வலி.மேற்கு பகுதி முகாம்கள் அகற்றப்பட்டுள்ளமையினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காரைநகர் கடற்படைத் தளம்!
 யாழ். குடாவில் மோதல்கள் மிக உக்கிரமடைந்துள்ளன. சமர்க்களத்தில் எந்நேரமும் எதுவித மாற்றங்களும் ஏற்படலாமென்ற நிலையில் இரவு, பகலாக கடும் சமர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படையணிகளின் நேரடி மோதலை விட படைக்கலங்களின் தாக்குதல்களே தீவிரமடைந்து வருகின்றன. கனரக ஆயுதங்களின் தாக்குதல்கள் மூலம் களமுனையில் திடீர் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
முகமாலை முன்னரங்க பாதுகாப்பு நிலைகளூடாக படையினரே கடந்த வாரம் பாரிய தாக்குதலைத் தொடுத்ததாகவும் அதற்கே தாங்கள் பதிலடி கொடுத்து வருவதாகவும் புலிகள் கூறுகின்றனர். ஆனால், யாழ். குடா முற்றுகையை புலிகள் ஆரம்பித்துள்ளதாகவும் அதனை முறியடிக்கும் தீவிர நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாகவும் படைத்தரப்பு கூறுகின்றது.
2000 ஆம் ஆண்டில் ஆனையிறவு படைத்தள அழிப்பின் பின்னர் புலிகள் யாழ். குடாநாட்டுக்குள் பல்வேறு வழிகளாலும் நுழைந்தபோது, `ஏ-9' வீதியூடாக நகர்ந்த புலிகளின் படையணிகள் தென்மராட்சியின் தெற்கே கிளாலி முதல், அதேநேர்கோட்டில் முகமாலை மற்றும் வடமராட்சி கிழக்கில் நாகர்கோவில் வரை நகர்ந்து சென்றிருந்தன.
இந்த மூன்று பகுதிகளும், கழுத்திலிருந்து தலைக்குச் செல்லும் ஒடுங்கிய ஒடுங்கிய பகுதி போன்று ஒரே நேர்கோட்டிலுள்ளன. ஆனையிறவு படைத்தள அழிப்பின் பின்னர் ஆனையிறவு படைத்தளப் பாதுகாப்புக்குச் சமனாக இந்தப் பிரதேசங்களை படையினர் மிகவும் வலிமை மிக்க தளங்களாக்கியிருந்தனர். யுத்த நிறுத்தம் முறிவடைந்து மீண்டும் சமர் வெடித்தால் புலிகளின் பிரதான இலக்காக யாழ். குடாநாடும் இருக்குமென்பதால் புலிகள் குடாநாட்டு முற்றுகையை மேற்கொள்ளும் அனைத்து வழிகளையும் படையினர் அடையாளம் கண்டு அவற்றைப் பலப்படுத்தினர்.
புலிகள் 1991 இல் மேற்கொண்ட ஆனையிறவு முற்றுகையை படையினர் முறியடித்தபோது புலிகளின் ஆளணி வளமும் ஆயுத பலமும் மிகக் குறைவாகவேயிருந்தது. எனினும், 2000 ஆம் ஆண்டில் அவர்கள் ஆனையிறவு படைத்தள முற்றுகையை மேற்கொண்டபோது, நிலைமை வேறுவிதமாயிருந்தது.
யாழ். குடாநாடு புலிகளின் வசமிருந்தபோது, புலிகளால் ஆனையிறவை வெற்றி கொள்ள முடியவில்லை. அதேபோல், யாழ். குடாநாடு படையினர் வசமிருந்தபோது படையினரால் ஆனையிறவைத் தக்க வைக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் யாழ். குடாவை விடுதலைப் புலிகள் மீண்டும் முற்றுகையிட்டால் அதனைத் தடுக்கும் நடவடிக்கையில் படையினரும் இறங்கியிருந்தனர்.
கிளாலி- முகமாலை- நாகர்கோவில் ஆகிய மூன்று பிரதேசங்களும் ஒரே நேர்கோட்டிலிருக்கையில், புலிகளின் தரைவழித் தாக்குதல் இதனூடாகவே ஆரம்பமாகுமென்பதையும் படையினர் அறிந்திருந்தனர்.
