|
நாட்டில் பெரும் போருக்கான சிறுமோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கொல்லப்படுவோர் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கிறது. பாரிய நேரடி மோதலைத் தவிர பெரும் போருக்கான அனைத்துத் தாக்குதல்களும் நடைபெறுகின்றன. அப்பாவிகளை இலக்கு வைக்கும் தாக்குதல்களே அதிகமென்பதால் எதற்காக போர்நிறுத்தமென்றாகி விட்டது. போர்நிறுத்த உடன்பாடு அமுலுக்கு வந்தநாள் முதலே, இது ஒரு தரப்புக்கு காலம் கடத்தும் விளையாட்டாயிருக்கிறது.
இனப்பிரச்சினைத் தீர்வுக்காகவே இந்த உடன்பாடு வந்ததென்பதைவிட, இந்த உடன்பாடே இனப்பிரச்சினைக்கான தீர்வென்றாகிவிட்டதால் இதனை மையமாக வைத்தே இன்று மோதல்களும் நடைபெறுகின்றன. கைக்குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு,கடலில் மோதல், தற்கொலைக் குண்டுத் தாக்குதல், விமானக் குண்டுவீச்சு, கடற்படைத் தாக்குதல், அப்பாவி மக்களின் படுகொலைகள், பாரிய அளவில் மக்கள் இடம்பெயர்வென முழு அளவிலான போராகவும் இந்த மோதல்கள் தென்படுகின்றன. அரச படைகள், அரசின் ஆசியுடன் ஆரம்பம் முதல் நிழல் யுத்தத்தை நடத்தி வந்தபோது இவ்வாறானதொரு மிக மோசமான நிலைமை உருவாகுமெனத் தொடர்ந்தும் எச்சரிக்கப்பட்டது. ஆனால், இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டு பாரிய யுத்தம் வெடித்ததால் அதனைத் தடுப்பது பற்றி யோசித்தவர்களெல்லாம், மிக மோசமான நிலைமை உருவாகுவதற்கு காரணமான நிழல் யுத்தத்தை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த முயலவில்லை. நோர்வே அனுசரணையாளர்கள் வெறுமனே இரு தரப்புக்கும் இடையே தபால்காரர்கள் போல் செயற்பட்டார்களே தவிர மிக மோசமான நிலைமை உருவாகுவதைத் தடுப்பதற்காக, நிழல் யுத்தத்தை நடத்தியோர் மீது அழுத்தம் கொடுக்கத் தவறியதால் இன்று நிலைமை அவர்களுக்கும் அப்பால் சென்றுவிட்டது. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவென்பது போர்நிறுத்த மீறல்களை வெறுமனே பதிவு செய்யும் குழுவாகவே இருந்துள்ளது. இலங்கை நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்திருந்தால் கண்காணிப்புக் குழுவுக்கான அதிகளவு அதிகாரங்களை அவர்கள் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஒருபோதும் அதற்கு முயற்சிக்கவேயில்லை. அதனால்தான் அண்மையில் திருகோணமலையில் பொதுமக்களின் குடியிருப்புகள் மீது முப்படையினரும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலை, அப்பட்டமான யுத்தநிறுத்த மீறலென கண்காணிப்புக் குழு அறிவித்தபோதும் அரசின் கடுமையான கண்டனத்தையடுத்து கண்காணிப்புக் குழு தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றி மற்றொரு அறிவிப்பை வெளியிட்டது. இதுவரைகாலமும் கண்காணிப்புக் குழு புலிகளுக்கு எதிராக பலமுறை தீர்ப்புகளைக் கூறியபோதெல்லாம், அந்தத் தீர்ப்புகளை வாபஸ் பெறுமாறோ அல்லது அதனை மாற்றியமைக்குமாறோ புலிகள் கேட்டதில்லை. அதேநேரம், புலிகளுக்கு எதிராக தீர்ப்புகளை வழங்கும் விதத்தில் அவர்களது செயற்பாடுகள் மிக மோசமாயிருக்கவுமில்லை. ஆனாலும், அரசின் கடும் அழுத்தம் காரணமாகக் கண்காணிப்புக் குழு புலிகளுக்கு எதிராக தீர்ப்புகள் பலவற்றை வழங்கியது. இந்த நிலையில்தான் கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து திருகோணமலையில் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையெனக் கூறி