|
முற்றுகையிடப்பட்டுள்ள குடாநாட்டில்அகதிகளும் மனித அவலங்களும்..... கடந்த இருவார காலத்துக்கு முன்னர் அதுவும் வெள்ளிக்கிழமை மாலை `எலெக்ரொனிக் மீடியா' க்களிலும், `தமிழ்நெற்' போன்ற இணையத்தளங்களிலும் தெளிவான செய்திகள், உலகில் வாழும் தமிழர்களால் பேசப்படும் செய்தியாகவிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏவப்பட்ட அதிதூர ஏவுகணைகள் பலாலி விமான தளத்தையும் மட்டுமல்ல, திருகோணமலை கடற்படைத்தளங்கள், சீனன்குடா விமானத்தளத்தையும் தாக்கி கடமையிலிருந்த விமானப்படை, கடற்படை வீரர்களை காவு கொண்டதுடன், போர் விமானம், ஹெலிகொப்டர்களையும் சேதத்துக்குள்ளாக்கியதாக செய்தி வெளியிட்டிருந்தன. இவற்றைவிட முகமாலை சோதனைச்சாவடி புலிகள் வசமாகியது. நூற்றுக்கணக்கான படையினர் பலியாகினர் எனவும் தகவல்களை வெளியிட்டன. இச்செய்திகள் படைத்தரப்பிலும் அரசாங்கத்தரப்பினருக்கும் பெரும் திகில் ஊட்டுவதாக அமைந்திருந்தன. குடாநாட்டு மக்களோ, அடுத்தது என்ன என்பதையே அறிய சகல வானொலிகளையும் திருகித்திருகி காத்திருந்தனர். இவையெல்லாம் தமிழர் தரப்பில், வீர மறவர்களின் சாதனையாக கருதினர். அரசோ, தனது பலவீனத்தை வெளிப்படுத்த முகமாலையை அண்டிய குடிமக்கள் வாழ்ந்த குடியிருப்புகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடாத்தி 15 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி மக்களை நள்ளிரவில் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றியது. நள்ளிரவில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு இடம்தேடி ஓடிய நிகழ்வுகள் பயங்கரமானவை. மறக்கமுடியாதவை. மறுபுறத்தில், குடாநாட்டில் இருபத்திநான்கு மணிநேரம் வழங்கப்பட்டு வந்த மின்சாரத்தையே நிறுத்தினர். இவை ஒருபுறமிருக்க, சனிக்கிழமை அதிகாலை மண்டைதீவை விடுதலைப் புலிகளின் ஈரூடக படையணிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தமை யாருமே எதிர்பார்க்காத செய்தியாக வெளியாகியிருந்தது. மண்டைதீவில் அதிகாலையில் தீரத்துடன் நாற்பது படகுகளில் கடற்புலிகள் வந்து இறங்கியதும் கடமையிலிருந்த கடற்படையினர் கையில் கிடைத்த ஆயுதங்களுடன் , தப்பியோடியதை அல்லைப்பிட்டி மக்கள் கண்டு ஆனந்தக்களிப்பாடியுள்ளனர். தப்பியோடிய கடற்படையினர் சும்மா இருக்கவில்லை. மண்கும்பானிலிருந்து பெரும் எண்ணிக்கையான கடற்படையினருடன் வந்து அல்லைப்பிட்டி பிலிப் நேரியார் பேராலயத்துக்கு வந்து அங்கு தஞ்சம் புகுந்திருந்த அகதிகளையும் கருத்திற்கொள்ளாது, மண்டைதீவில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் மீது தாக்குதலை நடாத்தினர். கடற்புலிகளோ, கடற்படையினரை முகாமை நோக்கி ஓர் அடிகூட முன்னேற முடியாமல் விரட்டியடித்தனர். ஆனால், தேவாலயத்திலிருந்த மக்கள் மீது நடாத்திய தாக்குதலில் ஒரு குழந்தையுட்பட அறுவர் கொல்லப்பட்டனர். தொண்ணூற்றியொன்பது பேர் காயமடைந்தனர். இவர்களை யாழ்ப்பாண மேலதிக நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரத்தின் அதிரடி போர்க்கால நடவடிக்கையாக, இலங்கைச் செஞ்சிலுவைச்சங்கம், சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவினரின் உதவியுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க முடிந்தது. ஆத்திரம் கொண்ட கடற்படையினர், தொண்ணூற்றியாறு மணித்தியாலங்களாக மணியம் தோட்டம், கொழும்புத்துறை, முற்றவெளியிலிருந்து பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை கண்மூடித்தனமாக மேற்கொண்டு