|
ஒரு நாட்டோடு சேர்ந்து வாழ்வதா? பிரிந்து செல்வதா என்பதை மொண்டிநீக்ரோ நாட்டு மக்கள் தீர்மானிக்கிற உரிமை உள்ளபோது ஈழத் தமிழர்களுக்கு இல்லையா என்று பாவலர் அறிவுமதி கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பாவலர் அறிவுமதி பேசியதாவது:அய்யாவின் (தந்தை பெரியாரின்) கடைசி கனவை (அனைத்து சாதி அர்ச்சகராதல்) நனவாக்கிய மகிழ்ச்சியில் இருக்கிறது பெரியார் திடல். தம்பியின் முதல் கனவையும் நனவாக்கும் மகிழ்ச்சியைத் தரும் நம்பிக்கையும் இருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியங்களில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் பண்பாட்டு விழுமியங்களை உணர்ந்தவர்கள். ஆழிப்பேரலையின் போதே அதை உறுதி செய்தவர்கள். உலக நாடுகளில் எந்த இனத்தவர் கூடி மாநாடு நடத்தினாலும் வன்முறையில் முடியும். ஆனால் தமிழர்கள் அமைதி வழியில்தான் கூட்டங்களை நடத்தி முடிக்கின்றனர். இலங்கையின் வன்முறைகளால் படகுகளில் ஏறுகிற நம் உறவுகளின் உடைமைகள் இங்கே வருகின்றன. ஆனால் உடல்கள்...? தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து கரையொதுங்குகிற ஈழத் தமிழரது பிணங்களை அடக்கம் செய்யவாவது கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று அடிதடியின்றி வருவீர்களா? ஐரோப்பிய ஒன்றியத்தின் நியாயமற்ற பக்கச்சார்பான தீர்மானத்தால் ஒருபுறம் வேதனையும் மறுபுறம் சினமும் அடைந்திருக்கும் புலம்பெயர் தமிழர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்படும் தேச விடுதலைப் போராட்டத்துக்கும் முன்னைவிட மேலும் இப்போது தீவிரமான ஆதரவையும் பொருளாதார உதவிகளையும் அள்ளி வழங்கி இந்தத் தடைகளை முறியடிப்பார்கள் என்பது திண்ணம். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கிறீர்கள். இங்கே உள்ள சில ஊடகங்கள் விடுதலைப் புலிகளோடு மட்டும் பேசக் கூடாது. வேறு சிலரோடும் பேச வேண்டும் என்கிறார்கள். உங்கள் கருத்தை ஏற்கிறோம். யாரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நீங்கள் ஈழத் தமிழர்களிடத்தில் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யுங்கள். கடந்த தேர்தலில் தங்கள் தலைவன் மௌனமாக இருந்ததன் உள் அர்த்தம் புரிந்து வாக்களிக்காமலேயே தீர்ப்பைச் சொன்னவர்கள் தமிழ் மக்கள். அவர்கள் தீர்ப்பளிப்பார்கள். ஒரு சிங்கள மருத்துவரான பிறையன் செனிவிரட்னவே கூறுகிறார், - தமிழீழம் என்பது ஈழத் தமிழர்கள் உருவாக்கியது அல்ல- சிங்களப் பேரினவாதிகள் உருவாக்கியது - தமிழ்ப் புலிகள் பிரச்சனைக்குக் காரணமானவர்கள் அல்லர். பிரச்சனையைத் தீர்க்க முடியாததன் விளைவாக உருவானவர்கள் - 100-க்கு 90 விழுக்காடு சிங்களவரை மட்டுமே கொண்ட இராணுவத்தின் கொடுமைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் ஆளான தமிழர்கள் இந்தக் கொடிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற விரும்புகிறார்கள் - மீண்டும் போர் மூண்டாலும் பிரிட்டனும் மற்ற நாடுகளும் ஏராளமான ஆயுதங்களை விற்று ஆதாயமடைவார்கள். ஆனால் இலங்கையில் ஏற்படும் அழிவுக்கு யாரும் பதில் சொல்ல முடியாது என்கிறார். ஒரு விடுதலைப் போராட்டம் நடக்கும் காலத்தில் யார் பிரதிநிதி என்பதை அம்மக்களே முடிவு செய்வார்கள். இன்னொரு நாடோ அல்லது வேறு சில நாடுகளோ முடிவு செய்ய முடியாது. தமிழர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் உரிமை விடுதலைப் புலிகளுக்கு உண்டா? இல்லையா? என்று ஈழத்திலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடத்தில் வாக்கெடுப்பு நடத்த ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் தயாரா? 