|
போர்நிறுத்த உடன்பாட்டை ஆட்டங்காண செய்யும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு
நாட்டில் சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்புகள் ஒவ்வொன் றும் தோல்வியடைந்துவரும் நிலையில் பாரிய யுத்தத்திற்கான சூழ்நிலை அதிகரித்து வருகின்றது. தாக்குதல்கள் மற்றும் தாக்குதல்களுக்கான முன்னேற்பாடுகள் என்பன, நாடு முழு அளவிலான யுத்தமொன்றை நோக்கி விரைவாக நகர்ந்து வருவதைக் காட்டுகிறது.
நிழல் யுத்தம் தீவிரமடைந்து படுகொலைகள் பெருமளவில் அதிகரித்து தீர்வுக்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும் சூழலில், ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலைப் புலிகளைத் தடைசெய்து சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பே முற்றாக இல்லாது செய்து யுத்தத்திற்கான சூழ்நிலையை தோற்றுவித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை எதிர்மாறான விளைவுகளை மட்டுமல்லாது மிக மோசமானதொரு யுத்த சூழ்நிலையை தோற்றுவிக்குமென கடுமையாக எச்சரிக்கப்பட்டு வந்தபோதும் ஐரோப்பிய ஒன்றியம் அதனைப் பொருட்படுத்தவில்லை. தற்போதைய போர் நிறுத்த உடன்பாடும் சமாதான முயற்சிகளும் இரு தரப்பினதும் சமபல நிலையில் உருவானதென்பதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தடையானது சமபடை பல நிலையை மட்டுமல்லாது சம அரசியல் பல நிலையையும் வெகுவாகப் பாதிக்குமெனச் சுட்டிக் காட்டப்பட்டது. இவ்வாறானதொரு பாதிப்பு ஏற்படுமானால், அது போர் நிறுத்தக் கண்காணிப்பில் பாதிப்பை ஏற்படுத்த அந்தப் பாதிப்பு போர் நிறுத்த உடன்பாட்டை பாதிக்க அது முழு அளவிலான யுத்த நிலைமையைத் தோற்றுவிக்கும் வாய்ப்பை அப்பட்டமாகத் தூண்டி விடுமெனவும் எச்சரிக்கப்பட்டது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் இதனைப் பொருட்படுத்தவில்லை. மாறாக, இந்தத் தடையானது புலிகளை உடனடியாகப் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவருமெனவும் இதன் மூலம் சமாதான முயற்சிகள் வலுப்படுமெனவும் கூறியதுடன், பொருத்தமற்றதொரு நேரத்தில் தாங்கள் ஒரு தரப்பின் மீது மேற்கொள்ளும் கடும் அழுத்தம் மற்றத் தரப்புக்கு வாய்ப்பாகி விடுமென்பதையும் உணரவில்லை. தாக்குதலுக்கு பதில் தாக்குதல், மற்றொருத் தாக்குதலுக்கான முன்னேற்பாடுகளென களச்சூழ்நிலை மோசமடைந்து வந்தபோதும் ஜெனீவாப் பேச்சுக்களில், போர் நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்தி ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைவதாகக் கூறி அதனைச் செய்யாது ஆயுதக் குழுக்களின் செயற்பாட்டை அரசும் படைத்தரப்பும் தூண்டி வருவது நிரூபிக்கப்பட்ட நிலையிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை அமுலுக்கு வந்தது. இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைப் பிரச்சினையில் தனது நடு நிலைமையே இழந்து ஒரு பக்கம் சார்ந்துவிடவே இதன் முதல் தாக்கம் ஒஸ்லோ சந்திப்பில் உணரப்பட்டது. போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அதிலிருந்து வெளியேற்றுமாறு கூறிய புலிகள் அதற்கான கால அவகாசத்தையும் வழங்க நிலைமையின் தீவிரம் உணரப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே கண்காணிப்புக் குழுவில் அதிகளவில் இருப்பதால் அவர்களை வெளியேற்றுவதன் மூலம் கண்காணிப்புப் பணிகள் முழுமையாக ஸ்தம்பிதமடைவதுடன் அது போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வரவும் காரணமாகிவிடலாமென நோர்வே அனுசரணையாளர்களும் இலங்கை