முல்லைத்தீவில் 16 குண்டுகளின் சிதறல்களிடையே சிக்கி மரண ஓலம் எழுப்பி நம் பிஞ்சுப் பிள்ளைகள் மாண்டுபோய்விட்டன. மகிந்தவும் அவரது பரிவாரக் கும்பல்களும் மீண்டும் தமது "சிந்தனாக்களை" தமிழ்ப் பிஞ்சுகளின் இரத்தத்தால் எழுதியுள்ளன.
முதலுதவி பயிற்சி நெறிக்காக திரண்டுநின்ற அப்பாவி பாடசாலை சிறுமிகளுக்கு ஈவிரக்கமற்ற சிங்களப்படைகள் முடிவெழுதி சென்றிருக்கின்றன. |
தமது மக்களுக்கு தண்ணீர் தேவையென்பதற்காக தமிழரின் இரத்தத்தை கறக்கும்
இனவெறி பிடித்த பௌத்த மேலாதிக்க இனக் கழுகாக உருவெடுத்துள்ள மகிந்த,
முன்பிருந்த சந்திரிகாவின் மறு அவதாரமாக வெளிப்பட்டு நிற்கிறார்.
அன்று நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது ஏழு குண்டுகளை சந்திரிகா வீசினார்.
இன்று முல்லை செஞ்சோலை மீது 16 குண்டுகளை வீசியுள்ளார் மகிந்த.

தென்னிலங்கை பிக்குகளுக்கும் அங்கு யுத்தவெறியில் திரியும் இனவெறிக்
கும்பல்களுக்கும் தனது வீரத்தை பிஞ்சுகள் மீது குண்டுவீசி
நிரூபிக்கிறாராம் மகிந்த.
தமிழர் பகுதிகளிலிருந்து தண்ணீர் வருகிறதோ இல்லையோ இரத்தம் மட்டும் ஆறாகப்பாய்கிறது. அதுவும் பிஞ்சு ரத்தம்.
தீவுப்பகுதியில் மாதா கோயிலில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு மரண சாசனம்
எழுதிய கையோடு முல்லைப் பிஞ்சுகளிடம் மூர்க்கத்தை காட்டியிருக்கிறது
மகிந்தவின் காடைக் கும்பல்.
இந்தப்பிஞ்சு உள்ளங்கள் என்னதான் தவறு செய்தன?
நெஞ்சில் ஈரமும் இரக்கமும் கருணையும் காருண்யமும் உள்ள ஒவ்வொரு
ஜீவனினதும் ஆன்மாவை உலுப்பிய அந்த பிஞ்சுகளின் "வீல்" என்ற அலறல் சத்தம்
எப்படி காற்றில் கலந்து கரையும்? தமிழீழ வான் பரப்பிலிருந்து எப்படி
மறையும்?
1956 இல் தொடங்கி 58 இல் நடைபெற்று 77 இலும் அதனை அரங்கேற்றி 83 இல் அதனை பெருமெடுப்பில் நடத்தி -
1984 இல் சுன்னாகத்திலும்
1985 இல் குமுதினி படகிலும் திரியாயிலும்
1986 இல் இருதயபுரம் அக்கரைப்பற்றிலும்
1987 இல் கொக்கட்டிச்சோலையிலும்
1990 இல் கண்ணபுரத்திலும் சத்துருக்கொண்டானிலும்
1991 இல் கொக்கட்டிச்சோலையிலும்
1995 இல் நவாலியிலும் ஜயந்திபுரத்திலும்
1996 இல் குமாரபுரத்திலும்
1997 இல் களுத்துறை சிறையிலும்
1998 இல் செம்மணியிலும்
2000 இல் பிந்துனுவெவவிலும்
2006 இல் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, வங்காலை, பேசாலை, திருகோணமலை
மற்றும் முல்லைத்தீவிலுமாக சிறிலங்கா இராணுவ் நடத்தியவை எல்லாம் தமிழ்
மக்களுக்கு எதிரான "மட்டுப்படுத்தப்பட்ட" "மனிதாபிமான" நடவடிக்கை.
எது உங்கள் மனிதாபிமானமும் மட்டுப்படுத்தலும்?
கிபிர் குண்டுகள் விழுந்து சிதறி உடல் கிழிந்த போது அந்த பிஞ்சுகள் கதறிய ஈனக்குரல் அவர்களுக்குக் கேட்காது. கேட்டிருக்காது.
16 குண்டுகளின் சன்னங்கள் பட்டு சின்னபின்னமான எங்கள் வருங்கால
தலைமுறைகளை நினைவுச் சின்னமாக்கி விட்டீர்களே.. அந்த கணப்பொழுதில் கத்திய
எங்கள் தேசத்தின் கண்ணின் மணிகளின் கடைசிக்குரல் அவர்களுக்குக் கேட்காது.
கேட்டிருக்காது.

அவர்களுக்கு கேட்கும் மொழி என்னவென்று தமிழனுக்குத் தெரியும். எங்கள் தலைவருக்கும் தெரியும்.
தமிழனின் உயிர் உறிஞ்ச வானத்தில் வரும் இரும்பு பறவைகளுக்கு நிச்சயம் விரைவில் முடிவு கிடைக்கும்.
எங்கள் "செல்லப்பறவை" களை சிதைத்துவிட்டுப் போன சிறிலங்காவின் அந்த
"செல்லப்பறவை" ஒரு நாள் தமிழர் தாயகத்தில் சிறகொடிந்து வீழும். அது
நிதர்சனமானது.
புலம்பெயர் வாழ் தமிழர்களே!
நம் பெருந்தலைவர் நமக்கிருக்கும் வரை கவலை என்ன?
காலத்தால் செய்ய வேண்டியதும் நம் இனத்தின் வாரது வந்த கதிரவனின் கரத்தை வலுப்படுத்துவதும் எப்போதும் போல் கடமையாகக் கொள்வோம்.
தீவகத்துப் பிஞ்சுக் குழந்தைக்காய் நீதி கேட்டு பெருந்திரளாய் உரிமைக்குரலாய் பேரணியாய் புறப்பட்ட உறவுகளே!
நம் பிஞ்சு மொட்டுகளை கதற கதற கொன்ற இந்த பாசிசவாதிகளை எப்போது சர்வதேச நீதிமன்றக் கூண்டில் ஏற்றுவோம்?
இனி நாம் தட்டும் சர்வதேசத்தின் கதவுகள் நம் தேசத்தின் விடுதலைக் கதவுகளாய் திறக்கட்டும்!
இனி நாம் முட்டி மோதும் மன்றங்கள் எல்லாம் நம் விடுதலை வென்றெடுக்கும் மன்றங்களாக இருக்கட்டும்!
நிறுத்தியே ஆவோம் என்பதற்காய் உழைப்போம்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர் ஒவ்வொருவரது இனத்துக்கான வரலாற்றுக்கடன் தீர்க்கும் பொறுப்பு ஒவ்வொரு நாளும் வாயிற்கதவை தட்டுகின்றது.
நம் இனத்தின் உயிரை விலைபேசும் சக்திகளை சர்வதேசத்தின் முன்வைத்து
சங்காரம் செய்யும் வாய்ப்புகளை எதிரிகளே நம் முன்னே விரித்து வைக்கிறான்.
தொடர்புபட்ட செய்தி: முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது கொடூர விமானத் தாக்குதல்: 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை- 129 பேர் படுகாயம்
நெருடல் இணையம்
|