பிரதான பக்கம் arrow Karuna Antharangam arrow பாதுகாப்பு நிலைவரம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

பாதுகாப்பு நிலைவரம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 28 May 2006

கருணா குழுவுடனான படையினர் தொடர்பு; சமாதான செயலக பணிப்பாளர் ஒப்புக் கொண்ட உண்மை. உள்நாட்டுப் போரை உள் இயக்க போராக காண்பிக்க முயலும் அரசு

இன்று உள் இயக்க மோதலாகக் காண்பிக்க இலங்கை அரசு முயல்கையில், இது முழு அளவிலான போராக மாறுமா இல்லையா என்பதை விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விதிக்கவுள்ள தடையும் தீர்மானிக்கவுள்ளது. தற்போது, அங்கீகரிக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாடொன்று அமுலிலிருந்தாலும் நாட்டில் அங்கீகரிக்கப்படாத போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்த உடன்பாடு முழுமையாக அமுல்படுத்தப்படாததும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் திறமையற்ற செயற்பாடும் இதற்குக் காரணமாயுள்ளதை எவரும் மறுக்க மாட்டார்கள்.

காலாகாலமாக, இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வந்தும் அது நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே ஆயுதப் போராட்டம் முனைப்புப் பெற்று தமிழீழ இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இலங்கைப் படையினருக்கு இணையாக விடுதலைப் புலிகளும் வளர்ச்சி பெற்ற போதுதான் தமிழீழத்திற்கு மாற்றுத் தீர்வு தேடினர். விடுதலைப் புலிகளின் பலத்தால்தான் போர் நிறுத்த உடன்பாடு அமுலுக்கு வந்தது. ஆனால், அந்தப் போர் நிறுத்த உடன்பாட்டை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினால் விடுதலைப் புலிகளுக்குள் சிறு பிளவு ஏற்படுத்தப்பட்டது. அந்தப் பிளவால் உருவான கருணா குழுவை ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான அரசு பயன்படுத்த, தற்போது இந்த அரசு அந்தக் குழுவை முழுமையாகப் பயன்படுத்துகிறது.

வடக்கு, கிழக்கில் கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற நிழல் யுத்தம் இன்று சிறு அளவிலான யுத்தமாக மாற்றம் பெற்றுள்ளது. எனினும், இதற்கான காரணத்தையும் இதற்குக் காரணமானவர்களையும் தண்டிக்க முயலாத சர்வதேச சமூகம் இன்று விடுதலைப் புலிகளைத் தடை செய்வதன் மூலம் முழு அளவிலான யுத்தம் வெடிப்பதை உறுதிசெய்யப்போகின்றது.

போர் நிறுத்த காலத்தில் நிழல் யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் யார்? அந்த நிழல் யுத்தத்திற்கு இலக்கானவர்கள் யார்? எந்தக் குழுவின் பெயரால் இந்த நிழல் யுத்தம் நடைபெற்றது? அந்தக் குழுவை இயக்கியவர்களும், இயக்குபவர்களும் யார்? போர் நிறுத்த உடன்பாடு அமுல்படுத்தப்படாததற்கு காரணமானவர்கள் யார்? அந்தப் போர் நிறுத்த உடன்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்தால் எவ்வாறான நன்மைகள் கிடைத்திருக்கும்? இன்று நடைபெறும் சிறு அளவிலான யுத்தம் நாளை பெரும் போராக மாறப்போவதற்கு காரணமானவர்கள் யார்? என்பதையெல்லாம் அறிய முடியாத சர்வதேச சமூகம் எதற்காக ஒரு தரப்பின் மீது தடை விதித்து பெரும் போருக்கு வித்திட நிற்கிறது? இன்று கூட கருணா குழுவை மையப்படுத்தித்தான் அரசு நிழல் யுத்தத்தையும் சிறு அளவிலான போரையும் நடத்திக் கொண்டிருக்கிறது.

