|
வெற்றிலைக்கேணி கடற்சமரையடுத்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழு வெளியிட்ட அறிக்கை, தற்போதைய முறுகல் நிலையில் மூன்றாந்தரப்பையும் இழுத்துவிட்டுள்ளது. போர் நிறுத்த உடன்பாடே கேள்விக் குறியாக இருக்கையில், இந்தக் கடற்சமர் தொடர்பாக அவர்கள் புலிகளை கண்டித்தமையானது அவர்கள் ஒரு தலைப்பட்சமாகச் செயற்படுகின்றார்களென்பதை வெளிப்படுத்துவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து மூதூர் கிழக்கில் முப்படைகளும் தாக்குதல் நடத்திய போது கண்காணிப்புக் குழு மௌனம் சாதித்தது. சில நாட்களுக்குப் பின்பே இந்தத் தாக்குதலை மென்மையாகக் கண்டித்த போதும், அரசின் கடும் ஆட்சேபனையை அடுத்து அந்தக் கண்டன அறிக்கையைக் கூட கண்காணிப்புக் குழு மாற்றியமைத்தது. வெற்றிலைக்கேணி கடற்சமருக்கு வழிகோலிய காரணத்தை அறியாது அல்லது அறிய விரும்பாது சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கண்காணிப்புக் குழு தீர்ப்பு வழங்கியமை விடுதலைப் புலிகளையும் தமிழ் தரப்பையும் கடும் சீற்றமடையச் செய்துள்ளது.கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவருக்கு இன்னமும் கள நிலை பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை என்பதை அவரது அவசர அறிக்கை காண்பித்துள்ளது. அத்துடன், தங்களது கடல் நடவடிக்கை குறித்தும் அதற்காக தங்களுக்கிருக்கும் அதிகாரம் குறித்தும் விடுதலைப் புலிகள் பல தடவைகள் கண்காணிப்புக் குழுவுக்கு கடித மூலமும் நேரிலும் விளக்கமளித்திருந்தனர். தற்போது புலிகளின் கிழக்கு பிராந்தியத் தளபதிகளின் பாதுகாப்பான வன்னிப் பயணத்தை இலங்கை அரசு மிக நீண்ட நாட்களாகவே இழுத்தடித்து வருகிறது. கண்காணிப்புக் குழுவால் கூட, போர் நிறுத்த உடன்பாட்டை பயன்படுத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத நிலையில் வெற்றிலைக்கேணி கடற்சமர் குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையானது, போர் நிறுத்த உடன்பாடு குறித்த தெளிவு கண்காணிப்புக் குழுவுக்கே இல்லையென்பதை வெளிப்படுத்தியுள்ளது. சமாதான முயற்சியும் அதற்கான யுத்த நிறுத்த உடன்பாடும், இரு சமதரப்பு என்ற அடிப்படையிலும் இருதரப்பினதும் படைவலுச் சமநிலையிலுமே உருவானது. இதனைத் தொடர்ந்தே சமாதான முயற்சியும் ஆரம்பமானது. இலங்கை படைகளாலும் இலங்கை அரசாலும் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கொள்ள முடியாது என்ற யதார்த்தத்தின் அடிப்படையில் தான் விடுதலைப் புலிகளுடன் அரசு சமாதானப் பேச்சுக்கு வந்தது. இரு தரப்பையும் இரண்டு தரப்பாகவும் சம பல நிலையிலுள்ளவர்களாகவும் ஏற்றுக் கொண்டு தான் நோர்வே அனுசரணையாளர்களும் இந்தப் போர் நிறுத்த உடன்பாட்டை கொண்டு வந்தனர். சமாதான முயற்சிகளும் நடைபெற்றன. போர் நிறுத்த உடன்பாடு சர்வதேச சமூகத்தின் பூரண ஆதரவுடன் தான் கொண்டு வரப்பட்டது. இந்த உடன்பாடு வந்த போது, அங்கீகரிக்கப்பட்ட இலங்கை அரசும் அங்கீகாரத்தை கோரி நின்ற ஈழ அரசும் (னுந-கயஉவழ ளவயவந) அதில் கைச்சாத்திட்டன. சமபடைப்பலம் இதற்கு அடிப்படையாகவிருந்தது. இரு தரப்பினதும் எல்லைப் பிரதேசங்களும் வரையறை செய்யப்பட்டு இரு தரப்பிலும் இரு தேசத் தலைவர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.