பிரதான பக்கம் arrow Karuna Antharangam arrow பொறிக்குள் விழப்போவது யார்?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2

பொறிக்குள் விழப்போவது யார்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 17 September 2006
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இருதரப்பும் சமாதானப் பேச்சுகளுக்குச் செல்வது மிகக் கடினம். ஆனால் இருதரப்பும் முழு அளவிலான யுத்தத்திற்குச் செல்வது மிகச் சுலபம். அந்தளவிற்கு நாடு இன்று யுத்தச் சூழ்நிலைக்குள் தள்ளப் பட்டுள்ளது.
ஜெனீவாப் பேச்சுகள் முறிவடைந்த பின் ஆரம்பமான மோதல்கள் பெரும் போராக வெடித்தது. போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையிலேயே வடக்கு, கிழக்கில் உக்கிர மோதல்கள் வெடித்தன. போர்நிறுத்த உடன்பாட்டை மதிப்பதாகவும் அதனை முழுமையாகக் கடைப்பிடிப்பதாகவும் கூறிக் கொண்டே இருதரப்பும் கடுமையாக மோதி வருகின்றன.

இந்த மோதலில் அரச படைகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு ஈடுகட்டுவதற்காக அப்பாவிப் பொதுமக்கள் மிக மோசமாக தாக்கப்படுகின்றனர். வடக்கு, கிழக்கில் தினமும் சராசரியாக பத்துத் தமிழர்களாவது கொல்லப்படுகின்றனர். இவ்வாறு கொல்லப்படுவோர் எவரும் மோதலில் ஈடுபடுபவர்களுமல்ல மோதலின் நடுவில் சிக்குப்படுபவர்களுமல்ல.

திட்டமிட்ட வகையில் வடக்கு, கிழக்கில் நாளுக்கு நாள் இனப் படுகொலை தீவிரமடைகிறது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலேயே இந்தப் படுகொலைகளெல்லாம் நடைபெறுகின்றன. கொல்லப்படுவோர் அனைவரும் தமிழ் இளைஞர்களே.

ஊரடங்கு உத்தரவு அமுலிலிருக்கையில் வெள்ளை வான்களில் கொண்டுவரப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை யாழ். குடாவில் மிக அதிகம். தினமும் பத்துப் பேரையாவது கொல்ல வேண்டுமென்பதற்காக யாழ்.குடாவில் கண்மூடித்தனமாக அப்பாவிகள் கொல்லப்படுகின்றனர். இந்தப் படுகொலைகளுக்கெல்லாம் காரணமானவர்கள் யாரென்பது முழு உலகமும் அறிந்த உண்மை.

இந்தச் சூழ்நிலையில் போர்நிறுத்த கண்காணிப்புக் குழு வேடிக்கை பார்க்கிறது. போரையும், கொல்லப்படுவோர் தொகையையும் கணக்கிடுகிறார்களே தவிர இந்தப் போரை நிறுத்தாவிட்டாலும் கூட அப்பாவிப் பொதுமக்களின் படுகொலைகள் குறித்தாவது வெளியுலகத்தின் கவனத்தை ஈர்க்க முற்படுவதில்லை.

இணைத் தலைமை நாடுகள் இருதரப்பையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவர முனைகிறது. இருதரப்பையும் பேச்சுகளுக்கு அழைப்பதற்காக முன் நிபந்தனை எதுவுமின்றி பேச்சை மீண்டும் ஆரம்பிக்க இரு தரப்பும் சம்மதித்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இணைத் தலைமை நாடுகளின் மாநாட்டின் பின்னரான இந்த அறிவிப்பு இலங்கை அரசை கடும் சினமடையச் செய்துள்ளது. நிபந்தனையற்ற பேச்சுகளுக்குத் தாங்கள் தயாரென யாரிடம், எப்போது கூறினோம் எனக் கேள்வி மேல் கேள்வியெழுப்புவதுடன் பேச்சுக்காக மிகக் கடும் நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

நிபந்தனையற்ற பேச்சுக்கு முதலில் இணங்கிய புலிகள் அரசின் மிகக் கடுமையான நிபந்தனையை அடுத்து போர்நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுலாக்க வேண்டுமெனக் கூறுவதன் மூலம் மறைமுகமாக நிபந்தனையொன்றை விதிக்கின்றனர்.