மக்கள் குடியிருப்புகள் மீது முப்படைகளும் இணைந்து தாக்குதலை நடத்தின. இதனால் அப்பாவி மக்கள் பேரழிவுகளைச் சந்தித்தனர். இதனை மிகமோசமான யுத்த நிறுத்த மீறலென கண்காணிப்புக் குழுவும் அறிவித்தது. போர்நிறுத்த உடன்பாட்டில் எந்தவொரு தரப்பும் மற்றைய தரப்புக்கு எதிராக தாக்குதலை நடத்த முடியாதென தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டும், மக்கள் குடியிருப்புகள் மீது முப்படையினரும் இணைந்து கடும் தாக்குதல் தொடுத்ததை கண்காணிப்புக் குழு கண்டித்திருந்தது. போர்நிறுத்த உடன்பாடு இராணுவ நடவடிக்கைக்கு அனுமதியளிக்காத போதும் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையெனக் கூறி படைத்தரப்பு மேற்கொண்ட தாக்குதலானது, போர்நிறுத்த உடன்பாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைக்கு இடமளிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது. இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைகளிடமிருந்து ஆயுதங்களைக் களைய வேண்டுமென முழு உலகமும் கூறியது. ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைக்கு போர்நிறுத்த உடன்பாடும் அனுமதியளிக்கவில்லை. ஆயுதக் களைவையே அதுவும் வற்புறுத்தியபோதும் ஜெனீவாப் பேச்சுகளில் இதற்கான உடன்பாடு காணப்பட்ட பின்னரும் ஆயுதக் குழுக்களிடமிருந்து அரசு ஆயுதங்களைக் களையவில்லை. இன்றைய மிக மோசமான நிலைமைக்குக் காரணமான ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைய முயற்சிப்பதென்பது ஒரு இராணுவ நடவடிக்கை என்பதால் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு மாறாக இராணுவ நடவடிக்கை எவற்றிலும் தாங்கள் ஈடுபடப்போவதில்லையென இராணுவ தரப்பு கூறியபோது அதனை அரசும் ஆமோதித்தது. ஆனால், கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற தாக்குதலுக்குக் காரணமானவர்கள் யாரென்பது கண்டறியப்படாத நிலையில் வெறும் ஊகத்தின் அடிப்படையில், அதுவும் திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்துவது எந்த வகையில் நியாயம். இங்கு மக்கள் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட `மட்டுப்படுத்தப்பட்ட' இராணுவ நடவடிக்கையை ஆயுதக் குழுக்களின் விவகாரத்தில் கடைப்பிடித்து அவர்களின் ஆயுதங்களை களைந்திருந்தால் இன்று இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருக்காது. வெலிக்கந்தையில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்குள் ஊடுருவிய புலிகள் கருணா குழுவின் மூன்று முகாம்களை தாக்கியழித்து 30 பேரையும் கொன்றுள்ளனர். இது விடுதலைப் புலிகளால் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் மேற்கொள்ளப்பட்ட (மட்டுப்படுத்தப்பட்ட) இராணுவ நடவடிக்கை. அதாவது ஆயுதக்களைவு. ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைந்திருந்தால் ஜெனீவாவில் போர்நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கல் குறித்துப் பேசியிருக்கத் தேவையில்லை. இனப்பிரச்சினைத் தீர்வு குறித்துப் பேசியிருக்கலாம். ஆனால், விடுதலைப் புலிகளுடன் பேசி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைவிட ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி புலிகளை இல்லாது செய்துவிடலாமென்று அரசும் படைகளும் கனவு கண்டதன் விளைவே இன்றைய நிலைமை. வெலிக்கந்தை திபுலான பகுதியில் கந்தகாடு பிரதேசத்திலிருந்த கருணா குழுவின் மூன்று முகாம்கள் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. 