புதன்கிழமை மீண்டும் மண்டைதீவில் நிலைகொண்டுள்ளனர். இதற்கு அவர்களால் கொடுக்கப்படும் விளக்கம், விடுதலைப் புலிகளை தேடி அழித்து மீண்டும் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம் என்ற வீரவசனம் இவர்களால் கொழும்புத் துறை, பாஷையூர், வளன்புரம், அரியாலை, குருநகர் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்கள் அகதிகளாக இருக்க இடமில்லாமல், தேவாலயங்களிலும் உறவினர் வீடுகளிலும் வீதிகளிலும் தஞ்சம் கோரியுள்ளனர். ஒரு வாரமாகியும் இவர்களுக்கு எந்த நிவாரணப் பொருட்களும் அரசினால் வழங்கப்படவில்லை. இக்குடும்பங்கள் ஒரு நேர கஞ்சிக்காக கையேந்தியல்லவா வாழ்கின்றனர். இதேவேளை, ஊர்காவற்றுறையிலும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதாக அஞ்சிய கடற்படையினர், ஊர்காவற்றுறை சென். மேரிஸ் தேவாலயத்திலும் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் தேவாலயத்திலும் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது `ஷெல்' மற்றும் துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர். இதில் ஆண், பெண், குழந்தைகள் என வித்தியாசமில்லாமல் காயமடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக எவரும் உயிரிழக்கவில்லை. ஆனால் இப்பகுதியில், மக்கள் கிடுகிடுங்கிப் போய் செய்வதறியாது தடுமாறுவதை நாம் அங்கு சென்று அளவளாவிய போது காணமுடிந்தது. வரணி, இயற்றாலை, கொடிகாமம், கச்சாய்ப் பகுதிகளில் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் 55 ஆவது படையின் தலைமையகத்தை வைத்தே நடத்தப்பட்டு வருகின்றது. அங்கு கடும் பாதுகாப்புடன் அமைந்திருந்த 55 ஆவது படையணியின் கட்டளைத் தலைமையகத்துள் எறிகணைகள், விழுந்து வெடித்ததையடுத்து குடிமனைகள் மீது இராணுவத்தினர் தாறுமாறான தாக்குதலை நடத்தினர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும், இன்னொரு இளைஞரும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரையும் அப்பகுதி மக்கள் ஒன்றாக சிதையில் வைத்து எரியூட்டிய பின்னர் கிராமத்தைவிட்டே வெளியேறியுள்ளனர். அவர்கள் பருத்தித்துறையில் தஞ்சமடைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. வர்த்தகர்களின் கொடுமை இவ்வளவு கொடுமையும் எமது மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, எமது வர்த்தகர்களின் கொடுமை சொல்லில் வடிக்க முடியாது. முப்பது ரூபாவுக்கு வாங்கிய அரிசி 48 ரூபா, கிழங்கு இருநூறு ரூபா, சீனி கிலோ எண்பது ரூபா, பால்மா கிடையாது. இஷ்டம் என்றால் வாங்கு கஷ்டம் என்றால் தள்ளிப்போ என அச்சுறுத்துவது கொடுமையிலும் கொடுமை. வீதி வீதியாக கையில் இருக்கும் பணத்துக்கு கஞ்சி குடிக்க எதையாவது வாங்குவோமா என மக்கள் அலைகின்றனர்.கடைகளில் இருக்கும் பொருட்களை சுருட்டிக் கொண்டு கொள்ளையடிக்கும் சிறு வர்த்தகர் வட்டம், இவையெல்லாம் எமது மண்ணில் முப்பது ஆண்டுகளாக நடைபெறும் துன்பியல் நிகழ்வாகும். எமது மண்ணை சிங்கள பேரினவாதம் ஆள நினைக்கும் வரை நாம் ஓயப்போவதில்லை. சுதந்திரம் என்பது நாம் போராடித்தான் பெறவேண்டியது. சிங்கள பேரினவாதம், இத்தனை இழப்புகளுக்குப் பின்னரும், நாடு சின்னாபின்னமாக சிதறிக் கிடக்கும் நிலையிலும், நாட்டின் தேசாபிமானிகள் என கூறிக்கொள்ளும் சிங்கள வகுப்பு வாத இனவிரோத சக்திகள் இலங்கையில் இனப் பிரச்சினையில்லை, இங்கு புலிப்பயங்கரவாதம் தான் இருக்கின்றது என கூறி வருவதைப் பார்த்து சர்வதேசம் வாய் கொட்டி