 * பேச்சுகள் நடைபெறவும் கூடாது நடைபெறாததற்கு புலிகள் மீதே பழியையும் போட்டு விட வேண்டுமென செயற்படுவோருக்கு இன்றைய நிலை வெற்றியே. ஜெனீவாப் பேச்சுகள் தடைப்பட்டுவிட்டன.இது இனி எப்போதைக்கென்று இப்போதைக்கு தீர்மானிக்கப்படாது. மிக மோசமான வன்முறைகளும் இயல்புநிலை பாதிக்கப்பட்டதுமே இந்தப் பேச்சுகள் தடைப்படக் காரணமாகிவிட்டன. மீண்டும் இந்தப் பேச்சுகளை நடாத்துவதற்கு பல படிகளைத் தாண்ட வேண்டியுள்ளது. அவ்வாறானதொரு தடை தாண்டல் உடனடியாகச் சாத்தியப்படுமா என்பது கேள்விக் குறியே.
ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி இராணுவம் நிழல் யுத்தத்தை ஆரம்பித்த போதே
இந்த நிலைமை ஏற்படுமென அனைவரும் சுட்டிக்காட்டினர். போர்நிறுத்த உடன்பாடு
அமுலிலிருக்கையிலேயே நிழல் யுத்தம் ஆரம்பமானது. இந்த நிழல் யுத்தம் தான்
இன்றைய நிஜ யுத்தத்தை தோற்றுவித்து வருகிறது.
சமாதான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவே போர்நிறுத்த உடன்பாடு
அமுல்படுத்தப்பட்டது. ஆனால், போர்நிறுத்த உடன்பாட்டை கேள்விக்
குறியாக்கும் வகையில் நிழல் யுத்தம் நடைபெற்றதால் இன்று சமாதான முயற்சியே
இல்லாது போய்விட்டது. புலிகளின் பலத்தின் அடிப்படையில் தான் அப்போதைய
ரணில் விக்கிரமசிங்க அரசு புலிகளுடன் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு வந்தது.
ஆனால், இன்றோ புலிகளின் பலத்தை தென் பகுதி உணரத் தவறிவிட்டதால் புலிகளுடன்
அவர்கள் நிழல் யுத்தத்தை ஆரம்பித்தனர். அதன் விளைவுதான் நாட்டில் மீண்டும்
பெரும் போர் வெடிக்கும் சூழ்நிலை உருவாகக் காரணமாகிவிட்டது.
ஜெனீவாப் பேச்சுகள் இனப்பிரச்சினைத் தீர்வுக்குரியதல்ல. இனப்பிரச்சினைத்
தீர்வுக்காக சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் சமாதானப்
பேச்சுகளை ஆரம்பித்து, சமாதானத் தீர்வொன்றை எட்டுவதற்காகவே போர்நிறுத்த
உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. ஆனால், இந்தப் போர்நிறுத்த உடன்பாடு
முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. சுமுகமான சூழ்நிலை வடக்கு - கிழக்கில்
ஏற்படுத்தப்படவில்லை. எனினும், இந்தப் போர்நிறுத்தம் தென்பகுதியில்
தாக்குதல் அச்சுறுத்தலை முற்றுமுழுதாக இல்லாமல் செய்தது. தென் பகுதியில்
முற்றாக இயல்பு நிலை திரும்பியது.
எனினும், விடுதலைப் புலிகளுக்குள் தோன்றிய சிறியதொரு பிரச்சினையை அரசு
தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியது. போர்நிறுத்த காலத்திலேயே போர்நிறுத்த
உடன்பாட்டை கேள்விக் குறியாக்கும் நடவடிக்கைகள் தோற்றுவிக்கப்பட்டன. சுமுக
நிலையும் அமைதியும் நிலவினால் இனப்பிரச்சினை தீர்வு குறித்தே பேச
வேண்டியிருக்கும்.
ஆனால், இன்றோ போர்நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கல், ஆயுதக்
குழுக்களிடமிருந்தான ஆயுதக் களைவு, விடுதலைப்புலிகளின் கிழக்குத்
தளபதிகளின் போக்குவரத்து ஏற்பாடென எவை பற்றியெல்லாமோ பேசி காலத்தை
வீணடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மிக நீண்டகால யுத்தத்தில் ஈடுபட்ட
அரசுக்கும் புலிகளுக்குமிடையே இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பேச்சுகள்
நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக உதிரி ஆயுதக் குழுக்களிடமிருந்தான ஆயுதக்
களைவு குறித்தும் போரைத் தடுத்த போர்நிறுத்த உடன்பாடு குறித்தும் நான்கு
வருடங்களுக்கும் மேலாக பேச்சுகள் நடைபெறுகின்றன.
ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவை குறித்து மாயை ஒன்றை ஏற்படுத்தி அந்தக்
குழுக்களும் வடக்கு - கிழக்கில் மிகப் பெரும் சக்தியாக இருப்பது போல்
காண்பிக்கும் முயற்சிகள் நடைபெறும் அதேநேரம், அந்தக் குழுக்களைப்
பயன்படுத்தி சுமுகநிலை தோன்றுவதையும் இயல்பு நிலை உருவாகுவதையும்
தடுப்பதன் மூலம் சமாதான முயற்சிகளை குழப்பி மேலும் காலத்தை வீணடித்து
போராட்ட அமைப்புகளைச் சிதைத்துப் பலவீனமாக்கி வசதியேற்படும் போது அவர்களை
அழித்து இப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியாக தீர்வொன்றை கண்டு விடுவதே
இனவாதிகளின் நோக்கமாகும்.
இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதனால், வடக்கு - கிழக்கில் இயல்பு
நிலையை எந்தவொரு சிங்கள அரசும் தோற்றுவிக்காது. தமிழர்களுக்கிடையே ஆயுதக்
குழுக்களை மேலும் மேலும் தோற்றுவித்து அவற்றின் மீது புலிகளின் கவனத்தை
திசை திருப்புவதன் மூலம் முக்கிய பிரச்சினையிலிருந்து இன்று புலிகளின்
கவனத்தை அரசு திருப்பிவிட்டது.
விடுதலைப் புலிகளிடம் வடக்கு - கிழக்கு முழுமையாக இருந்திருந்தால் தீர்வு
எப்போதோ எட்டப்பட்டிருக்கும். ஆனால், வடக்கிலும் கிழக்கிலும்
குறிப்பிடத்தக்களவு பிரதேசங்கள் அரசிடமிருப்பதால் அதன் மூலம் வடக்கு -
கிழக்கில் இயல்புநிலை உருவாகுவதை இனவாதிகளும் கடும்போக்கு
அரசியல்வாதிகளும் தீய சிந்தனையுள்ள படை அதிகாரிகளும் குழப்பங்களை
தோற்றுவித்து தமிழர்களின் கவனத்தை திசை திருப்பி வருகின்றனர்.
போர்நிறுத்த உடன்பாட்டை இந்த அரசு முழுமையாக அமுல் செய்திருந்தால் இன்று
வடக்கு - கிழக்கில் ஆயுதக் குழுக்களும் துணைப்படைகளும் இருந்திருக்காது.
சம்பந்தப்பட்ட இரு தரப்பும் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்தே
பேசியிருக்கும். ஆனால், இன்றோ புலிகளின் கிழக்குத் தளபதிகளின் பயணத்திற்கு
ஹெலிகொப்டரை வழங்குவதா அல்லது கப்பலை கொடுப்பதா அல்லது அவர்களை நடந்து
செல்லுமாறு கூறுவதா என்பது குறித்தல்லவா சர்வதேச சமூகம் அரசுடன்
பேசுகிறது.
இனப்பிரச்சினைத் தீர்வென்பது இன்று வெறுமனே போக்குவரத்துப்
பிரச்சினையாகிவிட்டது. வடக்கு - கிழக்கில் போர் நடைபெற்ற காலத்தில்
புலிகள் எப்படியிருந்தவர்களென்பதை உணராது இன்று ஹெலிகொப்டருக்காக பேரம்
பேசப்படுகிறது. சாதாரண பயணமொன்றுக்கே ஹெலிகொப்டரை வழங்காத இவர்களா
தமிழர்களுக்கு நியாயமான தீர்வை வழங்கப் போகிறார்கள்.
யுத்த காலத்தில் வடக்கு - கிழக்கின் பெரும்பாலான கடற்பரப்பு புலிகளின்
கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அந்தக் காலத்தில் கடற்படையினர் இழந்த
கலங்களின் எண்ணிக்கை எண்ணுக் கணக்கற்றது. கடற்படையின் அதிவேக பீரங்கிப்
படகுகள் கூட தனித்துச் செல்லாது தொடரணிகளாகவே சர்வதேச கடற்பரப்பினூடாக
பயணம் செய்தன. கடற்புலிகளின் படகுகள் கடற்படையினருக்கு
சிம்மசொப்பனமாயிருந்தன.
ஆனால், போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டதும் புலிகள் கடலிலிறங்க
முடியாது அந்த உடன்பாட்டிற்கு கட்டுப்பட்டதால் புலிகளை அனைவரும்
பலவீனமாகக் கருதிவிட்டனர். கடற்படையினர் தான் முன்னர் தங்கள் பயணங்களுக்கு
வழித்துணையை நாடினர். ஆனால், இன்று புலிகளின் கடற்பயணத்திற்கு தாங்கள்
வழித்துணை வழங்குவதாகக் கூறுகின்றனர்.
