|
|
|
சர்வதேச சமூகம் பாரபட்சம் காட்டுகிறதா? |
|
|
|
Friday, 19 May 2006 |
|
தமிழர்கள் தாக்கப்பட்டால் ஒரு நீதி, சிங்களவர்கள் தாக்கப்பட்டால் ஒரு நீதியா? இவ்வாறான ஒரு முரண்பாடான பாரபட்சமான போக்கினை சர்வதேச சமூகம் கடைப்பிடிக்கின்றதா? என்ற சந்தேகம் தமிழ் மக்களிடையே அண்மைக் காலமாக வலுவடைந்து வருகிறது. இதன் விளைவு சமாதான முயற்சிகளில் நம்பிக்கையூட்டும் சக்தியாக எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச சமூகத்தினை வெறுத்தொதுக்கும் மன உணர்வு தமிழ் மக்களிடையே ஏற்பட்டு வருகின்றது.
சிறிலங்காவின் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தற்கொலை குண்டுத் தாக்குதலில் காயப்பட்டமையும் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கடற்படையினர் படகு தாக்கி அழிக்கப்பட்ட சம்பவமும்தான் சர்வதேச சமூகத்தின் கண்களில்பட்டுள்ளது. சித்திரைப் புதுவருடத்துக்கு முதல் நாள் திருமலை நகரில் சிங்கள இனவெறிக் குண்டர்கள் வாகனங்களில் கத்திகள், பொல்லுகள், தடிகள் சகிதம் இறக்கப்பட்டு படையினர் மற்றும் பொலிசார் முன்னாலேயே தமிழ் மக்களை கொன்று குவித்தனர். அது மாத்திரமின்றி தமிழ் மக்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டு மாபெரும் இன அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை சர்வதேச சமூகம் முறையாகக் கண்டிக்கவில்லை. சரத் பொன்சேகா மீதான தாக்குதலையடுத்து சிறிலங்கா அரசு போர் நிறுத்த உடன்பாட்டுக்கு முற்றிலும் முரணான வகையில் திருமலை மூதூர் கிழக்குப் பகுதி நோக்கி கண்மூடித்தனமான விமானத் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் பலியானதுடன், அவர்களது வீடு வாசல்களும் சேதமடைந்தன. ஆனால் சர்வதேச அரங்கில் சரத்பொன்சேகா மீதான தாக்குதலுக்கு கண்டனமும் அனுதாபங்களும் தெரிவிக்கப்பட்டதே தவிர போர்நிறுத்த உடன்பாட்டை முழுமையாக விலகிநின்று தமிழ் மக்கள் குடிமனைகள் மீது குண்டு போட்டு தமிழ் மக்களை கொன்றழித்த சிங்கள அரசை ஐக்கிய நாடுகள் சபையோ, அமெரிக்காவோ எந்த விதத்திலும் கண்டிக்கவில்லை. இவ்வாறான பாரபட்சமான சர்வதேச சமூகத்தின் போக்கு சிங்கள அரசுக்கு தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்குத் தீனி போடுவதாக அமைந்துள்ளது. அண்மையில் தமிழீழ கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த சிறிலங்கா கடற்படையினருக்குச் சொந்தமான கடற்கலங்கள் மீது தமிழீழ கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் சிறிலங்கா கடற்படையினரின் இரு டோராப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டதுடன், கடற்படையினரும் பலியாகியிருந்தனர். இந்த சம்பவத்துக்கு பழிவாங்கும் முகமாக கிளிநொச்சி இரணைமடுப் பகுதி நோக்கி சிறிலங்கா கிபீர் விமானங்கள் தாக்குதல்கள் நடத்தியுள்ளன. எனவே, போர்நிறுத்த உடன்பாட்டை விலகி தமிழின அழிப்பு நடவடிக்கையில் சிறிலங்கா படையினரும், சிறிலங்கா அரசும் மூர்க்கத்தனமாக செயற்படுகின்றபோது அதனை சர்வதேச சமூகம் ஆழமாகப் புரிந்து கொண்டு கண்டிக்கத் தவறியிருப்பது கவலையளிக்கும் விடயம். மாறாக சிறிலங்கா கடற்படையினரின் டோராப் படகுகள் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவமே சர்வதேச ரீதியாக கண்டனம் செலுத்தும் விடயமாகி விட்டது. ஜெனீவா இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பிக்க முடியாதளவிற்கு நிலைமை மோசமடைவதற்கு காரணமாக அமைந்துள்ளன. விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகள் வன்னிக்குச் செல்வதற்கான பயண ஒழுங்கினை விடுதலைப் புலிகளுக்குச் செய்து கொடுப்பதில் சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசுக்கு அழுத்தத்தினை பிரயோகித்திருக்கலாமல்லவா. அவ்வாறான பயண ஏற்பாடுகள் திருப்திகரமானதாக அமைந்திருக்குமானால் ஜெனீவா இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றிருக்கும். எனவே சிங்கள அரசும், சிங்கள அரச படைகளும் அண்மைக் காலமாக தமிழ் மக்களைக் கொன்றழித்து வரும் நிலையில் அது தொடர்பாகவும் எதுவித கண்டனத்தையும் தெரிவிக்காத சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகள் மீதும், தமிழ் மக்கள் மீதும் குற்றங்களைச் சுமத்துவதும் கண்டனங்களைத் தெரிவிப்பதும் இது வரை காலமும் தமிழ் மக்கள் சர்வதேச சமூகம் மீது வைத்திருந்த நம்பிக்கையை, நல்லெண்ணத்தைச் சிதறடித்ததுடன் பேச்சுவார்த்தை, போர்நிறுத்தம் என்ற வட்டத்துக்குள் இன்னும் கட்டுப்பட்டு நின்று கொண்டு அநியாயமாக பலியாகுவதைவிட அடுத்த கட்ட பாச்சலுக்குத் தயாராகின்ற உந்து சக்தியை ஏற்படுத்துகின்றது. எனவே, இனியாவது சர்வதேச சமூகம் யதார்த்தமாக சிந்தித்து செயலாற்றுவது மேன்மை மிக்கதாகும். battieelanatham
|
|