கிளாலி கடற்படைத் தளமானது, புலிகளுக்கு எப்போதுமே பெரும் நெருக்கடி கொடுக்கும் வலுவானதொரு நிலையாகவேயுள்ளது. கடற்படைத்தளமாகவும் தரைவழியில் முன்னரங்க காவல் நிலையாகவும் ஆட்லறி ஏவு தளமாகவும் உள்ளது. மிக வலுவான நிலத்தடி பதுங்குகுழிகள் இன்றும் அங்கு படையினருக்கு பெரும் பாதுகாப்பாகவேயுள்ளது.
கிளாலி கடற்படைத் தளத்திலிருந்தே யாழ். கடல் நீரேரியில் புலிகளின் கடல் வழி நகர்வுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் படையினர் ஈடுபட்டுள்ளனர். கிளாலி கடற்படைத்தளம் புலிகள் வசம் விழுமானால் அல்லது `ஏ-9' வீதியில் தற்போது படையினரின் வலுமிக்க தளமாயிருக்கும் எழுதுமட்டுவாள் படைத்தளம் புலிகளிடம் விழுமாயின், புலிகளின் தென்மராட்சி முற்றுகை மிக இலகுவாகிவிடும்.
கிளாலி மற்றும் முகமாலை பகுதிகளே இதுவரை காலமும் படையினரின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளாகும். எனினும், கிளாலி கடற்படைத்தளத்தின் வலுநிலைக்கு இணையாக முகமாலை படைத்தளத்தின் பலம் இருக்கவில்லை. இதனால் கிளாலிக்கு இணையாக முகமாலைக்கு பின்புறமாக எழுதுமட்டுவாளில் உள்ள படைத்தளம் மிகவும் வலுப்படுத்தப்பட்ட எந்த நிலைமையையும் சமாளிக்கும் விதத்தில் தயார்படுத்தல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதேபோல், கடந்த வெள்ளிக்கிழமை (11 ஆம் திகதி) புலிகள் முகமாலை நிலைகளை சுலபமாக தாக்கியழித்து உள் நுழைந்தனர். மறுநாள் முழுவதும் கடும் சமர் நடைபெற்றது.
13 ஆம் திகதி புலிகள் நடத்திய உக்கிரத் தாக்குதலையடுத்து, முகமாலைப் பிரதேசம் முற்று முழுதாக புலிகள் வசமாகியது. இதனால் முகமாலையில் நிலைகொண்டிருந்த படையணிகள் `ஏ-9' வீதியிலிருந்து பின்வாங்கி கிளாலிப் பகுதிக்கும் எழுதுமட்டுவாளுக்கும் சென்றுவிட பெரும் பிரதேசம் புலிகள் வசமானது.
படையினர் எதிர்பார்த்தது போன்றே, புலிகள் முதலில் `ஏ-9' வீதியூடாகவே முகமாலையை கைப்பற்றிக் கொண்டு முன்னேறினர். இதையடுத்து, புலிகள் கிளாலி மற்றும் எழுதுமட்டுவாளில் படையினரின் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் கிளாலியும் எழுதுமட்டுவாளுமே குடாநாட்டுக்குள் புலிகள் முழுமையாக நுழைவதைத் தடுக்கும் பெரும் அரண்களாகவுள்ளன. குடாநாட்டின் சகல பகுதிகளிலுமிருந்து இவ்விரு பகுதிக்கும் படையினர் தொடர்ந்தும் தங்கள் ஆளணி மற்றும் ஆயுத பலத்தை விநியோகித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமத்தின் ஏனைய பகுதிகளிலெல்லாம் படைமுகாம்கள் மூடப்பட்டு தற்போது அங்கிருந்த ஆளணிகளும் ஆயுதங்களும் தென்மராட்சி போர் முனைக்கு நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முப்படையினரதும் படை பலம் இப் பகுதியை மையப்படுத்தியுள்ளது. பலாலி படைத்தளமே குடாநாட்டில் படையினருக்கான மிகப்பெரும் விநியோக மையமாகும். இங்கிருந்தே யுத்த முனைகளுக்கு தேவைக்கேற்ப கனரக ஆயுதங்கள் நகர்த்தப்படும். யாழ். குடாவில் இராணுவத் தலைமையகமான பலாலியிலேயே விமானப்படைத் தளமும் அமைந்துள்ளது. இதனோடு இணைந்தே காங்கேசன்துறை துறைமுகமும் கடற்படைத்தளமுமுள்ளது. யாழ். குடாநாட்டில் படையினருக்கு தரைவழித் தொடர்புகள் இல்லாத நிலையில் வான் வழி விநியோகமும் கடல் வழி விநியோகமுமே இருந்தன. குடாநாட்டில் நிலைகொண்டிருக்கும் 40,000 படையினரதும் பிரதான விநியோக மற்றும் வழங்கல் மையங்களாக பலாலியும் காங்கேசன்துறையுமே உள்ளன.