எனினும், இவற்றையெல்லாம் தகர்க்கும் வகையிலும் பலவீனப்படுத்தும் வகையிலும் ஒரு தலைப்பட்சமா கண்காணிப்புக் குழு அறிக்கையை வெளியிட்டதன் மூலம் இப்பிரச்சினை மேலும் சிக்கலடைந்துள்ளது. மோதலைக் கண்டிப்பது வேறு- அந்த மோதலைக் காரணமாக வைத்து அடிப்படையையே ஆட்டம் காணச் செய்வது வேறு.இந்தப் போர் நிறுத்த உடன்பாடானது வடக்கு-கிழக்கில் தரைப் பகுதிகள் எவரது கட்டுப்பாட்டிலுள்ளன என்பதை வரையறை செய்துள்ளது. ஆனால், கடல்மற்றும் வான்பரப்பு பற்றி எதனையும் தெளிவாகவோ திட்டவட்டமாகவோ வரையறை செய்யவில்லை. எனினும், நாட்டின் இறைமையின் அடிப்படையில் கடல் அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளதாக இலங்கை அரசு உரிமை கொண்டாடுகிறது.இந்தப் போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்படமுன்னர் வடக்கு-கிழக்கின் கடற்பரப்பு யார் வசமிருந்ததென்பதை கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவர் தெரிந்திருக்க வேண்டும். ஆனாலும், போர் நிறுத்த உடன்பாட்டின் போது சில விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டுமென்பதால் புலிகள் தங்கள் கடல் வழிப் பயணங்கள் குறித்து அடம்பிடிக்கவில்லை. ஆனாலும், உடன்பாட்டில் எழுதப்படாத சட்டமாக அவர்களது போக்குவரத்துகளுக்கு அரச ஹெலிகொப்டர் வழங்கப்பட வேண்டுமென்பது இரு தரப்பாலும் மட்டுமன்றி இந்த உடன்பாட்டை தயாரித்த நோர்வே அனுசரணையாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் அரச ஹெலிகளும் புலிகளின் போக்குவரத்துக்கு வழங்கப்பட்டு வந்தன. ஆனால், அமைச்சர் கதிர்காமரின் கொலைக்குப் பின்னர் புலிகளின் போக்குவரத்துக்கு ஹெலிக்கொப்டர்களை வழங்குவதில்லையென அரசு தீர்மானித்ததாகக் கூறி, புலிகளின் வடக்கு-கிழக்கிற்கிடையிலான போக்குவரத்தும் முற்றாகத் தடை செய்யப்பட்டு விட்டது. உடன்பாட்டின் படி புலிகளின் அரசியல் துறைப் போராளிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசியல் பணிகளில் ஈடுபடவும் போக்குவரத்துச் செய்யவும் அனுமதி வழங்கப்பட்ட போதும் அது நடைமுறையில் கடைப்பிடிக்கப்படாது உடன்பாட்டுக்கு மாறாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆயுதக் குழுக்களின் நடமாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலிகளின் வான் வழிப் பயணமும் தரை வழிப் பயணமும் கடல் வழிப் பயணமும் மிக நீண்ட காலமாக தடுக்கப்பட்டிருப்பது முழு உலகமும் அறிந்த விடயம். ஒப்பந்தப்படி புலிகளின் இந்தப் பயணங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்து ஆயுதக் குழுக்களை வடக்கு-கிழக்கிலிருந்து அப்புறப்படுத்த கண்காணிப்புக் குழு தவறிவிட்டது. தமிழ் தரப்பு பாதிக்கப்படும் போது மௌனம் சாதிக்கும் கண்காணிப்புக் குழு படைத் தரப்புக்கு ஒன்றென்றால் பதைபதைத்துப் போய் விடுகிறது. பாரதப் போரைத் தடுப்பதற்காக பஞ்சபாண்டவர்கள் கடைசியில் அனுசரணையாளரான கிருஷ்ணரூடாக சில கோரிக்கைகளை முன் வைத்த போது அதனையும் கௌரவர்கள் நிராகரித்தனர்.