பிரதான பக்கம் arrow Karuna Antharangam arrow பாதுகாப்பு நிலைவரம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

பாதுகாப்பு நிலைவரம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 06 June 2006

ஐரோப்பிய ஒன்றிய தடையை பயன்படுத்தி தாக்குதலை ஆரம்பிக்கப் போவது யார்? சமஷ்டி என்ற நிலைப்பாட்டிலிருந்து ஒற்றையாட்சிக்கு இறங்கியுள்ள அரசு

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடைசெய்கிறது. இணைத் தலைமை நாடுகளோ, நிழல் யுத்தத்திற்கு கருணா குழுவும் ஈ.பி.டி.பி.யுமே காரணமெனவும் அதனைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதென்றும் கூறுகிறது. இலங்கைக்கு உதவி வழங்கும் பிரதான நாடுகளோ சம்பந்தப்பட்ட இரு தரப்பும், யுத்தத்தை தவிர்ப்போமென நிரூபிக்கும் வரை இலங்கையின் சமாதான முயற்சிகளிலிருந்து விலகியிருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளன.

ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைக் கூறுவதால் இப்போது குழம்பிப் போயிருப்பது யார்? ஐரோப்பிய ஒன்றியமா அல்லது இணைத் தலைமை நாடுகளா? அல்லது இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளா? அல்லது வேறு எவராவதா? என்ற கேள்வி எழுகிறது.

ஏனெனில், இந்த மூன்றிலும் முக்கிய பங்கு வகிப்பது ஐரோப்பிய ஒன்றியம். அந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் அழுத்தம் கொடுத்து புலிகளைத் தடை செய்ய வைத்தது அமெரிக்காதான்.

அதேநேரம், இலங்கையின் சமாதான முயற்சிக்கான இணைத் தலைமை நாடுகளிலும் இலங்கைக்கு உதவி வழங்கும் பிரதான நாடுகளிலும் மிக முக்கியமானதும் அமெரிக்காவே. உலகப் பொலிஸ்காரனான அமெரிக்காவே இன்று உலகில் தீர்மானிக்கும் சக்தியாகிவிட்டதால் எல்லோரையும் ஆட்டிப்படைக்கவும் அடக்கியாளவும் முற்படுகிறது.

இலங்கையில் சமாதான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல இதுவரை உதவிய சர்வதேச சமூகமே இன்று புலிகளைத் தடைசெய்ததன் மூலம் அந்தச் சமாதான முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளைத் தடை செய்வதன் மூலம் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தி விடலாமென்றால் அது இலங்கை அரசுக்கு வாய்ப்பாகி இராணுவத் தீர்வுக்கே வழிவகுக்குமென்பதை சர்வதேச சமூகம் விரைவில் புரிந்து கொள்ளும்.

ஐரோப்பிய ஒன்றியத் தடைக்கு முன்னர் சமஷ்டித் தீர்வு குறித்து ஆலோசிக்க முற்பட்ட அரசு, இந்தத் தடைக்குப் பின்னர், பிளவுபடாத இலங்கைக்குள் ஒற்றையாட்சி முறையின் கீழேயே தீர்வென்கிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிலும் அரசும், அரசில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி. போன்ற கட்சிகளும் ஒற்றையாட்சியை கடுமையாக வலியுறுத்தியுள்ளன.

விடுதலைப் புலிகள் வன்முறைகளில் இறங்கிவிட்டதாகவும் அவர்களை சமாதான வழிக்குத் திரும்பச் செய்ய அவர்கள் மீதான தடை உதவுமெனக் கருதிய சர்வதேச சமூகம், இந்தத் தடையின் பின் இலங்கை அரசு சமஷ்டித் தீர்விலிருந்து ஒற்றையாட்சி முறைக்குச் சென்றுள்ளதை உணரவேண்டும்.

விடுதலைப் புலிகளை, வன்முறை வழியிலிருந்து சமாதான வழிக்கு வரவைக்க தடைதான் சிறந்த வழியென சர்வதேச சமூகம் கருதுகிறது. ஆனால் தமிழீழத்திற்காகப் போராடி தங்கள் பலத்தை நிரூபித்த புலிகள், தமிழீழத்திற்குப் பதிலாக சமஷ்டித் தீர்வை பரிசீலிக்க தயாரானது இந்த சர்வதேசத்தின் தடை மூலமல்ல.

