|
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒன்பது தமிழ் மாணவர்கள் கல்கிசை பொலி ஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள், கல்வி க்காக தலைநகர் வந்து தங்கியுள்ள தமிழ் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்வி களை எழுப்பியிருக்கின்றது.
அயலவர்கள் கொடுத்த தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது, புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளின்படி தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ள நெருக்கடிகளைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது. வன்முறைகளும் தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதும், அதற்கான புதிய நடைமுறைகளை அமுல் செய்வதும் தவிர்க்க முடியாததாக இருக்கலாம். இருந்த போதிலும் இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் அப்பாவிப் பொது மக்களை பாதிக்காததாகவும், அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறாததாகவும் அமைந்திருப்பது அவசியம். இருந்த போதிலும் தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பாகவோ, அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாகவோ அரசாங்கம் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. ஒருவரைக் கைது செய்து தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்துவதாயின் அதற்கான ஆதாரங்கள் அவசியம். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்வதாக இருந்தால் கூட, `சந்தேகப்படுவதற்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும். ஆனால், ஒருவர் தமிழராக இருப்பதொன்றே சந்தேகப்படுவதற்கான நியாயமான காரணம்' என படைத்தரப்பும் அரசாங்கமும் கருதுகின்றது என்பதைத்தான் தலைநகர் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம் பெறும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் இதற்கான ஒரு உதாரணம் மட்டுமே. இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் தலைநகரில் இடம் பெற்றிருக்கின்றன. கைது செய்யப்பட்ட பலர் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக வாரக் கணக்காக, மாதக் கணக்காக தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் மீதான விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்பட்டு, அவர்களை விரைவாக விடுவிக்க வேண்டும் என்பதில் யாருமே அக்கறை காட்டுவதில்லை. கைது செய்யப்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ள போதிலும், அந்த நடைமுறைகள் வெறும் வாய்மொழியாகவே உள்ளன. ஒருவரைக் கைது செய்யும் போது, கைதை உறுதிப்படுத்தும் கடிதம் அல்லது பற்றுச் சீட்டு உறவினர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவ்வாறான நடைமுறை எங்கும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இது சட்டவிரோதமான கைதுகளும், கைதானவர்கள் காணாமல் போகும் சம்பவங்களும் அதிகரிப்பதற்கே வழிவகுப்பதாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் படையினரால் கைது செய்யப்பட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல்போன சிலருடைய சடலங்கள் புதைகுழிகளிலிருந்தும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புதைகுழிகள், சட்டவிரோதக் கைதுகள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுக்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அது பற்றி விசாரிக்க தனியான விசாரணைக் குழுக்களை நியமிக்க வேண்டும்! பெண்களைக் கைது செய்யும் விடயத்திலும் உறுதியளிக்கப்பட்ட நடைமுறைகள் கையாளப்படுவதில்லை. பெண்கள் கைது செய்யப்படும் போதோ அல்லது சோதனைக்குட்படுத்தப்படும் போதோ பெண் பொலிஸார் ஒருவர் உடனிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், இந்த நடைமுறை பின்பற்றப்படுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த உறுதியளிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு விரோதமாக படையினரும் பொலிஸாரும் நடந்து கொள்கின்றனர். மனித உரிமைச் சட்டங்கள் தொடர்பாகவும், மனிதாபிமான நடைமுறைகள் பற்றியும் படையினருக்கும் பொலிஸாருக்கும் போதிக்கப்படுகின்ற போதிலும், தமிழ் மக்கள் விடயத்தில் அவற்றை அமுல் செய்வதற்கு படைத்தரப்பினர் தயராகவில்லை என்பதைத் தான் கடந்த காலங்களில் நாம் கண்டிருக்கின்றோம். இப்போதும் அதேநிலைமைதான் தொடர்கின்றது. இவ்விடயத்தில் கண்டிப்பாக நடந்து கொள்வதற்கு படைத்தலைமை விரும்பாததும் இதற்குக் காரணம். படைகளைப் பொறுத்தவரையில் ஒழுங்கும் கட்டுப்பாடும் மேலிருந்து வரவேண்டும். ஆனால், இந்த நாட்டில் காணப்படும் இனவாத அணுகுமுறை இவ்வாறான சிந்தனைகளுக்கு இடமளிக்கப்போவதில்லை. "பத்து குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது" என்பது நீதித்துறையின் பொதுவிதி! ஆனால், இலங்கையில் தமிழர்களைக் கைது செய்து தடுத்துவைக்கும் விடயத்தில் இந்தப் பொது விதி முரணாகவே கைக்கொள்ளப்படுகின்றது! Thinakkural
|