இதனால் இந்த விநியோக மையத்தை புலிகள் தற்போது தங்களது ஆட்லறி ஷெல் தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்துள்ளனர். கடந்த 12 ஆம் திகதிக்குப் பின்னர் இங்கு எந்தவொரு விமானமும் தரையிறங்கவில்லை. எந்தக் கப்பலும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கோ, கடற்படைத்தளத்துக்கோ வரவில்லை. யுத்த முனையில் கடந்த எட்டு நாட்களாக படையினர் பெருமளவு ஆயுதபலத்தைப் பயன்படுத்தியுள்ளனர். தொடர்ந்தும் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில் படையினருக்கு ஷெல்கள், மோட்டார் குண்டுகள், பல்குழல் ரொக்கெட் செலுத்திகளுக்கான ரொக்கட்டுகளை மேலும் மேலும் பெற வேண்டியுள்ளது.
திருகோணமலைத் துறைமுகத்திலிருந்தும் படையினருக்கான கடல்வழி விநியோகங்களைத் தடுக்கும் விதத்தில் அங்கு புலிகள் அடிக்கடி ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்தி வருவதால் குடாநாட்டில் ஏற்கனவே இருந்த போர்த் தளபாடங்களை வைத்தே போரிட வேண்டிய கட்டாய சூழ்நிலை படையினருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேநேரம், பலாலி படைத்தளம் மீதான புலிகளின் தொடர்ச்சியான ஆட்லறி ஷெல் தாக்குதலால் விமான ஓடுபாதை பலத்த சேதமடைந்துள்ளது. தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டுக் கோபுரமும் பலத்த சேதமடைந்துள்ளது. இராணுவ வைத்தியசாலையும் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றது. போர் முனையில் படுகாயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சையளிப்பதிலும் அவர்களைத் தென்பகுதிக்கு அனுப்புவதிலும் பெரும் நெருக்கடிகளை படையினர் எதிர்கொள்கின்றனர். இடையிடையே தரையிறங்கும் ஹெலிகொப்டர்களிலேயே அவசர அவசரமாக படுகாயமடைந்தவர்கள் அனுப்பப்படுகின்றனர்.
தற்போது குடாநாட்டில், வலிகாமம் மேற்கு மற்றும் பகுதிகளில் படைமுகாம்கள் அகற்றப்பட்டுவிட்டதால் காரைநகர் கடற்படைத்தளமும் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. பலாலி மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்களிலிருந்து மாதகல், திருவடிநிலை, பொன்னாலை ஊடான தரைவழி விநியோகமும் எவ்வேளையிலும் தடுக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தென்மராட்சியில் கிளாலி மற்றும் எழுதுமட்டுவாள் படைநிலைகள் மீது புலிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஆட்லறி ஷெல் தாக்குதலும் மோட்டார் தாக்குதலும் அப்பகுதியிலுள்ள படையினரை நிலைகுலைய வைத்து வருகின்றது. கொல்லப்படும், காயப்படும் படையினருக்கான மாற்றீடுகள் மேற்கொள்ளப்படும் அதேநேரம், இவ்விரு படைத்தளங்களிலும் போராடும் அணிகள் நன்கு களைத்துப் போய்விட்டன.
