|
டென்மார்க்கில் உள்ள வெளிநாட்டவர் பற்றி டேனிஸ் சமுதாயத்திற்கு விளக்க ஒரு சஞ்சிகை ! டென்மார்க்கில் இப்போது கொதி நிலையில் உள்ள பிரச்சனை அகதிகள் வெளிநாட்டவர் தொடர்பான பிரச்சனைதான். தமது பக்க நியாயங்களை எடுத்துரைக்க ஊடகங்களில் போதிய இடமில்லாத சூழலில் அகதிகள் வெளிநாட்டவர் குறித்து அரசியல்கட்சிகள் சகட்டு மேனிக்கு புகுந்து விளையாடி கைதட்டல் வாங்கி வருகின்றன. இந்த நிலையில் நாம் என்ன செய்யலாம், டேனிஸ் சமுதாயத்தில் ஓர் அங்கமாகவிட்ட வெளிநாட்டு பின்னணி கொண்ட மக்களின் நல்ல பக்கங்களை எடுத்துரைப்பது எப்படி ? என்ற கேள்விகளுக்கு பதிலாக வந்திருக்கிறது இந்த மலர். நீண்டகாலமாகவே சரிவரச் செய்யப்படாமல் காத்துக்கிடந்த இப்பணியைக் கருத்தில் கொண்டு டேனிஸ் மொழியில் நு}லை வெளிக் கொண்டுவந்து அதை டேனிஸ் மக்களுடைய வீடுகளுக்கே வழங்கியுள்ளார் தமிழரான ஜெயராஜ் ராசையா என்ற இளைஞர். இவர் கிறீன்ஸ்ரட் நகரசபையின் உறுப்பினரும் கூட. ஒவ்வொரு தமிழரும் தாம் வாழும் நகரங்களில் தமது சக்திக்கேற்ப ஒவ்வொரு விளக்கை ஏற்றி வைத்தாலே போதும், நாடு முழுவதும் அகதிகளுக்கு எதிராகச் சூழ்ந்து வரும் இருள் விலகிவிடும். அகதிகள் வெளிநாட்டவரால் டேனிஸ் மக்களுக்கு துன்பம் என்ற எண்ணங்களைத் தகர்த்து, நல்லதோர் உறவை வளர்க்க இது பாலமாக அமைந்துள்ளது. அப்படியோர் முயற்சியாக இதைச் செய்து தான் வாழும் நகரத்தில் உள்ள 14.000 வீடுகளையும் இந்த நு}லால் தட்டியிருக்கிறார் ஜெயராஜ். புத்தகங்களை அச்சிட்டு டேனிஸ் தபால் திணைக்கள மூலமாக கிறீன்ஸ்ரட், பிலுண்ட் நகரசபைகளுக்குட்பட்ட சகல வீடுகளுக்கும் வழங்கச் செய்துள்ளார். இவருடைய இந்த முயற்சி இருண்ட வீட்டில் ஒரு விளக்குப் போல அமைந்திருக்கிறது.
மொத்தம் 36 பக்கங்களைக் கொண்ட இந்த நு}லில் 34 தலையங்கங்களில் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அகதிகள் வெளிநாட்டவர் இணைவாக்க அமைச்சர் றேக்கா வில்ஸ்கொய், இப் கிறிஸ்ரென்சன் நகர முதல்வர் கிறீன்ஸ்ரட் நகரசபை, பிலுண்ட் நகர முதல்வர் பிறேபன் ஜென்சன், ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதி கென்றிக் டாம் கிறிஸ்ரென்சன் உள்ளிட பல பிரமுகர்கள் இந்த மலரில் கருத்துரைகள் வழங்கியுள்ளார்கள். இந்த மலரை வெளியிடுவதற்கான நிதியை டேனிஸ் அரசாங்கத்திடமிருந்தும், பல டேனிஸ் வர்த்தக நிறுவனங்களிடமிருந்தும் பெற்று அழகிய வர்ணத்தில் தயாரித்து புதிய கோணத்தில் வழங்கியுள்ளார் ஜெயராஜ். சுமார் 25 இலட்சம் இலங்கை ரூபா பெறுமதியான ஒரு காரியத்தை ஒரு சில டேனிஸ் நண்பர்களின் உதவியோடு சாத்தியமாக்கி, அகதிகளாகவும், வெளிநாட்டவராயும் இருப்போரின் தார்மீகக் குரலை டேனிஸ் சமுதாயத்தின் முன் வைத்திருக்கிறார் ஜெயராஜ். கடந்த 2004 ம் ஆண்டு உயர் நிலைப்பாடசாலையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பங்கேற்றபோது டேனிஸ் பிள்ளை ஒன்று கேட்ட கேள்வியே தன்னை இந்த முயற்சிக்குள் தன்னை தள்ளியதாக அவர் தெரிவிக்கிறார். எம்மைச் சுற்றி நிறைய வெளிநாட்டவரும், அகதிகளும் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி எமக்கு எதுவும் தெரியாது என்று அந்தப் பிள்ளை கேட்ட கேள்விக்குப் பிறகே இதைச் செய்ய முயற்சித்தேன் என்கிறார். அத்தோடு