30 பேர்வரை கொல்லப்பட்டுள்ளனர். இங்கிருந்தவர்களுக்கு துணையாகவிருந்த இராணுவக் கப்டன் ஒருவர் உட்பட ஐந்து படையினர் கொல்லப்பட்டதாகப் புலிகள் தெரிவித்துள்ளதுடன், அந்த ஐந்து படையினரதும் பெயர்களையும் தெரிவித்துள்ளனர். காட்டுப்புறப் பகுதியில் படையினரின் முகாம்கள் சூழ்ந்திருந்த இடத்தில் கருணா குழுவின் முகாம்கள் அழிக்கப்பட்டமை படையினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. எவ்வாறு இந்தளவு தூரம் உளவறிந்து உள்ளே நுழைந்து புலிகள் வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தினார்களென்பது இன்னமும் அவர்களுக்கு அதிர்ச்சியாகவேயுள்ளது. நாட்டின் அதிஉயர் பாதுகாப்பு நிறைந்த இராணுவத் தலைமையகத்தினுள்ளேயே மிக இலகுவாக நுழைந்து தாக்குதலை நடத்த முடியுமென்றால் வெலிக்கந்தையில் கருணா குழுவின் முகாம்கள் எப்படித் தாக்குப்பிடிக்க முடியும். கருணா குழுவின் இந்த முகாம்கள் மீதான தாக்குதலானது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேயே நடந்துள்ளபோதிலும் அது தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியல்ல என்று இராணுவத் தரப்பும் அரசும் தொடர்ந்தும் கூறிவருகின்றன. ஆனால் படுகாயமடைந்த கருணா குழுவினரை அங்கு சென்று தேடிப்பிடித்து பொலனறுவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்ததே இராணுவம் தான். புலிகள் நடத்திய இந்தத் தாக்குதலானது படைத்தரப்புக்கு, குறிப்பாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளபோதிலும், இராணுவத்தினரால் `மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத' நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இதனையொரு போர்நிறுத்த மீறலெனக்கூட கண்காணிப்புக் குழுவினரிடம் தெரிவிக்க முடியாத இக்கட்டான நிலையில் படைத் தரப்புள்ளது. அதேநேரம், கண்காணிப்புக் குழுகூட இதனையொரு போர்நிறுத்த மீறலாகக் கருதவில்லை. கருணா குழுவின் ஆயுதக் களைவை வற்புறுத்திய போதெல்லாம், கருணா குழுவென்பது புலிகள் அமைப்பின் உள்வீட்டுப் பிரச்சினை, அதனை அவர்களே தீர்த்துக்கொள்ள வேண்டும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே கருணா குழுவுமிருப்பதால், கருணா குழுவின் ஆயுதங்களைக் களைவதாயின் தாங்கள் புலிகளின் பகுதிகளுக்குள் செல்லவேண்டியிருக்கும். ஆனால், அவ்வாறு சென்றால் புலிகளுடன் மோதவேண்டியிருக்குமென்பதுடன், அவ்வாறு செல்வதற்கு போர்நிறுத்த உடன்பாடும் அனுமதிக்காதென அரசும் படைத் தரப்பும் கூறிவந்தன. ஆனால், திருடனுக்கு தேள்கொட்டியது போல் இன்று நிலைமை அமைந்துவிட்டது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெற்ற பாரிய தாக்குதலொன்றை, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் நடைபெறவில்லையென்றும், கருணா குழுவில் 30 பேர்வரை கொல்லப்பட்டபோதிலும், இதனையொரு போர்நிறுத்த மீறலாகக் கண்காணிப்புக் குழுவினரிடம் தெரிவிக்க முடியாத நிலையிலும் அரசும், படைத்தரப்புமிருக்கின்றன. முன்னரைப்போல் இப்போதும் இதனை அவர்களது உள்வீட்டுப் பிரச்சினையெனக் கூறமுடியாது தவிர்ப்பதுடன், இந்தத் தாக்குதலின்போது கருணா குழுவுக்கு பாதுகாப்பாக வந்தபோது கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஐந்து