நேற்றுவரை வடக்கு, கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விடுதலைப் புலிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் தமிழ் தேசியப் பற்றாளர்களையும் தேடியழித்த இராணுவ புலனாய்வுப் பிரிவும் கருணா குழுவும் இன்று விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவி அவர்களது முன்னரங்க பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல்களை நடத்துகின்றனர். முன்னர் தேடியழித்த நடவடிக்கையில் ஈடுபட்டது கருணா குழுவென்றும் இப்போது புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதும் கருணா குழுவென்றும் கூறும் அரசும் படைகளுந்தான் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக விடுதலைப் புலிகளும் தமிழ்த் தரப்பும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றன.

இதனைப் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு மட்டுமல்ல சர்வதேச சமூகமும் நன்கறிந்துள்ள போதும், அனைவரும் தொடர்ந்தும் மௌனம் சாதிப்பதும், தாக்குபவனை விட்டு விட்டு தாக்கப்படுபவனை அடித்து வீழ்த்த அனைவரும் கங்கணங்கட்டி நிற்பதும் வியப்பளிக்கிறது.ஆரம்பத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் செயற்பட்ட கருணா குழு இன்று வடக்கிலும் கிழக்கிலும் செயற்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் மறைந்திருந்து ஆங்காங்கே சிறு சிறு தாக்குதல்களை நடத்தும் வல்லமையை விட எல்லா இடங்களிலும் இன்று கருணா குழுதான் புலிகள் மீது தாக்குதலை நடத்துவதை போன்றதொரு தோற்றப்பாட்டையும் ஏற்படுத்த அரசும் படையினரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு அரச கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களும் சிங்கள, ஆங்கில ஊடகங்களும் பூரண ஆதரவு வழங்குவதுடன், இலங்கையைச் சேர்ந்த சர்வதேச ஊடகங்களின் முகவர்களும் முயல்கின்றனர். கருணா குழு விவகாரத்தில், சிறிய அளவிலான போருடன் பிரசாரப் போரும் தீவிரமாக நடைபெறுகிறது.

தற்போது கருணா குழுவின் செயற்பாடு அம்பாறை மாவட்டத்தில் வெகுவாகக் குறைந்துள்ளது. அங்கு விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளும் குறைவென்பதால் இராணுவப் புலனாய்வுப் பிரிவு கருணா குழுவை அங்கு பயன்படுத்துவதில்லை. ஆனால், மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் கருணா குழுவின் நடவடிக்கை அதிகம் போன்றதொரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இராணுவ முகாம்களிலிருந்தே கருணா குழு செயற்படுவதாகப் புலிகளும் பொது மக்களும் குற்றஞ்சாட்டியதையடுத்து மட்டுநகர் கோவிந்தன் வீதியில் கருணா குழுவின் முகாமொன்று திறக்கப்பட்டது. கருணா குழுவின் நடமாட்டத்தை முன்னர் போல் நகரில் மக்கள் அவதானித்து அது பற்றிக் கூறியபோது, தற்போது அவர்கள் நகரில் முகாம் அமைத்துள்ளதால் அங்கிருந்து அவர்கள் செயற்படுவதாக படைத்தரப்புக்கூறியதுடன் இதன் மூலம் படைமுகாம்களிலிருந்தே அவர்கள் செயற்படுகிறார்களென்ற எண்ணத்தை மாற்றவும் முனைந்தனர்.

