் கூடிய பிரச்சினை தான் என்ன? பாதுகாப்பிற்கு நாங்கள் இருக்கின்றோம் தானே? என்பதும் அவரது இக்கருத்துக்களுக்கு அடிப்படையாக இருக்கலாம்.

ஆனால் போர்நிறுத்தக்கண்காணிப்புக் குழுவினர் பேச்சுக்களில் அதாவது இருதரப்பினரிடையில் நடைபெறும் சந்திப்புக்களில் காட்டும் அக்கறை அளவிற்கு யுத்த நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கத்திலோ, விடயங்களிலோ காட்டுகின்றார்களா? என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது. தமிழ் மக்களின் பார்வையில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துச் செல்வதில் காட்டும் ஆர்வம் யுத்தநிறுத்த உடன்பாட்டு அமுலாக்கத்தில் காட்டுவதில்லை என்பதேயாகும்.

சமாதான ஏற்பாட்டாளர்களோ, யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்களோ தம் பணி பேச்சுவார்த்தை மேசைக்கு இருதரப்பையும் அழைத்துச் செல்வதும், இரு தரப்பினருக்குமிடையிலான யுத்த நிறுத்த உடன்பாட்டைக் கண்காணிப்பதுமே எனக் கூறிக்கொள்ளலாம். ஆனால் யுத்த நிறுத்தக்கண்காணிப்பு என்பது யுத்தநிறுத்த உடன்பாட்டு அமுலாக்கத்துடன் சம்பந்தப்பட்டது. யுத்த நிறுத்த உடன்பாட்டை அமுல் செய்யாது போதிலும் யுத்தநிறுத்த மீறலாகவே கொள்ளத்தக்கது.

ஆனால் இன்று கண்காணிப்புக்குழு அத்தகையதொரு பாத்திரத்தை வகிக்கின்றதா? என்பது கேள்விக்குரியதொன்றே. ஏனெனில் தமிழீழ தேசியக்கொடியேற்றலை யுத்தநிறுத்த உடன்பாட்டு மீறலாகப் பதிவு செய்யும் -இதனைப் புலிகள் ஏற்கவில்லை என்பது வேறு விடயம்- கண்காணிப்புக்குழு, சிறிலங்கா அரசாங்கம் யுத்தநிறுத்த உடன்பாட்டைப் படிப்படியாகச் சிதைத்து அதன் அரசியல், இராணுவ, மனிதாபிமானப் பரிமாணங்களை வலுவிழக்கச் செய்துவிட்டு ஒரு போக்குவரத்தை விவகாரமாக ஆக்கியுள்ளதை சிறுபிள்ளைத்தனமான் அற்பத்தனமான விவகாரம் என்ற நிலைக்குக் கொண்டுவந்துள்ளமை கவலைக்குரியதொன்று.

சிறிலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த அமுலாக்கத்தில் காத்திரமான விடயங்கள் எதனையும் அமுலாக்கம் செய்யவில்லை. உடன்பாட்டு விதிகளை அமுலாக்கம் செய்வது தொடர்பாக எழுந்த ஒவ்வொரு விடயத்தையும் அது படிப்படியாக நிராகரித்தே வந்தது.

முதலாவதாக இராணுவ நடவடிக்கைகளினால் இடபெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விடயத்தில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற ரீதியில் அரசாங்கம் இதனைப் புறம் தள்ளியது. ஆரம்பத்தில் பரபரப்பாகவும் முக்கியமானதாகவும் பேசப்பட்டதும், விவாதிக்கப்பட்டதுமான இவ்விடயம் பின்னர் பேசப்படுவதேயில்லாது போனது.

1990 ஆம் ஆண்டிற்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் ஏதிலிகளாக அகதி முகாம்களிலும், வாடகை வீடுகளிலும், உறவினர்களுடனும், ஒட்டாண்டிகளாகவும், ஒட்டுண்ணிகள் போன்றும் அவர்கள் வாழவேண்டிய நிலையே உள்ளது. தற்பொழுது இவ்விடயம் மறக்கப்பட்டது போன்றாகிவிட்டது.

