|
இலங்கையின் இதுவரைகால யுத்த வரலாற்றில் அப்பாவிப் பொது மக்கள் இலக்கு வைக் கப்படுவது அதிகரித்து வருகிறது. ஏதுமறியாத மக்களை கொன்று குவிப்பதன் மூலம் எவற் றையாவது சாதித்து விடலாமென இவர்கள் கருதுவதால் அப்பாவிகளின் படுகொலைகள் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட அநுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் 64 பஸ் பயணிகள் கிளேமோர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் சிறுவர்களுமாவர். ஏன் கொல்லப்படுகின்றோம் என்பது தெரியாது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களில் இவர்களும் அடங்குவர். யுத்தம் ஆரம்பித்த காலம் முதல் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். வடக்கு - கிழக்கில் வாழ்ந்த ஒரே குற்றத்திற்காகவே இந்த மக்கள் இவ்வாறு பாரிய அழிவுகளைச் சந்தித்து வருகின்றனர். அதேநேரம், அவ்வப்போது வடக்கு - கிழக்கிற்கு வெளியே அல்லது எல்லைப் புறங்களில் இடம்பெறும் சம்பவங்களில் ஏனைய இனத்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். கெப்பிட்டிக்கொல்லாவயிலும் இவ்வாறே அப்பாவி மக்கள் கொலையுண்டுள்ளனர். இவர்களது கொலை கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ள அதேநேரம் இந்தக் கொலைக்கு விடுதலைப்புலிகளே காரணமெனக் கூறி கடந்த இரு நாட்களாக வடக்கு - கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விமானக் குண்டுவீச்சுகளும் பல் குழல் ரொக்கட் தாக்குதலும் ஆட்லறி ஷெல் தாக்குதலும் இடம்பெற்று வருகிறது. இலங்கையைப் பொறுத்தவரை யுத்த காலத்திலோ அல்லது போர்நிறுத்த காலத்திலோ தமிழ் மக்கள் எவராவது கொல்லப்பட்டால், கொல்லப்பட்டவர் ஒன்றில் புலியெனவும் அல்லது புலிகளாலேயே அவர் கொல்லப்பட்டதாகவும் அரசும் இராணுவமும் மிகச் சுலபமாகக் கூறி அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றன. அதேநேரம், வேறு இனத்தவர்கள் எவராவது கொல்லப்பட்டால் அதனைப் புலிகளே செய்தார்களெனவும் எந்தவித விசாரணையுமின்றி கூறிவிடுகின்றனர். இவ்வாறு, தமிழர்கள் கொல்லப்படும் போது, ஒன்றில் அவர் புலி அல்லது புலியால் தான் கொல்லப்பட்டாரெனக் கூறி புலி எதிர்ப்பு பிரசாரம் செய்யப்படும் அதேநேரம் வேறு இனத்தவர்கள் கொல்லப்படும் போது அதற்கும் புலிகள் மீது பழியை சுமத்தி தமிழினத்திற்கு எதிரான துவேஷம் தூண்டிவிடப்படுகிறது. இது இன்று, நேற்று அல்ல கடந்த 25 வருடகால யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரும் பிரசாரமும் இதுவாகும். இதன்மூலம் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டதை, நியாயப்படுத்த முயல்கின்றனர் அல்லது அதற்கு சிங்களப் படைகள் காரணமல்ல எனக் கூறவும் முயல்கின்றனர். கெப்பிட்டிக்கொல்லாவவில் கொல்லப்பட்ட சிங்கள மக்கள் ஏதுமறியாத அப்பாவிகள். இவர்கள் பழிவாங்கப்படுவதற்காக கொல்லப்பட்டவர்களா அல்லது எவர் மீதாவது பழிசுமத்தப்படுவதற்காக கொல்லப்பட்டார்களா என்ற கேள்வியை அனைவரும் எழுப்புகின்றனர். ஏனெனில், இந்தச் சம்பவம் நடைபெற்ற சில மணிநேரத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது அவசர அவசரமாக முப்படையினரும் மேற்கொண்ட தாக்குதல்கள் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளன. நாட்டில் தற்போது, அங்கீகரிக்கப்பட்ட போர்நிறுத்தம் அமுலிலிருக்கையில் அங்கீகரிக்கப்படாத யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த யுத்தநிறுத்த