தமிழீழத்திற்கான போர் உறுதியாக முன்னெடுத்துச் செல்லப்படுகையிலே புலிகளின் சமபல நிலையை உணர்ந்த அப்போதைய அரசு அவர்களுடன் போர் நிறுத்தம் செய்து சமாதானப் பேச்சுகளை ஆரம்பித்தபோது, புலிகள் மாற்றுத் தீர்வை பரிசீலிக்க முன்வந்தனர். இது புலிகளின் பலவீனமல்ல, சமாதான முயற்சிகளுக்கும், அமைதித் தீர்வுக்கும் வாய்ப்பளிக்க அவர்கள் வழங்கிய சந்தர்ப்பமாகும்.

ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமாதானப் பேச்சுகள் ஊடாக சமஷ்டித் தீர்வுக்கு வழிவகுப்பதை விடுத்து, புலிகளுக்குள் பிளவை ஏற்படுத்தி, அவர்களைப் பலவீனப்படுத்தி, சமாதானச் சூழ்நிலையைக் குழப்பி, இறுதித் தீர்வுக்கான சந்தர்ப்பத்தை இழந்ததுடன் புலிகள் அமைப்புக்குள் கிளர்ச்சி செய்து வெளியேற்றப்பட்ட கருணாவை வைத்து நிழல் யுத்தத்தையல்லவா அரசு ஆரம்பித்தது.

கருணாவை பிரித்து அதன் மூலம் நிழல் யுத்தம் ஆரம்பமான போதே புலிகள் போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால் சமாதானத்திற்கொரு சந்தர்ப்பமளிக்கவும், இலங்கை அரசின் சமாதானம் குறித்த கபட வேடத்தை அம்பலப்படுத்தவும் புலிகள் பொறுமை காத்ததன் பலன், பல முக்கிய போராளிகளையும், பெருமளவு பொது மக்களையும் இழந்ததுடன் சர்வதேச சமூகத்தின் தடையையும்தான்.

விடுதலைப் புலிகள் மக்கள் படையை பயன்படுத்தி வன்முறையை ஆரம்பித்ததால்தான் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. ஆனால், இந்த மக்கள் படை, நிழல் யுத்தம் ஆரம்பமாகி அது உச்சக் கட்டம் அடைந்த பின்னர்தான் உருவாக்கப்பட்டதென்பதை ஐரோப்பிய ஒன்றியம் உணரவில்லையா அல்லது உணர விரும்பவில்லையா?

நிழல் யுத்தத்திற்குக் காரணமான கருணா குழுவையும், ஈ.பி.டி.பி.யையும் அடக்க அரசு தவறிவிட்டதாக இணைத் தலைமை நாடுகள் கூறுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தைவிட இணைத் தலைமை நாடுகளில் அமெரிக்கா, ஜப்பான், நோர்வேயுமுள்ளன.

வன்முறையில் ஈடுபடுவதாக ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடை விதித்தபோது, இந்த வன்முறைகள் வெடிக்கக் காரணமான நிழல் யுத்தத்தில் ஈடுபடும் கருணா குழுவையும் ஈ.பி.டி.பி.யையும் அடக்க அரசு தவறிவிட்டதாக இணைத் தலைமை நாடுகள் கடும் குற்றஞ்சாட்டியிருப்பதை, இந்த இணைத் தலைமை நாடுகளில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் கவனத்திலெடுக்கத் தவறியதேன்?

ஜெனீவாவில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுகளில் காணப்பட்ட இணக்கப்பாட்டை உடனடியாக அமுல்படுத்துங்களெனவும் சர்வதேச சமூகம் கூறுகின்றது. ஆனால், ஜெனீவாப் பேச்சுக்களில் காணப்பட்ட இணக்கப்பாட்டை அமுல்படுத்தத் தவறியது யார்? அந்த இணக்கப்பாட்டின் பிரதான அம்சமென்ன என்பதை சர்வதேச சமூகம் ஏன் இன்னும் உணரவில்லை?

போர் நிறுத்த உடன்பாட்டின் முழுமையான அமுலாக்கம் தொடர்பானதே ஜெனீவாப் பேச்சு. கருணா குழு உட்பட அனைத்து ஆயுதக் குழுக்களிடமிருந்தும் ஆயுதங்களைக் களைய அரசு உடன்பட்டதை முழு உலகும் அறிந்திருக்கும். ஆனால் அந்த இணக்கப்பாடு இன்று வரை அமுல்படுத்தப்படாது அதற்கு மாறாக ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி இராணுவம் நிழல் யுத்தத்தை நடத்துகிறது. இந்த இணக்கப்பாட்டிற்கமைய ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டிருந்தால், அமைதிச் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். வன்முறைகள் வெடித்திராது. தற்போதைய கடும் மோதல்களும் உருவாகியிராது. ஐரோப்பிய ஒன்றியமும் புலிகளைத் தடை செய்யும் நிலையும் தோன்றியிருக்காது.

