|
|
|
புலிகளின் தாக்குதல் ஒரு மனிதாபிமானத்துக்கான தாக்குதலே: சுவிஸ் தமிழர் பேரவை |
|
|
|
Thursday, 03 August 2006 |
தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது ஒரு மனிதாபிமானத்துக்கான தாக்குதலையே நடத்தி வருகின்றனர் என்று சுவிஸ் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவையின் தலைவர் இராமகிருஸ்ணன் காசிலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்காவில் இடம்பெற்று வரும் அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பாக, சுவிஸ்
தமிழர் பேரவையும், சுவிஸ் வாழ் தமிழ் மக்களும் ஆழ்ந்த கவலை
அடைந்துள்ளார்கள்.
சர்வதேச சமூம் தனது முழுக் கவனத்தையும் மத்திய கிழக்கு யுத்தத்தின்பால்
வைத்துக்கொண்டிருக்கும் இச்சந்தர்பத்தைப் பயன்படுத்தி, சிறிலங்கா இராணுவ
இயந்திரம் தனது கொடூரக் கரங்களை அப்பாவித் தமிழர்கள் மீது நீட்ட
ஆரம்பித்திருந்தது.
"மாவிலாறு" தண்ணீர்ப் பிரச்சினையைக் காரணம் காட்டி, தமிழ் மக்கள் மீது ஒரு முழு அளவிலான யுத்தத்தை அது கட்டவிழ்த்து விட்டிருந்தது.
26.07.2006 முதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள்
மீது கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சுக்களையும், எறிகணை
வீச்சுக்களையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தது.
எந்தவித வரையறையும் இல்லாமல் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த
கண்மூடித்தனமான தாக்குதல்களினால் பல அப்பாவிப் பொதுமக்கள்
கொல்லப்பட்டார்கள். பல வீடுகள், பாடசாலைகள் முற்றாகச் சேதமாக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்திருந்தார்கள். ஒரு சில
விடுதலைப் புலி முக்கியஸ்தர்களும் இந்த வான் தாக்குதல்களில்
கொல்லப்பட்டார்கள்.
இவற்றிற்கு மேலாக, கடந்த 31.07.2006 அன்று, சிறிலங்கா இராணுவத்தினர்
திருகோணமலையிலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின்
மீது ஒரு பகிரங்கமான படையெடுப்பினை மேற்கொண்டிருந்தார்கள்.
சிறிலங்காவின் யுத்த விமானங்கள், எறிகணைகள் என்பன கண்மூடித்தனமான
தாக்குதல்களை பரவலாக மேற்கொள்ள, பீரங்கி, கவச வாகனங்கள் சகிதமாக மூன்று
முனைகளில் நகர்வினை மேற்கொண்டார்கள். சுமார் நான்கரை வருடங்களாக
இலங்கையில் இடம்பெற்று வந்த யுத்த நிறுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவரும்
வகையில் சிறிலங்கா அரசாங்கம் விடுத்த ஒரு பகிரங்க யுத்தப் பிரகடனம் இது
என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா யுத்த இயந்திரம் கட்டவிழ்த்து விட்டிருந்த இந்த தொடர்
தாக்குதல்களினால் தமிழர் தாயகத்தில், குறிப்பாக திருகோணமலைப் பிரதேசத்தில்
ஒரு மனிதாபிமான நெருக்கடி தோன்ற ஆரம்பித்தது.
தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் அப்பாவித் தமிழ்
பொதுமக்களைக் காப்பாற்றவேண்டிய ஒரு தார்மீகக் கடமையின் அடிப்படையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தற்காப்பு தாக்குதலை மேற்கொண்டேயாக வேண்டிய
ஒரு நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள். அதன் அடிப்படையில் 02.08.2006
அன்று அதிகாலை, தமிழீழ விடுதலைப் புலிகள் திருகோணமலை மூதூர்
பிரதேசத்திலுள்ள சிறிலங்கா படைகளின் ஆட்டிலறித் தளங்களைக் குறிவைத்து
பதில் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தார்கள்.
இது, தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கும், தம்மீது வலிந்து தொடுக்கப்பட்ட
ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இருந்து மீள்வதற்குமான ஒரு தற்காப்பு
நடவடிக்கையே.
தண்ணீர் பங்கீடு தொடர்பான ஒரு சிறு பிணக்கைத் தீர்ப்பதற்கு, முழு அளவிலான
ஒரு யுத்தத்தை ஆரம்பித்திருந்த மகிந்த ராஜபக்சவே, தற்போதைய அழிவிற்கான
முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சுவிஸ் தமிழர் பேரவை
கோரிக்கை விடுக்கின்றது.
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் என்கின்ற வகையிலும்,
சிறிலங்கா முப்படைகளின் தளபதி என்கின்ற வகையிலும், நான்கரை ஆண்டுகளாக
இடம்பெற்று வந்த யுத்த நிறுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்து யுத்தப்
பிரகடனத்தை மேற்கொண்டவர் என்கின்ற வகையில், மகிந்தவின் இந்த யுத்த
நடவடிக்கையை சுவிஸ் வாழ் தமிழ் சமூகம் வன்மையாகக் கண்டிக்கின்றது என்று
அதில் அவர் தெரிவித்துள்ளார். நெருடல் இணையம்
|
|