காலத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் படையினராலும் துணைப்படையினராலும் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுவாசல்களை விட்டு வெளியேறி அயல் நாட்டுக்கு தப்பியோடிக் கொண்டிருக்கின்றனர். போர்நிறுத்த காலத்தில் இந்த உடன்பாட்டை சாதகமாகப் பயன்படுத்தி நிழல் யுத்தத்தை ஆரம்பித்து இன்று பெரும் போருக்கு வழி வகுத்தவர்களை உலகம் அறிய வேண்டும். அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் போது, அது சிங்களவர்களாயிருந்தால் ஒரு விதமாகவும், தமிழர்களாயிருந்தால் இன்னொரு விதமாகவும் காரணம் கற்பிக்கப்படுவதால் படுகொலைகள் தொடர்கின்றனவே தவிர அவை நிறுத்தப்பட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்களுக்கெதிராக தமிழ் குழுக்களைப் பயன்படுத்தி அரசும் இராணுவமும் நிழல் யுத்தத்தை ஆரம்பித்த போது அதன் விளைவுகள் குறித்து புலிகள் கடுமையாக எச்சரித்து வந்தனர். ஆனால், நிழல் யுத்தத்தின் வேகம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து இன்று பெரும் போராக மாற்றமடைந்துகொண்டிருக்கிறது. இந்த நிழல்யுத்தத்தையும் பெரும் போரையும் வடக்கு - கிழக்கிற்குள் மட்டுப்படுத்திவிடவேண்டுமென சிங்களவர்கள் கருதுகின்றனர். தெற்கிலிருந்து செல்லும் படைகள் வடக்கு - கிழக்கில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் போது அதனைப் பயங்கரவாதிகளுக்கெதிரான போர் எனக் கூறுவோர், வன்முறைகள் வடக்கு - கிழக்கையும் தாண்டி தெற்கே வரும்போது, பயங்கரவாதம் தெற்கிலும் பரவிவிட்டதாக கூறுகின்றனர். கெப்பிட்டிக்கொல்லாவவில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதை அனைவரும் கண்டிக்க வேண்டும். வடக்கு - கிழக்கில் தினமும் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை கண்டும் காணாமலுமிருப்பவர்கள் கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனாலும், இதன் சூத்திரதாரிகள் புலிகளெனக் குற்றஞ்சாட்டப்பட்டாலும் இதன் பின்னணியிலிருந்தவர்கள் யாரெனக் கண்டறிய உடனடி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இன்று வடக்கு - கிழக்கில் மிகச் சர்வசாதாரணமாக கிளேமோர் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. படையினர் மீது புலிகளும், புலிகள் மீது படையினரும் ஆயுதக் குழுக்களும் தாக்குதல்களை நடத்துவதுடன் அப்பாவிப் பொதுமக்கள் மீதும் படையினரும் ஆயுதக் குழுக்களும் கிளேமோர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அண்மைக் காலமாக தினமும் மூன்று அல்லது நான்கு என்ற ரீதியில் இந்த கிளேமோர் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இதனால், கிளேமோர் தாக்குதல்களை நடத்துபவர்கள் யார்? எவரிடமெல்லாம் கிளேமோர்கள் இருக்கின்றனவெனக் கேள்வியெழுப்பினால் அதற்கான விடையை அனைவரும் மிகச் சுலபமாகக் கூறுவர். அதில், புலிகள், படையினர், ஆயுதக் குழுக்கள் முழுமையாக அடங்குவர். விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குள் அண்மைக் காலமாக தொடரும் கிளேமோர் தாக்குதல்களில் புலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட 25 இக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அப்பாவிப் பொதுமக்களென நன்கு தெரிந்தும் அவர்கள் மீது மிகக் கொடூரமாக கிளேமோர் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி நடத்தியுள்ளது. புலிகள் மீது தானென்றில்லை அப்பாவிப் பொதுமக்கள் மீதும் அடுத்தடுத்து கிளேமோர் தாக்குதலை