கடைசியில் ஆளுக்கொரு வீடாவது தாருங்களெனக் கேட்ட போது அதுவும் நிராகரிக்கப்பட்டது போல் புலிகளின் கிழக்குத் தளபதிகளின் வட பகுதிக்கான அனைத்துப் போக்குவரத்து யோசனைகளும் நிராகரிக்கப்பட்டன. புதுவருடப் பிறப்பன்று கூட கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டில் சிவில் படகில் கிழக்கிலிருந்து வடக்கே செல்ல புலிகளின் தளபதிகள் வந்த போது கடற்படையினரின் அத்துமீறிய நடவடிக்கையால் அந்தப் பயணமும் கைவிடப்பட்டது. ஆனால் அப்போது கூட இந்தக் கண்காணிப்புக் குழு புலிகளையே கண்டித்திருந்தது. அதற்குக் கூட புலிகள் பொறுமை காத்தனர். ஆனால் அதற்குப் பின் இரு வாரத்தில் கடற்புலிகள் தங்களது பாதுகாப்பில் கிழக்கிலிருந்து வடக்கே போராளிகளை அழைத்து வந்த போது முதலில் கடற்படையினர் தாக்க முற்பட்டாலும், பதில் தாக்குதலையடுத்து கடற்படையினர் ஒதுங்கிக் கொண்ட போது, தங்களது போராளிகளின் பாதுகாப்பான பயண விவகாரத்தை புலிகள் தங்கள் கைகளில் எடுத்து விட்டது தெளிவாகியது. அதுவும் மிக நீண்ட காலத்திற்குப் பின்னரே அவ்வாறானதொரு முடிவை புலிகள் எடுத்திருந்தனர். சமாதான முயற்சிக்காக புலிகளின் போக்குவரத்துக்கு ஒரு ஹெலிகொப்டரை வழங்க இந்த அரசு முன்வராத போது கூட இந்தக் கண்காணிப்புக் குழு நிலைமையை உணர்ந்தும் மிக மோசமான சூழ்நிலை உருவாவதை தடுப்பதற்காகவும் முன்வராதது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தான் வெற்றிலைக்கேணி கடற்சமர், இலங்கை நிலைமை எங்குள்ளதென்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தச் சமரில் புலிகளின் தாக்குதலில் இரு டோரா பீரங்கிப்படகுகள் அழிக்கப்பட்டன. 700க்கும் மேற்பட்ட படையினருடன் சென்ற துருப்புக்காவி கப்பலைப் புலிகள் அழித்திருக்கும் வாய்ப்புகளிலிருந்தும் அந்தத் துருப்புக் காவிக் கப்பல் மீது புலிகள் ஒரு துப்பாக்கி ரவையைக் கூட சுடவில்லை. திருகோணமலையிலிருந்து இந்தக் கப்பல் புறப்பட்டது முதல் வெற்றிலைக்கேணி வரை இந்தக் கப்பல் வந்ததுவரை புலிகளுக்கு எல்லாம் நன்கு தெரியும். இந்தக் கப்பலின் பாதுகாப்புக்கு எத்தனை டோரா பீரங்கிப் படகுகள் வருகின்றன என்பதும் புலிகளுக்குத் தெரியும். இதனால், 700 படையினருடன் வந்த கப்பலை அழிக்க அவர்கள் நினைத்திருந்தால், தங்கள் தாக்குதல் அணியில் மேலும் சில கப்பல்களைச் சேர்த்து மிகச் சுலபமாக துருப்புக் காவிக் கப்பலை அழித்திருக்க முடியும். ஆனாலும் அவர்கள் அதனைச் செய்யவில்லை. அதற்கு சில காரணங்களுண்டு. முதற்காரணம், அந்தக் கப்பலை அழிக்கும் நோக்கம் அவர்களுக்கில்லை. அடுத்ததாக, மிகப்பெரும் தொடரணியொன்று வரும் போது அதன் பாதுகாப்பும் மிக அதிகமாயிருக்கும். தனியே வரும் ஒரு சில பீரங்கிப் படகுகளை விட ஒரு தொடரணியில் பல பீரங்கிப் படகுகள் வரும் போது கடற்படையின் பலமும் அதிகமாயிருக்கும். இதனால் மோதலொன்று வரும் போது பலம் மிக்கவர்கள் யாரென்பது தெரியும். மேலும், வடக்கு - கிழக்கு கடற்பரப்பு தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக கடற்படையினர் தம்பட்டமடித்து வருகையில் அந்தக் கடல் பிரதேசம் தங்கள் கட்டுப்பாட்டிலிருப்பதை நிரூபிப்பதும் புலிகளின் நோக்கமாகும். இதனால்தான், இலங்கை கடற்பரப்பினுள் வராது சர்வதேச கடற்பரப்பில் வந்த கடற்படைத் தொடரணி மீது புலிகள் தாக்குதல் நடத்திய போது அதனை எதிர்கொள்ள முடியாது 700 படையினருடன் துருப்புக் காவிக் கப்பல் இந்தியக் கடற்பரப்பினுள் தப்பிச்சென்று இந்தியக் கடற்படையிடம் அடைக்கலம் தேடியது. துருப்புக் காவிக் கப்பலில் கண்காணிப்புக் குழுவின் கடற்கண்காணிப்பாளரிருந்ததுடன் துருப்புக் காவிக் கப்பல், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கொடியையே பறக்கவிட்டுச் சென்றது. இதனால் அந்தக் கப்பலைத் தாக்கக் கூடாதென்பதில் புலிகள் மிகத் தெளிவாக