பிரதான பக்கம் arrow Karuna Antharangam arrow மோதல்கள் தொடர வழிவகுத்த யாழ்.சமர்!
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மோதல்கள் தொடர வழிவகுத்த யாழ்.சமர்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 August 2006

குடாநாட்டை படையினர் தக்கவைக்க உதவிய மூன்று படைத்தளங்கள்!

யாழ்.குடாநாட்டில் பாரிய மோதல்களில் சற்று தணிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை உக்கிரச் சமர் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அங்கு ஓரளவு அமைதி நிலவுகிறது. இது, அங்கு நடைபெற்ற மோதல்கள் ஓரளவு முடிவுக்கு வந்துவிட்டதையே காட்டுகிறது.

ஆனாலும், இந்த மோதல்கள் வெடித்த போது பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டன. குடாநாட்டின் மீதான முற்றுகையை புலிகள் ஆரம்பித்துவிட்டதாக அரசு தரப்பும் படைத்தரப்பும் கூறிவந்தன. எனினும், முகமாலையிலிருந்து படையினர் ஆரம்பித்த பாரிய படை நகர்வைத் தடுத்து நிறுத்தும் கடும் முறியடிப்பு சமரென்றே புலிகள் இதனைக் கூறிவந்தனர்.

பலாலி இராணுவத் தளம் மற்றும் விமானத் தளங்கள் மீதும் காங்கேசன்துறை துறைமுகம் மீதும் கடற்படைத்தளம் மீதும் புலிகள் நீண்ட தூர ஆட்லறி ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு படைத்தரப்புக்கான விநியோகங்களை முடக்கிய அதேநேரம் மண்டைதீவு கடற்படைத் தளத்தை தாக்கியழித்ததன் மூலம், புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கல்முனை மற்றும் பூநகரிப் பகுதிகளிலிருந்த புலிகளின் ஆட்லறி நிலைகளுக்கான பாதுகாப்பும் பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டது.

குடாநாட்டில் தரைவழி விநியோகப் பாதையின்றி கடல்வழி மற்றும் வான்வழியான விநியோகத்தை மட்டுமே நம்பியிருக்கும் படையினருக்கு அண்மைய சமர் மிகப் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது.

ஒருபுறம் தென்மராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கில் விடுதலைப் புலிகளின் கடும் தாக்குதலை சமாளிக்க வேண்டியிருந்த அதேநேரம், மறுபுறம் விநியோகங்கள் எதுவுமில்லாத மோசமானதொரு சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது.

ஆனாலும், கிளாலி முதல் நாகர்கோவில் வரை படையினர் அமைத்திருந்த மிகவும் வலுவான முன்னரங்க பாதுகாப்பு நிலைகள், நிலத்தடி பதுங்கு குழிகள், தொடர்ச்சியானதும் கடுமையானதுமான ஆட்லறி ஷெல் தாக்குதல்களை தாங்கக்கூடிய காப்பரண்கள் படையினருக்கு பெரிதும் சாதகமாயிருந்துள்ளன.

கிளாலி முதற்கொண்டு தீவுப் பகுதிவரையான கடல் நீரேரி மற்றும் கடல்பரப்பை 24 மணிநேரமும் மிகத் தீவிரமாகக் கண்காணித்து புலிகளின் கடல்வழித் தரையிறக்கத்திற்கான வாய்ப்பை வழங்காத அதேநேரம் வடமராட்சி கிழக்கில் நாகர்கோவில் படைத்தளத்தையும் அதற்கப்பாலான கடலோரப் பகுதிகளையும் மிகவும் வலுவானதாக வைத்து இப்பகுதிகளூடாகவும் விடுதலைப் புலிகளுக்கு கடல்வழித் தரையிறக்கத்திற்கான வாய்ப்பை படையினர் வழங்கவில்லை.