இதனால் தென்மராட்சியை நோக்கி தொடர்ச்சியாக ஆளணிகளை அனுப்பிக் கொண்டிருப்பதால், தென்மராட்சிக்கு அப்பால் படையினரின் பின்புலம் மிகவும் பலவீனமடைந்து வருகிறது. படையினரின் முழுக் கவனத்தையும் தென்மராட்சியில் திசை திருப்பியுள்ள புலிகள் அவர்களது ஆளணியையும் ஆயுத பலத்தை தென்மராட்சிக்குள் இழுத்து இழக்கச் செய்வதில் தீவிர கவனம் செலுத்துகின்றனர்.
இதேநேரம், தென்மராட்சிக்குள் குறிப்பாக, போர் நடைபெறும் பிரதேசங்களை அண்டிய பகுதி மக்களை வெளியேற படையினர் அனுமதிக்காததால் ஆயிரக்கணக்கான மக்கள் போர் முனைகளுக்குச் சமீபமாகச் சிக்கிப் போயுள்ளனர். இதனால் போர் முனையில் மிகத் தீவிர தாக்குதல்களை மேற்கொள்வதிலும் புலிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
மக்களை படையினர் இந்தப் பிரதேசங்களிலிருந்து வெளியேறவிடாது தடுத்து பணயம் வைத்துள்ளதாகவும் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தென்மராட்சியிலிருந்தும் தீவுப் பகுதியிலிருந்தும் மக்கள் வெளியேறுவதற்கு படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். கிளாலி படைத்தளம் விழுமானால், அது எழுதுமட்டுவாள் படைத்தள வீழ்ச்சிக்கும் வழிகோலும் அல்லது எழுதுமட்டுவாள் படைத்தளம் விழுமானால், அது கிளாலியின் வீழ்ச்சிக்கும் வழிகோலும்.
இதனால், இருக்கும் வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தும் படையினர் நீண்ட தூர ஆட்லறி ஷெல்கள் மூலம், புலிகள் நிலை கொண்டுள்ள பகுதிகள் மீது தொடர்ச்சியாக கடும் தாக்குதலை நடத்தி வருவதுடன் விமானத் தாக்குதல்களும் மிகவும் உக்கிரமடைந்துள்ளன.
தென்மராட்சி படைத்தளங்களின் வீழ்ச்சிக்காக புலிகள் காத்திருக்கின்றனர். தங்கள் முற்றுகையை அனைத்து வழிகளாலும் இறுக்குகின்றனர். படையினர் தங்கள் முழுக் கவனத்தையும் கிளாலி மற்றும் எழுதுமட்டுவாள் பகுதிகளில் செலுத்திவிட்டதால் அவர்களது ஆள்பலமும் ஆயுத பலமும் இங்கேயே குவிந்து கிடக்கின்றன.
தென்மராட்சியில் தற்போதைய களநிலை படையினருக்குச் சாதகமாயிருப்பதால் புலிகள் தங்கள் போரிடும் அணிகளைப் பயன்படுத்துவதைக் குறைத்து ஆள் இழப்பை முடிந்தளவுக்கு தவிர்ப்பதுடன் கனரக ஆயுதங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இந்தக் களமுனை தங்களுக்கு சாதகமாயிருப்பதாக கருதி படையினர் இங்கே தங்கள் ஆட்பலத்தை அதிகம் நிறுத்தியுள்ளதால் அவர்களுக்கு பேரிழப்புகள் ஏற்படுகின்றன.
சாதகமற்ற களமுனையில் தந்திரமாக காய் நகர்த்தி எதிரிக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தி அவர்களது பின்புலத்தை பலவீனப்படுத்துவதில் புலிகள் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். எந்தளவுக்கு ஆட்பலத்தையும் ஆயுதபலத்தையும் தென்மராட்சி களமுனையில் மையப்படுத்தியபோதும் படையினரால் தாங்கள் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்ற முடியாமல்போன நிலைமை அவர்களது பலவீனத்தையே காட்டுகிறது.