அரசும் கூறிவருகின்றன. தங்கள் நாடுகளின் பிரதிநிதிகளை கண்காணிப்புக் குழுவிலிருந்து வெளியேற்ற வேண்டுமெனப் புலிகள் வற்புறுத்தி வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் கவலை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் தங்களைத் தடைசெய்தால் எவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமென புலிகள் எச்சரித்து வந்தார்களோ அவ்வாறானதொரு நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கையை புலிகள் விடுத்தபோது அதனைப் பொருட்படுத்தாதவர்கள் இன்று அது நடந்து கொண்டிருக்கும்போது, முன்னர் புலிகள் தெரிவித்ததை இன்று அவர்கள் கூறுவது வேடிக்கையாகவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை இன்று நிலைமையை மிக மோசமாக்கி கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகளில் 70 சதவீதத்திற்கும் மேலானோரை வெளியேற்றி போர் நிறுத்த உடன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்து முழு அளவிலான போரைத் தோற்றுவித்து விடப்போவது அனைவராலும் உணரப்பட்டுள்ளது. அவ்வாறானால், ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடைசெய்திருக்காவிட்டால் இந்த நிலைமைகளெல்லாம் ஏற்டாமல் போர்ச்சூழல் தவிர்க்கப்பட்டு சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், அது வேறுவிடயம். செத்துக் கொண்டிருந்த நோயாளிக்கான குளுக்கோஸ் வயரைக் கழற்றிவிட்டது போல், இலங்கை நிலைமை மிக மோசமடைந்து வருகையில் ஐரோப்பிய ஒன்றியத் தடை, இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக ஒரு தரப்புக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து மற்றத் தரப்பிற்கு அழுத்தம் கொடுக்காததால், சமாதான முயற்சிகள் சீர்குலைவதற்கு மற்றத் தரப்பு எப்படியெல்லாம் காரணமாயிருந்ததோ அவையெல்லாம் சரியென அங்கீகரித்தது போலாகிவிட்டது. வடக்கு - கிழக்கில் இன்று தாக்குதலும் பதில் தாக்குதலும் நடைபெறுகின்றது. அப்பாவிப் பொது மக்கள் அரச படைகளால் கொன்று குவிக்கப்படுவதை சர்வதேச சமூகம் உணர்ந்துள்ளது. இந்தியா சென்ற வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம், புலிகளுக்கெதிரான நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவித் தமிழர்களைக் கொல்ல வேண்டாமென இந்தியா கடுமையாக எச்சரித்துள்ளது. ஒழுக்கமுள்ள படையாக இலங்கைப் படைகளில்லை. அவர்கள் மேற்கொள்ளும் படுகொலைகளை அரசு கண்டும் காணாமலிருக்கிறது. அது குறித்தெல்லாம் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென பிரிட்டனும் கடுமையாகக் கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க பிரிட்டனே, விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்வதற்கு காரணமாயிருந்தது. ஆனால், அப்பாவித் தமிழ் மக்களை அரச படைகள் கொன்று குவிப்பதை உணர்ந்து அரச படைகள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டுமென கடுமையாகக் கூறியுள்ளதன் மூலம் பிரிட்டன் எந்த உண்மையை உணர்த்துகின்றதென்பது தெளிவாகிறது. இதேநேரம், கண்காணிப்புக் குழுவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வெளியேற்ற வேண்டுமென்பதில் புலிகள் மிகத் தீவிரமாகவுள்ளனர்.