|
|
|
சிங்களத்தின் இரட்டை போலித்தனம் |
|
|
|
Tuesday, 13 June 2006 |
|
சமாதானம் எனக் கூறிக் கொண்டு சிறிலங்கா அரசு சர்வதேச சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அதனை பிரதிபலித்து காட்டுகின்றன. தமிழர்கள் மீது தற்போது ஏவிவிடப்பட்டுள்ள இன அழிப்பு நடவடிக்கைகள், திட்டமிடப்பட்ட நெருக்கடி சூழல் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு முரணான சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நோக்குகின்ற போது இது தெளிவாகின்றது.
போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது தமிழ் மக்கள் இதுவரை காலமும் அனுபவித்த போர் நெருக்கடி நிலைகுள்ளிருந்து விடுபட்டு இயல்பு நிலையை தோற்றுவிக்;கும் என்ற எண்ணங்கள் வலுவூன்றியிருந்தன. ஆனால், காலப் போக்கில் மெல்ல மெல்ல போர் நிறுத்த உடன்பாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அரச தரப்பு மேற்கொண்டது. அதனை ஆரம்பத்தில் கட்டுப்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத சிறிலங்கா அரசு தற்போது முழு அளவில் அதனை மீறி நிற்கிறது.சர்வதேச சமூகம் நடுநிலைமையுடன் நின்றிருந்தால் சிறிலங்கா சதி அரசின் கரங்கள் எல்லை மீறிச் செல்லாமல் ஓரளவாவது கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் அவை எல்லை மீறி விட்டன. இதற்குக் காரணம் சர்வதேச சமூகத்தின் பக்கச் சார்பான பார்வையாகும். ஜெனீவாப் பேச்சுக்கள் கூட சமாதான வழிமுறைகளை ஓரளவு கொண்டு வருவதற்கான சூழலை உருவாக்கக் கூடிய நிலை காணப்பட்ட போதும் அரச தரப்பு ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களைக் களையாது தமிழ் மக்கள் மீதான அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் எதிரொலி தான் போர் நிறுத்தம் காலாவதியாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இன்றுள்ள நிலவரங்களை அவதானிக்கின்ற போது சிங்களப் பேரினவாதம் தமிழினம் மீது மிகப் பெரியதொரு போர் திணிப்புக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறது. சமாதானம் என்ற போலி வார்த்தைகளையும், போலி நகர்வுகளையும் மகிந்தர் கையாண்டு கொண்டு தமிழ் மக்களைக் கொன்றழிக்கின்ற ஒரு இன அழிப்பை மேற்கொள்ள முயலுகின்ற நிலையில் அதனை தமிழ் மக்கள் எதிர் கொண்டேயாக வேண்டிய கடப்பாடு உள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தேசிய கடமையாக உணரத் தலைப்பட்டுள்ளனர். தற்போது கூட சர்வதேச சமூகம் இருதரப்பும் யுத்தத்திற்குப் போக வேண்டாம் என்ற எச்சரிக்கைகளையும் விடும் அதே வேளை தமிழ் மக்களுக்கான அழுத்தத்தை மாத்திரம் பிரயோகிப்பது முரண்பாடானது. அதே அழுத்தம், கண்டனம் சிறிலங்கா அரசாங்கம் மீதும் திணிக்கப்படுமானால் சிங்கள அரசின் வன்முறைக் கலாசாரம் இவ்வளவு தூரம் விளைந்திருக்கமாட்டாது. அதேநேரம் தமிழ் மக்களின் விடுதலை உணர்வையும் விடுதலை இருப்பையும், விடுதலையின் பெறுமானத்தையும் சர்வதேச சமூகம் சரியான அளவுகோலினால் அளந்து கருத்துக்களை தெரிவிக்க முனைய வேண்டும். மாறாக தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக அல்லது வன்முறை போராட்டமாக நோக்குவது கவலையூட்டக் கூடியது. சமகாலத்தில் சிறிலங்கா அரச படைகளும் அரச படைகளுடன் சேர்ந்தியங்குகின்ற ஆயுதக் குழுக்களாலும் அப்பாவிப் பொதுமக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்தப் படுகொலைகளை கட்டுப்படுத்துவதற்கான எந்த அழுத்தமும் சிறிலங்கா அரசு மீது திணிக்கப்படவில்லை என்பது யதார்த்தம். அனுசரணையாளர்கள் தொடக்கம் ஐ.நா சபை வரை சிங்கள அரசின் வன்முறைகள் குறித்து மௌனித்திருப்பதும் சிங்கள அரசு தெரிவிக்கின்ற நீதி நியாயங்களை மட்டும் நம்புவதும் துரதிஸ்டவசமானது தமிழர் தாயகப் பகுதிக்கு சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் வந்து நிலைமைகளைக் கேட்டறிந்தால் யார் வன்முறையாளர்கள் யார் படுகொலைகளின் சூத்திர தாரிகள் என்பதை மெய்யாக அறிய முடியும். எனவே, கொழும்பு அரசியலில் போலியான சமாதான காய் நகர்த்தல்களை இனியாவது சர்வதேச சமூகம் பொய்யானது, போலியானது என அறிந்து உணர்வதுடன் வடக்குக் கிழக்கு கள நிலவரங்களின் யதார்த்தத்தை, மக்கள் படும் அவலங்களை நேரடியாக வந்தால் புரிந்து கொள்ள வாய்பேற்படும். எனவே, இரட்டை வேடம் போடும் சிங்களத்தின் நயவஞ்சகத் தோற்றப்பாட்டை இனியாவது சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும். Battieelanatham
|
|