இதேநேரம், போர் தொடங்கிய நேரம் முதல் யாழ். குடாநாட்டுக்கும் வெளியிடங்களுக்குமான கையடக்கத் தொலைபேசி தொடர்புகள் செயலிழந்துவிட்டன. குடாநாட்டில் படையினரில் மிகப் பெரும்பாலானோர் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வந்த நிலையில் இவை செயலிழந்தமை இராணுவ தலைமைப்பீடத்தின் உத்தரவுப்படியே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. கள நிலைமை குறித்து தென்பகுதிக்கு தகவல்கள் எதுவும் தெரிந்துவிடக் கூடாதென்பதுடன் படையினரின் குடும்பத்தவர்கள் படையினரின் மனோ நிலையை பாதித்து விடுவார்களென்பதாலேயே கையடக்கத் தொலைபேசிகள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது படையினரின் மனோ நிலையை பெரிதும் பாதித்துள்ளது. இந்த நிலையில் பெரும் இழப்புகளை சந்தித்தவாறும் விநியோகங்கள் எதுவுமற்ற நிலையிலும் தொடர்ந்தும் படையினர் எந்தளவிற்கு எவ்வாறு போரிடுவர் என்ற கேள்வியும் எழுகிறது. புலிகளுக்கு தற்போதைய களமுனையில் தரைவழித் தொடர்புகளிருப்பதால் அவர்கள் தங்கள் விநியோகங்களை இலகுவாக மேற்கொள்கின்றனர்.
பலாலி படைத்தளம் மீதான தாக்குதலும் அங்கிருந்தும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்தும் பெருமளவு படையணிகள் களமுனைக்கு நகர்த்தப்பட்டு வருவதாலும் அந்தப் பிரதேசங்களினுள் புலிகளின் அணிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் குடாநாட்டினுள் புலிகளின் அணிகளது ஊடுருவல்களையும் தடுக்க வேண்டிய நிலை படையினருக்கு ஏற்பட்டுள்ளது.
கள நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படாவிடினும் படையினரின் களப்பின்புல நிலைமைகள் தொடர்ந்தும் பலவீனமடைந்து வருகின்றன. இதனால் இந்த முற்றுகைச் சமர் உடனடியாக முடிவுக்கு வரும் சாத்தியமில்லை.
படையினர் விநியோகங்களுக்காக காத்திருக்கையில், கடற்பரப்பில் கடற்புலிகளின் கண்காணிப்பும் தீவிரமடைந்துள்ளது. கடல்வழி விநியோகப் பாதையை அவர்கள் தடை செய்துள்ளதால் இந்திய கடற்படையினரின் போர்க் கப்பல்கள் மூலம் யாழ். குடா படையினருக்கான விநியோகங்களை மேற்கொள்வதற்கான முயற்சியிலும் அரசு தீவிரமாக இறங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்தியக் கப்பல்களை புலிகள் தாக்கமாட்டார்களென்பதால் அந்த உதவியையாவது வழங்குமாறு இந்தியாவை இலங்கைகோரி வருவதாகவும் ஆனால் தற்போதைய தமிழக நிலையை கருத்தில் கொண்டு இந்தியா இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மண்டைதீவில் திறக்கப்பட்ட களம்
யாழ்.குடா முற்றுகையில் இம்முறை மண்டைதீவு கடற்படைத்தளம் மற்றும் அங்கிருந்த ஆட்லறி நிலைகள் மீதான புலிகளின் முற்றுகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
2000 ஆம் ஆண்டில் ஆனையிறவு படைத்தள அழிப்பின் பின்னர் புலிகளின் யாழ்.குடா முற்றுகை முடிவுறாது போனதால் படையினரால் மண்டைதீவின் முக்கியத்துவம் உணரப்பட்டது.
யாழ்.குடாவின் தரையமைப்புக்கு அமைய யாழ்.குடாவினுள் முகமாலையூடான புலிகளின் தரைவழி நகர்வு தடுக்கப்பட்டால் குடாநாட்டினுள் புலிகள் நுழைவதற்கு வேறுசில வழிகளுள்ளன.
வடமராட்சி கிழக்கை வேறொரு சந்தர்ப்பத்தில் கருத்திலெடுத்து, தற்போது போர் நடைபெறும் பகுதிகளை அவதானித்தால் சங்குப்பிட்டி - கேரதீவு ஊடாக புலிகள் தென்மராட்சியினுள் கடல்வழியாக நுழைய முடியும். ஆனால் தற்போது, கேரதீவுக்கு அப்பால் தென்மராட்சியில் அறுகுவெளி, மறவன்புலோ, தனங்கிளப்பு உள்ளடங்கலாக படையினர் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அமைத்து பெரும் படைத்தளங்களை அமைத்துள்ளனர். இதனால் இந்தப் பிரதேசங்களில் புலிகளின் கடல் வழித் தரையிறக்கம் சாத்திய மற்றுப் போனது.