ஆனால், ஜெனீவா உடன்பாட்டுக்கு மாறாக நிழல் யுத்தம் மோசமடைந்தபோதே வடக்கு - கிழக்கில் மக்கள் படை உருவாகி தாக்குதல்கள் தீவிரமடைந்தன. இரு தரப்பும் பெரும் மோதல்களுக்குச் செல்லும் நிலை உருவானது. இராணுவத்தினராலும், ஆயுதக் குழுக்களாலும் வகைதொகையின்றி அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இவையெல்லாம் நடைபெற்ற போது, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மட்டுமல்ல சர்வதேச சமூகமும் தான் பார்த்துக் கொண்டிருந்தது.

இராணுவத்தினர் மீது மக்கள் படை தாக்குதல்களை தீவிரப்படுத்தியபோது தான் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட அது பெரும் போராக வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மக்கள் படையென்பது விடுதலைப் புலிகளின் துணைப்படையே என்றும், அதனால் வன்முறைகள் வெடிக்க விடுதலைப் புலிகளே காரணமெனவும் கூறி புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளது.

ஆனால், இந்த மக்கள் படை உருவாகக் காரணமாயிருந்தது இலங்கை அரசுதான். அவர்களது ஆசியுடனும் இராணுவத்தின் ஆதரவுடனும் ஆயுதக் குழுக்கள் நிழல் யுத்தத்தை தீவிரப்படுத்திய போது தான் மக்கள் படை உருவானது. மக்கள் படைக்காக விடுதலைப் புலிகளை தடை செய்வது நியாயமென்றால், நிழல் யுத்தத்திற்குக் காரணமான ஆயுதக் குழுக்களை வழிநடத்திய அரசு மீது ஐரோப்பிய ஒன்றியம் என்ன செய்யப்போகிறது?

புலிகளைத் தடை செய்த பின்னர் ஐரோப்பிய ஒன்றியமும் இணைத் தலைமை நாடுகளும் விடுத்த அறிக்கைகள் இலங்கை அரசை கடுமையாகக் கண்டித்த போதிலும், அதனை இலங்கை அரசு கவனத்திலெடுக்குமா என்பது கேள்விக் குறியே.

இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதே தவிர, விடுதலைப் புலிகள் மீதான தடை போன்று அவர்களுக்கெதிராக தீர்ப்புச் சொல்லப்படாததால், புலிகள் மீதான தடையை பயன்படுத்தி அவர்கள் சமாதான முயற்சிகளை கைவிட்டு இராணுவ ரீதியிலான தீர்வுக்கு முயற்சிக்கும் நிலைமை தோன்றியுள்ளது.

புலிகளைத் தடை செய்ய முன்னர், ஜெனீவா உடன்பாட்டை அரசு அமுல்படுத்தி, விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளின் வன்னிப் பயணத்திற்கு ஏற்பாடுகளைச் செய்து, அடுத்த கட்ட ஜெனீவாப் பேச்சுக்களுக்காக இலங்கை அரசு நிறைவேற்றியிருக்க வேண்டிய கடப்பாடுகளை செய்வித்திருந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடுகளில் நியாயமிருக்கிறதென எவராவது கூறியிருப்பர்.

போர் நிறுத்த உடன்பாட்டின் படிதான் ஆயுதக் களைவு நடைபெறவில்லை, ஜெனீவா உடன்பாட்டின் படியாவது ஆயுதக் களைவு நடைபெற்று புலிகளின் தளபதிகளின் போக்குவரத்துக்கள் சுமுகமாக இடம்பெற்றிருந்தால் வன்முறைச் சூழ்நிலையே எழுந்திருக்காது. இவற்றைச் செய்யுமாறு இன்று வரை கூட சர்வதேச சமூகம் இலங்கை அரசை கேட்கவுமில்லையென்பதுதான் வேடிக்கை.

புலிகள் மீதான இந்தத் தடை, அவர்கள் பேச்சுக்களுக்கு செல்வதையும் பெரிதும் பாதிக்கும். இதுவரை இரு தரப்பும் சமவலுவுள்ள படைகளாகவும் சம பல அரசியல் சக்திகளாகவும் கருதப்பட்டன. ஆனால் இந்தத் தடை மூலம் புலிகளின் படை வலுச்சமநிலையில் பாதிப்பு ஏற்படாத போதும் அரசியல் சக்திகளாகவும் கருதப்பட்டன. ஆனால் இந்தத் தடை மூலம் புலிகளின் படை வலுச் சமநிலையில் பாதிப்பு ஏற்படாத போதும் அரசியல் சமபல நிலையில் பாதிப்பு ஏற்படும். பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் பேரம் பேசும் பலம் குறைந்து, அரசின் கை ஓங்கும்.

