பிரதான பக்கம் arrow Karuna Antharangam arrow புலிகளின் மூதூர் முற்றுகை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

புலிகளின் மூதூர் முற்றுகை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 08 August 2006

மட்டுப்படுத்தப்பட்ட புலிகளின் இராணுவ நடவடிக்கை மனிதாபிமானமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையொன்று இன்று மனிதப் பேரவலத்  திற்கு வித்திட்டுள்ளது. மாவில் ஆறு அணைக்கட்டு விவகாரத்தை மனிதாபிமானப் பிரச்சினையாக அணுகாது, அதனை அரசியல் மயப்படுத்தி அதன் மூலம் பாரிய இராணுவ நடவடிக்கையொன்றை ஆரம்பித்ததன் விளைவை அரசு இன்று உணர்கிறது.

திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசும் படையினரும் விதித்துள்ள பொருளாதாரத் தடையின் எதிர்விளைவாகவே மாவில் ஆறு அணைக்கட்டு மூடப்பட்டது.

இவ்விரு பிரச்சினைகளும் தமிழ், சிங்கள மக்களின் அடிப்படையானதும் அன்றாடப் பிரச்சினையுமாகும். இதனை மனிதாபிமானப் பிரச்சினையாகக் கருதி இதற்கு சுமுகமானதொரு தீர்வு அதிகாரிகள் மட்டத்தில் காணப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அரசு அதனை மனிதாபிமானப் பிரச்சினையாக அணுக முற்படாது இனப் பிரச்சினையாக்கி அதனை அரசியல் மயப்படுத்துகிறது. ஒரு தரப்பின் மனிதாபிமானப் பிரச்சினை மற்றொரு தரப்புக்கு அரசியல் பிரச்சினையானது. பின்னர் இது பாரிய இராணுவ நடவடிக்கையொன்றுக்கு வித்திட அதன் எதிரொலி இன்று மூதூருக்கும் அப்பால் கேட்கிறது.

கிழக்கில் ,குறிப்பாக திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் மிக நீண்டகாலமாக திருகோணமலை கடற்படைத் தளத்திற்கும் திருமலைத் துறைமுகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாயிருந்தது. நாலாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானால் திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு படையினர் கடல்வழியாக மட்டுமல்லாது தரைவழியாகக் கூட செல்ல முடியாதவாறு திருகோணமலை நகரை விடுதலைப் புலிகள் முற்றுகையிட்டிருப்பதாக அரசும் படைத்தரப்பும் கூறிவந்தன.

மற்றொரு ஈழப்போர் முன்னைய போர்களைப் போலல்லாது ஆட்பலத்தை விட ஆயுத பலமும் யுத்தத் தந்திரமுமே தீர்மானிப்பதாயிருக்குமென்பது முக்கிய விடயம். இதனால்தான் போர் நிறுத்த காலத்தில் புலிகள் திருகோணமலை கடற்படைத் தளத்தையும் துறைமுகத்தையும் இலக்கு வைத்து தாக்குதல் வியூகங்களை வகுத்து வருவதாக படைத்தரப்பு கூறிவந்தது.

திருகோணமலைக்கு கிழக்கே கேந்திர முக்கியத்துவமிக்கதொரு பகுதியில் மூதூர் உள்ளது. மூதூரின் பாதுகாப்பே திருகோணமலைத் துறைமுகம் மற்றும் கடற்படைத் தளத்தின் மிகப் பெரும் பாதுகாப்பாகும்.

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் (A-15) மூதூர் இருந்தாலும் மூதூர் ஊடாகச் செல்லும் (A-15) வீதியின் இரு புறங்களும் என்றுமே படையினரின் இருப்புக்கும் மூதூரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவேயிருந்தது.

மூதூர் கிழக்குப் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ளது. இதன் பிரதான கிராமமாக சம்பூர் உள்ளது. இங்குதான் இன்று விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறை அலுவலகமுள்ளது.

சம்பூரில் விடுதலைப் புலிகளின் கடற்தளமொன்றுமுள்ளது. இது திருகோணமலை கடற்படைத் தளத்திற்கும் துறைமுகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாயிருந்தது. ஆனாலும், இந்தப் பிரதேசத்தைப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவராதது துரதிர்ஷ்டமாகும்.