டேனிஸ் ஊடகங்களில் போகும் விவாதங்கள் அகதிகளுக்கும் வெளிநாட்டவருக்கும் எதிரான ஒரு திசையில் திரும்புவதையும் உணர்ந்து, அனைத்து எதிர்மறையான காரியங்களுக்கும் பதில் தருவது போல ஆதாரபூர்வமான தகவல்களை உள்ளடக்கி இந்த மலரை வெளியிட்டுள்ளார். டேனிஸ் சமுதாயத்திற்கும் வெளிநாட்டவருக்கும் இடையே இணைப்பை உண்டாக்கும் பாலமாகவும் இதை வழி நடாத்தியுள்ளார். வெளிநாட்டு மக்கள் டேனிஸ் சமுதாயத்தின் எதிரிகள் அல்ல இனிய நண்பர்கள் என்று ஒவ்வொரு டேனிஸ் மக்களுக்கும் உணர்த்தக் கூடிய வகையில் தனது இலக்கைத் தொட்டுள்ளார். கிறீன்ஸ்ரட் நகரில் வசிக்கும் சிவகுமார் குடும்பம், பொஸ்னியாவைச் சேர்ந்த கொவன்சிவிக் குடும்பம், ஈராக்கியரான வில்சன், ரஉறீம் குடும்பத்தினர், ஆப்கானைச் சேர்ந்த நஸ்மி குடும்பத்தினர், பர்மாவைச் சேர்ந்த ஷா உக் லியன் பியாக் ஆகியவர்களது அன்றாட வாழ்வும், தொழில்களும் தரப்பட்டுள்ளன. அவர்கள் டேனிஸ் சமுதாயத்தின் நண்பர்களாக, இந்த நாடு உருப்பட நெற்றி வியர்வை சிந்திப் பாடுபட்டுக் கொண்டிருப்பதை நு}ல் விளக்குகிறது. உதாரணத்திற்காக ஒவ்வொரு குடும்பத்தை தெரிவு செய்கின்ற போதெல்லாம் அவர்களுடைய தாய்நாடு பற்றிய விபரங்களும் இரத்தினச் சுருக்கமாகத் தரப்படுகிறது. இது தவிர டேனிஸ் சமூக நிலையங்கள், போலீசார், பாடசாலைகள், பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள், விளையாட்டுப் பணிகள் போன்ற பல்வேறு விடயங்களை எல்லாம் புகையிரதப் பெட்டி போல ஒன்றிணைத்து நகர விட்டிருக்கிறார் ஜெயராஜ். 1956 உறங்கோரி பிரச்சனையில் டென்மார்க் வந்த அகதிகள் தொடக்கம் 2005 தை மாதம்வரை மொத்தம் 1.21.000 பேர் டென்மார்க்கில் அகதிகளாக அடைக்கலம் பெற்றுள்ளார்கள். 1900 முதல் 2005 வரை 36.000 பேர் குடும்ப இணைவாக்கத்தின் மூலம் இங்கு வந்துள்ளார்கள். 2005வரை மொத்தம் 4.52.095 பேர் டேனிஸ் குடியுரிமை பெற்றவர்கள். இது மொத்த அகதிகள் வெளிநாட்டவரில் 39 வீதமாகும்;. நாட்டின் மொத்த சனத்தொகையில் 5 வீதம் வெளிநாட்டவர். இவர்கள் மொத்தம் 70 நாடுகளில் இருந்து அகதிகளாக இங்கு வந்துள்ளார்கள். சமீபகாலங்களில் யுகோசுலாவியா, சோமாலியா, ஈராக், ஆப்கானிஸ்தான், சிறீலங்கா, வியட்நாம், ஈரான் , லெபனான் ஆகிய நாடுகளில் இருந்து அதிகமானவர் அகதிகளாக வந்துள்ளார்கள். 2004 ம் ஆண்டு 41 வீதமான மக்கள் ஆப்கானிஸ்தான், சேர்பியா, மொன்ரனிகோ, பொஸ்னியா, ஈராக், ரஸ்யா ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்தனர். இவ்வாறு பல அரிய தகவல்களையும் இந்த நு}ல் தொகுத்துத் தருகிறது. திரு. இ. ஜெயராஜ் அவர்கள் எடுத்த பணி மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இந்த முன்மாதிரியைப் பின்பற்றி ஒவ்வொரு நகரத்திலும் முயற்சிகள் முன்னெடுக்பப்பட வேண்டும். இது இங்குள்ள வெளிநாட்டு மக்களின் வாழ்க்கைக்கு மட்டுமல்ல சர்வதேச அரங்கில் புலம் பெயர் தமிழருக்கு ஒரு அடையாளத்தை தரும் முயற்சியுமாகும். டென்மார்க்கில் உள்ள வெளிநாட்டு மக்களில் மிகுந்த ஆர்வமும், கடின உழைப்பும் கொண்ட மக்களாக உள்ள தமிழ் மக்களே ஏனைய அகதிகளாக உள்ள உலக மாந்தருக்காகவும் போராடும் இனமாக உள்ளது மகிழ்வு தரும் செயலாகும். இந்த இலவச நூலைப் பெற விரும்புவோர் பின்வரும் இணைய முகவரியுடன் தொடர்பு கொள்க. Sujan
|