2000 ஆம் ஆண்டில் யாழ். குடாநாட்டின் நுழைவாயிலான ஆனையிறவு படைத்தளம், இலங்கையிலேயே படையினரின் அதிகூடிய வலுவான பாதுகாப்புக் கோட்டையாக விளங்கியது. குடாநாட்டைப் புலிகள் கைப்பற்றினாலும் ஆனையிறவை அவர்களால் என்றுமே கைப்பற்றமுடியாதென்ற அதீத நம்பிக்கை படையினரிடமும் அரசிடமும் இருந்தது.

ஆனையிறவின் பாதுகாப்பு குடாநாட்டின் பாதுகாப்பாகக் கருதப்பட்டது. அதற்கேற்ப ஆனையிறவிலேயே படையினரின் முழுக்கவனமும் திசைதிரும்பியிருந்தது. அதற்குப் பக்கவாட்டுப் பாதுகாப்பாக வடமராட்சி கிழக்குப் பிரதேசமிருந்தது. கடல்வழியூடான அச்சுறுத்தல்களை வடமராட்சி கிழக்கிலிருந்த படை முகாம்கள் சமாளிக்குமென எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல், ஆனையிறவின் தெற்கால் யாழ் கடல் நீரேரியூடான அச்சுறுத்தலை தடுக்கும் முழுப் பொறுப்பும் கிளாலி கடற்படைத்தளத்திடமிருந்தது. எனினும், வடமராட்சி கிழக்கில் குடாரப்பில் புலிகள் மேற்கொண்ட கடல்வழித் தரையிறக்கமே பின்னர் ஆனையிறவுப் படைத்தளம் புலிகளிடம் விழக் காரணமாய் அமைந்தது.

குடாரப்பு தரையிறக்கம் மூலம் அதற்கு தெற்காலிருந்த படைமுகாம்களை புலிகள் பொறிக்குள் சிக்க வைத்தனர். அதேநேரம், வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஊடாக பாரிய தரைவழித் தாக்குதல்களையும் புலிகள் தொடுக்கவே, தென்மராட்சியுடன் தரைவழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் கடல்நீரேரியூடாக விநியோகங்கள் எதுவும் கிடைக்காத நிலையிலும் பேரழிவுகளைச் சந்தித்தவாறு படையினர் தென்மராட்சிக்குள் பின்வாங்கினர். இவற்றை வாய்ப்பாகப் பயன்படுத்திய புலிகள் தென்மராட்சிக்குள் புகுந்து முகமாலை, பளை, இயக்கச்சி போன்ற பகுதிகளைக் கைப்பற்றி ஆனையிறவு படைத்தளம் மீது வடக்கு பக்கமிருந்தும் பாரிய தாக்குதலைத் தொடுத்தனர்.

தெற்கே பரந்தன், கிளிநொச்சி ஊடாகவும் கிழக்கே வெற்றிலைக்கேணி, கட்டைக்காட்டிலிருந்தும் கடும் தாக்குதலைத் தொடுத்து ஆனையிறவு படைத்தளத்தைப் புலிகள் வீழ்த்தினர்.

ஆனையிறவு படைத்தள வீழ்ச்சியைத் தொடர்ந்து புலிகள், யாழ் கடல்நீரேரியூடாக தென்மராட்சியில் தனங்கிளப்பு பகுதியில் பாரிய தரையிறக்கத்தை மேற்கொண்ட அதேநேரம் யாழ் நகரின் புறநகர் பகுதியான அரியாலை, மணியந்தோட்டம் பகுதியிலும் கடல்நீரேரியூடாக தரையிறங்கி யாழ். கச்சேரி வரை சென்றிருந்தனர்.

அதன் பின்னரான நிலைமைகள் புலிகளின் குடாநாட்டு முற்றுகையை முழுமையடையச் செய்யாததால் புலிகள் பின்னர் பழைய நிலைகளுக்குத் திரும்பினர். எனினும், ஆனையிறவூடாக முகமாலை வரை தங்கள் நிலைகளைத் தக்கவைத்தனர்.