இரண்டாவதாக யுத்தத்தினால் பாதிப்புற்ற மக்களுக்கான புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் தொடர்பாகப் பெரியளவில் பேசப்பட்டது. அதற்கென 'சிரான்" என்னும் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. ஆனால் சிறிலங்கா அரசியல் யாப்பு பாராளுமன்ற அனுமதியின்றி இத்தகையதொரு அமைப்பு நிதியினைக் கையாள அனுமதிக்க மாட்டாது என்ற ரீதியில் அது முடக்கப்பட்டது.

இதனால் இராணுவ நடவடிக்கைகளினால் தமது சொந்த வீடு வாசல்கள், நிலபுலன்கள், தொழில்நடவடிக்கைகள் என்பனவற்றை இழந்து வறுமையில் வாடிய மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிவாரணங்களோ, புனர்வாழ்வுப்பணிகளோ அளிக்கப்படாமல் மக்கள் கைவிடப்பட்டார்கள். 'சிரான்" அமைப்பும் கோமா நிலைக்குச் சென்றது போன்று செயலிழந்து போயுள்ளது.

மூன்றாவதாக விடுதலைப் புலிகள் வடக்கு-கிழக்கிற்கு மேற்கொண்டு வந்ததரைவழிப் போக்குவரத்திற்கு அரசாங்கத்தரப்பு முட்டுக்கட்டை போட்டு வந்தமையாகும். முதலில் இப்போக்குவரத்தில் தாமதங்களைச் செய்து வந்த அரசாங்கம், பின்னர் ஒட்டுக்குழுக்கள் மூலம் படுகொலைகளை நடத்தி அதனை முடக்கியது.

இதனால் விடுதலைப் புலிகளின் வடக்கிற்கும்- கிழக்கிற்குமான போக்குவரத்து முற்றாக முடக்கப்பட்டது. இது தொடர்பான விடுதலைப் புலிகளின் கோரிக்கையை அரசாங்கத்தரப்பு கண்டுகொண்டதாக இல்லை. யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழுவோ அன்றி சமாதான ஏற்பாட்டாளர்களோ இவ்விடயத்தில் எதனையும் மேற்கொள்ள முடியாதது போனது மட்டுமல்ல அவர்களுக்குக் கூட இது மறந்து போன விடயம் ஆகியது.

அடுத்ததாக யுத்த நிறுத்த உடன்பாட்டின் முக்கிய விதிகளில் ஒன்றாகிய இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளின் அரசியல்பணி என்பது இராணுவப் புலனாய்வுத்துறையினரினதும், அதனுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களினதும் நடவடிக்கைகள் காரணமாக புலிகளினால் விலக்கிக்கொள்ளப் படவேண்டியதாகியது.

அதாவது அரசாங்கத்தரப்பில்- குறிப்பாக இராணுவத்தரப்பில் விடுதலைப் புலிகளுக்கு அரசியல் பணிபுரிய அனுமதி அளித்தமைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. யுத்தநிறுத்த உடன்பாட்டில் இருந்து இவ்விடயம் நீக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டும் வந்தது. இவ் எதிர்ப்பையும் தமிழ் மக்கள் மற்றும் அரசியல்துறைப் போராளிகள் மீதான தாக்குதல்களை அடுத்து அரசியல் பணி விலக்கிக்கொள்ளப்பட்டபோது யுத்தநிறுத்த உடன்பாடு மிகவும் மோசமான கட்டத்தை நோக்கிச் செல்வதை எவராலும் கண்டு கொள்ளப்பட்டதாக இல்லை.

இதற்கு அடுத்ததாக யுத்த நிறுத்த உடன்பாட்டை பெரும் கேள்விக்குள்ளாக்கியுள்ள ஒட்டுக்குழுக்கள் தொடர்பான சரத்துக்களை அரசாங்கம் நிறைவேற்றாதது மட்டுமல்ல ஒட்டுக்குழுக்களை யுத்தநிறுத்த உடன்பாட்டிற்கு மாறான ஒரு கருவியாக முழு அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இவ் ஒட்டுக்குழுக்கள் விவகாரமானது யுத்த நிறுத்த உடன்பாட்டிலிருந்து இறுதியாக ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாடு வரையில் முக்கியமான விடயமாக பேசப்பட்ட போதும் அரசாங்கம் அவ்விடயத்தை அமுலாக்குவதில் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