திருகோணமலை துறைமுகத்திற்குள் நுழையும் எந்த வகையான கடற் கலங்களையும் அங்கிருந்து புறப்படும் எந்தக் கடற்கலங்களையும் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மிக உன்னிப்பாக அவதானிக்கக்கூடியதாயுமிருந்தது. இதனால் மூதூர் கிழக்கு எப்போதுமே படையினருக்குப் பெரும் அச்சுறுத்தலானதொரு பகுதியாகவேயிருந்து வந்தது.

தற்போதைய நிலையில் இலங்கையின் வான்படை மிகவும் பலவீனமானது. `கிபிர்' மற்றும் `மிக்' போன்ற சில சுப்பசொனிக் ரக தாக்குதல் விமானங்களைத் தவிர விமானப் படையின் தாக்குதல் பலம் குறிப்பிடத்தக்கதல்ல.

பாரிய துருப்புக் காவி விமானங்கள் எதுவுமில்லாததால் அன்ரனோவ் போன்ற விமானங்களே வடக்கிற்கும் தெற்கிற்குமிடையே குறைந்தளவு துருப்புக்களை ஒவ்வொரு தடவையும் காவிச் செல்லும். அதுகூட படையினரின் தேவையை எந்தளவிலும் நிறைவேற்றுவதாயிருக்கவில்லை.

அத்துடன், ஆனையிறவு படைத்தள வீழ்ச்சியைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் யாழ்நகர் வரை முன்னேறிச் சென்ற போது புலிகளின் ஆட்லறி ஷெல்கள் பலாலி விமானத் தளத்தைப் பதம்பார்த்ததால் யாழ்.குடாவுக்கான வான்வழிப் போக்குவரத்து கேள்விக் குறியானது. இதனால் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையிலான படையினரின் வான்வழிப் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.

இதேபோன்றே காங்கேசன்துறை துறைமுகத்தின் மீதும் கடற்படைத் தளத்தின் மீதும் ஆட்லறிகள் விழ கடல்வழிப் பயணமும் துண்டிக்கப்பட்டது. இறுதியில் யாழ். குடாநாட்டில் நிலைகொண்டிருந்த நாற்பதாயிரம் படையினரையும் மீட்க இந்தியப் படைகளின் அவசர உதவி நாடப்பட்டது `பெருங்கதை'.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போது யாழ். குடாநாட்டின் பெரும் பகுதி படையினர் வசமுள்ளது. யாழ்.குடாவை முற்றுகையிட்ட விடுதலைப் புலிகள் பின்னர் அங்கிருந்து விலக, நாற்பதாயிரம் படையினரும் சற்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

யாழ்.குடாநாட்டைத் தொடர்ந்து தக்கவைப்பதாயின் விமானப் படையினரை அரசு எவ்விதத்திலும் நம்பியிருக்க முடியாது. அவர்களது பலமும் வளமும் குடாநாட்டை படையினர் தக்கவைக்க ஓரளவு பக்கபலமாக இருக்குமே தவிர அவர்களை நம்பி குடாநாட்டை படையினரால் தக்கவைக்க முடியாது. இதனை அரசும் படைத்தரப்பும் நன்குணரும்.

இதனால், கடற்படையினரின் பலமும் வளமுமே யாழ்.குடாநாட்டுக்கான இருப்பை தக்கவைக்குமென்பதுடன் நாலாவது ஈழப்போரைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் கடற்சமர்களே இருக்கப் போகின்றன. இதற்கு கடற்படைத்தளங்களும் துறைமுகங்களும் மிகவும் இன்றியமையாதன.

ஆனால், மூதூரை அரச படைகள் இழந்திருந்தால் மேலும் பலவற்றை அரசு இழந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். இது திருகோணமலை கடற்படைத்தளத்தினதும் திருமலைத் துறைமுகத்தினதும் பாதுகாப்பை முற்று முழுதாக முடக்கிவிடுமென்பதுடன் சீனன் குடாவிலுள்ள விமானப்படைத்தளத்தினது பாதுகாப்புக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலாகிவிடும்.