படையினர் குறித்தும் எதனையும் தெரிவிக்க முடியாத நிலையும் அரசுக்கும், படைத் தரப்புக்கும் ஏற்பட்டுள்ளது. இதேநேரம், கருணா குழுவின் இந்த முகாம்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இல்லையென படைத் தரப்பு கூறினாலும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இராணுவத்தினரின் பூரண பாதுகாப்பிலேயே இந்த முகாம்களிருந்ததாக புலிகள் கூறுவதுடன், இந்தத் தாக்குதல் மூலம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் இராணுவத்தினருடன் கருணா குழு சேர்ந்தியங்குவது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இராணுவத் தலைமையகத்தினுள் தாக்குதலை நடத்தியது புலிகளெனக் கூறினால், இந்தளவு பாதுகாப்பு நிறைந்த அரணுக்குள்ளேயே நுழைந்த புலிகளால் தங்கள் பகுதிக்குள் கருணா குழு இருப்பதை விட்டுவைப்பார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. அதேநேரம் வெலிக்கந்தை தாக்குதலானது படைத்தரப்புக்கு புதிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. எஞ்சியிருக்கும் கருணா குழுவினரை எப்படிப் பாதுகாப்பது என்ற கேள்விதான் அது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேயே இராணுவ முகாம்களால் சூழப்பட்ட பகுதியில் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்த கருணா குழு முகாம்களையே புலிகள் தாக்கி அழிக்கிறார்களென்றால், இனி இவர்களை எங்கு வைத்துப் பாதுகாப்பதென்ற பிரச்சினையும் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான், திருகோணமலை மாவட்டத்தில் மூதூருக்கும், உப்பாறுக்குமிடையே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள புலிகளின் நாவலடி முன்னரங்க காவல் நிலைகள் மீது கடந்த வாரம் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலையடுத்து எதிர்த்தரப்பு பின்வாங்கித் தப்பியோடிவிட்டதாக புலிகள் தெரிவித்தனர். நாவலடிக்கு எதிர்ப்புறமிருக்கும் இராணுவ முகாமிலிருந்த படையினரே தங்கள் பகுதிக்குள் வந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக புலிகள் கூறுகின்றனர். ஆனால், கருணா குழுவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக படைத்தரப்பு கூறுகின்றது. தங்கள் நிலைகளுக்கு எதிர்ப்புறம் படை முகாம்களே இருக்கையில் அங்கிருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கருணா குழுவே நடத்தியதென்றால் அந்தப் படைமுகாம்களில் கருணா குழுவா இருக்கின்றதென்ற கேள்வியை புலிகள் எழுப்பியுள்ளனர். இந்த நிலைமையானது புலிகளுக்கு எதிராக கருணா குழுவினர் பல இடங்களிலும் தாக்குதலை நடத்துவதுபோல் புலிகள் மீது படையினர் மேலும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. வெலிக்கந்தையில் கருணா குழு பலத்த இழப்பைச் சந்தித்தாலும் மட்டக்களப்பில் மட்டுமல்ல திருகோணமலையிலும் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தும் ஆற்றலுடன் கருணா குழு இருப்பதாகக் காட்டும் முயற்சியில் படைத்தரப்பு இறங்கியுள்ளது. இதன் மூலம் தற்போதைய மோதல்கள் முடிவுக்கு வரும் சாத்தியமில்லையென்பது தெளிவாகியுள்ளது. கருணா குழுவென்ற பெயரில் வடக்கு - கிழக்கில் தாக்குதல்கள் நடைபெறும் வாய்ப்பிருப்பதால் இனி இரு தரப்புக்கும் இடையே பேச்சுக்கான வாய்ப்பில்லாது முழு அளவில் போர்வெடிக்கப் போகின்றது என்பது உண்மை விதுரன்
|