பிரதான பக்கம் arrow Karuna Antharangam arrow ஒஸ்லோ தோல்விக்கு காரணம் யார்?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஒஸ்லோ தோல்விக்கு காரணம் யார்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 11 June 2006

பாதுகாப்பு நிலைவரம்

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதித்த தடையின் பலாபலன் ஒஸ்லோ சந்திப்பில் உணரப்பட்டுள்ளது. இலங்கையில் சமாதான முயற்சிகளைத் தொடர இந்த சர்வதேச சமூகம் உருப்படியாக எதுவுமே செய்யாத நிலையில் யுத்தத்தை தொடங்க இவர்கள் காரணமாயிருக்கப் போவது ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை மூலம் பெரும்பாலும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.


நோர்வே தனது அனுசரணைப் பணியைத் தொடர சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தொடர்பானதென்றாலும் இதற்கு இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் வழங்கும் பதிலைப் பொறுத்தே தனது அனுசரணைப் பணியும் அமையுமெனத் தெரிவித்துள்ளது.

இதில் நோர்வே விதித்த நிபந்தனைகள் முக்கியமல்ல. ஆனால், இவ்வாறு அனுசரணையாளர்கள் நிபந்தனைகளை விதித்துத்தான் தங்கள் பணியைத் தொடர வேண்டியதொரு இறுக்கமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை சமாதான முயற்சிகளை சீர்குலைக்கத் தொடங்கியிருப்பதற்கு இது நல்லதொரு உதாரணம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தடையானது நோர்வே அனுசரணைப் பணியை மட்டுமல்லாது, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கிவிட்டது. இதன் மூலம் மிகவும் மோசமடைந்திருந்த இலங்கைப் பிரச்சினை மேலும் மோசமடையத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையில், நிழல் யுத்தம் ஆரம்பமானது. இந்த நிழல் யுத்தத்தை, ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி இராணுவ தரப்புத்தான் மேற்கொள்கிறது என்பதை அனைவரும் அறிந்திருந்தபோதும், நிழல் யுத்தத்தை நடத்துபவர்களை விடுத்து அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கே சர்வதேச சமூகம் கடும் அழுத்தம் கொடுத்ததால் நிழல் யுத்தம் மேலும் வலுவடைந்தது. மிக மோசமான வன்முறைகள் வெடித்தன.

அரசின் ஆசியுடன் படைத் தரப்பே ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி இந்த நிழல் யுத்தத்தை நடத்துவதை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் உணர்ந்து கொண்டது. புலிகளை விட இந்த நிழல் யுத்தத்தில் அப்பாவித் தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். கூட்டம் கூட்டமாகவும் தனித்தனியாகவும் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது தான் மக்கள் படை பதில் நடவடிக்கைக்கு புறப்பட்டது.

படையினர் மீது பதில் தாக்குதல் நடத்தப்பட, அப்பாவி மக்கள் மீதான படுகொலைகளை படையினர் அதிகரித்தனர். பலர் கைது செய்யப்பட்டு காணாமல் போனார்கள். பலர் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள். தேடி அழிக்கும் நடவடிக்கையுடன் வடக்கு - கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இராணுவத்தினரின் அட்டூழியங்களால் மக்கள் வகை, தொகையின்றி கொல்லப்பட்டனர்.

மோதலில் சம்பந்தப்பட்ட இரு தரப்பும் பரஸ்பரம் கொல்லப்படுவது வேறு, தங்கள் மீதான தாக்குதலுக்காக, அப்பாவிப் பொது மக்களைக் கொன்று குவிப்பது வேறு. படையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசு பெரும் பிரசாரம் செய்தபோது அதற்கு முக்கியத்துவம் கொடுத்த சர்வதேச சமூகம், அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது வாய்மூடி மௌனம் சாதித்தது.

இயல்பு வாழ்க்கையை உருவாக்குவதற்காகவே போர் நிறுத்த உடன்பாடும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் வந்ததே தவிர, இலங்கை அரசையும் படையினரையும் பாதுகாப்பதற்காக இந்த உடன்பாடோ கண்காணிப்புக் குழுவோ வரவில்லை.

