|
"பேச்சுவார்த்தை மூலமான தீர்வு குறித்து கொழும்பு இதய சுத்தியை' வெளிப்படுத்துவது அவசியம்" விடுதலைப் புலிகள் அடக்கப்பட்டாலும் இலங்கைத் தமிழர்கள் போராட்டம் ஓய்ந்து விடாதென்பதை கொழும்பு அரசாங்கம் உணர்ந்ததாக தெரியவில்லையென சுட்டிக்காட்டும் தமிழகத்தின் முன்னணி நாளேடான தினமணி' பேச்சுவார்த்தை மூலமே தீர்வு ஏற்படமுடியுமென வலியுறுத்தியுள்ளதுடன் இதற்கு இலங்கை அரசின் இதயசுத்தி' அவசியமெனவும் குறிப்பிட்டுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினை' என்று மகுடமிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை தீட்டியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது'
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவில் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு முறையை ஒரு முன்மாதிரியாகக் கொள்ளலாம் என இலங்கைக்கு இந்திய அரசு யோசனை கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சர்க்காரியா கமிஷன் அறிக்கை அடங்கிய புத்தகங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இது இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கை அரசு எந்த வழியும் தெரியாமல் திண்டாடுவது போலவும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையைப் பரிசீலித்த உடனேயே அவர்கள் ஒரு சமரசத் திட்டத்தை அறிவித்து வருவார்கள் என்பதுபோலவும் ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. இலங்கை அரசு விரும்பியிருந்தால் கடந்த பல ஆண்டுகளில் இலங்கைத் தமிழர் ஏற்கத்தக்க நியாயமான ஓர் ஏற்பாட்டை உருவாக்கி இருக்க முடியும். ஆனால்இ அவர்கள் இலங்கைத் தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாகக் கருதி சிங்களவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இயங்குகிற சுயாட்சி உரிமையைத்தான் வழங்க முடியும் என்ற அளவில்தான் செயல்பட்டு வந்துள்ளனர். ஓரளவிலான சுயாட்சி உரிமைகூட வழங்கப்படலாகாது என சிங்களக் கட்சிகளும் புத்த பிக்குகளும் அவ்வப்போது முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளனர். இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சி நடத்தி வந்துள்ள கட்சிகள் இந்தச் சிங்களவர்களின் இனவாத நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து வந்துள்ளன. பொதுவில் சொல்வதானால் இலங்கையில் சிங்களவர் ஆதிக்கத்திலான அரசியல் கட்சிகள் இலங்கையின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு எது நல்லது என்பதைக் கணக்கில் கொள்ளவே இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் பிளவைப் பார்க்கும்போது இந்தியாவில் உள்ள ஏற்பாடு எந்தவிதத்திலும் பொருந்தாது. இந்தியாவில் உண்மையான சமஷ்டி ஆட்சி முறை கிடையாது. இன்னமும் சரி மத்திய அரசு விரும்பினால் ஒரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய முடியும் என்ற நிலைதான் உள்ளது. ஆகவேஇ இலங்கைத் தமிழர்களின் சார்பில் இலங்கை அரசுடன் பேச்சு நடத்தும் விடுதலைப்புலிகள் இந்தியாவில் உள்ள ஏற்பாடு பின்பற்றப்படுவதை ஏற்பது சந்தேகமே. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் தோன்றியதற்கு முன்னர் தமிழர் உரிமைகளுக்காகஇ சட்டத்திற்கு உட்பட்டுப் போராடி வந்த தமிழரசுக் கட்சியினர் இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளுக்கு முழு சுயாட்சி உரிமை கோரி வந்தனர். அது இந்தியாவில் உள்ள ஏற்பாட்டைவிட மிக முன்னேறியதாகும். அப்போது இலங்கை அரசு இம்மியளவுகூட அசைந்து கொடுக்காததன் விளைவாகத்தான் இன்று அது ஆயுதமேந்திய போராட்டமாக எதிர்ப்பட்டுள்ளது. இலங்கையில் 2002 இல் ஏற்பட்ட சண்டை நிறுத்தம் இப்போது பெயரளவில்தான் உள்ளது. தாய்லாந்துஇ நோர்வேஇ பெர்லின்இ ஜெனீவா என வெவ்வேறு இடங்களில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்து வந்துள்ள பேச்சுகளில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. இருதரப்பினருக்கும் மறுபடி கடும் போர் நடக்கின்ற நிலைமைதான் உள்ளது. இப்படியே இழுத்துக்கொண்டு போனால் ஒரு கட்டத்தில் விடுதலைப்புலிகளை இராணுவத்தைக் கொண்டு அடக்கி விடலாம் என்று இலங்கை அரசு நினைப்பதாகத் தோன்றுகிறது. உண்மைப் பிரச்சினை விடுதலைப் புலிகள் அல்ல. விடுதலைப்புலிகள் அடக்கப்பட்டு விட்டாலும் இலங்கைத் தமிழர்களின் போராட்டம் ஓய்ந்து விடாது. இலங்கை அரசு இதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஆயுதப் போராட்டம் மூலமும்இ பயங்கரவாதத்தின் மூலமும் வென்று விடலாம் என்று விடுதலைப்புலிகள் நினைத்தால் அதுவும் தவறு. பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு ஏற்பட முடியும். இதில் இலங்கை அரசின் அந்தரங்க சுத்தி மிக முக்கியம். நன்றி :- தினக்குரல் நெருடல் இணையம்
|