|
|
|
இந்தியா நட்புக் கரத்தை இறுகப் பற்றட்டும்! |
|
|
|
Wednesday, 28 June 2006 |
விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இந்திய தொலை க்காட்சி;க்கு அளித்த செவ்வி ஒன்றில் ராஜீவ்காந்தி படுகொலைக்கு வருத்தம் தெரிவித்தி ருக்கிறார். இந்திய அரசும், இந்திய மக்களும் இந் நிகழ்வை பெருந்தன்மையுடன் மறந்து கடந்த காலத்தை புறந்தள்ளி இலங்கை இனப் பிரச்சினையில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இந்திய அரசுடன் புதியதொரு உறவைக் கட்டியெழுப்பத் தயாராகியுள்ளதாகவும், இந்தியாவின் பிராந்திய நலன்களிற்கு எதிராக விடுதலைப் புலிகள் எதனையும் எப்போதும் செய்யமாட்டார்கள் என்ற உறுதிமொழியை தாங்கள் இந்திய அரசிற்குத் தெரிவித்துள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்செல்வனும் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் "தமிழ்முரசு" நாளேட்டுக்கு வழங்கிய செவ்வியில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு விடுதலைப்புலிகள் நட்புக்கரம் நீட்டுவதற்கு தயார் என்று தெரிவித்துள்ளார்.
மதியுரைஞரின் செவ்வியை அடுத்து பல ஊடகங்கள் விடுதலைப்புலிகள் ராஜீவ்காந்தி படுகொலைக்கு மன்னிப்புக் கோரியுள்ளதாக எழுதியிருந்தன. எது எப்படி இருப்பினும் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் மற்றும் சுப.தமிழ்செல்வன் ஆகியோரின் செவ்விகள் விடுதலைப்புலிகள் பழைய கசப்புகளை மறந்து இந்திய அரசுடன் நட்புடன் செயற்பட விரும்புவதையே காட்டுகிறது. அத்துடன் இந்திய மண்ணில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவுக் கரம் கொடுக்க விரும்புவர்களுக்கு இருந்த "ராஜீவ்காந்தி படுகொலை" என்னும் தடையையும் வலுவிழக்கச் செய்திருக்கிறார்கள்
ஈழத் தமிழர்களுக்கு இந்திய இராணுவம் பெரும் கொடுமைகளை இழைத்திருக்கிறது. ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல தமிழ் பெண்கள் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கோடிக் கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இவைகளுக்கு இந்திய அரசு பஞ்சாப் மக்களிடம் கேட்டது போன்று ஈழத் தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு பல ஈழத் தமிழர்களிடம் உண்டு. ஆனால் இதை வலியுறுத்தாமல் விடுதலைப்புலிகள் பெருந்தன்மையுடன் கடந்த காலத்தை புறந்தள்ளி விட்டு இந்தியாவை நோக்கி நேசக்கரம் நீட்டுகிறார்கள். இந்திய அரசு விடுதலைப்புலிகள் நீட்டியுள்ள இந்த நட்புக் கரத்தை இறுகப் பற்று வேண்டும் என்று உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுவே தமிழர்களின் நலன்களுக்கும் இந்தியாவின் நலன்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும். webeelam
|
|