|
2006 ஆம் ஆண்டின் உலக பத்திரிகை சுதந்திர தின வாரத்தை கருத்தரங்குகள், பல்வேறு நிகழ்வுகளுடன் கொழும்பு அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் வேளையில், யாழ்ப்பாணத்தில் "உதயன்" தமிழ்ப் பத்திரிகை அலுவலகத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகைச் சுதந்திரம், பத்திரிகையாளர் சுதந்திரம் என்றெல்லாம் காலாதி காலமாகத் தொடர்ந்து நாம் பேசிக் கொண்டே இருக்கின்றோம். ஆனாலும், தாக்குதல்களும் பத்திரிகையாளர் படுகொலைகளும் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன. ஊடக சுதந்திரம் என்பது இன்று கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஊடகங்கள் மீதும், இதழியலாளர்கள் மீதும் இலக்கு வைத்துத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நோக்குகின்ற போது, தமிழ்ப் பத்திரிகைகளின் செயற்பாடுகளை முடக்குவதற்கான முயற்சிகளின் பின்னணியாகவே இதனைக் கொள்ள வேண்டியுள்ளது. ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக அரசாங்கம் திட்டங்கள், யோசனைகளை அறிவித்திருக்கின்ற போதிலும் அவை நடைமுறைச் சாத்தியமாக்கப்படுகின்றதா என்பது குறித்து பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. வெறுமனே ஊடக சுதந்திரம் பற்றி பேசுவதால் எந்தவிதமான பலனும் ஏற்படப் போவதில்லை. காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத வரை ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களும் படுகொலைகளும் தடுக்கப்பட முடியாதவையாகவே தொடரும் அபாயம் தான் வெளிப்பட்ட வண்ணமிருக்கின்றது. உதயன் பத்திரிகை அலுவலகத் தாக்குதல் இடம்பெற்ற சில மணிநேரத்துக்குள் சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்திருக்கும் சர்வதேச பத்திரிகையாளர் சங்கத் தலைவர் கிறிஸ்தோபர் வொரண்ட் விடுத்திருக்கும் அறிக்கை எல்லோரதும் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக காணப்படுகிறது. இலங்கையிலும் இலங்கையில் தமிழ் மக்கள் பெருமளவில் வாழும் பகுதிகளிலும் இதழியல் துறை மரணப்பொறிக்குள் சிக்குண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் இதழியல் துறை படுகொலை அச்சுறுத்தலுக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் உயிரைக் கைகளில் பிடித்துக் கொண்டே பணியாற்ற வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஒரு வருடத்தை மீட்டிப்பார்க்கும் போது 7 பத்திரிகையாளர்கள் குரூரமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி, பத்திரிகையாளர்கள், அலுவலகங்கள் தாக்குதல்களுக்குள்ளாக்கப்பட்ட வண்ணமே காணப்படுகிறது. இது தொடர் கதையாகவே நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும் இதனைத் தொடரவிடுவதன் மூலம் பத்திரிகைச் சுதந்திரம் நீறுபூத்த நெருப்பாகவே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. இலங்கை அரசாங்கம் பத்திரிகைத் துறையின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து இவ்வருடத்துக்கான சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை கொழும்பில் அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் வேளையில், யாழ்ப்பாணத்தில் பத்திரிகை அலுவலகத்தின் மீது திட்டமிட்ட குரூரத்தனமான தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது என்று தனது அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கும் கிறிஸ்தோபர் வொரண்ட் திட்டமிடுவது ஒன்றாகவும் செயற்பாடுகள் வேறொன்றாகவுமே நோக்க வேண்டியிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். சிவராம், நடேசன் உட்பட தமிழ்ப் பத்திரிகையாளர்கள் பலரதும் படுகொலைகள் தொடர்பில் உறுதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை குறித்து விசனம் தெரிவித்திருக்கும் சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஷ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் உள்ளிட்ட ஊடக அமைப்புகள் இப்படுகொலைகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டி இருக்கும் சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனத் தலைவர் இவ்விடயத்தில் அரசாங்கம் தீவிர முனைப்புக் காட்டி உடனடியாக முழு அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இப்படுகொலைகளின் பின்னணியில், அரசதுறை சார்ந்தவர்கள் மீது சந்தேகங்கள் காணப்படின், அவை குறித்தும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி இருக்கின்றார். மோதலுக்கு அப்பால் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் சுதந்திரமாக செயற்பட இடமளிக்கப்பட வேண்டுமெனவும், வடக்கு, கிழக்கு, மேற்கு என்ற வித்தியாசமின்றி பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டிருக்கின்றார். தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொள்ளும் பத்திரிகைகள் மீது அரசு இலக்கு வைப்பதை ஏற்றுக் கொள்ளவோ, அங்கீகரிக்கவோ முடியாதென கிறிஸ்தோபர் வொரண்ட் உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார். பத்திரிகைச் சுதந்திரம் தொடர்பில் வன்முறையாளர்கள், காடையர்கள், கிளர்ச்சியாளர்கள், அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்கள் தொடர்வதை வெளிப்படையாகவே காணமுடிகிறது. இதற்கு துணிச்சலுடன் போராட வேண்டிய சுழ்நிலை இன்று ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் பத்திரிகைகளின் சுயாதீனம், சுதந்திரம், பொறுப்புணர்வு, தார்மீகம் ஆகியவற்றை பேணிக்காத்து பத்திரிகைத் தர்மம் பேணப்படுவதை உறுதிசெய்ய வேண்டிய காலகட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீதான அடக்குமுறை, தாக்குதல்கள், படுகொலைகள் எந்தவிதத்திலும் அனுமதிக்கப்படவே கூடாது. இதனையும் மீறி அவை தொடருமானால், நாட்டின் ஜனநாயக உரிமை, அடிப்படைச் சுதந்திரம் பாதுகாக்கப்படுமா என்பது வெளிப்படையான கேள்விக்குறியாகவே அமைந்துவிடும். பரபரப்பான செய்தி, அரசியல் ஆதாயம் என்பவற்றுக்கு அப்பால் நின்று பத்திரிகையாளனும் பத்திரிகைகளும் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயற்படுவதை உறுதிசெய்யாத வரை பத்திரிகைச் சுதந்திரம் என்பது வெறும் கானல் நீர் தான். Thinakkural
|