அண்மைக் கால சமர்களில் தாங்கள் பெரு வெற்றி பெற்றிருப்பதாகக் கருதும் அரசு, போர் நிறுத்த உடன்பாட்டைக் கடைப்பிடிக்கவோ, நோர்வே அனுசரணையாளர்களை ஏற்றுக் கொள்ளவோ அல்லது மீண்டுமொரு சமாதானப் பேச்சுகளுக்குச் செல்லவோ நாட்டம் கொள்ளவில்லை.

இந்தச் சமர்கள் மூலம் புலிகள் மிகவும் பலவீனமடைந்து விட்டார்கள் அல்லது புலிகள் மிகவும் பலவீனமடைந்திருப்பதாக உணரும் அரசும் படைத்தரப்பும் இனவாதிகளும், புலிகள் தோற்கடிக்கப்பட முடியாததொரு அமைப்பாகத் தாங்கள் கருதியது மிகவும் தவறானதெனவும் கருதுகின்றனர்.

தற்போதைய நிலையில் புலிகள் சில பின்னடைவுகளைச் சந்தித்து வருகையில், தெற்கில் ஒரு எழுச்சியை ஏற்படுத்த அரசும் இனவாதிகளும் முயல்கின்றனர். புலிகளின் இந்த நிலை தமிழ் மக்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகையில் அவர்களை மனோ ரீதியில் பயப்பீதிக்குள் ஆழ்த்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

கண்மூடித்தனமான படுகொலைகள், ஆட்கடத்தல், காணாமல் போதல், கொள்ளை, மிரட்டலென தினமும் பல்வேறு விதத்திலும் மக்கள் உள ரீதியான கடும் நெருக்குதல்களுக்குள்ளாக்கப்படுவதன் மூலம் படைத்தரப்பு புலிகளைத் தோற்கடிக்கச் செய்து வருவது போன்றும் புலிகளால் தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியாத நிலையேற்பட்டுள்ளது போன்றதொரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

முன்னைய நிழல் போரில் புலிகளே பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால், தற்போதைய இவ்வாறான உளவியல் போரில் முற்று முழுதாக அப்பாவி மக்களே பாதிக்கப்படுவதால் அதன் மூலம் புலிகள் தொடர்பான அதீத நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சிதைத்துவிடமுடியுமென சிலர் கருதுகின்றனர்.

புலிகளுடன் தற்போதைய நிலையில் பேசுவதை விட இந்த நிலைமையை வாய்ப்பாகப் பயன்படுத்தி புலிகளை மிக விரைவில் பலவீனப்படுத்துவதன் மூலம் பேச்சுவார்த்தையை இல்லாது செய்யலாம் அல்லது பேச்சுகளின் போது தமிழ்த் தரப்பிடம் தங்களது தீர்வை திணித்துவிடலாமென்றும் தென்னிலங்கை கருதுகிறது.

இவ்வாறானதொரு நிலையை மாற்றவே இணைத் தலைமை நாடுகள் மீண்டும் சமாதானப் பேச்சுகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் இது புலிகளுக்கு மிகவும் சாதகமானதெனவும் தோல்வியிலிருந்து அவர்களைத் தப்பச் செய்வதற்காக சர்வதேச சமூகம் அவர்களுக்கு பெரும் ஆதரவு வழங்குவதாகவும் அரசு கருதுகிறது.

