பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow ஈழத் தமிழர் பாதுகாப்பு குறித்து சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஈழத் தமிழர் பாதுகாப்பு குறித்து சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 28 June 2006

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஈழத்தமிழர் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுகூட்டம சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.  அப்போது அவர் கூறியதாவது:

இலங்கையில் இராணுவம் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது. அங்குள்ள அப்பாவி ஈழத்தமிழர்களை சிங்கள ராணுவம் பலி வாங்கி வருகிறது. இதுவரை இலங்கையில் இருந்து ஈழத்தமிழர்கள் 3,349 பேர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு போதிய வசதிகளை தமிழக அரசு செய்து தரவில்லை. மத்திய அரசும், தமிழக அரசும் ஈழத்தமிழர்கள் பிரச்சினையை மனிதாபிமான நோக்கோடு அணுக வேண்டும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இலங்கைக்கு ஆயுதங்களை இந்திய அரசு வழங்க கூடாது என்பதை வலியுறுத்தும் முகமாக சென்னையில் வரும் ஜூலை 8 ஆம் தேதி அனைத்துக் கட்சியினரும் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். இந்த கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம். அதாவது இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஆயுதங்களை வழங்க கூடாது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இலங்கைக்கு மத்திய அரசு ரேடார் கருவிகளை வழங்கியிருப்பதாக தெரிய வருகிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அனைத்துக் கட்சிகளை சார்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம் என்றார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு திருமாவளவன் அளித்த நேர்காணல்:

கேள்வி: நீங்கள் கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லையே?

பதில்: இந்த கூட்டம் குறுகிய காலத்திற்குள் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் அனைத்து கட்சிகளுக்கும் முறையாக அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

கேள்வி: உங்கள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க, மற்றும் ம.தி.மு.க. கட்சி உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லையே?

பதில்: அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா முக்கிய பணி காரணமாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இந்த கூட்டம் சிறப்பாக நடைபெற அவர் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஊரில் இல்லை. அதனால் இந்த கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

கேள்வி: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சமீபத்தில் இலங்கை அதிகாரிகள் சந்தித்து பேசியிருக்கிறார்களே?

பதில்: முன்னாள் முதலமைச்சர் என்ற முறையிலும் தற்போதைய தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் என்ற முறையிலும் அவர்கள் சந்தித்து இருக்கலாம். இது ஒன்றும் தவறு இல்லையே. ஜெயலலிதாவை பொறுத்த வரை அவர் எப்போதும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்தது இல்லை. அவர் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல.

கேள்வி: ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய, மாநில அரசு எந்த அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கருதுகிறீர்கள்?

பதில்: மத்திய அரசு ஆயுதங்களை இலங்கைக்கு கொடுத்து ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க உதவுகிறது. மத்திய அரசு இந்த செயலை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக முதலமைச்சர் கருணாநிதி இந்த பிரச்சினை பற்றி கூறும் போது மத்திய அரசின் நிலை எதுவோ, அது தான் மாநில அரசின் நிலை என்று கூறியுள்ளார். அவரின் நிலை என்ன என்பது எனக்கு தெரியாது. அதை அவர் தான் தெளிவு படுத்த வேண்டும்.

கேள்வி: தமிழகம் வரும் மத்திய மந்திரிகளுக்கு கறுப்புக்கொடி காட்டுவீர்களா?

பதில்: காட்டினால் ஒன்றும் தவறு இல்லை என்றார் திருமாவளவன்.

தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர் பழ. நெடுமாறன், இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, ஐக்கிய ஜனதா தள தலைவர் குமரி நம்பி, தமிழர் களத்தின் தலைவர் கலிமா வரதன், கைவினைஞர் முன்னேற்ற கழக தலைவர் சண்முகம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஹைதர் அலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் இசக்கிமுத்து, இயக்குனர் சீமான் ஆகியோர் இக்கூட்டத்தில் உரையாற்றினர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..