|
|
|
கருணா நிதியின் மௌனம் ஏன்? |
|
|
|
Wednesday, 07 June 2006 |
|
ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா தமது அனுதாபத்தைக் காட்ட வேண்டியது காலத்தின் கடமை.சமகாலத்தில் ஈழத்தமிழர்களை சிறிலங்கா இராணுவம் மிகக் கொடூரமாக கொலை செய்து வருகின்றது.தினமும் ஐந்து பத்துப் பேர் எனப் படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன. பச்சிளம் குழந்தைகள் தொடக்கம் பெண்கள், வயோதிபர்கள் எனச் சிங்கள இராணுவம் படுகொலை செய்கின்ற நிலையில் தமிழ் மக்கள் அச்சம் காரணமாக தமிழகத்தை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவின் அணுகுமுறைகள் ஈழத்தமிழினத்தின் அவலங்களைத் தீர்ப்பதற்கான பார்வையைச் செலுத்த வேண்டும். ஆனால், தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தெரிவித்திருக்கும் கருத்து ஈழத்தமிழினத்தை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
மத்திய அரசு எந்த முடிவு எடுக்குமோ அந்த முடிவுதான் தமிழகத்தின் முடிவு எனக் கலைஞர் கூறியிருப்பது காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லை. ஒரு காலத்தில் ஈழத்தமிழினம் அவஸ்த்தைப்பட்ட போது தமிழகத்தில் போராட்டம் நடத்திய கலைஞர் தமிழ் என் உயிர் மூச்சு என சொல்லிலும், செயலிலும் காட்டிய கலைஞர் அவர்கள், மத்திய அரசின் தீர்மானம் தான் எனது முடிவு எனக் கூறுவது தமிழக தமிழர்களின் உணர்வுகளை, எண்ணங்களை அபிலாசைகளை கருச்சிதைவு செய்யும் நடவடிக்கையாகவே அமையும். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் ஈழத்தமிழினம் தொடர்பாக தமிழக அரசு பாராமுகமான ஒரு நடைமுறையைக் கொண்டிருந்தது. அந்தக் கால கட்டத்தில் தி.மு.க ஆட்சி அமைத்திருக்குமானால், ஈழத் தமிழினம் மீது ஒரு பரிவான போக்கினை கடைப்பிடிக்கும் என்ற நம்பிக்கை வலுவடைந்திருந்தது. எனினும் தி.மு.க வெற்றி பெற்று கலைஞர் முதலமைச்சரான பிற்பாடு தமிழக முதலமைச்சர் பற்றிய அரசின் தீர்மானம் தான் எனது தீர்மானம் எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயமாகும்? மத்திய அரசு விடுதலைப்புலிகளைத் தடைசெய்துள்ளது. சிறிலங்கா அரசுக்கு இராணுவ ரீதியிலான உதவிகளை வழங்கி வருகிறது. இந்தியா வழங்குகின்ற இராணுவ உதவியானது ஈழத்தமிழர்களை அழிப்பதற்கான ஆயுதங்கள் தான் அவை. அவ்வாறானால் அதனைக் கலைஞர் அங்கீகரிக்கின்றாரா? இந்திய மத்திய அரசின் அணுகுமுறைகள் ஈழத் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தவோ அல்லது ஆறுதலளிக்கும் வகையிலோ அமையவில்லை. மாறாக, சந்தேகத்துடன் நோக்க வேண்டிய நிலையில் இப்போது கலைஞரின் இந்தக் கருத்தும் கவலையளிக்கின்றது. கலைஞர் அவர்கள் பதவி ஏற்றபோது இலங்கை விவகாரம் தொடர்பாகக் கேட்கப்பட்ட போது தமிழர் தாயகத்தில் இப்போது நடைபெறும் சம்பவங்கள் எதுவும் தெரியாது என்று கூறியிருந்தார். அங்கு நடைபெறும் சம்பவங்கள் பற்றி தீர ஆராய்ந்த பின்னர் தான் நடவடிக்கை எடுக்க முடியுமெனக் குறிப்பிட்டார். இப்போது வரை அவர் அறியவில்லையோ? எனினும், தினமும் தமிழகம் நோக்கி ஈழத்தமிழர்கள் பல்வேறு அவலங்களுடன் சென்று கொண்டிருக்கின்றனர். சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வாழ முடியாத ஒரு அச்ச நிலை மக்கள் இடம்பெயர்வுக்குக் காரணமாகும். இந்த அகதிகள் இடம்பெயர்வு சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறையை பெரியளவில் செய்தியாக வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறான சூழலில் இன்னும் இந்தியா பாராமுகம் தமிழகம் மௌனமாக இருப்பது கவலைக்குரியது. தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அரசியல் ரீதியாகப் போராடினர். அது சிங்கள இனவாத அரசுகளால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட நிலையில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து இன்று உன்னத நிலையினை அடைந்துள்ளனர். சுதந்திரத் தனியரசுக்குரிய கட்டுமானங்களுடன் ஒரு நிழல் அரசு இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதனைப் பலப்படுத்தி எஞ்சிய தாயக மண்ணையும் மீட்டெடுப்பது தமிழினத்திற்கு இருக்கின்ற ஒரே வழி. அத்தகையதொரு போராட்டம் விரைவில் வெடிக்கலாம். அதற்கான காலம் அண்மித்துக் கொண்டிருக்கின்றது. அதற்கு இந்தியாவின் பரிவும், ஆதரவும் இருக்குமானால் தமிழினம் தமது இலக்கை அடைவதற்கு இலகுவாக இருக்கும். எனவே, சிங்கள இனவாதத்திற்கு உதவுகின்ற ஒத்துழைப்பு நல்குகின்ற அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்காமல் ஈழத்தமிழினத்திற்குக் குரல் கொடுக்க வேண்டும். அதுவே ஒட்டு மொத்தத் தமிழினத்தின் எதிர்பார்ப்பு. அதற்காக இனியாவது மௌனத்தை கலைத்து கலைஞர் தயாராக வேண்டும். Baati eelanatham
|
|