மூதூர் இறங்குதுறையில் (ஜெற்ரி) சிறியதொரு கடற்படை முகாமிருந்தது. அது, மூதூர் கிழக்கில் கடற்புலிகளின் அச்சுறுத்தலை கண்காணிப்பதாகவுமிருந்தது. எனினும், இந்தப் பிரதேசத்தின் கேந்திர முக்கியத்துவம் இந்தக் கடற்படை முகாமுக்கு இருக்கவில்லை.

தற்போதைய நிலையில் மூதூரின் வீழ்ச்சியை ஒப்புக் கொள்ள படைத்தரப்பு தயாராயில்லை. மூதூரும் அதனை அண்டிய பிரதேசங்களும் தொடர்ந்தும் தங்களது பூரண கட்டுப்பாட்டினுள்ளேயே இருப்பதாக அரசும் படைத்தரப்பும் தொடர்ந்தும் கூறிவந்தன.

மூதூரில் விடுதலைப் புலிகள் நடத்தியது மூதூருக்கான யுத்தமல்ல. கிழக்கிலிருந்து கடற்படையினர் வடக்கே மேற்கொள்ளும் கடற்பயணங்களை முற்றாக முடக்குவதுடன் திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையே தங்களது தரைவழிப் பாதைகளைத் திறக்குமொரு யுத்தமாகவுமே கருதப்பட்டது.

மூதூர் கிழக்கில் புலிகளின் பகுதியிலிருந்து மூதூருக்கான பாதுகாப்பு கவசமாக கட்டைபறிச்சான் படைத்தளமேயிருந்தது. ஆனால், கட்டை பறிச்சானின் வீழ்ச்சியானது.மூதூரை சுலபமாக புலிகள் கைப்பற்ற வாய்ப்பாகியது.

இதேநேரம், மூதூரை தொடர்ந்தும் தக்க வைப்பதாயின் திருகோணமலை-மட்டக்களப்பு வீதியில் (A-15) கிழக்கே மூதூரை அண்டிய பகுதிகளிலுள்ள படை முகாம்களையும் கைப்பற்ற வேண்டியதொரு தேவை புலிகளுக்கேற்பட்டது.

இதையடுத்தே தோப்பூர், பச்சனூர், கிளிவெட்டி பகுதிகளையும் புலிகள் தங்கள் வசப்படுத்தினர். இதன் மூலம் மூதூரை பாதுகாக்க புலிகளுக்கு வாய்ப்பேற்பட்டது. அத்துடன் இந்தப் பிரதேசங்களையும் அவர்கள் கைப்பற்றியதன் மூலம் திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையே தரை வழிப் பாதையைத் திறக்கும் முயற்சியும் பெருமளவில் கைகூடியது.

வடக்கை போலன்றி கிழக்கில் மூவின மக்களுமிருக்கையில் கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் பெருமளவு நிலப் பிரதேசங்களிருந்தாலும் அவற்றுக்கிடையிலான தரை வழித் தொடர்புகள் ஆங்காங்கே முடங்கியுள்ளன. இந்தத் தரை வழித் தொடர்பே எதிர்கால பாரிய படைநகர்வுகளுக்கும் போர்த் தளபாட நகர்த்தல்களுக்கும் மிகவும் அவசியமாகும்.

விடுதலைப் புலிகளை பொறுத்தவரை அவர்களது தரைப் படைகளைப் போன்று கடற்புலிகளும் மிகவும் வலிமையாகவுள்ளனர். தற்போதைய நிலையில் திருகோணமலையில் பாரிய கடற்படைத் தளமும் துறைமுகமும் இருக்கையிலும் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவுக்கும் சம்பூருக்குமிடையே தங்கள் கடற் பயணங்களை அச்சமின்றி மேற்கொள்கின்றனர்.

மூதூரும் புலிகள் வசமானதால் திருகோணமலை கடற்படைத் தளத்தின் பலம் இதுவரை காலமும் மிகவும் குன்றிப் போய்விடுமென்பதால் முல்லைத்தீவுக்கும் மூதூர் கிழக்கிற்குமிடையே மேற்கொள்ளப்பட்டு வந்த கடற்புலிகளின் பயணம் இனி வடக்கிற்கும் கிழக்கிற்குமிடையே பெருமளவில் சுதந்திரமானதாகியிருக்கும். இதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை கிழக்குப் பிராந்திய கடற்படையினருக்கு ஏற்பட்டிருக்கும்.

