|
இராணுவத் தலைமையில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ள தற்கொலைத்தாக்குதல் பன்னிப்பிட்டிய பகுதி தாக்குதலுக்கு தெரிவு செய்யப்பட்டது எதற்காக? வடக்கு - கிழக்கு இன்று முழு அளவிலான போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் தென்பகுதி பாதுகாப்பாக இருக்கிறதா?இதுதான் இன்று கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் எழுப்பப்படும் மிகப்பெரும் கேள்வியாகும்.
தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் தென்னிலங்கையே முற்று முழுதாக ஸ்தம்பிதமடைந்து விடுமோ என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில் இந்த அரசால் மற்றொரு யுத்தத்திற்குச் செல்ல முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. கடந்த இரு மாத காலத்தில் இராணுவத்தின் முதல் மூன்று நிலைத் தளபதிகளில் இருவர் தாக்கப்பட்டுள்ளனர். இவ்விருவர் மீதும் தற்கொலைக் குண்டுத்தாக்குதலே நடத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி மீதான தாக்குதல் நடைபெற்று இரு மாதங்களில் பிரதி இராணுவத் தலைமை அதிகாரி தாக்கப்பட்டுள்ளார். இராணுவத்தின் இரண்டாம் நிலை அதிகாரியான மேஜர் ஜெனரல் நந்தன மல்லவராச்சி இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெறவுள்ள நிலையில் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் பிரதி இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க மீதான தாக்குதல் மூலம் இராணுவ தலைமைப்பீடத்தில் பாரிய வெற்றிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி மீதான தாக்குதலிலிருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பினாலும் அவரால் முன்னரைப் போன்று மீண்டும் செயற்பட முடியுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இதனால், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குப் பின்னர் இராணுவத் தளபதியாக நியமனம் பெறும் வாய்ப்பை பெற்றிருந்த மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க மீதான தாக்குதல், இராணுவத் தலைமைப் பீடத்தில் மிகப்பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகவே படைத்தரப்புகள் கருதுகின்றன. இராணுவத் தளபதி மீது இராணுவத் தலைமையகத்தினுள் புகுந்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலானது அரசையும் பாதுகாப்புத் தரப்பையும் பேரதிர்ச்சியடையச் செய்ததுடன் அதனை அவர்களால் ஜீரணிக்கவும் முடியவில்லை. நாட்டின் அதிஉச்ச பாதுகாப்பு மிக்க இராணுவத் தலைமையகத்தினுள் மிகத் தந்திரமாக நுழைந்து இலக்கை குறிவைத்து தாக்கிய சம்பவமானது, தலைநகரின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியது. அந்த அதிர்ச்சியிலிருந்து அரசும் படைத்தரப்பும் மீள்வதற்கிடையில் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் மற்றொரு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடைபெற்ற இந்தத் தாக்குதல்களானது,எதிரி இராணுவத் தலைமைப் பீடத்தை இலக்கு வைத்திருப்பதை நன்கு தெளிவாக்கியுள்ளது. இராணுவத் தளபதியின் எதேச்சதிகார நடவடிக்கைகளாலும் திடீர் திடீர் இடமாற்றங்கள் மற்றும் பதவி மாற்றங்களாலும் விரக்தியடைந்த நிலையில் சிரேஷ்ட தளபதிகள் பலர் இராணுவத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையில் இராணுவ தலைமைப் பீடத்தை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களும் நடத்தப்படுவதானது, இராணுவ தலைமைப் பீடத்தில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்துவதுடன் அனுபவமற்ற கனிஷ்ட அதிகாரிகளை சிரேஷ்ட தளபதிகளாகப் பதவி உயர்த்தி பதவிகளில் அமர்த்த வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இராணுவத் தளபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதலே நடத்தப்பட்டிருந்தாலும், இரு தாக்குதலுக்குமான நுட்பங்கள் பெருமளவில் வேறுபட்டவை. இராணுவத் தளபதி மீதான தாக்குதல் கொழும்பு மாநகரின் மையத்தில் இராணுவத் தலைமையகத்தினுள் தந்திரமாக நுழைந்து பெண்ணொருவர் மேற்கொண்டது. இராணுவத் தலைமையகத்தினுள் புகுந்து எழுந்தமானமாகத் தாக்கி படைத்தரப்புக்கு பேரழிவை ஏற்படுத்துவது வேறு, இராணுவத் தலைமையகத்தினுள் நுழைந்து இராணுவத் தளபதியை இலக்கு வைத்து அவரது வருகைக்காக காத்திருந்து அவர்மீது தற்கொலைத் தாக்குதலை நடத்துவது வேறு. இந்தத் தாக்குதலுக்காக அவர்கள் எவ்வளவு காலம் உளவறிந்து தாக்குதல் திட்டத்தை தயாரித்து அதனை செயற்படுத்துவதென்பது சாதாரண விடயமல்ல. அதற்கு நேர்மாறானதாக பன்னிப்பிட்டி பகுதியில் பாரமி குலதுங்க மீது நடைபெற்ற தாக்குதலிருந்தாலும் இதற்காக அவர்கள் மிக நீண்ட நாட்கள் உளவறிந்து தலைநகருக்கு வெளியே 99 சதவீதம் சிங்கள மக்கள் வாழும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட விதமானது அரசையும் இராணுவ தலைமைப் பீடத்தையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க தங்கியிருக்குமிடம் தனிச் சிங்களப் பகுதியென்றாலும் அப் பகுதியில் உளவறிந்தே அவரது நடமாட்டமும் போக்குவரத்துக்களும் கண்காணிக்கப்பட்டு தாக்குதலுக்கான இடம் நிர்ணயிக்கப்பட்டு தற்கொலைக் குண்டுதாரி மோட்டார் சைக்கிளொன்றில் சென்று இலக்கைத் தாக்கி அழித்துள்ளார். பாரமி குலதுங்க மீதான தாக்குதலுக்கு, அவர் தங்கியிருந்த இடம் ஒரு விதத்தில் சாதகமானதொன்றாயிருந்தாலும் அது தனிச் சிங்களப் பகுதியென்பதால் அவரது நடமாட்டங்கள் மற்றும் போக்குவரத்து குறித்த உளவுத் தகவல்களைச் சேகரிப்பதில் பாதகமான அம்சங்களுமிருந்தன. பாரமி குலதுங்க கடமையாற்றும் கொழும்பு இராணுவத் தலைமையகத்திற்கும் அவர் தங்கியிருந்த பன்னிப்பிட்டி கெந்தலந்தவில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் தங்கும் விடுதிக்குமிடையிலான தூரம் சுமார் 15 கிலோமீற்றராகும். இதனால், அவரது நடமாட்டம் மற்றும் போக்குவரத்து தொடர்பான தகவல்களை துல்லியமாகப் பெற்ற பின்னர் மோட்டார் சைக்கிளில் செல்லும் தற்கொலைக் குண்டுதாரியால் இலக்கு வைப்பதற்கு பல சாதகமான அம்சங்கள் இருந்துள்ளன. கொழும்பு தலைநகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் வீதிப் போக்குவரத்தென்பது மிகவும் வாகன நெரிசல் மிக்கதென்பதால், பாதுகாப்பு அச்சுறுத்தலுள்ள எவரும் அந்த வாகன நெரிசலுக்குள் சிக்கிவிட்டால் அவர்களை இலக்கு வைப்பது வாய்ப்பாகிவிடும். மேஜர் ஜெனரல் குலதுங்க கூட பன்னிப்பிட்டி மொறகெட்டிய சந்தியை பலத்த வாகன நெரிசலுக்கு மத்தியில் தாண்டி ஒழுங்கை போன்றதொரு பாதையில் திரும்பிய நேரத்திலேயே தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானார். இவர் தங்கும் இடத்திற்கும் இராணுவ தலைமையகத்திற்குமிடையிலான