|
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழ் நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் தி.மு.க. வின் நிலைப்பாடு தொடக்க காலத்தில் இருந்து இதுவரையில் தமிழ் இன உணர்வு, மனித நேயம் இவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இருந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டுகூட சட்டசபையில் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து அ.தி.மு.க., அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை மக்கள் மறந்திருப்பர் என்று எண்ணிக் கொண்டு, தி.மு.க., மீது ஏதாவது பழி போட வேண்டுமென்று திட்டமிட்டு திருட்டுத்தனமாக துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு விசமப் பிரசாரம் செய்யப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக ஓடிவருவது கண்டு, மனமொடிந்து, மாநில அரசு மத்திய அரசு அளவில் அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும், அங்கே தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமான பலனைக் கொடுக்க வேண்டுமென்ற விழைவினை வெளிப்படுத்தியுள்ளோம். இலங்கையிலும் சரி, இங்கே தமிழகத்திலும் சரி, எந்த வகையிலும் வன்முறை தலை தூக்காமல் இருப்பதற்கான வழி காண வேண்டுமென்ற தவிப்புடன் தி.மு.க., விளங்குகிறது. மத்திய அரசுடன் தொடர்பு கொண்டும், ஒத்த கருத்துடைய தோழமைக் கட்சிகளின் துணையுடனும் இலங்கைத் தமிழர் பிரச்னை சுமூகமாக முடிவடைய செயல்படுமே அல்லாமல், குறுக்கு வழி, கோணல் வழி எதுவும் தேடாது என்பதை திட்டவட்டமாகத் தெளிவுபடுத்துகிறேன் என்று கருணாநிதி அதில் தெரிவித்துள்ளார். நெருடல் இணையம்
|