நடுநிலை தவறி ஒரு பக்கம் சார்ந்த நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமபல நிலையை ஏற்றுக் கொள்ளச் சிரமப்படுவதுடன் இந்தப் பிரச்சினையில் அரசுக்கு வழங்கும் அந்தஸ்தைப் புலிகளுக்கு வழங்கமாட்டார்களென்பதால் அது போர் நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்துவிடுமெனவும் புலிகள் கூறுகின்றனர். போர் நிறுத்த உடன்பாடு ஏற்கனவே ஆட்டம் கண்டுவிட்டது. அந்த உடன்பாட்டை அமுல்படுத்த அரசு தவறிவிட்டது. ஆயுதக் குழுக்களின் ஆயுதக் களைவு நடைபெறவில்லை. இந்த உடன்பாட்டில் எவ்வித இராணுவ நடவடிக்கைக்கும் இடமில்லை. ஆனால், இலங்கைப் படைகளோ மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையெனக் கூறி பல தடவைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மோசமான தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதனைக் கண்காணிப்புக் குழு இன்றுவரை கண்டிக்காததன் மூலம் கண்காணிப்புக் குழுவே போர் நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையை ஆட்டம் காண வைக்கின்றது. அத்துடன், வடக்கு - கிழக்கில் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அதனைக்கூட வெளியுலகிற்கு தெரிவிக்க கண்காணிப்புக் குழு தவறிவிட்டது. கடந்த சில வாரங்களில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பில் 200 சிறுவர்கள் வரை கருணா குழுவால் ஆயுதமுனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், இதுகுறித்து கண்காணிப்புக் குழு மௌனம் சாதிக்கிறது. பலத்த அழுத்தத்தின் மத்தியில் ஐ.நா.சிறுவர் பாதுகாப்பு நிதியம் (யுனிசெப்) இந்த ஆட்கடத்தலை வன்மையாகக் கண்டித்துள்ளது. வடக்கு - கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியுமேயுள்ளன. ஆனால், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா குழு இல்லையென இராணுவமும் கருணா குழுவும் தொடர்ந்தும் கூறிவருகின்றன. தற்போது இந்த 200 சிறுவர்களும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்தே கருணா குழுவால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். புலிகளின் பகுதிகளிலிருந்து எவரையும் கருணா குழு பிடிக்கவில்லை. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா குழு இயங்குவதில்லையென்றால், அவர்கள் புலிகளின் பகுதியில்தான் இயங்க வேண்டும். ஆனால், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்தல்லவா 200 சிறுவர்களும் பிடிக்கப்பட்டுள்ளனர். புலிகளின் பகுதியில் எவருமே பிடிக்கப்படாததால் கருணா குழு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பகிரங்கமாக இயங்குவது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சாதாரண விடயத்தைக் கூட கண்காணிப்புக் குழு உணரத் தவறிவிட்டது. ஆயுதக் குழுக்களின் விவகாரத்தை கண்காணிப்புக் குழு அம்பலப்படுத்தாத அதேநேரம் பிடிக்கப்பட்ட இந்தச் சிறுவர்களை கருணா குழு பொலநறுவை மாவட்டத்தில் இராணுவ முகாம்களில் வைத்து கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கி வருவதாக பெற்றோர் கூறுகின்றனர். இதன் மூலம் கிழக்கில் மிக மோசமான இரத்தக் களரி ஏற்பட அரசு பின்னணியிலிருந்து செயற்படுவதை மக்கள் உணர்ந்துள்ளனர். இவ்வாறு பாரிய மோதல்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. அண்மையில் புலிகளின் பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் என்ற பெயரில் முப்படைகளும் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன. திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. திருகோணமலையில் கடற்படைத் தளம் மற்றும் துறைமுகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாயிருக்கும் புலிகளின் பதுங்குக் குழிகள் காவலரண்கள் மீதே சம்பூரில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், முல்லைத்தீவில் சாலைப் பகுதியிலிருக்கும் கடற்புலிகளின் தளங்களே