|
போர்நிறுத்த உடன்படிக்கை அமுலில் உள்ளதா? சிறிலங்கா அரசு ஆம் என்று கூறுகின்றது. கண்காணிப்புக்குழு இல்லை அவை வெறும் காகிதத்தில் தான் உள்ளது என்று தெரிவித் துள்ளது. வடக்கு கிழக்கு கள நிலவரங்களை அவதானிக்கின்ற போது நிலமை அவ்வாறு தான் உள்ளது.தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை சீரழிக்கப்படுகின்றது. போர் நிறுத்தம் என்பது வெறும் வார்த்தையில் மட்டும் தான் உள்ளது. தங்களை சர்வதேச சமூகத்தில் சமாதானத்தை நேசிப்பவர்களாகக் காட்டிக் கொண்டு தமிழின ஆக்கிரமிப்பு நடவடிக்கை களை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. தமிழ் மக்கள் தினமும் சிங்கள இராணு வத்தால் படுகொலை செய்யப்படுகின்றனர். வயது வேறுபாடு இன்றி குழந்தைகள் தொடக் கம் வயோதிபர்கள் வரை படுகொலைகள் நடைபெற்று வருகின்றன.
அதே போன்று சிறிலங்கா படைத் தரப்புடன் சேர்ந்தியங்கும். ஒட்டுக் குழுக்களின் செயல்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. போர் நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் வடக்குக் கிழக்கில் செயற்பட முடியாது. ஆனால், போர் நிறுத்த உடன்படிக்கையை நிர்முலம் செய்வதற்கு இந்த ஒட்டுக்குழு விவகாரமே பிரதானமாக அமைந்தது. தற்போது ஒட்டுக்குழுக்களின் நடவடிக்கைகள் தீவிரமடைந்து ஆட்கொலை, கடத்தல், கப்பம் வசூலித்தல், கொள்ளை என பல்வேறு நாசகார நடவடிக்கைகள் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம் பெற்று வருகின்றன.
இவை மாத்திரமின்றி சிறிலங்கா படையின் சோதனை, சுற்றிவளைப்பு, தேடுதல், கைது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளுக்குப் பொருட்களை கொண்டு வருவதற்குப் படைத்தரப்பினர் தடை விதித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு எரிபொருட்களை எடுத்து வருவதற்கும் படையினர் தடை விதித்துள்ளனர். அது மாத்திரமின்றி மீன் பிடித்தடையை தமிழர் தாயகக் கடற்பரப்பில் பரவலாக்கி வருகின்றனர்.
அது தவிர விமானக் குண்டு வீச்சு, கடற்படை பீரங்கி படகுகளின் தாக்குதல் என போர்சூழலில் ஏற்பட்ட அத்தனை நடவடிக்கைகளும் தற்போது இடம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் போர் நிறுத்தம் ஒன்று அமுலில் உள்ளது. அதனை சிறிலங்கா அரசு கடைப்பிடிக்கின்றது என்றால் அதனை எந்த முட்டாள்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அதேவேளை தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாத அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் இன வன்முறைகளுக்கு எதிராக தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என்ற அடிப்படையில் விடுதலைப் புலிகள் பதில் நடவடிக்கைகள் எடுக்கத்தான் வேண்டும்.
இதனை போர் நிறுத்த மீறலாகவோ அல்லது வன்முறைகளாகவோ நோக்கக்கூடாது. தமிழினம் செத்து மடியும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் என்ற வரையறைக்குள் சும்மா நின்று கொண்டிருக்க முடியாது. அதனை தமிழ் மக்கள் கூட ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அண்மைக் கால களநிலவரங்கள் இதை வெளிப்படுத்துவபனவாக அமையலாம்.
இத்தகையதொரு நெருக்கடியான சூழலில் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைத்து குரல் வளை நசுக்கப்படுகின்ற நிலையில் சிங்கள அரச பிரதிநிதிகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பேசுவது என்பது நியாயத்துக்கு ஒவ்வாத விடயம்.
எனவே, சர்வதேச சமூகம் இருதரப்பும் பேச வேண்டும் என்ற பொதுவான சிந்தனையை முன் வைக்கின்ற போது சர்வதேச பிரமுகர்கள் கூட இதனை முன் வைக்கின்றார்கள். ஆனால் தமிழர்களின் குரல்வளையை நசித்துக் கொண்டிருக்கும் சிங்கள் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கைகளை அகற்றுவதற்குரிய எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை.
எனவே, இன்றுள்ள நிலைமைகள் இனிவரும் காலங்களில் உக்கிரமடையலாம் எனக் கருதப்படும் நிலையில் பேச்சுகள் என்பது வெகு தொலைவு நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. போர் என்பது விரைவாக நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது. காலமும் நேரமும் அது தவிர்க்க முடியாததொன்றாகி விடும் என்பதையே காட்டி நிற்கின்றது.
battieelanatham
|