இந்த நிலையில் முகமாலை முதல் தெற்கே குடாநாட்டின் ஏனைய பகுதிகள் படையினர் வசமாகியது. யாழ். குடாநாட்டின் நுழைவாயிலில் கழுத்துப் போன்ற குறுகலான பகுதியில் ஒருபுறம் படையினர் நிலைகொள்ள மறுபுறம் புலிகள் நிலை கொண்டனர்.

அதேநேரம், யாழ்.குடாநாட்டை மீண்டும் புலிகள் முற்றுகையிடுவதை தடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் படையினர் ஈடுபட்டு வந்தனர். இதற்காக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் இராணுவ நிபுணர்கள் குடாநாட்டுக்கு வரவழைக்கப்பட்டு மீண்டுமொரு முற்றுகையை தடுப்பதற்கான ஆலோசனைகள் பெறப்பட்டு அதற்கேற்ப குடாநாட்டின் கரையோரப் பகுதிகளும் கிளாலி முதல் நாகர் கோயில் வரையான முன்னரங்கப் பகுதிகளும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஹமுற்றுகை' தவிர்ப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

யாழ்.கடல் நீரேரியூடாக குடா நாட்டுக்குள் புலிகள் தரையிறங்குவதையும் வடமராட்சி கிழக்கில் கடல் பரப்பூடாக தரையிறங்குவதையும் தடுக்கும் முயற்சிகளில் படையினர் நூறு சதவீதம் வெற்றி பெற்றால், புலிகள் குடாநாட்டுக்குள் கிளாலி - முகமாலை - நாகர்கோவில் படைத் தளங்களை தகர்த்தழித்தே புலிகள் தரை வழியாக நகர வேண்டும்.

கரையோரப் பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டால் மேற்படி தரைவழியூடாக புலிகள் நுழைவதைத் தடுப்பதற்கான முழு ஏற்பாடுகளிலும் படைத் தரப்பு வெளிநாட்டு இராணுவ நிபுணர்களின் நிபுணத்துவ ஆலோசனைகளுடன் கிளாலி - எழுதுமட்டுவாள் - நாகர்கோவிலில் படைத் தளங்களையும் முன்னரங்க காவல் நிலைகளையும், பாதுகாப்பு அரண்களையும் பதுங்கு குழிகளையும் அமைத்தது.

கடந்த 11 ஆம் திகதி ஆரம்பமான முதல் நாள் சமரைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ,முகமாலையிலிருந்த படையினரின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை தகர்த்துக் கொண்டு புலிகள் எழுதுமட்டுவாள் வரை சென்றிருந்தனர்.

முகமாலை பகுதியில் இருந்தது போல் எழுதுமட்டுவாள் முன்னரங்க பாதுகாப்பு இருக்கவில்லை. 11 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையான உக்கிர சமரில் கிளாலி - எழுதுமட்டுவாள் - நாகர்கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நன்கு தெளிவாகியிருந்தன.

இந்த நிலைகளில் குறிப்பாக கிளாலி மற்றும் எழுதுமட்டுவாளில் இலங்கைப் படையின் மிகவும் வலுவான போரிடும் ஆற்றல் கொண்ட 53 ஆவது படையணி முழுமையாக நிறுத்தப்பட்டு இரவு பகலாக கடும் சமர் புரிந்தது.

குடாநாட்டின் கரையோரங்களில் பாதுகாப்பு முழு அளவில் பலப்படுத்தப்பட்டு அவற்றினூடாக புலிகள் குடா நாட்டுக்குள் தரையிறங்குவது தடுக்கப்பட்ட அதேநேரம் கிளாலி - எழுதுமட்டுவாள் மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் படையினர் தங்கள் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி கடும் சமர் புரிந்தனர்.