இதனை உணராத சர்வதேச சமூகம் நிழல் யுத்தத்தை நடத்தி அப்பாவிகளை கொல்வோர் மீது பதில் தாக்குதல் நடத்துவதை பயங்கரவாதமென்றது. போர் நிறுத்த உடன்பாட்டுக்கமைய ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களையாத இந்த அரசு, ஜெனீவாப் பேச்சுகளின் போது உறுதியளித்தவாறாவது ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களையுமாறு சர்வதேச சமூகம் இலங்கை அரசை வற்புறுத்தவில்லை.

எனினும், ஒரு தலைப் பட்சமாக விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்த போது, இதன் விளைவுகள் குறித்து கடுமையாக எச்சரிக்கப்பட்டது. சமாதான முயற்சிகளையும் போர் நிறுத்த உடன்பாட்டையும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் எதிர்காலத்தையும் இது பாதிக்குமென தமிழர் தரப்பு மீண்டும் மீண்டும் எச்சரித்த போது, புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வர இந்தத் தடை உதவுமென ஐரோப்பிய ஒன்றியம் கூறியது. இலங்கை அரசும் இதனையே கூறியது.

இந்த நிலைமை இவ்வாறிருக்கையில் ஜெனீவாப் பேச்சுகளும் முறிந்து போய்விட்டதால் இலங்கை அரசையும், விடுதலைப் புலிகளையும் எப்படியாவது ஏதாவதொரு விடயத்திற்காக எங்காவது, சந்திக்க வைப்பதன் மூலம் அனுசரணைப் பணியில் சில முன்னேற்றங்களை மேற்கொள்ளலாமென நோர்வே கருதியதுடன் வடமராட்சி கிழக்கு கடற்சமருக்குப் பின்னர் கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதால் இதனை சாதகமாகப் பயன்படுத்தி இருதரப்பையும் ஒஸ்லோவுக்கு அழைத்து ஒரே மேசையில் சந்திக்க வைக்கும் முயற்சியை மேற்கொண்டது.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்பு மற்றும் அவர்களது எதிர்காலச் செயற்பாட்டுடன் இது சம்பந்தப்பட்டதென்பதால் விடுதலைப் புலிகள் இந்தச் சந்திப்புக்கு இணங்கினர்டன் தங்கள் மீதான தடையின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் நடுநிலையை இழந்து விட்டதால் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் மூன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நடு நிலைமையும் கேள்விக் குறியாகிவிட்டதாக கூறிவந்த புலிகள் அந்த மூன்று நாட்டையும் (சுவீடன், டென்மார்க், பின்லாந்து) கண்காணிப்புக் குழுவிலிருந்து அப்புறப்படுத்துமாறு இங்கு கேட்கவும் தீர்மானித்தனர்.

ஆனால், இந்தச் சந்திப்பில் கலந்து கொள்வதன் மூலம், விடுதலைப் புலிகளுடன் ஒரே மேசையிலிருந்து பேசிவிட்டால் - ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடை செய்தாலும் அது சமாதான முயற்சிகளையோ அல்லது பேச்சுவார்த்தைகளையோ அல்லது போர் நிறுத்த உடன்பாட்டையோ அல்லது கண்காணிப்புக் குழுவின் செயற்பாட்டையோ எவ்விதத்திலும் பாதிக்காதென தாங்களும் ஐரோப்பிய ஒன்றியமும் கூறி வந்ததை நிரூபித்துவிடலாமென்றும் ஒரே மேசையிலிருந்து பேசி விட்டால் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை காரணம் காட்டி புலிகளால் பேச்சுவார்த்தை மேசைக்கு வராதிருக்க முடியாதெனவும் இலங்கை அரசு கருதியது.

ஆனால், நடந்ததோ வேறு. இலங்கை அரசாங்க குழுவுடன் ஒரே மேசையிலிருந்து, அது எந்தவிடயமென்றாலும் பேசுவதற்கு தாங்கள் தயாரில்லை என்பதை புலிகள் முதல் நாள் ஒஸ்லோ சந்திப்பில் ஆணித்தரமாகக் கூறிவிட்டதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் மீது விதித்த தடையானது, சமாதான முயற்சிகளையும் பேச்சுவார்த்தைகளையும் போர் நிறுத்த உடன்பாட்டையும் கண்காணிப்புக் குழுவின் செயற்பாட்டையும் பெரிதும் பாதிக்குமென்பதை புலிகள் நிரூபித்துள்ளனர்.