கருணா குழு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இல்லை என்றும் அவர்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள்ளேயே இருப்பதாகவும் படைத்தரப்புக் கூறுகின்றது. ஆனால், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பல தடவைகள் இடம்பெற்ற தாக்குதல்களில் கருணா குழுவைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் எந்தவொரு கருணா குழு உறுப்பினரும் கொல்லப்படவில்லை.அத்துடன், அண்மைக்காலமாக திருகோணமலையிலும் மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியிலும் விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகள் மீது அடிக்கடி படையினர் தாக்குதல்களை நடத்துகின்றனர். ஆனால், கருணா குழுவே இந்தத் தாக்குதலை நடத்துவதாக படைத்தரப்பும் அரசும் கூறுகின்றன. இன்று வடக்கு, கிழக்கில் நடைபெறும் அனைத்துத் தாக்குதல்களுக்கும் கருணா குழுவே பொறுப்பென்பது போன்றும் பிரசாரம் செய்யப்படுகிறது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி தொடங்கும் இடங்களில் அந்த எல்லையெங்கும் படையினரின் முன்னரங்க காவல் நிலைகளிருக்கும். அதேபோல், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி தொடங்கும் இடங்களில் அதன் எல்லையெங்கும் அவர்களது முன்னரங்க காவல் நிலைகளிருக்கும். இரு முன்னரங்க காவல் நிலைகளுக்குள்ளும் இடைப்பட்ட பகுதி யுத்த சூனியப் பிரதேசமாகும். இது எவரது கட்டுப்பாட்டிலும் இருப்பதில்லை. பொதுவாக இவற்றுக்கிடையில் அரைக் கிலோ மீற்றர் தூர இடைவெளியாவது இருக்கும். படை நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதாயின் புலிகள் தங்கள் நிலைகளிலிருந்து சென்று தாக்குவர். புலிகளின் நிலைகள் மீது படையினர் தாக்குதல் நடத்துவதாயின் தங்கள் நிலைகளிலிருந்து சென்று தாக்குவர். ஆனால் கடந்த சில வாரங்களாக திருகோணமலையில் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகள் மீது அடிக்கடி `சிறு சிறு' தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

எதிரும் புதிருமாக இராணுவத்தினதும் புலிகளதும் முன்னரங்க காவல் நிலைகளிருக் கையில் எப்படி படையினருக்குத் தெரியாது புலிகளின் நிலைகள் மீது கருணா குழுவால் தாக்குதல் நடத்த முடியும்? புலிகள் பதில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே, இந்தச் `சிறு சிறு' தாக்குதல்களை நடத்துவோர் தப்பியோடிவிடுவார்கள். ஆனால், சில மணிநேரத்தில் இராணுவத்தை ஆதாரம் காட்டி வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பெரும் செய்தி வெளியாகும்.

கருணா குழுவினர் புலிகளின் நிலைகள் மீது நடத்திய நீண்ட நேர பெருந் தாக்குதலில் 15 க்கும் மேற்பட்ட புலிகள் பலி, 30 க்கும் மேற்பட்டோர் காயமென அந்தச் செய்தி நீண்டு செல்லும். இதனை வெளிநாட்டு ஊடகங்களும் ஆங்கில, சிங்கள ஊடகங்களும் பெரிது படுத்தி பல முறை வெளியிட்டுக் கொண்டிருக்கும். இப்படி அடிக்கடி செய்திகள் வெளியாகும். ஒவ்வொரு தாக்குதலிலும் 10 அல்லது 15 புலிகளாவது கொல்லப்பட்டதாக இந்தச் செய்திகள் வெளியாகும். ஆனால் உண்மையில், புலிகளின் நிலைகள் மீது பத்து நிமிடம் கூட தாக்குதல் நடைபெற்றிருக்காது. புலிகளும் பெரும்பாலும் பதில் தாக்குதல் கூட நடத்தியிருக்க மாட்டார்கள். எனினும் செய்திகளோ, `கருணா குழு அதிரடித் தாக்குதல்' அல்லது `கருணா குழு மிக நீண்ட நேரம் புலிகளுடன் கடும் சமர்' அல்லது `புலிகளின் பகுதிக்குள் ஊடுருவிச் சென்ற கருணா குழுவால் புலிகளின் முகாம் நிர்மூலம்' என்றெல்லாம் வெளியாகும்.

இவற்றில் எதுவித உண்மையுமில்லையென்பது இராணுவத்துக்கும் தெரியும் கருணா குழுவுக்கும் தெரியும், புலிகளுக்கும் தெரியும், தமிழ் பொது மக்களுக்கும் தெரியும். இதைவிட ஆங்கில, சிங்கள ஊடகங்களுக்குக் கூடத் தெரியும்.

ஆனால் இவை வெளியிடும் செய்திகளை சிங்கள மக்கள் மட்டுமே பெரிதாக நம்புவர். கருணா குழு புலிகள் மீது அடிக்கடி பெரும் தாக்குதல்களை நடத்தி பேரிழப்புகளை ஏற்படுத்துமளவிற்கு மிகவும் வலுவாக உள்ளதாக பலரும் கருதுவர்.