இதனாலேயே, கள முனைகளில் ஏற்பட்ட மோசமான தோல்விகளால் முன்பெல்லாம் நிபந்தனையின்றி எப்படியாவது புலிகளுடன் பேச்சுகளுக்குத் தயாராயிருந்த அரசு, தற்போது மிகக் கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றது. அரசில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிபந்தனையை விதிக்கின்றனர். நிபந்தனையற்ற பேச்சுக்கு அரசு தயாராயிருப்பதாகக் கூறிய நோர்வே மீது அவர்கள் கடும் சினமடைந்துள்ளனர்.

ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள நிலையில் பதில் ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்கும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டால் மட்டுமே பேச்சென்கிறார்.

இருதரப்பும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதற்கு முன்னர், அனைத்துக் கொலைகளையும் நிறுத்துவோமென புலிகளின் தலைவர் எழுத்து மூல உத்தரவாதமளிப்பதுடன் அதன் பின்னர் அவர்கள் ஒரு துப்பாக்கி வேட்டை தீர்த்தாலும் கூட அரசு போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகிவிடுமென அரச பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நோர்வேயிடம் கடும் நிபந்தனை விதித்துள்ளார்.

புலிகள் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட வேண்டுமென இவர் கூறுகையில், பேச்சுவார்த்தை நடைபெறுமானால் அக்காலப் பகுதியில் இராணுவ நடவடிக்கைகள் தொடருமென இராணுவத் தளபதி கூறுகிறார்.

பாதுகாப்புத் துறைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெலவும் தனது பாட்டிற்கு சிலவற்றைக் கூறுவதன் மூலம் விழுந்த மாட்டுக்கு எப்படியெல்லாம் குறிசுட முடியுமோ அப்படியெல்லாம் நிபந்தனைகளை விதிக்க முற்படுகின்றனர்.

தற்போதைய நிலையில் சர்வதேச சமூகம் ஏற்படுத்தியுள்ள பேச்சுக்கான வாய்ப்பை, சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அரசு பயன்படுத்துவதை விட போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகி விடுவதற்கு வாய்ப்பானதாக்க முயல்கிறது.புலிகள் தோற்றுப் போய்க் கொண்டிருப்பதாக அரசும் படைத் தரப்பும் கருதுவதால் பேச்சுக்காக மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்து விட்டு அதைப் புலிகள் நிறைவேற்றாது போனதும் போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகி விட அதனை வாய்ப்பாகப் பயன்படுத்த அரசு முயல்கிறது. இதன் மூலம் புலிகளைப் பொறியில் சிக்க வைக்க அரசு முயல்கிறது.

ஆனால், புலிகளோ இலங்கை அரசை பொறிக்குள் சிக்க வைத்து சர்வதேச சமூகத்தின் முன் அரசை அம்பலப்படுத்தி அதன் மூலம், இந்தப் போருக்கான முழுப் பழியையும் அரசின் மீது சர்வதேச சமூகம் சுமத்தும் போது படையினருக்கெதிராக மிகக் கடும் தாக்குதலைத் தொடுக்கத் திட்டமிடுவதாகக் கருதப்படுகிறது.

முன்னர், நிபந்தனையின்றி புலிகளுடன் எப்படியாவது பேசத் தயாராயிருந்த அரசு தற்போது மிகக் கடுமையான நிபந்தனைகளை விதிப்பதால் நிபந்தனையின்றி பேச்சுகளை ஆரம்பிக்க இருதரப்பும் தயாராயுள்ளதாக இணைத் தலைமை நாடுகள் தெரிவித்த கருத்தை உதாசீனப்படுத்துவதன் மூலம் இலங்கை அரசு இப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வைக் காண விரும்பவில்லை, இராணுவத் தீர்வொன்றுக்கே முனைகிறது என்பதை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தலாம்.