இருந்துள்ளனர். அத்துடன், அந்தக் கப்பலில் பயணம் செய்யவேண்டாமெனவும் புலிகள் திரும்பத் திரும்ப கண்காணிப்புக் குழுவினரை எச்சரித்துமுள்ளனர். அதேநேரம் துருப்புக் காவிக் கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் தப்பிச் சென்று இந்தியக் கடற்படையிடம் அடைக்கலம் தேடிய போது, கடற்புலிகளின் படகுகள் சர்வதேச கடல் எல்லையைக் கூட கடந்து செல்லவில்லை. அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியுடன் நின்றுவிட்டனர். இதனை இந்தியக் கடற்படையும் இந்திய அரசும் நன்குணர்ந்துள்ளன. கடற்புலிகள் என்றுமே இந்திய நலன்களுக்கு எதிரானவர்களல்லர் என்பதுடன் எப்போதுமே புலிகள் தங்கள் பிரதேசங்களினுள் தான் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வார்களென்பதையும் உணர்த்தியுள்ளதால் அதற்கப்பால் எந்தச்சிக்கல்களும் எழவில்லை. இதனை இந்தியப் பாதுகாப்புத் தரப்பும் வெற்றிலைக்கேணிச் சமரின் போது நன்குணர்ந்துள்ளது. இந்த நிலையில் துருப்புக் காவிக் கப்பல் இந்தியக் கடற்பரப்பினுள் தப்பிச் சென்றதன் மூலம், கடற்புலிகளின் தாக்குதலுக்கு இலங்கை கடற்படை ஈடுகொடுக்க முடியாத நிலைதான் உள்ளதென்பதும் வடக்கு - கிழக்கு கடற்பிரதேசம் இப்போதும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளதென்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இனிவரும் காலத்தில் கண்காணிப்புக் குழுவினர் கடற்படை கலங்களில் செல்லக் கூடாதென்பதையும் வலியுறுத்தியுள்ளது. இதைவிட, இனியும் புலிகளின் போக்குவரத்துக்கு அவர்கள் அரச தரப்பையும் கண்காணிப்புக் குழுவையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லையென்பதையும் இதன் மூலம் அனைவரும் உணர்ந்திருக்க வேண்டுமென்பதுடன் ஜெனீவாவில் பேச்சுகள் நடைபெற வேண்டுமாயின் புலிகளின் தளபதிகளின் பயணம் குறித்து இனியும் அரசு இழுத்தடிக்குமானால் நிலைமை எவ்வாறிருக்குமென்பதையும் கண்காணிப்புக் குழு உணர வேண்டும். அதேநேரம் இலங்கையை சுற்றியுள்ள கடற்பிரதேசத்தில் கால்வைக்க புலிகளுக்கு எந்தவித அதிகாரமுமில்லையெனத் தெரிவித்த கண்காணிப்புக் குழுவின் தலைவர், வெற்றிலைக்கேணிச் சமர் முடிந்த பின்பும் துருப்புக்காவிக் கப்பல் எங்கு தப்பிச் சென்றது என்பதை அறிந்த பின்பும் தனது அறிக்கையை விட்டிருந்தால், அவரது அறிக்கைக்கு புலிகள் தரப்பிலிருந்தும் தமிழர் தரப்பிலிருந்தும் இந்தளவு தூரம் கடும் எதிர்ப்பு கிளம்பியிராது. கடந்த காலங்களில் கண்காணிப்புக் குழுவினருடன் செல்லும் போது கூட கடற்படையினர் புலிகளின் படகுகள் மீதும் புலிகளின் பகுதிகள் மீதும் தாக்குதல்களை நடத்தி வந்தமை குறித்து புலிகள் சுட்டிக்காட்டிய போதெல்லாம் கண்காணிப்புக் குழு அதுபற்றி அக்கறைகாட்டவில்லை. இதனால் பதில் தாக்குதல் நடத்தப்படுமென எச்சரித்து வந்த புலிகள்இ தாக்குதலை நடத்தாவிட்டாலும் கடற்படைக் கப்பல்களில் அல்லது படகுகளில் பயணிப்பதை தவிர்க்குமாறு கண்காணிப்புக் குழுவிடம் அடிக்கடி கூறி வந்துள்ளனர். இந்த நிலையில் இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பதில் தாக்குதலென முப்படைகளும் மூதூர் கிழக்கில் புலிகளின் பகுதிகள் மீது அகோரத் தாக்குதலை நடத்தின. இதன் மூலம்இ எந்தவொரு தாக்குதலுக்கும் பதில் தாக்குதலென்பது போர் நிறுத்த உடன்பாட்டுக்கும் அப்பால் செயல் மூலம் படைத்தரப்பு