|
குடாநாட்டில் இன்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்கள் எதுவும் சேவையிலீடுபடவில்லை. எரிபொருள் முற்றாக முடிவடைந்துவிட்டதாலேயே நேற்றுமுன்தினம் முதல் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்கள் எவையும் சேவையிலீடுபடவில்லை.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ் மாவட்ட டிப்போக்களுக்கான
எரிபொருட்களை வழங்குவது சம்பந்தமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக
போக்குவரத்து அமைச்சர் மற்றும் அரச அதிபர் உறுதியளித்தபோதும் இன்;றுவரை
அதுதொடர்பான எவ்வித செயற்பாடுகளும் செய்யப்பட்டதாக தமக்கு
அறிவிக்கப்படவில்லை என வடபிராந்திய போக்குவரத்துச் சபை உதவிப் பொது
முகாமையாளர் கே.கணேசபிள்ளை தெரிவித்தார்.
இந்த நிலையில் யாழ் குடாநாட்டுக்கான போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் முற்றுமுழுதாக செயலிழந்துள்ளதாகவும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்- பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 24லட்சம் ரூபா
நிலுவைப் பணம் வழங்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக போக்குவரத்து அமைச்சர்
அரச அதிபர் இலங்கைப்போக்குவரத்து சபை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்
பட்டுள்ளது.
குடாநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக போக்குவரத்துச்சேவையை
மேற்கொள்ள முடியாதுள்ளது.
இந்நிலையில் எரிபொருளைப்பெற்று பஸ் சேவைகளை
நடத்தினாலும் பயணம் செய்யும் மக்கள் தொகை குறைவடைந்துள்ளதால் உரியவருமானம்
கிடைப்பதில்லை.
இத்தகைய நிதி நிலையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்திலுள்ள டிப்போக்களின்
ஊழியர்களுக்கான கடந்தமாத சம்பளம்கூட வழங்கப் படவில்லை. சம்பள முற்பணமாக
குறைந்த தொகையே வழங்கப் பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சேவையிலீடுபடும் போக்குவரத்துச் சபை பஸ்களுக்கு தினமும்
1050 முதல் 1200லீற்றர் டீசல் தேவை. தற்போது அதனைப் பெறமுடியாதுள்ளது என
தெரிவித்தார்.
யாழ் மத்திய பஸ்நிலையத்திலிருந்து மாலை 4மணிக்கு சகல பாதைகளுக்கும்
கடைசிபஸ் சேவை நடைபெறும எனவும் போதியளவு டீசல் கிடைக்கும் பட்சத்தில்
சேவையை முழுமையாக ஆரம்பிக்கமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
|