பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow தடைகள் தாண்டி தலை நிமிர்வோம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தடைகள் தாண்டி தலை நிமிர்வோம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 18 May 2006

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவுத்தளமாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என அமெரிக்க அதிகாரி தெரிவித்திருக்கிறார். சிறிலங்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களைக் கவனிக்கும் அமெரிக்க அரச துறை துணை உதவிச் செயலாளரான டொனால்ட் கேம்ப் இந்தச் செய்தியை கொழும்பில் விட்டிருக்கின்றார். இதன் மூலம் தென்னிலங்கை இனவாத சக்திகள் புளகாங்கிதம் அடைந்திருக்கின்றன. ஏற்கனவே இந்தியா விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்தது. இந்தியா தடை செய்த போது கொழும்பு அரசியல் விமர்சகர்கள் இனி விடுதலைப்புலிகளால் தலைநிமிர முடியாது எனக் கூறி வந்தனர். ஆனால் இந்தியாவின் தடையையும் தாண்டி வளர்ந்தது தமிழீழ விடுதலைப் போராட்டம்.

தமிழீழ விடுதலைப்புலிகளை அமெரிக்கா தமது பயங்கரவாதப் பட்டியலில் இணைத்துக் கொண்ட போதும் இதே கருத்தைத் தான் பலர் முன்வைத்தனர். உலக வல்லரசான அமெரிக்கா விடுதலைப்புலிகளைத் தடை செய்திருப்பதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு சில பின்னடைவுகள் ஏற்படும் எனக் கருதினர். ஆனால், விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியை அமெரிக்காவால் அடக்கி ஒடுக்க முடியவில்லை. இதே போன்று தான் பிரிட்டனும் விடுதலைப்புலிகள் மீதான தமது தடையை விதித்தது.
 
 இவ்வாறு உலகில் செல்வாக்குள்ள நாடுகள் விடுதலைப்புலிகள் மீது தடை விதித்த போதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எந்த ஒரு ஏகாதிபத்திய சக்தியாலும் அடக்கி ஒடுக்கமுடியவில்லை என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறு காட்டும் உண்மைச் செய்தி. சந்திரிகா அம்மையார் ஆட்சிக்காலத்தில் தங்களது தமிழின அழிப்பை நியாயப்படுத்துவதற்கு சிங்கள அரசின் முகவராக தமிழினத்துக்கு எதிரான துரோகத்தனங்களை சர்வதேச அளவில் பரப்பியவர் லக்ஷ்மன் கதிர்காமர். 
 
அவர் வரிசையில் இன்னும் பல துரோகக் கும்பல்களும், உலகின் பல பாகங்களிலும் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்ட போதும் விடுதலைப் போராட்டத்தினை ஒடுக்கிவிட முடியவில்லை. பல்வேறு நெளிவு சுழிவுகளுக்கு உள்ளாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சமவலு கொண்ட ஒரு படைக் கட்டமைப்புக்களுடன் நிறுவிக் காட்டினார் தேசியத் தலைவர் அவர்கள்.
 
அவரது தூர நோக்குடனான சிந்தனையும் அனுபவமும் தமிழ் மக்களின் பலரும் போராட்டத்தினை எந்த ஒரு தீய சக்தியாலும் நெருக்கி விட முடியவில்லை. இன்று தமிழினத்துக்கான ஒரு நிழல் அரசு இயங்கிக் கொண்டிருக்கின்றது. மக்கள் தான் புலிகள்! புலிகள் தான் மக்கள!; என தமிழ் மக்களின் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. இதில் புலிகள் வேறு மக்கள் வேறு எனப் பிரித்துப் பார்க்க முடியாதளவிற்கு போராட்டம் வளர்ந்துள்ள நிலையில் இன்னும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் தமிழ் மக்களின் விடுதலை உணர்வைப் புரிந்து கொள்ள முடியாது இருப்பது கவலைக்குரியது.
 
இன்று சமாதானப் பேச்சுக்கான வாயில் கதவை தாழ்ப்பாள் போட்டு பூட்டியுள்ள சிங்கள இனவாத அரசு திட்டமிட்டதொரு தமிழின அழிப்பை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மட்டக்களப்பு, திருமலை, யாழ் என தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக சிங்கள இனவெறிப் படைகளாலும் இனவெறிப் படைகளுக்குத் துணை போகும் துரோகக் கும்பல்களாலும் அழிவுக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றனர்.
 
எதுவித நீதி விசாரணையுமின்றி மிகப் பெரியதொரு மனிதப் படுகொலையை மகிந்தர் அரசு செய்கின்ற போது அதனை சர்வதேச சமூகம் தட்டிக்கேட்காமல் விடுதலைப்புலிகளைத் தடை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதானது இன்னும் சிங்கள இனவெறியை தமிழின அழிப்பைத் தூண்டுவதற்கே வழிவகுக்கும்.
 
 அது மாத்திரமன்றி தமது இன அழிப்பை நியாயப்படுத்துவதற்கும் உலக நாடுகளில் ஆயுதத் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கும் இவை வழிவகுக்கும். தமிழ் மக்கள் தமது இன விடுதலையை அடைவதற்காகவே போராடுகின்றனர். ஆனால், இதனை அமெ ரிக்கா உள்ளிட்ட நாடுகள் புரிந்து கொள்ளாது பயங்கரவாத நோக்குடன் பார்ப்பது அல்லது சிறிலங்கா அரசுக்கு ஆயுத ரீதியிலான உதவிகளை அளிப்பது என்பது தமிழர் தாயகத்தில் வாழும் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் செய்யும் படுபாதகத்தனமாகவே கருத வேண்டிவரும். 
 
எனவே, சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதம் என்ற பதத்தினூடாக முடக்கலாம் என நினைப்பின் அது ஒரு போதும் வெற்றியளிக்க மாட்டாது. ஒட்டு மொத்த தமிழ் மக்கள் பலத்துடன் தமிழின விடுதலை தலைநிமிர்வு பெறும் என்பதை எதிர்காலத்தில் வரலாறு உணர்த்தப் போகும் உண்மை.


battieelanatham
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..