|
யூன் 8 ஆம், 9 ஆம் திகதிகளில் ஒஸ்லோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான சந்திப்புத் திட்டமிட்டவாறு நடைபெறாது தோல்வியில் முடிவடைந்ததாயினும், விடுதலைப் புலிகளைப் பொறுத்து ஒஸ்லோப் பயணம் ஒரு வகையில் நன்மை அளித்துள்ளது என்றே கூறலாம். வேறு விதத்தில் கூறுவதானால் விடுதலைப் புலிகளுக்கு தமது நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தச் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது எனலாம்.
ஒஸ்லோச் சந்திப்பிற்குச் சென்ற விடுதலைப் புலிகள் சில விடயங்களை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கும், சமாதானப பேச்சுவார்த்தைக்கான அனுசரணையாளர்களுக்கும், ஏன் சர்வதேச சமூகத்திற்கும் தெளிவுபடக் கூறியுள்ளனர். இவை அனுசரணையாளர் முன்னிலையில் கண்காணிப்பாளருடன் நடந்த சந்திப்பின் போதும், ஒஸ்லோவில் 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட விரிவான அறிக்கை ஒன்றின் மூலமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் முக்கிய விடயங்களில் ஒன்றாகக் கடலில் விடுதலைப் புலிகளுக்கு உள்ள உரிமை தொடர்பாக கண்காணிப்புக்குழுத் தலைவர் கொண்டிருந்த நிலைப்பாடு விடுதலைப் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பது. அதாவது கடலில் சிறிலங்கா அரசிற்கே அனைத்து உரிமைகளும் உண்டு என்ற கண்காணிப்புக் குழுத்தலைவரின் கருத்தினை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பது. கண்காணிப்புக்குழு கடலில் புலிகளுக்கு உரிமையில்லை என்ற நிலைப்பாட்டையே வலியுறுத்துமானால் போர்நிறுத்த உடன்பாடே கேள்விக்குள்ளாகும் என எச்சரிக்கும் வகையில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு உறுதியானதாக இருந்தது. இதைத் தொடர்ந்து, ஏற்றுக்கொள்ளத்தக்கதான முடிவொன்றிக்குக் கண்காணிப்புக் குழுத்தலைவரும் அனுசரணையாளர்களும் வந்துள்ளனர். இதன் பிரகாரம் கடல் தொடர்பாக பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தீர்வு ஒன்றைக் காண்பதென உறுதி கூறப்பட்டது. அடுத்தாக ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை தடைசெய்துள்ளமையால், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதினை விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ளத் தயாராகவில்லை என்பது. அதாவது விடுதலைப் புலிகளைத் தடைசெய்துள்ள, தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டம் தொடர்பாக நீதியான நடுநிலைமையுடனான நிலைப்பாட்டை மேற்கொள்ளாத நாடுகளின் பிரதிநிதிகள்ஃ பிரஜைகளிடமிருந்து நீதியான முடிவுகள் கிடைக்கப் பெறாது என்பதன் அடிப்படையில் இம் மறுப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் விடுதலைப் புலிகள் பக்கச்சார்பான, அரசியல், பொருளாதார, இராணுவ அனுகூலங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளும் நாடுகள், அதன் பிரதிநிதிகள் எவரையும் அனுசரணையாளர்களாகவோ அன்றிக் கண்காணிப்பாளராகவோ ஏற்றுக் கொள்வதில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளனர். இவ்விடயத்தை அனுசரணையாளர்கள் விரும்பியோ விரும்பாமலோ கருத்திற்கொள்ள வேண்டியதாகவுள்ளது. உடனடியாக இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது சிரமமான ஒன்றெனக் கூறி ஒருகால அவகாசத்தின் அடிப்படையில், இதனைப் பரிசீலிப்பதற்கு அனுசரணையாளர்கள் சம்மதம் கோரியுள்ளனர். இவ்விரண்டு விடயங்களிலும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு ஒருபுறம் இருக்க ஒஸ்லோச் சந்திப்புத் தொடர்பாக விடுதலைப் புலிகள் வெளிப்படுத்திய உறுதியான நிலைப்பாடானது விடுதலைப் புலிகளின் மீது அழுத்தங்களை எவரும் பிரயோகித்துத் தமது நோக்கத்திற்கு இசைவாக்கம் செய்துவிடமுடியாது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது. எடுத்துக்காட்டாகச் சிறிலங்கா அரச பிரதிநிதிகளுடன் ஒரே மேசையில் விடுதலைப் புலிகளை அமரச் செய்ய மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்ததைச் சுட்டிக்காட்ட முடியும். ஒருபுறத்தில் அரசாங்கத்தரப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகள் கலந்து கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர். அதேபோன்றே சந்திப்புகள் இடம்பெறினும் கூட சம அந்தஸ்து, சமதரப்பு என்பதன் அடிப்படையில் பேச்சுக்குத் தயாராக இருந்தனரேயொழியத் தமது நிலையைத் தாழ்த்திக்கொண்டு போக புலிகள் தயாராக இல்லையென்பதையும் உறுதிபட வெளிப்படுத்தியிருந்தனர். இவற்றிற்கும் அப்பால் இந்த நான்கரையான்டு யுத்த நிறுத்தகாலத்தில் விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளுக்காக மேற்கொண்ட விட்டுக்கொடுப்புக்கள், இக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் சந்தித்த பாரிய இழப்புக்கள் யாவற்றையும் பட்டியல் இட்டதாக வெளியிடப்பட்ட அறிக்கையானது முக்கியம் வாய்ந்ததாகும். அதாவது சர்வதேசத்திற்குப் புலிகள் தமது நிலைப்பாட்டினை எடுத்துக் கூறுவதாக அது அமைந்திருந்தது. அத்தோடு இவ் அறிக்கையானது களயதார்த்தம், விடுதலைப் புலிகள் ஒரு அரசை உருவாக்குவதற்காக மேற்கொன்டதான கட்டுமானப்பணி, அவற்றின் வளர்ச்சி என்பவற்றையும் வெளிப்படுத்தியிருந்தது. இதன் மூலம் தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டம் அவர்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கானது. ஆகையால் சமநீதியுடன் கூடியதான தீர்வொன்று ஏற்படாத நிலையில் சாத்தியப்பாடற்றது என்பதையும் புலிகள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். நன்றி: ஈழநாதம் நெருடல் இணையம்
|