`கடும் சமர்,' `நீண்ட நேரம் மோதல்,' `பாரிய தாக்குதல்,' ` ஊடுருவிச் சென்று முகாம் நிர் மூலம்' என அடிக்கடி பிரசாரப்படுத்துவதன் மூலம் கருணா குழுவில், பாரிய தாக்குதல்களையும் நீண்ட நேரம் நின்று சமர்புரியக் கூடியளவுக்கும் ஆட்பலம் இருப்பது போன்றும் பாரிய தாக்குதலையும் நீண்ட நேரம் சமர் செய்யும் விதத்தில் கனரக ஆயுதங்களை வைத்திருக்கிறார்களென்பது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

அத்துடன் புலிகளுக்கெதிராக படையினர் தற்போது நடத்தி வரும் தாக்குதல்கள் அனைத்தையும் கருணா குழுவின் பெயரில் பதிவதன் மூலம், புலிகளுக்கெதிராக படையினர் எவ்வித தாக்குதலையும் நடத்தாது தொடர்ந்தும் அவர்கள் பொறுமை காத்து வருவது போன்றும், தங்களுக்கிடையிலான உள்மோதல்களால் இழப்புகளைச் சந்திக்கும் புலிகள், படையினர் மீது தாக்குதல்களை நடத்தி வருவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

அண்மையில் கூட மட்டக்களப்பு வவுணதீவில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த தளபதி கேணல் ரமணன் இராணுவத்தினரின் சினைப்பர் தாக்குதலில் உயிரிழந்தார். ஆனால் இந்தத் தாக்குதலை கருணா குழுவே நடத்தியதாக அரசும் படைத்தரப்பும் தொடர்ந்து கூறி வருகின்றன. கருணா குழுவும், தாங்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறுகின்றது.

இதன் மூலம், புலிகளின் முக்கிய தளபதிகளின் நடமாட்டத்தைக் கூட உளவறிந்து அவர்களைத் தாக்கிக் கொல்லும் அளவுக்கு கருணா குழு பலம் மிக்கதொரு அமைப்பாயிருப்பதாக காண்பிக்கவும் படைத்தரப்பு முயல்கின்றது. ஆனால் இவையெல்லாம் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளுள்ள பகுதிகளில் படையினர் நடத்தும் தாக்குதல்களென்பதை கண்காணிப்புக் குழு கூட அறியும்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கூட திருகோணமலை தோப்பூர் பட்டியடி இராணுவ முகாமிலிருந்து சென்று புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் நடத்த முயன்ற கருணா குழுவைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டதுடன் இருவர் புலிகளிடம் பிடிபட்டனர். ஆனால் இந்தச் செய்தி தமிழ் ஊடகங்களில் மட்டுமேவெளியாகியுள்ளது. இது குறித்து சிங்கள, ஆங்கில ஊடகங்கள் எதுவும் மூச்சுக் கூட விடவில்லை.

இதன் போது பிடிபட்ட இரு கருணா குழுவினரும், திருகோணமலையில் படை முகாம்களில் தாங்கள் பத்துப் பேர் தங்கவைக்கப்பட்டு படையினர் கூறும் நேரங்களில் படைத் தரப்புடன் சென்று புலிகளின் முன்னரங்க காவல் நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தி வந்ததாக புலிகளிடம் தெரிவித்துள்ளனர். இவர்களை கண்காணிப்புக் குழுவினரும் சந்தித்துள்ளனர்.

இவ்வாறு கருணா குழுவின் பெயரில் படையினரே புலிகள் மீது தாக்குதல் நடத்தி வருவதை கண்காணிப்புக் குழுவும் பல தடவைகள் ஒப்புக் கொண்டுள்ள போதும் அரசும் படையினரும் இதனை முற்றாக மறுத்தே வருகின்றனர்.