சிரித்து வருகின்றது. இனிவரும் நாட்கள் இலங்கையில் எதிர்பாராத மாற்றங்களுக்கு விடுதலைப் புலிகளின் பலம் காரணமாக அமையலாம் குடாநாட்டின் தற்போதைய நிலை மனிதக்கேடயங்களாக குடியிருப்புகளுக்குள்ளே சிறைவைக்கப்பட்டுள்ள சுமார் ஐந்து இலட்சம் குடாநாட்டு மக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு நேரங்களில் நடைபெறும் அப்பாவி பொதுமக்களின் படுகொலைகள் இரத்தத்தை உறைய வைக்கிறது. பட்டினி நிலை தலைதூக்கலாம் என்ற அபாய அறிவிப்புகளும் வெளியிடப்படுகின்றன. 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம் தற்போது ஐந்து மணித்தியாலங்கள் வரை தளர்த்தப்படுகின்றது. அச்சமயம் அனைத்து வீதிகளிலும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டு வெளியில் வரும் மக்கள் அவதானிக்கப்படுகின்றனர். சிறையில் கண்காணிக்கப்படுவது போல் நடத்தப்படுகின்றனர். ஊரடங்குச் சட்டத்தால் குடாநாட்டில் சகல தொழில் நடவடிக்கைகளும் முடங்கியுள்ளன. குறிப்பாகக் கிராமப் புறங்களில் அன்றாடம் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் ஏழைத் தொழிலாளர்கள் சுமார் ஒரு வாரமாகத் தொழில் வாய்ப்புகள் அற்ற நிலையில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால், அவர்களும் அவர்களது குடும்பங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடற்கரையோரங்களை அண்டி வாழும் கடற்றொழிலாளர்களும் தொழிலுக்குச் செல்வதில்லை. அவர்களது குடும்பங்களும் பெரிதும் துன்பங்களை அனுபவிக்கின்றன. குடாநாட்டின் பல இடங்களிலும் விவசாயப் பயிர்ச் செய்கை பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு அமுலில் இருப்பதால் விவசாயிகள் எவரும் தமது வயல்களுக்கு செல்ல வாய்ப்புக் குறைந்துள்ளது. நீர் பாய்ச்சவும் எவருமில்லை. மரக்கறிப் பயிர்கள் என்பன நீரின்றிக் கருகி வருகின்றன. தோட்டங்கள் எங்கும் பயிர்கள் வாடிப் போய்க் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக அன்றாட உணவுத் தேவைகளுக்கே மரக்கறி வகைகளைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துகளும் முற்றாகத் தடைப்பட்டிருப்பதால் அவசர நோயாளர்களைக் கூட மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது. குடாநாட்டுக்கான தொலைத்தொடர்பு சேவைகளும் கிட்டத்தட்ட முற்றாகவே செயலிழந்த நிலையாகவே காணப்படுகிறது. செல்லிடத் தொலைபேசிச் சேவைகள் முற்றாக செயலிழந்துள்ள நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஸ்ரீலங்கா ரெலிகொம் தனது சேவையை வழங்கி வருகிறது. இதனால் ,வீடுகளில் தொலைபேசி வசதி உடையவர்கள் சிலர் இதனையே சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொள்ளை இலாபம் ஈட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெளிவான அழைப்புகளை வெளி இடங்களுக்கு மேற்கொள்ளக் கூடிய தொலைபேசி வசதி கொண்டவர்கள் வெளி அழைப்புகளுக்கு 10 ரூபாவும் உள்வரும் அழைப்புகளுக்கு 8 ரூபாவும் அறவிட்டு தமது `இடைக்கால தொழிலாக' அதை "செழிப்புறச் செய்வதில்"தீவிரமாக உள்ளனர் என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். முகமாலையில் கடந்த 11 ஆம் திகதி திடீரென தொடங்கிய மோதலோடும் வடக்கிற்கான போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டதால், ஏற்கனவே தமது தேவைகளுக்காக வேறு பகுதிகளுக்குச் சென்றவர்கள் தத்தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் பெரிதும் இடர்படுகின்றனர். யாழின் மைந்தன்
|