புலிகளால் ஏற்றுக் கொள்ள முடியாத நிபந்தனைகளை விதித்துவிட்டு புலிகள் அதனை மீறும் போது போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து அரசு விலகுவதன் மூலம் போர் நிறுத்த உடன்பாட்டை அரசே முறித்துக் கொண்டதாக காண்பிக்க முடியும்.போர்நிறுத்த உடன்பாடு முறிந்து பெரும் போர் வெடிக்கும் பட்சத்தில் மிகக் கடுமையான பதிலடி கொடுத்து படைத்தரப்புக்குப் பேரழிவுகளை ஏற்படுத்துவதன் மூலம் ,ஏற்படப் போகும் பேரழிவுகளுக்கெல்லாம் அரசும் படைத்தரப்புமே காரணமாயிருந்தனவென்பதை நிரூபிக்கலாம்.

ஆனாலும் புலிகள் என்றுமே பலவீனமானதொரு நிலையில் பேச்சுவார்த்தைக்குச் சென்றதில்லை. எப்போதுமே அவர்கள் பலம் பொருந்திய நிலையிலிருந்து கொண்டே தங்கள் பேரம் பேசும் பலத்தை அதிகரித்து பேச்சுகளில் கலந்து கொண்டதே முன்னைய வரலாறுகளாகும். போர்நிறுத்த காலத்தில் உடன்படிக்கையை மீறி நடைபெற்ற சமர்கள் மூலமும் சில வெளிநாடுகளிலிருந்து பெருமளவில் போர்த் தளபாடங்களை வரவழைத்து குவித்து விட்டும், ஆயுதபலத்தை மட்டுமே நம்பி இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக மார் தட்டுவதன் மூலம் அரசு எதனையும் சாதித்துவிட முடியாது.

முழு அளவில் போரொன்று வெடிக்கும் போதே போரிடுவோரின் ஆற்றலைக் கணிப்பிட முடியும். நிழல் யுத்தத்தையும் உளவியல் போரையும் நடத்திக் கொண்டு கடும் சமரைத் தொடுத்ததன் மூலம், பெரும் போருக்கு முன்பே வெற்றி பெற்று விட்டதாக அரசு நினைக்குமானால் அது அவர்களது தவறான கணிப்பாகும்.

சமாதானப் பேச்சே வேண்டாம் போரைத் தொடருங்களென அரசுக்கு இனவாதிகள் கடும் அழுத்தம் கொடுக்கின்றனர். பேச்சுவார்த்தைக்கு இருதரப்பும் தயாராயுள்ளதாக இணைத் தலைமை நாடுகளின் மாநாட்டு முடிவில் அறிவிக்கப்பட்ட மறுநாளே, ஜனாதிபதியை நேரில் சந்தித்த ஜே.வி.பி., பேச்சுவார்த்தைக்கு மிகக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் யுத்தத்தை முழு அளவில் தொடங்குமாறு வற்புறுத்தியது.

ஆனால், இணைத் தலைமை நாடுகள் வெளியிட்ட அறிக்கையின் 12 முக்கிய அம்சங்களில் அனைத்தும் அரசுக்கும் படைத்தரப்புக்கும் கடும் அழுத்தங்களை கொடுப்பவை என்பதை அரசு உணர வேண்டும். அதனை அவர்கள் மீறினால் முழுமையாக சர்வதேச சமூகத்தின் உதவி கிட்டாது போய்விடும்.

தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் அரசு, முழு அளவிலான போருக்குச் செல்வதன் மூலம் சர்வதேச நிதியுதவியை இழக்கும் அதேநேரம், போரில் எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டால் என்ன செய்யுமென்பதே மிகப் பெரும் கேள்வியாகும். 

விதுரன்
Comments (2) >>

Kannan said:

 
அருமையான கட்டுரை.. பிரசு ரித்தமைக்கு நன்றி.
September 17, 2006

ranjan said:

 
sri lanka has one option which is war because they (slg)think the ltte is weak so they could evev capture elephant pass so that there will be a big danger for vanni.
September 17, 2006
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..