நடத்துவதன் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பெரும் குழப்பங்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். புலிகளின் பகுதிக்குள் புலிகளால் மட்டுமல்ல சாதாரண பொதுமக்களாலும் நடமாட முடியாததொரு நிலை ஏற்பட்டுள்ளதென்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கிலேயே ஆழ ஊடுருவும் படையணி இந்தத் தாக்குதலை அடுத்தடுத்து நடத்தி வருகிறது. ஆனால், இதுபற்றி தமிழ் ஊடகங்களில் மட்டுமே தினமும் செய்திகள் வெளியாகின. அரச ஊடகங்களோ சிங்கள ஆங்கில ஊடகங்களோ இவை குறித்து மூச்சே விடுவதில்லை. சிங்கள மக்களுக்கு, ஆழ ஊடுருவும் படையணி புலிகளின் பகுதிகளில் என்ன செய்கின்றது என்பது முழுமையாக மறைக்கப்படுகிறது. கருணா குழுவே புலிகளுக்கெதிரான தாக்குதலை மேற்கொள்வதாகவும் இன்று கருணா குழு புலிகளைப் போன்று பலம்மிக்கதொரு இராணுவ அமைப்பாகிவிட்டதென்பது போல் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்தவே இந்த ஊடகங்களும் முயல்கின்றன. விடுதலைப்புலிகளின் பகுதிகளுக்குள் கிளேமோர் தாக்குதல்களை கருணா குழுவே நடத்துகின்றதென்று அரசும், படைத்தரப்பும் கூறுவதால் கருணா குழுவிடமும் ஏனைய தமிழ்க் குழுக்களிடமும் கிளேமோர்களிருப்பதை அரசும் படைத் தரப்பும் உறுதிப்படுத்துகின்றன. இதேநேரம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கிளேமோர் தாக்குதல்களை நடத்த முற்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்ட இரு இராணுவத்தினரின் சடலங்களை படையினர் பெற்றுக் கொண்ட மூலம், புலிகளின் பகுதிக்குள் இதுவரை நாட்களும் படையினரே கிளேமோர் தாக்குதலை நடத்தியதை படைத்தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் வடக்கு - கிழக்கில் படையினரும், தமிழ்க் குழுக்களும் கிளேமோர் தாக்குதல்களை நடத்தி வருவதை அரசும் படைத்தரப்பும் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளன. அதேநேரம், கருணா குழுவும் ஏனைய தமிழ்க் குழுக்களும் புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் மட்டுந்தான் இவ்வாறான தாக்குதல்களை நடத்துவார்களெனவும் சிங்களவர் மீது ஒருபோதும் தாக்குதல்களை நடத்தவே மாட்டார்களென்றும் ஏதாவது சட்டமுள்ளதா? கெப்பிட்டிக்கொல்லாவவிலும் பயணிகள் பஸ் மீது கிளேமோர் தாக்குதலே நடத்தப்பட்டுள்ளது. இதனை எவர் செய்தாலும் அது மிக மிகக் கொடூரமானது. ஆனால், புலிகள் தான் இதனைச் செய்தார்களென அடுத்த நிமிடமே கூறி அவர்களின் பகுதிகளில் இரு நாட்களுக்கும் மேலாக விமானக் குண்டுத் தாக்குதலையும், பல்குழல் ரொக்கட் மற்றும் ஆட்லறி ஷெல் தாக்குதலையும் நடத்தி வருவதுதான் பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது. புலிகளின் பகுதிகள் மீது இவ்வாறானதொரு தொடர் தாக்குதலுக்கான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தார்களா அல்லது இதற்காக சந்தர்ப்பமொன்று உருவாக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழும்புகிறது. ஏனெனில் கிளிநொச்சியில் `கிபிர்' விமானங்கள் விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதை மீதும், இணைமடு முல்லைத்தீவில் (சாலை) புலிகளின் கடற்படைத் தளம் மீதும் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், மூதூர் கிழக்கில் புலிகளின் பல முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகள் மீதுமே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அரசும் படைத் தரப்பும் கூறுகின்றன. பாரிய