|
|
|
முல்லைத்தீவு படுகொலை மன்னிக்க முடியாத கொடூரம்: "தினமணி" நாளேடு கண்டனம் |
|
|
|
Thursday, 17 August 2006 |
சிறிலங்கா விமானப் படையின் விமானத் தாக்குதலில் முல்லைத்தீவில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை மன்னிக்க முடியாத கொடூரம் என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் "தினமணி" நாளேடு கண்டனம் தெரிவித்துள்ளது.
"தினமணி" நாளேட்டின் இன்றைய நாளிதழில் (ஓகஸ்ட் 17) "மன்னிக்க முடியாத கொடூரம்" என்ற தலைப்பில் வெளியாகி உள்ள தலையங்கம்:
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்டு வரும் மோதல்
அந்நாட்டில் மீண்டும் முழு வீச்சில் போர் ஏற்படும் சூழ்நிலையை
ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் நடத்தி வரும் செஞ்சோலை
ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் மீது இலங்கைப் போர் விமானங்கள் குண்டு வீசித்
தாக்குதல் நடத்தியதில் 61 மாணவிகள் அங்கேயே உடல் சிதறி இறந்துள்ளனர்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் பெற்றோர்களை இழந்து, ஆதரவற்று
நிர்க்கதியாக உள்ள குழந்தைகள்தான் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளைக் கொல்வது எந்தவிதமான போர் விதிமுறைகளுக்கும் எதிரானது.
ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு விடுதலைப் புலிகள்
பயிற்சியளிப்பதாக இலங்கை இராணுவத்தினர் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம்
இல்லை என்று சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்ட யுனிசெப் மற்றும் நார்வே
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் தமிழகத்திலும் பரவலாக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசு இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தி உள்ளனர்.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதைத்
தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசை இந்தியா நிர்பந்திக்க வேண்டும் என்று
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
"இலங்கையில் இருதரப்பினரும் போர்நிறுத்த உடன்பாட்டை மதித்து சமரசப்
பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். இலங்கையின் சீர்குலைவு, தமிழ்நாடு
மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்,
அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வதற்கு இந்திய அரசு ஆதரவு அளிக்கும் என இலங்கை
இராணுவமும் அரசும் கருத இடம் அளித்துவிடக் கூடாது'' என்று இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளதையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தின் மீது குண்டுவீச்சு, அதைத் தொடர்ந்து
கொழும்பில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதல்களையடுத்து கொழும்பிலும்
பீதி நிலவுகிறது. வடகிழக்குப் பகுதிகளில் கொந்தளிப்பான சூழ்நிலை காரணமாக
வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்களில் தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சம் புக
வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது. எனவே போர் நிறுத்தம் செய்து மீண்டும்
பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச்
செயலாளர் கோபி அன்னான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் சண்டை கடுமையானால் அதன் விளைவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்பதை மத்திய அரசு மறந்துவிடக் கூடாது.
இலங்கைப் பிரச்சினையில் கடந்த காலத்தைப்போல இந்தியா நேரடியாகத் தலையிட
வாய்ப்புகள் குறைவு என்றாலும் வெறும் பார்வையாளர்போல மௌனமாக இருந்துவிட
முடியாது.
இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு சம உரிமையுடன் தமிழர்களை வாழச்
செய்வதற்கான நடவடிக்கைகள் மூலமே இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த
முடியும். பரஸ்பரத் தாக்குதல்கள் மூலம் எந்த வெற்றியையும் பெற்று விட
முடியாது என்பதை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் உணர்ந்து செயல்பட
வேண்டும்.
உள்நாட்டுப் போரில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களே.
போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்தி இருதரப்பினரும் திறந்த மனத்துடன்
பேச்சுவார்த்தைக்கு முன்வருவதன் மூலமே இலங்கையில் தற்போதைய பதற்ற நிலையைத்
தணிக்க முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|
|