போர்நிறுத்த உடன்பாட்டில் புலிகளின் பயணங்களுக்கு விமானப்படையினரின்
ஹெலிகொப்டர்கள் வழங்கப்பட வேண்டுமென எழுத்துமூல ஒப்பந்தமெதுவும் இல்லாத
போதும், நோர்வே அனுசரணையாளர்களும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும்
அப்போதைய ஐ.தே.க.அரசுடன் இந்த ஹெலிகொப்டர் பயணங்களுக்கு சில ஏற்பாடுகளைச்
செய்திருந்தனர். இதனால்தான் இன்றுவரை புலிகள் உடன்பாட்டுக்கு எதிராக
கடலில் இறங்கவில்லை.
ஜெனீவாப் பேச்சுவார்த்தைகளை குழப்பவேண்டுமென்பதில் இனவாதிகள் தீவிரம்
காட்டினர். ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற இனவாதக் கட்சிகள் நேரடியாகவே இதனை
எதிர்த்தன. ஆனால், ஜெனீவாப் பேச்சுகளை எப்படியாவது நடாத்த வேண்டுமென
வெளியே கூறிக்கொண்டு இந்த ஜெனீவாப் பேச்சுகளை நடாத்தக் கூடாதென்பதில்
ஆர்வமாயிருக்கும் அரசு தரப்பை சார்ந்தவர்களுக்கு தற்போதைய நிலை பெரும்
மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.
இந்தப் பேச்சுகளை நடாத்தவும் கூடாது, அதேநேரம், இந்தப் பேச்சு
நடைபெறாததற்கான பழியையும் புலிகள் மீதே போட்டுவிடவேண்டுமெனக்
கருமமாற்றுவோருக்கு தற்போதைய முடிவுகள் வெற்றியளித்துள்ளன. ஆனாலும்,
பேச்சுக்கான திகதியை நிர்ணயித்துக் கொண்டே பேச்சுகளை
குழப்பவேண்டுமென்றிருந்தவர்களுக்கு, அடுத்த சுற்றுப் பேச்சுக்கான திகதி
நிர்ணயிக்கப்படாதது அடிவயிற்றில் புளியை கரைத்துள்ளது.
அடுத்த சுற்றுப் பேச்சுக்கு திகதியை நிர்ணயித்திருந்தால் மீண்டும் போர்
வெடிக்காதெனக் கருதலாம். ஆனால், அடுத்த சுற்றுப் பேச்சுக்கான திகதி
நிர்ணயிக்கப்படாததால் தெற்கில் போர் அச்சம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் போர்
வெடிக்குமானால் முன்னைய நிலைமை போலிராது என்பதெல்லாம் இவர்களுக்குத்
தெரியுமென்பதாலேயே, தாங்கள் சமாதான முயற்சியில் தீவிர அக்கறை கொண்டவர்கள்
போன்றும், புலிகளே சமாதான முயற்சியைக் குழப்பி போரை ஏற்படுத்த
முயல்வதாகவும் கூறி அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதைத் தடுத்துவிட
வேண்டுமென்பதிலும் தீவிர அக்கறை காட்டுகின்றனர்.
ஒருபுறம் ஜெனீவாப் பேச்சுகளைக் குழப்பும் அதேநேரம், மறுபுறம் தமிழர்களை
மிகக் கடுமையாக அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் அரசும், படையினரும்
வெளிப்படையாகவே இறங்கியுள்ளனர். ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி இதுவரை
நிழல் யுத்தத்தை நடத்தியவர்கள் இன்று நேரடியாகவே இனப்படுகொலைகளிலும்
இறங்கியுள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருகோணமலை நகரசபையும்,
பட்டினமும் சூழலிலுமுள்ள பிரதேச சபையும் முற்றுமுழுதாக தமிழர் வசம்
சென்றமை இனவாதிகளை பேரதிர்ச்சியடையச் செய்துவிட்டது. இதையடுத்தே
திருகோணமலையிலிருந்து தமிழர்களை வெளியேற்றும் நோக்கில் தமிழர்கள் மீது
இனப்படுகொலைகள் நடக்கின்றன.
அவர்களது வீடுவாசல்களை எரிப்பதன் மூலம் தமிழ் பிரதேசங்களிலிருந்து அவர்களை
தற்காலிகமாக வெளியேற்றி பின்னர் மீண்டும் அவர்களை அந்தப் பிரதேசங்களுக்கு
வரவிடாது செய்து அதன் பின்னர் அந்தப் பிரதேசங்களில் சிங்களக்
குடியேற்றங்களை மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படவுள்ளன. இவற்றின் முதற்கட்டமாகவே திருமலையில் படையினர் மீது
ஏதாவது தாக்குதல் நடைபெற்றால் உடனடியாக காடையர்களைப் பயன்படுத்தி
தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்படுகிறது.
திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணத்திலும் மரணதண்டனைப் பாணியில் தமிழர்கள்
படுகொலை செய்யப்படுகின்றனர். இவற்றின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில்
படையினர் குறித்த பெரும் அச்சத்தை தோற்றுவித்து புலிகளுக்கோ அல்லது
போராட்டத்திற்கோ ஆதரவு வழங்குவதை இல்லாதொழிப்பதே இதன் திட்டமாகும்.
அண்மைக் காலங்களில் இவ்வாறு 60 க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை
செய்யப்பட்டுள்ளனர்.
நிழல் யுத்தம் ஆரம்பமாகி அது தீவிரமடைந்த நிலையில் இன்று வன்முறைகள்
வெடித்துள்ளன. ஜெனீவாவில் நடைபெற்ற முதலாம் சுற்றுப் பேச்சுக்களில் அரசு
இணங்கிய எவற்றையும் அமுல்படுத்தாத நிலையில் 2 ஆம் சுற்றுப் பேச்சுகள்
ஆரம்பமாக முன்னர் மோசமான வன்முறைகள் வெடித்தன. 2 ஆவது சுற்றுப் பேச்சுகளை
தடுக்க வேண்டுமென்பதற்காகவே புலிகளைத் தூண்டும் விதத்தில் பல நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டன.
திருகோணமலை நகரில் புத்தாண்டுக்கு முன்னர் திட்டமிட்டே கலவரம்
ஏற்படுத்தப்பட்டு இனப்படுகொலை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து திருகோணமலை
மாவட்டத்தில் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையும், அவர்களை
இருப்பிடங்களை விட்டு விரட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
கிளேமோர் தாக்குதல்களையடுத்து தமிழ்க் கிராமங்களுக்குள் பெருமளவு படையினர்
நுழைகின்றனர். அதன் பின் அங்கு காடையர்களும் சிவிலுடை தரித்தோரும்
நுழைகின்றனர். குறிப்பிட்ட சில மணிநேரத்தினுள் அங்கு இனப்படுகொலைகளும்
வீடுகள் எரிப்பும் நடைபெற்று மக்கள் இருப்பிடங்களை விட்டு
விரட்டியடிக்கப்பட்ட பின்னர் எல்லோரும் சென்றுவிடுகின்றார்கள்.
1983 இல் இலங்கைத் தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு எதிராக எப்படி
இனப்படுகொலைகள் நடைபெற்று அவர்கள் சூறையாடப்பட்டார்களோ அவ்வாறே இன்று
தமிழீழத்தின் தலைநகரில் தமிழ் மக்கள், சிங்களக் காடையர்களால் படுகொலை
செய்யப்படுகிறார்கள். எவ்வளவு ஆண்டுகள் உருண்டோடி எவ்வளவெல்லாம் நடந்த
பின்னரும் சிங்களவர் இன்னமும் மாறவில்லை. அன்று அவர்கள் எதனைச்
செய்தார்களோ அதனையே இன்றும் அவர்கள் செய்கின்றனர்.
திருமலையைப் போன்றே யாழ்ப்பாணத்திலும் படுகொலைகள் தொடர்கின்றன.
குறிப்பிட்ட நாட்களில் 18 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ் தேசியப்
போராட்டங்களுக்கு ஆதரவாக முன்நின்றவர்கள் தேடித் தேடி படுகொலை
செய்யப்படுவதால் யாழ்.குடாநாடு அச்சத்திலும் பீதியிலும் உறைந்து
போயுள்ளது. கொலையாளிகள் யாரென்பது குடாநாட்டு மக்களுக்குத்
தெரியும்.இதேபோன்றே வவுனியாவிலும் கருணா குழுவின் பெயரில் படுகொலைகள்
நடைபெறுகின்றன. படுகொலை செய்யப்பட்ட பலர் அடையாளம் காணப்படாததால்
வேறிடங்களிலிருந்து கடத்தி வரப்பட்டே இங்கு படுகொலைகள் நடைபெறுகின்றதோ
என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
யுத்தம் வெடித்தால் புலிகள் திருகோணமலையையும், யாழ்ப்பாணத்தையும் கைப்பற்ற
முயல்வரென புலனாய்வுத் தகவல்கள் கூறுவதாக அடிக்கடி சிங்களப்
பத்திரிகைகளில் வெளிவருகின்றன.. விதுரன்
|