திருகோணமலையில் குறிப்பிடத்தக்க பகுதி படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்தாலும் வன்னிக்கும் திருமலைக்குமிடையிலான தரைவழிப் போக்குவரத்து தடங்கலின்றியே நடக்கிறது. திருமலையையும் முல்லைத்தீவையும் பிரிப்பதற்காக தமிழீழத்தின் இதயப் பிரதேசமான மணலாற்றை படையினர் ஆக்கிரமித்தாலும் காடுகளினூடாக புலிகளின் படையணி நகர்வும் போர்த்தளபாட நகர்வுமிருக்கிறது.

மூதூர் தொடர்ந்தும் புலிகள் வசமிருந்தால், அது திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்குமிடையில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் போன்ற பகுதிகளில் படையினரின் இருப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாயிருக்கும். மூதூரை புலிகள் தொடர்ந்தும் தக்க வைத்திருந்தால் அது, மூதூருக்கு வடக்கேயுள்ள கிண்ணியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும். அவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்படுமானால் அது, திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் விடுதலைப் புலிகள் வசம் மிகப் பெரும் பகுதியை கொண்டு வந்து விடும்.

தற்போதைய மோதல்களில் கூட விடுதலைப் புலிகள் மூதூர், பச்சனூர், கிளிவெட்டிவரை (A-15) வீதியில் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியதன் மூலம் மூதூர் முதல் மட்டக்களப்பில் வாழைச் சேனைக்கு வடக்கே மாங்கேணி வரையான பல கிலோமீற்றர் (A-15) வீதி புலிகளின் வசமாகிவிட்டதாகவே கருதப்பட்டது.

அடுத்த ஈழப் போர், பண்டைய காலப் போர்களைப் போன்று வெறுமனே படையணிகள் மட்டுமே பொருதும் போராக இருக்கப் போவதில்லை. வன்னியில் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் விமான ஓடு பாதைகள் அமைந்துள்ளதைப் போன்று சம்பூரிலும் விடுதலைப் புலிகள் விமான ஓடு பாதை அமைத்து வருவதாக கூறப்படும் நிலையில் விடுதலைப் புலிகளின் வான் படையும் அடுத்த ஈழப் போரில் களமிறங்குமென அரசும் படைத் தரப்பும் எதிர்பார்க்கின்றன.

அந்தளவிற்கு அடுத்த கட்ட ஈழப்போர் இரு நாடுகளுக்கிடையிலான போராக வெடிக்கலாமென எதிர்பார்க்கப்படுகையில் மாவில் ஆறு அணைக்கட்டை திறக்கும் சமரில் கூட படையினர் மல்ரிபெரல் ரொக்கட்டுகளை (MBRL) பயன்படுத்தியுள்ளதால் விடுதலைப் புலிகளும் கிழக்கு கள முனைகளுக்கு பாரிய கனரக ஆயுதங்களை நகர்த்த வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது.

அதனால், வடக்கு-கிழக்கிற்கிடையில் அவர்கள், பாதுகாப்பான தரைவழிப் பாதைகளைத் திறப்பதன் மூலமே தங்களது கனரக போர்த்தளபாடங்களை இடத்திற்கிடம் விரைந்து நகர்த்த முடியுமென்பதுடன் நகர்த்த வேண்டிய தேவையுமுள்ளது. இதற்காக அவர்கள் தரை வழிப் பாதைகளைத் திறப்பதற்காக பாரிய படை நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுமுள்ளது.

இதேநேரம், இலங்கை படையினர் தங்கள் ஆட்பல எண்ணிக்கைக்கும் அப்பால் சென்று முன்னைய காலங்களில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு நில ஆக்கிரமிப்பைச் செய்த போது, அவர்கள் வடக்கு-கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பரந்து விரிந்து அகலக் காலூன்றி நிலை கொண்டதால் அவர்களைத் தனிமைப்படுத்தி அவர்கள் மீது பாரிய ஊடுருவல் தாக்குதல்களை மேற்கொண்டு படையினருக்கு புலிகள் பேரழிவுகளை ஏற்படுத்தினர்.