படையினரின் முழுக் கவனமும் இந்த மூன்று பிரதேசங்கள் மீதுமே குவிக்கப்பட்டிருந்தது. இந்த மூன்று பகுதிகளையும் பாதுகாக்கும் நோக்கில் குடா நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆட்லறி ஷெல்களும், மோட்டார் குண்டுகளும், பல்குழல் ரொக்கட்டுகளும் புலிகளை நோக்கி மழைபோல் பொழிந்தன.

இந்த மூன்று தளங்களையும் தக்கவைப்பதன் மூலம் குடாநாட்டை தக்கவைத்து விடலாமென படைத் தரப்பு கருதியது.இந்தச் சமரில் தெளிவாகியுள்ளது.

தரையமைப்பில் இந்தப் பிரதேசங்கள் மிகவும் குறுகலானதாயிருந்தது, படையினருக்கு வாய்ப்பாக அமைந்தது. குடா நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தெல்லாம் இந்த மூன்று படைத்தளங்களையும் நோக்கி படையினர் தொடர்ந்தும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இறக்கும் படையினருக்கும் காயமடையும் படையினருக்கும் மாற்றீடாக அடுத்த நிமிடம் அந்த இடங்களில் வேறு படையினர் வரவழைக்கப்பட்டனர். இதனால் வலிகாமத்தில் பல்வேறு பகுதிகளிலும் முகாம்கள் மூடப்பட்டு படையினர் தென்மராட்சி களமுனைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த முன்னரங்க தளங்களில் ஏதாவதொன்று தகர்க்கப்பட்டு புலிகள் அதனூடாக நுழைந்திருப்பார்களானால் அவர்கள் அடுத்த தொங்கலுக்குச் சென்று நிற்கும் வரை இடையில் எந்தவொரு வலுவான படைத்தளமும் இருக்கவில்லை.

அப்படியிருந்தாலும் அவற்றில் படையினரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவேயிருந்திருக்கும். அந்தளவிற்கு இந்த மூன்று முனைகளிலுமே படையினரின் முழுக் கவனமும் குவிந்திருந்தது. இவற்றின் பின்புலம் பெரிதும் வெற்றிடமாகவேயிருந்தது.

இந்த நிலையில்தான் களமுனையிலிருந்து மிகவும் வலுமிக்க 53 ஆவது படையணி முற்றாக வெளியேற்றப்பட்டு அவர்களுக்குப் பதிலாக புதிய அணிகள் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்தளவுக்கு இந்தச் சமரில், மிகவும் உக்கிரமாகப் போரிடும் வலுவான அணியொன்று மிகப்பெரும் சேதங்களைச் சந்தித்துள்ளது.

இதேநேரம், இந்தச் சமரில் புலிகளின் பீரங்கிப் படையணிகள் மிக முக்கிய பங்காற்றியுள்ளன. தரைப் படைகளும் கடும் சமர் புரிந்துள்ளன. கடற்புலிகளின் அணிகள் பெருமளவில் இந்தச் சமரில் பங்காற்றியதாகத் தெரியவில்லை. புலிகளின் விமான எதிர்ப்பு படையணிகள் களமிறங்கினவா என்ற கேள்வியையும் வெளிநாட்டு நிபுணர்கள் எழுப்புகின்றனர்.

இந்தச் சமரில் புலிகள் ஏன் விமானங்கள் எதனையும் தாக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. படையினர் ஓரிரு விமானங்களை இழந்திருந்தால் கூட அது அவர்களை மனோரீதியில் பெரிதும் பாதித்திருக்கும்.

அத்துடன் களமுனையில் வான் தாக்குதலும் குறைந்திருக்கும். அதேநேரம் இந்த சமரில் புலிகளின் வான் படையும் களமிறங்கியுள்ளதாக முதல் நாள் தகவல்கள் வெளியான போதும் புலிகளின் வான் படை இந்தச் சமரில் களமிறங்கவில்லை. இந்த நிலையில் இந்தச் சமர் தற்போது பெரிதும் தணிந்துள்ள அதேநேரம், அடுத்து என்ன என்ற கேள்வியும் எழுகிறது. குடாநாட்டை முழுமையாகப் பாதுகாக்க வேண்டுமானால் குடாநாட்டில் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாகத் தங்கள் வசப்படுத்த வேண்டுமென படையினர் சிந்திக்கக் கூடும்.

