|
2550 புத்த ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது கட்டாக் காலி நாய்களை வளைத்துப் பிடித்துக் கொன்றுவிடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளூராட்சி சபைகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்ததை நாட்டு மக்கள் அறிந்திருப்பார்கள் என்று நம்புகின்றோம். மகா சங்கத்தினரும் மிருகங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஜனாதிபதியைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்ததையடுத்தே இந்த உத்தரவை அவர் பிறப்பிக்கத் தீர்மானித்ததாக செய்திக் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாய்களைப் பிடித்துக் கொலை செய்வதற்குப் பதிலாக, அவற்றுக்கு விசர் நாய்க்கடி நோய்க்கான தடுப்பூசிகளைப் போடுமாறும் அதீத இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நவீன விஞ்ஞான ரீதியானதும் மனிதாபிமான ரீதியானதுமான வழிமுறைகளைக் கையாளுமாறும் ஜனாதிபதி உள்ளூராட்சி சபைகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். மிருகங்களை நடத்தும்முறை தொடர்பில் `மகிந்த சிந்தனை'யில் குறிப்பிடப்பட்டிருந்த கொள்கைக்கு இணங்கவே இந் நடவடிக்கையை ஜனாதிபதி ராஜபக்ஷ மேற்கொண்டதாக அரசாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. `மிருகங்களுக்கு கொடுமை செய்வது மனித குலத்துக்கு ஒரு அவமானம் என்று நான் கருதுகின்றேன். அதனால், மிருகங்களுக்கு கொடுமை செய்வதைத் தடுப்பது தொடர்பில் தற்போது நடைமுறையில் இருக்கும் காலத்துக்கொவ்வாத சட்டங்களை தாமதமின்றி உடனடியாகத் திருத்துவதற்கு நான் உத்தேசித்திருக்கிறேன்' என்று மகிந்த சிந்தனையில் கூறப்பட்டிருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உலகிற்கு அமைதி, சமாதானம், அகிம்சை மற்றும் காருண்யத்தைப் போதித்த கௌதம புத்தரின் ஜெயந்திக் கொண்டாட்டங்களின்போது கட்டாக்காலி நாய்களைக் கொலை செய்யக்கூடாது என்ற ஜனாதிபதி ராஜபக்ஷவின் உத்தரவு சகல உள்ளூராட்சி சபைகளினாலும் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் கடந்த வாரம் விதிவிலக்கான சந்தர்ப்பங்களைத் தவிர, அரசாங்க ஊழியர்களினால் நாய்கள் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் நேரடி உத்தரவின் கீழ் தெரு நாய்களின் உயிர்களுக்கே பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்த அந்த ஒரு வார காலத்தில் நாட்டில் குறிப்பாக வடக்கு , கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிக் குடிமக்களின் எண்ணிக்கையை நோக்கும்போது உண்மையில் எந்தப் பிறவி `பெறுமதியானது' என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. குடாநாட்டின் தீவுப் பகுதியில் அல்லைப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை இரவு தாய், தந்தையரின் அரவணைப்பில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த இரு பாலகர்களின் உடல்களை துப்பாக்கி ரவைகள் சல்லடைபோட்ட நிலையில் எடுக்கப்பட்ட படங்களை ஆட்சியாளர்களும் பார்த்திருப்பார்கள். நான்கு சடலங்களுக்கருகில் அந்தவீட்டின் நாய் உயிருடன் கிடப்பதையும் காணமுடிந்தது. அன்றைய தினம் தெருவில் நின்றிருக்கக் கூடிய நாய்க் குட்டிகள் கூட உயிர்ப் பயமின்றி உலவக் கூடியதாயிருந்த சூழ்நிலையில்இவ்விரு பாலகர்களுக்கும் பெற்றோருக்கும் நேர்ந்த கதியை என்னவென்று வர்ணிப்பது? இவ்வாறாக எத்தனை சின்னஞ் சிறுசுகள், ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என்று வகைதொகையின்றி அப்பாவிக் குடி மக்கள் கண் மூடித்தனமாகக் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? கடந்த மூன்று நாட்களுக்குள் வடக்கு, கிழக்கில் 37 அப்பாவிக் குடிமக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தொடரும் அப்பாவிகளின் கொலைகளை முழு உலகமும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இக் கொலைகள் சகலதுமே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கட்டாக் காலி நாய்களுக்கு இருக்கக் கூடிய உயிர்ப் பாதுகாப்பு புத்த ஜெயந்தி கொண்டாட்ட காலத்தில் அப்பாவித் தமிழர்களுக்கு இருக்கவில்லையே! Thinakkural
|