இதனால், தற்போது புலிகள் வசமுள்ள பல பகுதிகளைக் கைப்பற்றித் தக்க வைக்க வேண்டிய நிலைமையிலிருந்தும் படையினரால் அதனை மேற்கொள்ள முடியாதளவுக்கு பாரிய ஆட்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து யாழ்குடா நாட்டுக்கான தரை வழிப் பாதையை திறக்கப் புறப்பட்டு வன்னிக் காடுகளுக்குள் படையினர் அகலக் கால்வைத்த போது அவர்கள் சந்தித்த அழிவுகள் சொல்லிலடங்காது.

அதேநேரம், விடுதலைப் புலிகள் யாழ்.குடாநாட்டை 1990 களின் முற்பகுதியில் வைத்திருந்த போது அவர்களது முழுப் பலமும் குடாநாட்டுக்குள் வீணாக முடக்கப்பட்டிருந்தது. அவர்கள் குடா நாட்டை விட்டு வெளியேறி வன்னிக் காடுகளினுள் நுழைந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஒட்டுசுட்டான் முதல் ஓமந்தை வரையான படைத் தளங்களையும் ஆனையிறவு படைத் தளத்தையும் அழித்து யாழ். நகர் வரை சென்றனர்.

தற்போதைய நிலையில் மூதூர் மற்றும் அதனைச் சுற்றிய பிரதேசங்களில் புலிகள் மேற்கொண்ட பாரிய நகர்வுகளின் அடுத்த கட்டம் பற்றி புலிகள் சிந்தித்திருப்பர். தங்களது ஆட்பலம் மற்றும் ஆயுத பலத்திற்கேற்ப அகலக் கால் வைக்கின்றோமா அல்லது படையினரிடமிருந்து கைப்பற்றிய இப்பிரதேசங்களை கைவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதா என்றும் சிந்தித்திருப்பர்.

மூதூரையும் அதனை அண்டிய பகுதிகளையும் புலிகள் தொடர்ந்தும் தக்க வைப்பதாயின் அவர்களது படை நகர்வு தொடர வேண்டும். வடக்கு-கிழக்கில் அனைத்து மக்களுக்கும் ஆயுதப் பயிற்சிகளை வழங்கி பல்லாயிரம் பேரைக் கொண்ட தமிழீழ தேசிய துணைப் படையையும் மக்கள் படையையும் உருவாக்கியுள்ளதால் அவர்களையும் தங்களது அடுத்த கட்ட நகர்வுகளில், இடங்களைத் தக்க வைக்க பயன்படுத்தக் கூடும்.

அதேநேரம், இந்தபாரிய நகர்வின் மூலம் திருகோணமலைக் கடற்படைத் தளத்திற்கு ஏற்படப் போகும் பேராபத்தால் புலிகள் யாழ். குடா முற்றுகையையும் மேற்கொண்டு அங்கிருக்கும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட படைகள் வெளியேற வேண்டிய நிலையேற்பட்டால் அவை கிழக்கே வந்து சேரும்.

இது களமுனையில் புலிகளுக்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தலாம். அத்துடன் கிழக்கில் படையினர் பெருமெடுப்பில் புலிகள் மீது பாரிய தாக்குதல்களைத் தொடுக்கும் வாய்ப்பையும் இது உருவாக்கலாம். இதனால், கள நிலைமைக்கேற்பவும் தங்கள் படைப்பலம் மற்றும் ஆயுத வளத்திற்கேற்பவும் அவர்கள் செயற்படுவார்களென்றே எதிர்பார்க்கப்படுகிறது.

போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையிலும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு களத்தில் நிற்கையிலும் கடந்த சில தினங்களில் எவ்வளவோ மாற்றங்கள் நடைபெற்று முடிவடைந்து விட்டன.மூதூர் மற்றும் அதனை அண்டிய பல பிரதேசங்களை கைப்பற்றிய புலிகள் பின்னர் அங்கிருந்து விலகியுள்ளனர்.

மாவில் ஆற்றுப் பிரச்சினையில் படித்த பாடத்தை அரசு இனி மறக்கக் கூடாது. இப்பிரச்சினை புலியின் வாலைப் பிடித்த கதையாகி விட்டதால், இனியாவது அரசு தனது பலத்தையும் படைகளின் பலத்தையும் உணர்ந்து செயற்பட வேண்டுமென அனைவருமே ஆலோசனை கூறுகின்றனர்.


விதுரன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..