இதேபோல் சங்குப்பிட்டியில், இடதுபுறமாகத் திரும்பி கௌதாரிமுனை, கல்முனை ஊடாக அரியாலை கிழக்கில் கடல்வழியாகத் தரையிறங்கி மணியந் தோட்டத்தினூடாக நகர முடியும். ஆனால், அதுவும் தற்போது அதிஉயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு பெரும் படைத்தளங்களாக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில் தீவுப் பகுதி இம்முறை குடாநாட்டு முற்றுகையில் முக்கியத்துவம் மிக்கதாய் அமைந்தது. மண்டைதீவில் கடற்படையினர் தளம் அமைத்து அங்கு ஆட்லறி நிலைகளையும் அமைத்ததன் மூலம், கல்முனை மற்றும் பூநகரி கடல் பரப்பினூடான புலிகளின் கடல்வழித் தரையிறக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாயிருக்கலாமென படைத்தரப்பு கருதியது.
அதேநேரம், யாழ். குடாவில் புலிகள் தங்களது முற்றுகையை இறுக்க வேண்டுமாயின் பலாலி விமானப் படைத் தளத்தையும் காங்கேசன்துறை துறை முகத்தையும் தங்கள், நீண்ட தூர ஷெல் தாக்குதலின் ஆதிக்கத்தினுள் கொண்டுவர வேண்டும்.
அதற்குப் புலிகள் கல்முனை மற்றும் பூநகரிப் பகுதிகளிலேயே தங்களின் ஆட்லறி நிலைகளை அமைப்பார்களென்பதால் அவற்றை முடக்க மண்டைதீவில் கடற்படைத்தளம் அமைத்து கடற்கண்காணிப்பை விஸ்தரித்து புலிகளின் கடல் வழித் தரையிறக்கத்தை முடக்குவதுடன், மண்டைதீவில் ஆட்லறி நிலைகளை அமைப்பதன் மூலம் கல்முனை மற்றும் பூநகரியிலிருக்கும் புலிகளின் ஆட்லறி நிலைகளை அழிக்க முடியுமெனவும் படைத்தரப்பு கருதியிருந்தது.
இந்த நிலையில், தீவுப் பகுதியில் புலிகள் மேற்கொள்ளும் தரையிறக்கமும் அவற்றை தங்களின் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதன் மூலமும் யாழ்.குடாவை முற்றுகைக்குள் கொண்டு வந்துவிட முடியுமென்பதை விட, தீவுப் பகுதிகளைத் தக்க வைப்பதன் மூலம் படையினரால் யாழ்.குடா முற்றுகையைத் தடுக்க முடியுமென்ற நம்பிக்கை அவர்களிடமிருந்தது.
இப்போது, புலிகள் தீவுப் பகுதியை எதிர்கொள்ளும் நிலையில் மிக முக்கிய தீவான மண்டைதீவைப் பார்ப்போம். அங்கு கடற்படையின் சிறிய தளமும் (ஆனால் முக்கியத்துவமானது) ஆட்லறி நிலைகளுமிருந்தன.
முகமாலை எழுதுமட்டுவாள் படைத் தளங்களை அழித்துக் கொண்டு புலிகள் குடாநாட்டுக்குள் புகுந்திருந்தால், அவர்கள் தங்கள் ஆட்லறித் தளங்களையும் இப்பகுதிகளில் அமைத்திருக்க முடியும்.
எனினும் தற்போதைய கள நிலையில் கல்முனை மற்றும் பூநகரிப் பகுதிகளிலேயே புலிகளின் ஆட்லறித் தளங்களிருப்பதால், மண்டைதீவிலிருந்து அவற்றின் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலை தவிர்க்க வேண்டுமாயின் மண்டைதீவு கடற்படைத் தளத்தையும் ஆட்லறி நிலைகளையும் அழிக்க வேண்டிய தேவை புலிகளுக்கு ஏற்பட்டது.