திருகோணமலை துறை முகத்தினதும் கடற்படைத் தளத்தினதும் பாதுகாப்புக்கு மூதூர் கிழக்கில் புலிகள் வசமுள்ள சம்பூர் பகுதி மிகப் பெரும் அச்சுறுத்தலாய் இருப்பதால் அந்தப் பிரதேசத்தை விரைவில் கைப்பற்ற வேண்டுமென படையினரும் அரசும் கூறி வருகின்றன. சம்பூரைக் கைப்பற்றி திருமலை துறைமுக முற்றுகையை நீக்கினால் யாழ்.குடாநாட்டை புலிகள் மீண்டும் முற்றுகையிடும் பட்சத்தில் திருமலையிலிருந்து குடா நாட்டுக்கான கடல் வழி விநியோகத்தை மேற்கொள்ள முடியுமெனவும் படைத்தரப்பு கருதுகிறது.

அதேபோல், யாழ்.குடாநாட்டுக்கு புலிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுப்பதாயின் குடாநாடு முழுவதையும் தங்கள் வசம் முழுமையாகக் கொண்டு வர வேண்டுமென படையினர் சிந்திப்பர். தற்போது குடாநாட்டின் கிழக்கே, பருத்தித்துறை முதல் கட்டைக்காடு வரையான கடற் பிரதேசம் புலிகள் வசமிருப்பதால் குடா நாட்டின் பெரும்பாலான கடற்பரப்பு புலிகள் வசமேயுள்ளது. இது குடா நாட்டின் பாதுகாப்புக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாயிருக்குமென படைத்தரப்பு கருதும்.

இதனால், குடாநாட்டில் புலிகள் வசமிருக்கும் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் படைத் தரப்பு இறங்கக் கூடும். தற்போதைய நிலைமையை சாதகமாக்கி அவ்வாறானதொரு நடவடிக்கையில் அவர்கள் இறங்கினாலும் ஆச்சரியப்பட முடியாது. குடாநாட்டில் தற்போது தணிவடைந்திருக்கும் இந்தச் சமர் இரு தரப்புக்கும் பல்வேறு படிப்பினைகளையும் ஏற்படுத்தியிருக்கும். கிளாலி - எழுதுமட்டுவாள் - நாகர்கோவில் முன்னரங்க நிலைகளைத் தகர்த்துக் கொண்டு புலிகளால் உள்ளே நுழைய முடியவில்லையெனவும் அவற்றை தாங்கள் தடுத்துவிட்டோமெனவும் கருதும் படைகளால், முகமாலைப் பகுதியில் புலிகள் பிடித்த பகுதியை இதுவரை மீட்க முடியாதிருப்பது அவர்களது பலவீனத்தையே காட்டுகிறது.

குறுகலான நிலப்பரப்பில் வலுவான பாதுகாப்பு அரண்களை அமைத்துக் கொண்டு அதற்குள் இருந்து கொண்டும், அந்தக் குறுகலான பகுதியூடாக முன்னேறும் புலிகளை நோக்கி விமானக் குண்டு வீச்சையும், ஆட்லறி ஷெல், மோட்டார் குண்டுகளையும், பல்குழல் ரொக்கட்டுகளையும் பொழிந்தும் தாக்குதல்களை முறியடித்துவிடலாமெனப் படைத்தரப்பு கருதுகிறது.

ஆனால், இந்தக் களமுனையில் புலிகள் தங்கள் படைபலத்தை எந்தளவுக்கு எப்படிப் பயன்படுத்தினார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகையில், இந்தச் சமர் குடாநாட்டு முற்றுகைக்கான அவர்களது ஒத்திகையா என்ற கேள்வியும் எழுகிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..