60 ஆண்டுகாலம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்ந்தவர்கள்தானே தமிழர்கள்- அக்கொடுமையைத் தாங்காமல்தானே தனிநாட்டுக்காக்ப போராடத் தொடங்கினார்கள். 1990 ஆம் ஆண்டு வரை யூகோஸ்லேவியா என்ற பெயரில் 6 நாடுகள் சேர்ந்திருந்தன. பின்னர் ஸ்லோவேனியா, குரோசியா, மசடோனியா, போஸ்னியா, ஹெஸ்கோவினா என ஒவ்வொன்றாகப் பிரிந்து போயின. இறுதியாக மொண்டிநீக்ரோ மற்றும் சேர்பிய நாடுகள் இணைந்து ஒரு கூட்டமைப்பாக விளங்கின. சேர்பியாவிடமிருந்து பிரிந்து தனிநாடாக செல்ல மொண்டிநீக்ரோ விரும்பியது. மே மாதம் அம்மக்களிடத்தில் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் சேர்பியாவிடமிருந்து பிரிந்து போக வேண்டும் என்ற கருத்துக்கு வக்களித்தனர். ஐ.நா. சபையில் 193 ஆவது நாடாக இடம்பெறப் போகிறது மொண்டிநீக்ரோ. அந்த நாட்டின் மக்கள் தொகையோ 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர்தான். மொண்டிநீக்ரோ மக்களுக்கு உள்ள உரிமை ஈழத் தமிழர்களுக்குக் கிடையாதா? ஜனநாயக முறையில் அதை தெரிவு செய்திருந்தால் விடுதலைப் புலிகள் ஏன் ஆயுதம் ஏந்துகிறார்கள்? நீங்கள் ஈழத் தமிழரிடத்திலே வாக்கெடுப்பு நடத்துங்கள். ஐ.நா. சபையில் 194 ஆவது நாடாக தமிழீழமும் இணையும் என்றார் அறிவுமதி. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கோ.க.மணி பேசுகையில், சிங்கள அரசுக்கு இந்திய அரசாங்கம் எதுவித உதவியும் எந்த வகையிலும் செய்யக் கூடாது என்பதற்காக மத்திய அரசாங்கத்தை நாம் வலியுறுத்துவோம். இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பாக இந்திய அரசு இருக்க வேண்டும் என்பதை எமது கட்சி தொடர்ந்து வலியுறுத்தும் என்றார். தமிழ்நாடு முழுமைக்கும் ஈழத் தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் மணி வலியுறுத்தினார். நீதிமன்றத் தடையினால் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் இக்கூட்டத்தில் உரையாற்றவில்லை. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் நிறைவுரை: இலங்கை இனப்பிரச்சினை அந்நாட்டுக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல. ஒவ்வொரு கண்டத்திலும் இப்பிரச்சினை விவாதிக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் இலங்கை இனப்பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பிரிட்டன் நாடாளுமன்றம் முன்பு பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தற்போது குரல் எழுப்பி உள்ளோம். அரசியல் சார்பற்ற எங்களுடன் இணைந்தோ, இணையாமலோ இப்பிரச்சினயில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தரவேண்டும். இலங்கை இனப்பிரச்சினையில் தமிழக அரசுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. பொடாச் சட்டத்தில் கைதான சுப.வீரபாண்டியன், பழ.நெடுமாறன் போன்றவர்களுக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டது. சட்டம் ரத்தான பின்பும் நிபந்தனை தொடர்கிறது. இதைக் களைய தமிழக முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். நிகழ்வில் முடிவில் ஈழத் தமிழர் பாதுகாப்பு முழக்கங்களையும் இந்திய மற்றும் தமிழக அரசுக்கான கோரிக்கைகளையும் மேடையில் நின்ற படி கி.வீரமணி முழங்கிட அரங்கில் கூடியிருந்த தமிழின உணர்வாளர்கள் உணர்வெழுச்சியோடு ஒருமித்த குரலில் முழக்கங்களை எழுப்பினர். நெருடல் இணையம்
|