தற்போதைய நிலையில் ஒட்டுக்குழுக்களின் விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடானது அக்குழுக்கள் தமது கட்டுப்பாட்டில் இல்லை ஒட்டுக்குழுக்களைக் கட்டுப்படுத்த தம்மால் இயலாது என்பது போன்றதாகவே உள்ளது. இதனை வலியுறுத்துமாப் போன்றே சிறிலங்கா அரசின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் பாலித கோஹொண உட்பட பாதுகாப்பு அமைச்சுத் தரப்பினர் பேசுவதாகவுள்ளது.

அரசாங்கத்தின் இந்நிலைப்பாடு யுத்த நிறுத்த உடன்பாட்டிற்கு மாறானது என்பதையும் இதனால் யுத்த நிறுத்த உடன்பாடு பெரும் கேள்விக்குள்ளாகும் என்பதையும் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு புரிந்துகொண்டிருப்பினும் அது குறித்த உறுதியான நிலைப்பாட்டையோ, கருத்துக்களையோ வெளிப்படுத்துவதாக இல்லை.

ஆனால் அரசாங்கமோ படிப்படியாக யுத்த நிறுத்த உடன்பாட்டை பலவீனப்படுத்தி வருவது மட்டுமல்ல. யுத்த நிறுத்த உடன்பாடு அமுலாக்கத்திற்குத் தடையையும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் இவ் விடயங்களை கையாண்டு வருகின்றது. இதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த வகையில் முக்கியமானதொரு விடயமாகக் கொள்ளப்படத்தக்கதே விடுதலைப் புலிகளின் தளபதிகள் வடக்கிற்கு வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கு அரசு செய்யும் இடையூறாகும். இது மேலோட்டமாகப் பார்க்கையில் புலிகளின் தளபதிகள் வடக்கிற்குச் செல்வதற்கு அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் கொள்ளப்படலாம். ஆகையினால் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிற்கு இது சிறிய விடயமாகவும் அற்பத்தனமான விடயமாகவும் தென்படலாம்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இதனை விடுதலைப் புலிகளின் தளபதிகளின் போக்குவரத்துடன் மட்டும் சம்பந்தப்படுத்திப் பார்க்கவில்லை. விடுதலைப்புலிகளின் வடக்கு கிழக்குத் தொடர்பு தமிழ் மக்களின் வடக்கு-கிழக்குப் பிணைப்பு என்ற ரீதியிலேயே பார்க்கின்றது. அதாவது தமிழர் தேசியத்தின் பிணைப்பு என்ற அடிப்படையிலேயே பார்க்கின்றது.

போராளிகளின் வடக்கு-கிழக்கிற்கான போக்குவரத்தைத் தடை செய்ததன் மூலம் வடக்கு-கிழக்கில் போராளிகள் இடையிலான பரிமாற்றம், ஒத்துழைப்பு என்பனவற்றிற்கு முட்டுக்கட்டைகளைத் தோற்றுவிக்க முனைந்த அரசாங்கம் தற்பொழுது கிழக்கிலிருந்து தளபதிகள் வடக்கிற்கு வர முட்டுக்கட்டை போடுவதன் மூலம் விடுதலைப் புலிகளின் வடக்கு-கிழக்கிற்கான போக்குவரத்தை முற்றிலுமாகத் துண்டித்து விடலாமெனக் கருதுகின்றது.

மறுவளமாகக் கூறுவதானால் வடக்கு-கிழக்கிடையில் பிரிவினையையும், முரண்பாட்டையும் தோற்றுவிக்கவும் தமிழர் தேசியத்தைப் பலவீனப்படுத்தும் வகையிலும் ஒட்டுக்குழுக்கள் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசு போராளிகள், தளபதிகள் இடையிலான தொடர்புகளைப் பலவீனப்படுத்துவதன் மூலம் அதனை மேலும் வலுவிழக்கச் செய்துவிட முற்பட்டுநிற்பதாகவே கொள்ளமுடியும்.