மிக நீண்ட தூரமே இவரது பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப் பெரும் குறைபாடாகும். அதேநேரம், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் தங்கும் விடுதியின் பாதுகாப்பு மிகவும் பலம் மிக்கதாயிருந்த போதும் இவரது போக்குவரத்துக்களும் இவரது நடமாட்டமும், மிக உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தனது சொந்த வீட்டிலிருந்து இவர் புறப்பட்டால், இவரது வாகனத்திற்கு வழங்கப்படும் பாதுகாப்பை வைத்து இவர் தான் கடமைக்கு புறப்பட்டு விட்டாரென்பதை ஊகித்துவிடலாம். ஆனால், சிரேஷ்ட அதிகாரிகள் பலர் தங்கும் விடுதியிலிருந்து புறப்படும் ஒவ்வொரு அதிகாரிகளினதும் வாகனங்களும் பலத்த பாதுகாப்புடனேயே செல்லுமென்பதாலும் படை அதிகாரிகளின் வாகனங்களின் கண்ணாடிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக கறுப்பு நிறமுடையவையாக இருப்பதாலும், சிரேஷ்ட அதிகாரிகளின் கார்களும் நிறங்களும் ஒரே மாதிரியாக இருப்பதாலும் அந்தக் காரினுள் பாரமி குலதுங்கதான் இருக்கிறார் என்ற தகவல் தற்கொலைக் குண்டுதாரிக்கு எப்படிக் கிடைத்தது? அப்படியானால், பாரமி குலதுங்க தனது விடுதியிலிருந்து வெளியே வந்த நேரம் முதல் அவர் செல்லும் பாதைகளும் துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டு ஒவ்வொரு செக்கன்களும் தற்கொலைக் குண்டுதாரிக்கு கையடக்கத் தொலைபேசி மூலம் தகவல்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டுமென விசாரணையாளர்கள் கருதுகின்றனர். `தினமும் மேஜர் ஜெனரல் குலதுங்க வேறு வேறு பாதைகளூடாகவே கடமைக்குச் சென்று வருவதால் அன்றைய தினம் இந்தப் பாதையூடாகத்தான் இவர் வருவாரென தற்கொலைக் குண்டுதாரியால் காத்திருக்க முடியாது. பாரமி குலதுங்க கடமைக்கு புறப்பட்ட நேரம் முதல் அவரது கார் சென்று கொண்டிருக்கும் பாதைபற்றிய விபரமும் தற்கொலைக் குண்டுதாரிக்கு கூறப்பட்டு வந்த நிலையிலேயே பன்னிப்பிட்டி மொறகெட்டிய சந்தியைத் தாண்டி வலதுபுற ஒழுங்கை போன்ற வீதியில் கார் திரும்பிய போது திடீரென மோட்டார் சைக்கிளொன்று வந்து அவரது காரில், அதன் இடதுபுற பின்புறமாக அவர் இருந்த பக்கமாக மோதி வெடித்துள்ளது. மோட்டார் சைக்கிள், கார் மீது மோதியதைக் கூட, பாரமி குலதுங்கவின் காரின் பின்னால் வந்த அவரது பாதுகாப்பு பிரிவினர் இருந்த `பிக்கப்' வாகனத்திலிருந்தவர்களால் பார்க்க முடியவில்லையென்றால், கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிவடைந்துள்ளது. அதேநேரம், மேஜர் ஜெனரலின் காரின் பின்னால் வந்த பாதுகாப்பு பிரிவினர், புறப்பட்ட நேரம் முதல் தாக்குதல் நடைபெறும் வரை எந்தவொரு இடத்திலும் சந்தேகத்திற்கிடமாக எவ்வித வாகனங்களையும், அவதானித்ததாகக் கூறாததாலும், இவர்களது வாகனத் தொடரணியை மோட்டார் சைக்கிளொன்று பின்தொடர்ந்து வந்திருந்தால் அது சுலபமாக அடையாளம் காணப்பட்டிருக்குமென்பதாலும், தற்கொலைக் குண்டுதாரி தனது மோட்டார் சைக்கிளுடன் மொறகெட்டிய சந்தியில் அல்லது அதற்கு அருகில் தயாராக காத்திருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது. அதேநேரம், மிகவும் போக்குவரத்து நெரிசல்மிக்க அந்த வீதியில் படை அதிகாரிகளின் வாகனத்தை துல்லியமாக அடையாளம் காண்பதென்பது பலத்த சிரமமென்பதாலும் இந்த வழியால் தான் அது வருமென்பது