கருணா குழுவின் ஆயுதங்களை களைய வேண்டுமென்றால், நாளை தமிழ்ச்செல்வன் அல்லது சூசை புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினால் கூட அவர்களது ஆயுதங்களையும் அரசுதான் களைய வேண்டுமென்று புலிகள் கூறுவார்கள் போலிருக்கிறதென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வெள்ளிக்கிழமையும் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

கருணா குழு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இராணுவத்துடன் சேர்ந்தியங்காவிட்டால் அந்தக் குழுவிடமிருந்து ஆயுதங்களை களைய வேண்டுமென்றதொரு பிரச்சினையே எழுந்திருக்காது. ஆனால் யுத்தமில்லாத போர் நிறுத்த காலத்தில் அவர்களைப் பயன்படுத்தி அவர்களது பெயரில் இராணுவமே நிழல் யுத்தத்தை நடத்துவதால் தான் படையினருடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவிடமிருந்து ஆயுதங்களைக் களையுமாறு தாங்கள் வலியுறுத்துவதாக புலிகள் கூறுகின்றனர்.

இதேநேரம் அரசும் படைத்தரப்பும் சர்வதேச சமூகமும் ஒன்றை மறக்கக்கூடாது. `அரச படையின் ஒத்தாசையுடன் ஒட்டுப்படையாக கருணா குழு என்ற பெயரில் இயங்கும் ஆயுதக் குழுவிடமிருந்து ஆயுதங்களை களைந்து அவர்களை நிர்மூலமாக்கும் முழுப்பொறுப்பையும் தாங்களே கையேற்பதைத் தவிர புலிகளுக்கு வேறு வழிகிடையாதென அண்மையில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்திருந்தார்.

வெலிக்கந்தைப் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த கருணா குழுவின் மூன்று முகாம்களை புலிகள் தாக்கியழித்த பின்னர் அன்ரன் பாலசிங்கம் இதனைக் கூறியிருந்தார்.

கருணா குழுவின் பெயரால் புலிகளுக்கெதிராக புலிகளின் பகுதிகளுக்குள் புகுந்து இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகையில், கருணா குழுவின் பெயரால் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் இராணுவத்தினருக்கெதிராக புலிகள் தாக்குதல் நடத்தப் போவதையே இது சுட்டிக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நேரத்தில், அரச சமாதானச் செயலர் பாலித ஹோகன `ராய்ட்டர்' செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியும் முக்கியமானது. இராணுவத்தின் கீழ் மட்டத்திலிருப்பவர்கள் கருணா குழுவுடன் தொடர்புகளை வைத்திருக்கலாமென்றும் ஆனால், அரசோ இராணுவ தலைமையோ அதற்கு எதிரானவர்களென்றும் அவ்வாறு தொடர்புகளை வைத்திருப்போர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்களென்றும் கூறியுள்ளார்.

அவ்வாறானால், போர் நிறுத்த உடன்பாட்டிற்கு அமையவும் ஜெனீவாவில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுக்கு அமையவும் கருணா குழுவின் ஆயுதங்களைக் களைய மறுப்பது அரசா அல்லது இராணுவத் தலைமையா அல்லது கருணா குழுவுடன் தொடர்பு கொண்டுள்ளதாகக் கூறும் கீழ் மட்ட இராணுவமா என்ற கேள்வியும் எழுகிறது.

இதை விட, கீழ் மட்ட இராணுவம் தான் கருணா குழுவுடன் தொடர்பு கொண்டுள்ளதென்றால் இராணுவத் தலைமைக்கு கட்டுப்படாது கீழ்மட்ட இராணுவம் செயற்படுகிறதா அல்லது கீழ்மட்ட இராணுவம் தான் இராணுவ தலைமையை இயக்குகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

என்றாலும், இராணுவத்திற்கு கருணா குழுவுடன் தொடர்பிருப்பதை அரசு ஒப்புக் கொண்டிருப்பதை சர்வதேச சமூகம் கவனித்திருக்க வேண்டும். இந்த உண்மைகளை உணரும் திறன் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளுக்கில்லையென்றால் அரசு ஒப்புக் கொள்வதையாவது ஏற்று, எவருக்கு எவ்வாறான தடை விதிக்க வேண்டுமென்றாவது தீர்மானிக்கலாமல்லவா?


விதுரன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..