இந்தத் தடையால் புலிகள் போருக்குச் செல்லமாட்டார்களெனக் கருதும் அரசு சமாதானப் பேச்சுக்களை மேலும் இழுத்தடித்து காலதாமதத்தை ஏற்படுத்தும். இந்தக் காலத்தில் நிழல் யுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தி புலிகளை பல்வேறு வழிகளிலும் பலவீனப்படுத்த முயலும். இதன் ஒரு கட்டமாகவே, சமஷ்டித் தீர்வென்ற நிலைமாறி, பிளவுபடாத தேசத்தினுள் ஒற்றையாட்சி முறையின் கீழ் அதிகாரப் பரவலாக்கல் பற்றி ஆலோசிக்க சர்வகட்சி மாநாட்டின் மூலம் குழுவொன்று அமைக்கப்பட்டு தீர்வு குறித்த யோசனையும் தயாரிக்கப்படவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத் தடையால் சமாதான முயற்சியே கேள்விக் குறியாகிவிட்டது. தங்களைத் தடை செய்தால் யுத்தத்திற்குச் செல்வதைத் தவிர, தங்களுக்கு வேறு வழியில்லையென புலிகள் கூறிவந்தனர். ஆனாலும், இந்தத் தடையையடுத்து புலிகள் உடனடியாகப் போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகி யுத்தத்திற்குச் செல்வார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

புலிகளின் பலத்தின் அடிப்படையிலேயே இந்தப் போர் நிறுத்த உடன்பாடு உருவாகி சமாதான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையானது புலிகளின் பேரம் பேசும் சக்தியை வலுவிழக்கச் செய்து அரசின் பேரம் பேசும் பலத்தை இருமடங்காக்கியுள்ளதால் தற்போதைய தடைக்குப் பின் புலிகள் பேச்சுகளுக்குச் செல்லும் வாய்ப்பேயில்லை.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை அடுத்து உடனடியாக புலிகள் போருக்குச் சென்றால் அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சவால் விடுவதாகவும் அதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்கு இராணுவ ரீதியிலும் உதவ வழிவகுக்கலாமெனவும் கருத்துகள் நிலவுகின்றன.

எனினும், தற்போதைய நிலையில் புலிகளுக்கெதிராக போரொன்றை தொடுக்க வேண்டுமென்ற கருத்து தென்னிலங்கையில் அதிகரித்து வருகிறது.

இந்தத் தடையானது புலிகளின் நிதிசேகரிப்பை முடக்கிவிடுமென்பதால் அவர்களை பொருளாதார ரீதியில் முடக்கிவிடவும் இத்தடை மூலம் புலிகளது நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியமும் தீவிரமாகக் கண்காணிக்குமென்பதால் இவர்களது ஆயுத விநியோகமும் பெரிதும் தடைப்பட்டு விடுமெனவும் தென்னிலங்கை கருதுகிறது.

தற்போதைய நிலையில் புலிகளுக்கெதிராக தாக்குதல்களைத் தீவிரப் படுத்தினால் புலிகளது பதில் நடவடிக்கையும் கடுமையாக இருக்கும் என்பதால், சர்வதேச சமுகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களது இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தலாமென தென்னிலங்கை கருதுவதுடன் புலிகளின் கடுமையான பதில் நடவடிக்கையின் போது சர்வதேச சமூகம் தங்களுக்கே ஆதரவாகச் செயற்படுமெனவும் இவர்கள் கருதக் கூடும்.

தாங்கள் கடுமையான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டாலும் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் மீதான தடையை உடனடியாக நீக்காதென்பதும் இவர்களுக்குத் தெரியும். புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்கினால் அவர்கள் அதனைப் பயன்படுத்தி ஈழத்தைக் கூட உருவாக்கி விடுவார்களென்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரியுமென்பதால் தற்போதைய தடையை எந்த வழிகளிலெல்லாம் புலிகளுக்கெதிராகப் பயன்படுத்த முடியுமோ அந்தளவிற்கு பயன்படுத்திவிட வேண்டுமெனவும் தென்னிலங்கை கருதுகிறது.

புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலக்கப்பட்ட போது அந்தச் சந்தர்ப்பத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த தென்னிலங்கை முயன்றதோ அந்தளவிற்கு இந்தத் தடையையும் பயன்படுத்த வேண்டுமென அவர்கள் கருதுவதால் அதற்கான தருணத்திற்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.


விதுரன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..