தெரியாததாலும், மேஜர் ஜெனரலின் வாகனத்தின் பின்னால் குறிப்பிட்ட இடைவெளியில் வாகனமொன்று பின்தொடர்ந்து வந்தவாறு தற்கொலைக் குண்டுதாரிக்கு, மேஜர் ஜெனரலின் கார் வரும் பாதை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கலாமெனவும் கருதப்படுகிறது. ஆனாலும், மொறகெட்டிய சந்தியை மேஜர் ஜெனரலின் கார் தாண்டியதும் திடீரென வலது பக்க பாதையில் கார் திரும்பியுள்ளது. இவ்வாறு கார் திடீரென வலப்புறம் திரும்பிச் செல்லுமென்பதை, பின்னால் ஒரு வாகனத்தில் வந்தவர்களால் கூட அறிந்து தற்கொலைக் குண்டுதாரிக்கு தெரிவிக்கும் வாய்ப்பில்லை. எனினும், அந்தச் சந்திக்கு அருகில் தயாராக நின்ற தற்கொலைக் குண்டுதாரி வாய்ப்பை பயன்படுத்தி திடீரென தனது மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்திச் சென்று மேஜர் ஜெனரலின் கார் மீது மோதியுள்ளதாகவே கருதப்படுகிறது. சிங்களப் பகுதியொன்றில், எந்தப் பாதையூடாக இவரது கார் வருமென்பது தெரியாத நிலையில் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தாது நடந்து சென்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்துவது மிகவும் ஆபத்தானதெனக் கருதப்பட்டதால், மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி சந்தர்ப்பத்திற்கேற்ப துரத்திச் சென்றாவது தாக்குதல் நடத்த முடியுமென்பதால் இந்த இலக்கினைத் தாக்க மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கருதப்படுகிறது. சாதாரணமாக நடந்துசென்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தும் போது குண்டுதாரி யாரென்பது குறித்து ஆராய்ந்து கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகிவிட்ட நிலையில் வாகனக் குண்டுத் தாக்குதலென்பது மிகவும் `ரிஸ்க்' கான வேலையாகும். ஏனெனில், மோட்டார் சைக்கிளில் சென்ற குண்டுதாரியை அடையாளம் காணாவிட்டாலும் மோட்டார் சைக்கிளை, அதன் `எஞ்சின் நம்பர்' மூலம் அடையாளம் கண்டுவிட்டால் அதன் மூலம் மோட்டார் சைக்கிள் உரிமையாளரைப் பிடிக்க அவர் மூலம், கடைசியாக மோட்டார் சைக்கிளை வைத்திருந்தவர் யார் என்பது கண்டறியப்பட்டு தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க முடியாவிட்டாலும் அவர்கள் பற்றிய விபரங்களையாவது அறிந்துவிட முடியும். இதனால், சாதாரணமாக ஒருவர் தனது உடலில் குண்டுகளைப் பொருத்திச் சென்று தாக்குதலை நடத்துவதைவிட வாகனங்களில் சென்று தாக்குதலை நடத்தும் போது அவர்கள் பற்றிய விபரங்களை பின்னர் பெற்றுவிட முடியும். எனினும், இங்கு இலக்கு முக்கியமானதென்பதால் அதற்காக `ரிஸ்க்' எடுத்து மோட்டார் சைக்கிளில் சென்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இராணுவத் தலைமையகத்தினுள் இராணுவத் தளபதி மீது பெண்ணொருவரே தற்கொலைக்குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தார். கர்ப்பிணி வேடமிட்டுச் சென்றதால் அவரால் தனது உடலில் ஓரளவு கூடுதலாக வெடி மருந்தை சுமந்து செல்ல முடிந்தது. ஆனாலும், அந்தத் தாக்குதலிலிருந்து பலத்த காயங்களுடன் இராணுவத் தளபதி உயிர் தப்பிவிட்டார். அதேபோன்றதொரு நிலை இங்கு ஏற்படக் கூடாதெனக் கருதப்பட்டதாலும், தாக்குதல் நடைபெற்ற இடம் கொழும்புக்கு வெளியே இருந்ததாலும், மோட்டார் சைக்கிளை இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டிருக்கலாம். தொடரும்… விதுரன்
|