தீவுப் பகுதிக்குள்ளேயே மண்டைதீவு உள்ளது. மண்டைதீவில் கடற்படைத் தளத்தை அழிப்பதாயின், மண்டைதீவுக்குள் தரையிறங்கும் புலிகள் அங்கு நீண்ட நேரம் நிலைகொள்ள வேண்டியிருக்கும்.
பூநகரி அல்லது கல்முனைப் பகுதியிலிருந்தே புலிகள் கடல் வழியாக மண்டைதீவினுள் தரையிறங்க வேண்டும். இதனால், தரை வழி விநியோகப் பாதைகளில்லாத ஒரு தீவுக்குள் கடல் வழியால் தரையிறங்கி அங்கு நீண்ட நேரம் நின்று அந்தக் கடற்படைத் தளத்தை நிர்மூலமாக்குவதாயின், மண்டைதீவில் கடற்படையினருக்கான விநியோகங்களை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதுடன் ஏனைய தீவுப் பகுதியிலிருந்து மண்டைதீவுக்குள் மேலதிக துருப்புகள் நுழைவதையும் விநியோகங்களையும் தடுக்க வேண்டும்.
இதனாலேயே மண்டைதீவினுள் புலிகள் தரையிறங்கிய அதேநேரம், மண்டைதீவுக்கு அடுத்துள்ள அல்லைப்பிட்டியினுள்ளும் அதற்கப்பாலுள்ள ஊர்காவற்றுறையினுள்ளும் புலிகள் கடல்வழியாகத் தரையிறங்கினர். மண்டைதீவு கடற்படைத் தளத்தையும் அங்குள்ள ஆட்லறி நிலைகளையும் அழிக்கும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டிருந்த போது, மண்டைதீவு கடற்படையினருக்கு உதவியாக மேலதிக படையினர் வருவதையும் விநியோகங்கள் கிடைப்பதையும் தடுக்கும் முயற்சியில், அல்லைப்பிட்டியில் தரையிறங்கிய புலிகள் ஈடுபட்டிருந்தனர்.
இதேநேரம், அல்லைப்பிட்டிக்கு மேற்கே ஊர்காவற்றுறையில் தரையிறங்கிய புலிகள் அங்குள்ள கடற்படை முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்தவே, தீவுப் பகுதியின் பெரும் பகுதியில் ஒரேநேரத்தில் கடும் சமர் நடைபெற்றது.
மண்டைதீவுக்கு ஏனைய தீவுப் பகுதிகளிலிருந்து மேலதிக துருப்புகள் வருவதையும் விநியோகங்கள் கிடைப்பதையும் புலிகளின் அணிகள் தடுத்து நிறுத்திய அதேநேரம், மண்டைதீவு கடற்படைத் தளத்தையும் ஆட்லறி நிலைகளையும் புலிகள் அழிக்கத் தொடங்கினர்.
மண்டைதீவுக்கு, தீவுப்பகுதியின் ஏனைய பகுதிகளிலிருந்து கிடைக்கும் விநியோகங்களைத் தடைசெய்த புலிகள், மண்டைதீவை யாழ்நகருடன் இணைக்கும் பண்ணைப் பாலம் ஊடாக யாழ் நகரிலிருந்து உதவிகள் கிடைப்பதையும் தடுத்தனர்.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின் ஆரம்பமான இந்த மோதல் மறுநாள் காலை புலிகளுக்குச் சாதகமாகவே, பலாலி படைத்தளத்திலிருந்து மண்டைதீவை நோக்கியும் அல்லைப்பிட்டியை நோக்கியும் அகோர ஆட்லறி ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடக்க கிபிர் விமானங்களும் பலத்த குண்டு வீச்சை நடத்தின.
இந்த நிலையில் மண்டைதீவு கடற்படைத் தளத்தையும் ஆட்லறி நிலைகளையும் அழித்த புலிகள் அங்கிருந்து வெளியேறினர். இந்த நேரத்தில், ஏனைய தீவுப் பகுதிகளினுள்ளும் நுழைந்த புலிகளும் அங்கிருந்து வெளியேறினர்.
மண்டைதீவு கடற்படைத் தளத்தையும் ஆட்லறி நிலைகளையும் அழித்ததன் மூலம் கல்முனை மற்றும் பூநகரி பகுதியில் தங்கள் ஆட்லறி நிலைகளுக்கான அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
விதுரன்
|