யுத்தம் எவ்வேளையிலும் வெடிக்கலாமென்றதொரு நிலையிலேயே கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தை சாதகமாகப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பெரும் யுத்தமொன்று வெடித்தால் அதில் இம்முறை புலிகளின் தரைப்படைகளை விட புலிகளின் விமானப்படையும், கடற்புலிப் படையுமே மிக முக்கிய பங்கு வகிக்குமென்பதாலும் புலிகள் இவற்றை தயார்நிலையில் வைத்திருப்பார்களென்பதாலும் இதனை சாட்டாக வைத்து முந்திச் செயற்பட்டு புலிகளின் நிலைகளைத் தாக்குவதும் திட்டமாயிருந்திருக்கலாம். திருகோணமலைத் துறைமுகம் மற்றும் கடற்படைத் தளத்தின் பாதுகாப்புக்கு மூதூர் கிழக்குப் பகுதி தொடர்ந்தும் அச்சுறுத்தலாயிருப்பதால், எங்கு என்ன நடந்தாலும் அங்கு உடனடியாக படைத் தரப்பு தாக்குதலை நடத்துவது இன்று வழமையாகிவிட்டது. இதனால் எதிர்பார்க்கப்படும் யுத்தத்திற்கான முன்னோடி நடவடிக்கையாகவே கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்திற்குப் பின்னரான தாக்குதல் அமைந்துள்ளது. இதேநேரம், போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையிலும், கண்காணிப்புக் குழு தொடர்ந்தும் செயற்படுகையிலும் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையெனக் கூறி இரு நாட்களாக முப்படையினரும் மேற்கொண்ட தாக்குதலானது யுத்தத்திற்கானதொரு அழைப்பாகவே புலிகள் கருதுகின்றனர். போர்நிறுத்த உடன்பாட்டில் இராணுவ நடவடிக்கைக்கோ அல்லது மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கோ இடமில்லை. ஆனால், அண்மைக் காலத்தில் மூன்று தடவைகள் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையெனக் கூறி முப்படையினரும் புலிகளின் பகுதிகளில் பாரிய தாக்குதல்களை நடத்தியபோதும் கண்காணிப்புக் குழு மௌனம் சாதிக்கின்றது. இவற்றை அப்பட்டமான போர்நிறுத்த மீறலென கண்காணிப்புக் குழு அறிவிக்காததன் மூலம் புலிகளும் பதில் தாக்குதலை நடத்த முடியுமென கண்காணிப்புக் குழு கருதுகின்றதோ தெரியவில்லை. கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாரென்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால், அந்தத் தாக்குதலுக்கான பதில் தாக்குதல்தான் விமானத் தாக்குதலென நியாயப்படுத்தினால், தமிழ் மக்கள் மீது படையினர் நடத்திய பல படுகொலைகளுக்காக படைமுகாம்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்திவிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட முகாம்கள் மீதான மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையென புலிகளும் கூறலாமல்லவா? இந்த மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையும் இராணுவத்தினர் மட்டுமே நடத்தலாமென மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதா அல்லது இது புலிகளுக்கும் பொருந்துமா என்ற கேள்வியும் எழுகிறது. படையினரின் அண்மைக்கால தாக்குதல்கள் அப்பட்டமாக அப்பாவிப் பொதுமக்களை இலக்காகக் கொண்டவை. திருமலை முதல் யாழ்ப்பாணம் வரை கூட்டம் கூட்டமாக 300 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதன் போதெல்லாம் மௌனம் சாதித்து, கொல்லப்பட்டவர்கள் புலிகளா? அல்லது புலிகளால் தான் கொல்லப்பட்டார்களா? என விவாதம் நடத்தியது. இந்த நிலையிலேயே கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலை நடைபெற்றுள்ளது. எவர் இதைச் செய்திருந்தாலும் கொலையுண்டது அப்பாவிகளே என்பதால் இனியாவது இந்தக் கொலைகளைத் தடுக்க அனைவரும் முன்வரவேண்டும்.
விதுரன்
|