இதைவிட இந்த ஒஸ்லோ சந்திப்பு தோல்வியடைந்ததன் மூலம் நோர்வே அனுசரணைப் பணியும் கேள்விக் குறியாகியுள்ளது. தாங்கள் எதிர்காலத்தில் அனுசரணைப் பணியைத் தொடர வேண்டுமானால் இரு தரப்பும் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமென நிபந்தனைகளை விதிக்குமளவிற்கு இன்று நோர்வேயைத் தள்ளியுள்ளதும் இந்த ஐரோப்பிய ஒன்றியத் தடைதான் என்பதை நோர்வே பெரிதும் உணர்ந்துள்ளது.

இதனால் தான் ஒஸ்லோ பேச்சுகள் தோல்வியடைவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் காரணமென அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் செய்தியாளர் மாநாட்டில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத் தடையை அடுத்து கண்காணிப்புக் குழுவில் அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகிக்கக் கூடாதென புலிகள் கூறிவிட்டதன் மூலம் கண்காணிப்புக் குழுவின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிட்டதாகவும் சொல்ஹெய்ம் சாடியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடை செய்த போது, தங்களை உலகமே கைவிட்டு விட்டது. இனித் தங்கள் மீது செல்வாக்குச் செலுத்தும் தகுதியை ஐரோப்பிய ஒன்றியம் இழந்து விட்டது, இது வரை காலமும் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்காகத் தான் பொறுமை காத்தோம். இனி அந்த அழுத்தமும் இல்லையென்பதால் எதிரியை களத்தில் சந்திப்பதற்காக போருக்கு செல்வோமெனப் புலிகள் புறப்படவில்லை.

எந்தத் தடை புலிகளைப் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருமென ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கை அரசும் நம்பியதோ அந்தத் தடைதான், பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை இல்லாது செய்து பெரும் போருக்கு வழிவகுக்கப் போகிறது என்பதை புலிகள் மட்டுமல்ல தற்போது நோர்வே அனுசரணையாளர்களும் நிரூபிக்கத் தொடங்கியுள்ளனர், தங்கள் அனுசரணைப் பணியையும் தங்கள் தலைமையிலான கண்காணிப்புப் பணியையும் தொடர்வதற்கு நோர்வே தரப்பு ஒஸ்லோவில் விதித்துள்ள நிபந்தனையாகும்.

இன்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. எல்லாமே இலங்கைப் பிரச்சினையை மையப்படுத்தியது தான். இதன் மூலம் ஏதாவது செய்து விட வேண்டுமென அவரவர் நினைத்தாலும் இதில் பலர் தங்கள் செயற்பாடுகளால் எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

புலிகளைத் தடை செய்வதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழித்து சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கச் செய்யலாமென ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது. ஆனால், இந்தத் தடை மூலம் சமாதான முயற்சிகளை இழுத்தடித்து புலிகளை இராணுவ ரீதியில் பலவீனமாக்கிவிடலாமென இலங்கை அரசு கருதுகிறது. இந்தத் தடைமிக மோசமான விளைவுகளை உருவாக்கப் போகின்றதென்றாலும் ஒஸ்லோவில் இரு தரப்பையும் ஒரே மேசையில் அமர்த்தி தொடர்ந்தும் தங்கள் முயற்சியை முன்னெடுத்துச் சென்றுவிடலாமென நோர்வே கருதுகிறது. இந்தத் தடை ஒரு தலைப்பட்சமானதும் நியாயமற்றதுமென்பதால் இனிமேல் சமாதான முயற்சிகளுக்கு வாய்ப்பளிப்பது தற்கொலைக்குச் சமனானதென்பதால் விடுதலைப் போராட்டத்தை மீண்டும் முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லையெனப் புலிகள் கருதுகின்றனர்.

இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்கு பொய் கூறிய போதெல்லாம் அதனை முறியடித்து உண்மை நிலையை நோர்வே கூறியிருக்கவேண்டும். போர் நிறுத்த உடன்பாட்டை கண்காணிக்க வந்த கண்காணிப்புக் குழுவோ, யுத்த நிறுத்த மீறல்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டதே தவிர, நிழல் யுத்தம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தப் போவதை எச்சரிக்கத் தவறியதுடன் இது குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு உண்மை நிலையையும் கொண்டு வர வில்லை.

ஒஸ்லோவில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான சந்திப்பில், அரச தரப்புடன் ஒரே மேசையிலிருந்து பேச புலிகள் மறுத்து விட்டதாக இலங்கை அரசு உலகெங்கும் பிரசாரம் செய்த போது யாழ்ப்பாணத்தில் மனிதப் புதைகுழி தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது.

புலிகள் போர் நிறுத்த உடன்பாட்டை மதிக்கிறார்களா, கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கிறார்களா என நோர்வே அனுசரணையாளர்கள் நிபந்தனை விதித்த போது மன்னாரில் ஒரு தமிழ் குடும்பம் மிகக் கோரமாகக் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

விடுதலைப் புலிகள் ஒஸ்லோ சந்திப்புக்குச் செல்வதற்காக கொழும்பு வந்த போது, புலிகளின் தலைவர்கள் பயங்கரவாதத்தை தாங்கள் வரும் போதே கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு கொண்டு வந்துள்ளதாக மிக மோசமாக சர்வதேசமெங்கும் பிரசாரப்படுத்தும் விதத்தில் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் (வெலிசறை) கிளேமோர் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது.

இதைவிட வன்னிக்குள்ளும் மட்டக்களப்பில் புலிகளின் பகுதிக்குள்ளும் ஆழ ஊடுருவும் படையணி ஊடுருவி அடுத்தடுத்து பொது மக்கள் மீது தாக்குதலை நடத்தி பலரைக் கொன்றதெல்லாம், புலிகளை ஆத்திரமூட்டி புலிகளின் தலைவர்கள் ஒஸ்லோவில் நிற்கையில் புலிகள் இங்கு ஏதாவது கடுமையான பதில் தாக்குதலை நடத்தி வைக்க வேண்டுமென்பதற்காகவும் இதன் மூலம் அவர்களுக்கெதிராக பெரும் பிரசாரமொன்றை கட்டவிழ்த்து விடவும் தான் திட்டமிடப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடை செய்த போது, உடனடியாகவே புலிகள் யுத்தத்தில் குதிப்பரெனவும் அதனைப் பயன்படுத்தி புலிகளுக்கெதிரான போரில் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பயன்படுத்தலாமெனவும் இலங்கை அரசு கருதியது. அதேநேரம், புலிகளும் யுத்தத்தில் குதித்திருந்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விடுதலைப் புலிகள் விடுத்த நேரடிச் சவாலாயிருந்திருக்குமென்பதுடன் புலிகள் தடை செய்யப்பட வேண்டியதொரு அமைப்புத் தான் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் சிந்திக்க வைத்திருக்கும்.

ஆனால், இதுவரை காலமும் இலங்கை அரசுடன் யுத்தத்தை நடத்தி வந்த புலிகள் இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையானது ஏற்படுத்தப் போகும் எதிர்விளைவுகளை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுவதற்காக புலிகளின்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் ராஜதந்திர யுத்தத்தை ஆரம்பித்துள்ளதாகவே கருதப்படுகிறது.

புலிகள் மீது தாங்கள் விதித்த தடையானது போர் நிறுத்த உடன்பாட்டையும் கண்காணிப்புக் குழுவின் செயற்பாட்டையும் சமாதான முயற்சிகளையும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பையும் மட்டுமல்லாது நோர்வேயின் அனுசரணையையும் கேள்விக் குறியாக்கியுள்ளதை ஐரோப்பிய ஒன்றியம் உணர வேண்டும். ஒஸ்லோ சந்திப்பில் ஏற்பட்ட தோல்வி இதைத் தான் உணர்த்துகிறது.

ஆனால், அதைக் கூட பெரும் பிரசாரமாக்கி புலிகளுக்கெதிராக மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தச் செய்யக் கூடியதொரு வாய்ப்பாக்கி விட வேண்டுமென்பதில் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவது தான் இங்கு வேடிக்கையானது.


விதுரன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..