தகர்க்கப்பட்டதாகவும், கிளிநொச்சியில் இரணைமடு பகுதியிலுள்ள புலிகளின் விமானத்தளம் மற்றும் விமான ஓடு பாதையே அழிக்கப்பட்டதாகவும் அரசும் படைத்தரப்பும் கூறுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையென்ற பெயரில், போர் நிறுத்த உடன்பாடு அமுலிருக்கையில் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்ற அதேநேரம், இந்தக் காலப்பகுதியில் படையினரால் அப்பாவி மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது இன்று வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இதனை மறைக்க அரசும் படைத்தரப்பும் எவ்வளவோ முயன்றும் அது முடியாமல் போய்விட்டது. இதேநேரம், கடந்த 17 ஆம் திகதி பமுனுகம கடற்கரையில் வந்திறங்கிய ஐந்து கடற்புலிகளைத் தாங்கள் கைது செய்ததாகப் படையினர் தெரிவித்தனர். இவர்கள் வசமிருந்து, காந்தக் கடற்கண்ணி வெடிகள் சில மீட்கப்பட்டதாகவும், கொழும்பு துறைமுகப் பகுதியில் பாரிய தாக்குதலை நடத்தும் நோக்கிலேயே இவர்கள் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. நீர்கொழும்பு கடலிலிருந்து கொழும்பு துறைமுகப் பகுதியை நோக்கி இவர்கள் படகுகளில் வந்த போதே, மிக மோசமான கடற்கொந்தளிப்பாலும் காலநிலையாலும் தொடர்ந்தும் செல்ல முடியாத நிலையில் பமுனுகம கடற்கரையில் இறங்கிய போது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு துறைமுகத்தில் தாக்குதலை நடத்தும் நோக்கில் இவர்கள் வந்ததாகக் கூறப்பட்டாலும், உண்மையிலேயே இவர்கள் மறுநாள் கொழும்பு துறைமுகத்திற்கு, விமானப் படையினருக்கான இரண்டுக்கும் மேற்பட்ட `எம்.ஐ.-17' ரக ஹெலிகொப்படர்கள் மற்றும் பீரங்கிகள் போன்ற பெருமளவு போர்த்தளப்பாடங்களுடன் வந்த கப்பலொன்றை தகர்க்கவே வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயுதக் கப்பலின் அடியில் காந்தக் கண்ணிவெடிகள் பலவற்றை பொருத்திவிட்டு அவற்றை ஒரே நேரத்தில் வெடிக்க வைத்து கப்பலைத் தகர்த்து அதனுள்ளிருந்த ஹெலிகொப்டர்கள் விமான எதிர்ப்பு ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் போர்த் தளபாடங்களை அழிப்பதே இவர்களது நோக்கமென விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்தக் கப்பலில் விமானப் படையினருக்கு ஆயுதங்கள் வருவதை, கருங்கடல், பகுதிக்கு அருகிலுள்ள இடமொன்றிலிருந்து புலிகளின் சர்வதேச புலனாய்வாளர்கள் தெரிவித்திருந்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், இந்தப் போர்த் தளபாடங்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்திலிருந்து கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால், வெள்ளிக்கிழமை மாலை நீர்கொழும்பு வீதியில் பல மணிரேநம் மிகப் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இவ்வாறு, இரு தரப்பும் தாக்குதல்களுக்கான முன்னேற்பாடுகளையும் தாக்குதல்களைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகையில் போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிடும் சூழ்நிலை தோன்றியுள்ளது. இரு தரப்பும் போரோன்றுக்குச் சென்ற பின்பே அடுத்த கட்ட முயற்சிகளை மேற்கொள்ளுமென்பதால், சமாதான முயற்சியில் ஏற்பட்ட பலப்பரீட்சை தோல்வியடைந்து மீண்டுமொரு போரில் இவ்விரு தரப்பும் பலப் பரீட்சை நடத்தவுள்ளன. இந்தப் பலப்பரீட்சையே எதிர்காலத்தை தீர்மானிக்குமென்பது மிகத் தெளிவாகத் தெரிந்துவிட்டதால் இன்று இலங்கையில் மீண்டுமொரு போர் தவிர்க்க முடியாததாகிவிட்டது. விதுரன்
|