வெளிப்படுத்தியது. இதனால் தான் தங்கள் மீது கடற்படையினர் நடத்தும் தாக்குதல்களுக்கு புலிகளும் கடற்படையினர் மீது பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர். அத்துடன் வெற்றிலைக்கேணிச் சமரையடுத்து கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் குண்டு வீச்சு விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன. இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து போர் விமானங்கள் மூதூர் கிழக்கில் தாக்குதலை நடத்திய அதேநேரம் வெற்றிலைக் கேணிச் சமரையடுத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தாக்குதலை நடத்தியுள்ளன.இரணைமடுவிலுள்ள விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதை இத்தாக்குதல் மூலம் பலத்த சேதமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும் இரணைமடுவில் இவ்வாறான சேதமெதுவும் ஏற்பட்டதாக புலிகள் கூறவில்லை. எனினும் அரசின் நோக்கங்களும் இலக்குகளும் எவ்வாறிருக்கின்றன என்பதை இத் தாக்குதல்கள் காட்டுகின்றன. கொழும்பில் இராணுவத் தலைமையகம் மீதான தாக்குதலையடுத்து மூதூர் கிழக்கில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டமை முற்று முழுதாக இராணுவ நோக்கத்தைக் கொண்டது. திருகோணமலைத் துறைமுகம் மற்றும் கடற்படைத் தளத்தின் பாதுகாப்புக்கு மூதூர் கிழக்கில் புலிகளின் நிலைகள் பெரும் அச்சுறுத்தலாயிருப்பதாகவே மூதூர் கிழக்கு பகுதியை இலக்கு வைத்து முப்படையினரும் தாக்குதல் நடத்தினர்.இந்தத் தாக்குதலுக்கு இவ்வாறானதொரு நோக்கமிருக்கையில் கிளிநொச்சியில், இரணைமடுவில் விமான ஓடுபாதை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினால், அதற்கும் மிகப் பெரும் காரணங்களுள்ளன.அடுத்த கட்டப் போர் தொடங்குமானால் கடற்பலமே வெற்றி-தோல்விகளை நிர்ணயிக்கப் போகின்றது. எவர் வசம் எந்தளவு கடற்பிரதேசம் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அதனுடன் சேர்ந்த அந்தளவு தரைப் பகுதியும் அவர்கள் வசமேயிருக்கும். இதனால் அடுத்த கட்டப் போர் வெடிக்குமானால் அது கடலாதிக்கத்தின் அடிப்படையிலேயே வடக்கு-கிழக்கின் ஆதிக்கப் பிரதேசங்களை நிர்ணயிக்குமென்பதால் அரசுக்கும் படையினருக்கும் திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பு மிக மிக அவசியம்.இந்தத் துறைமுகம் புலிகளிடம் விழுமானால், வடக்கு-கிழக்கு முற்று முழுதாக புலிகள் வசமாகி விடுமென்பதால் தற்போது அரசும் படையினரும் தங்களது முழுக் கவனத்தையும் திருகோணமலையிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் செலுத்துகின்றனர்.இதேபோல், புலிகள் வசமிருப்பதாகக் கூறப்படும் விமானங்களும் அடுத்த கட்டப் போரில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவரை காலப் போரில் அரச படைகள், புலிகளின் விமானப் படையைச் சந்திக்காததால் இனிவரும் போரில் படையினருக்கு தலைக்கு மேலும் ஆபத்துள்ளது. இதனால் தான் வெற்றிலைக்கேணி சமரைப் பயன்படுத்தி விமானப் படைகள் கிளிநொச்சியிலும் குண்டு வீசின.அடுத்த கட்டப் போருக்கான முன்னேற்பாடுகளில் அரசும் படையினரும் இவ்வாறு ஈடுபட்டிருக்கையில் கள நிலைமை பற்றி உணராது கண்காணிப்புக் குழு வெளியிட்ட அறிக்கை, மூன்றாந்தரப்பின் நடுநிலைமை குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. நெருடல் இணையம்
|