அது மட்டுமன்றி வடக்குடனான தொடர்பு அற்ற நிலையில் விடுதலைப் புலிகள் கிழக்கில் பலவீனப்படுத்தப்படுவார்கள் எனவும் அரசாங்கத் தரப்பு நம்பிக்கை கொண்டுள்ளது. இத்தகைய காரணங்களின் அடிப்படையிலேயே வடக்கு-கிழக்கு இடையிலான தொடர்பிற்கு அது முட்டுக் கட்டைகளைத் தோற்றுவிக்க முற்பட்டு நிற்கின்றது.

அரசின் நோக்கம் இவ்வாறு இருக்கையில் இவ்விவகாரத்தை ஒரு சிறுபிரச்சினை போன்று கண்காணிப்புக்குழுப் பேச்சாளர் கருதியிருப்பது இவ்விவகாரத்தின் தார்ப்பரியத்தை அவர் விளங்கிக் கொண்டிருக்கவில்லையென்றே எண்ணத்தோன்றுகின்றது. அது மட்டுமன்றி இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தை-அதாவது தமிழ் மக்களின் வாழ்வுரிமை தொடர்பாகப் பாரிய சிக்கல் நிறைந்த ஒரு பிரச்சினையைச் சிறிலங்கா அரசாங்கம் ஒரு போக்குவரத்துப் பிரச்சினையாக்கியிருப்பதை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுப் பேச்சாளர் கவனத்திற்கொள்ளாதது வருந்தத்தக்கதே.

அது மாத்திரமன்றி விடுதலைப் புலிகள் தமது தளபதிகளைச் சந்தித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரியது சடுதியானதொன்றல்ல. ஒவ்வொரு பேச்சுவார்த்தையின் போதும் வழமையாக நடைபெறும் ஒன்றாக மட்டுமல்ல அதற்கானக் கோரிக்கை ஏற்கனவே விடுக்கப் பட்டதொன்றாகவும் இருந்தது.

ஆனால் அதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதில் முதலில் தீவிர அக்கறை கொள்ளாது இருந்துவிட்டு இறுதி நேரத்தில் அரசின் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு நடக்கவேண்டுமெனக் கோருவதும், விரும்புவதும் விடுதலைப் புலிகளுக்குரியதான கௌரவத்தை சிறிலங்கா அரசு மட்டுமன்றி கண்காணிப்புக்குழுவும் வழங்கவில்லையென்ற அபிப்பிராயத்தையே தோற்றுவிப்பதாகக்  கருதும்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் சர்வதேச சமூகமும், சமாதான ஏற்பாட்டாளர்களும், யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுவினரும் ஒன்றை உணர்ந்து கொள்ளவேண்டும். அதாவது சிறிலங்கா ஆட்சியாளர்கள் இனப்பிரச்சினை விடயத்தைப் படிப்படியாகத் திசைதிருப்பி சிறியதொரு போக்குவரத்துப்பிரச்சினை என்ற மட்டத்திற்குக் கொண்டுவர முற்பட்டுள்ளனர் என்பதே அதுவாகும்.

இதன் பின்னர் இவ்விடயத்தில் செய்யப்படும் சமரசத்தை அதாவது போக்குவரத்துக்குச் செய்யப்படும் ஏற்பாட்டை இனப்பிரச்சினை தீர்விலேயே அரசு பெரும் விட்டுக்கொடுப்புக்களைச் செய்துள்ளது போன்று காட்டி சர்வதேசத்தைத் திருப்திப்படுத்த அது முற்படக்கூடும். ஆனால் அடிப்படையில் இத்தகைய செயல்கள் இராஜதந்திர பித்தலாட்டங்கள், வழிமுறைகள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு எதனையும் தந்துவிடப் போவதில்லை.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் விடுதலைப்புலிகளை எவ்வாறேனும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துச் சென்று விட்டால் பிரச்சினைத் தீர்ந்து விடப்போவதில்லை. பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாடுகள், செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகள் அமுல்படுத்தப்படவேண்டும். அவ்வாறு இல்லாது போனால் ஒவ்வொரு பேச்சுவார்த்தையின் முன்பும் தோன்றும் நெருக்கடிகள் ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை களை இல்லாது ஒழித்துவிடும்.


ஜெயராஜ்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..