|
ஊடகச்சமரில் புறமுதுகு காட்டக்கூடாது |
|
|
|
Tuesday, 19 September 2006 |
 தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பதற்றமான கருத்துநிலையொன்று நிலவி வருகிறது. போராட்டச் சார்பு நிலை ஊடகங்களின், கள நிலவரங்களை பரப்புரைச் செய்தியாக்கும் தன்மையாலும் எதிர்நிலையில் உள்ள இணையத்தளங்களின் மலிவுச் செய்திகளாலும் மக்கள் அதிகமாகவே குழப்பமடைந்துள்ளனர்.
போராட்டச் சார்புநிலை பரப்புரைகளில் சமீப காலமாக தோன்றியிருக்கும் மந்த
நிலையும், அதனுள் உள்ள உள்ளார்ந்த அரசியல் பரிமாணங்களை புரிந்து கொள்ளாத
சமகால ஆய்வுகளும் பரவிக்கிடக்கின்றன.
செய்தித் தொகுப்புக்களை ஆய்வுகளாக முன்வைப்பதும், இராணுவ நகர்வுகளை
சினிமாப் பாணியில் சித்தரிப்பதும் வாசகர் மனங்களில் மர்ம நாவல் படிப்பது
போன்றதொரு பிரேமையையும் அடுத்து என்ன நடக்கும் என்ற திகிலூட்டலையும்
ஏற்படுத்திவிடுகிறது.
விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளராக இராசையா இளந்திரையன்
இருந்தாலும், அடிப்படையில் அரசியல் சார் துறையில் நீண்டகால அனுபவம்
பெற்றிருப்பதனால் இராணுவ நகர்வுகளை வெளிப்படுத்துகையில் அதில் அரசியல்
பரிமாணங்கள் மேவி நிற்கின்றன.
வலிந்து தாக்குதல், தற்காப்புத் தாக்குதல் போன்ற சொல்லாடல்கள்,
அறிக்கைகளின் அரசியல் அளவுப் பரிமாணம் சிதைவுறாமலும் தாக்குதல்
பின்னணியின் தந்திரோபாய அரசியல் கருத்துநிலை இணைந்தும்
பிரயோகிக்கப்படுகின்றன.
பொதுவாக வெற்றிச் செய்திகளில் மக்களின் மிதப்பு நிலை உணர்வுகள்
தூண்டப்படுகின்றன. தந்திரோபாய இராணுவ பின்னகர்வுச் செய்திகளில் அது
குறித்த அரசியல் தந்திரங்கள் கோடிட்டுக் காட்டப்படாவிட்டால் தடுமாற்றம்
ஏற்படும்.
அரசியல், இராணுவ மூலோபாய உத்திகளை விடுதலைப் புலிகள் வெளிப்படையாகக்
கூறிவிட முடியாது. ஏனெனில் எதிரியின் அடுத்த நகர்விற்கான அடித்தளமாகவும்
அது அமைந்துவிடும். இருப்பினும் போராட்டச் சார்பு கருத்து நிலைவாதிகள்,
நடக்கும் நிகழ்வுகள் தொடர்பான தமது அரசியல் துணிபுகளை தெளிவாகவும்
திடமாகவும் முன்வைக்க வேண்டும்.
தமது ஆய்வுத் துணிபுகள் அடுத்து வரும் இராணுவ அரசியல் மாறுதல்களினால்
தவறாகப் போய்விடலாமென்று தயக்கமுற்று அதனை வேண்டுமென்றே தவிர்க்கக் கூடாது.
ஆரம்ப கால கட்டத்தில், விடுதலைப் புலிகளை ஒரு இராணுவக் குழுவாக
சித்தரித்தவர்கள், தற்போது அதன் அரசியல் படிமுறை வளர்ச்சியினைக் கண்டு
திகைப்படைந்துள்ளனர். இடைக்காலத் தன்னாட்சி கோரிக்கைகளுள்
மூழ்கிவிடுவார்கள் என்றும் தனிஈழம் கேட்டவர்கள் சமஸ்டிக்குள் புதைந்து
விடுவார்கள் என்றும் குறி சொன்னவர்கள் தற்போது தமிழ் மக்களின் ஜனநாயக
உரிமை பற்றி பேசுகின்றனர்.
இவர்களின் பரப்புரைகளை எதிர்கொண்டு காத்திரமான ஆய்வுகளை மேற்கொள்வது
மக்களை அரசியல் மயப்படுத்தும் முன்னகர்வுகளுக்கு இட்டுச் செல்லும்.
விடுதலைப் புலிகளின் தாக்குதலொன்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால்
தற்காலிக விரக்திநிலையானது மக்கள் மனங்களிலிருந்து நீங்கும் என்றும் அந்த
வெற்றிச் செய்திக்கான களப்பின்னணியை ஆய்வு செய்வதிலேயே சிலர்
புளகாங்கிதமடைகின்றனர்.
அரச படைத்துறைப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெலவின் ஊடகவியலாளர்களுடனான
சந்திப்புக்களில் அவரால் வெளியிடப்படும் கருத்து நிலை கோணல்களை
முன்னிலைப்படுத்தி அரசின் இன மேலாதிக்க சிந்தனைகளை உடனடியாக அம்பலப்படுத்த
வேண்டும்.
எனினும் ஊடகச் சமரில் அரசின் கை மேலோங்கியுள்ளது. சிறு வெற்றியை
மையப்படுத்தி சோடிக்கப்படும் போலிப் பரப்புரைகளின் வீச்செல்லை
அதிகரிப்பதனையும் உணர வேண்டும்.
அண்மையில் உருவாக்கப்பட்ட சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியமானது தனது
பங்களிப்பினை ஆரோக்கியமாகவும் திடமாகவும் மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.
புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மக்கள் எழுச்சி ஒன்றுகூடல்களுக்கு,
அந்தந்த நாடுகளில் உள்ள ஊடகவியலாளர்களை அழைத்துப் பங்கேற்க வைக்கும்
கடப்பாடும் இவர்களுக்கு உண்டு.
சர்வதேச "லொபி" என்பது மக்களை நேரடியாக அணுகுவது என்ற வட்டத்திற்குள்
மட்டுப்படுத்தப்படக்கூடாது. அதற்கும் மேலாக வாசிப்பு, ஒளி
ஊடகங்களினூடாகவும் இத்தகைய பிரச்சாரங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்.
ஏனெனில் மேற்குலக ஊடகங்கள், அரசின் பிரச்சார அறிக்கைகளை முதன்மைப்படுத்தி
விடுதலைப் புலிகளின் படை வலுச்சமநிலை சீர்குலைக்கப்பட்டுள்ளது போன்றதொரு
தோற்றப்பாட்டினை உருவாக்குகின்றது.
உதாரணமாக 61 சிறார்களின் படுகொலைக்கு அளிக்கப்பட்ட பிரச்சார
முக்கியத்துவமானது 17 பிரெஞ்சு நிறுவனப் பணியாளர்களின் கொலைக்கு
வழங்கப்பட்வில்லை. இப்பட்டினிக்கெதிரான தொண்டர் அமைப்பினரின் மீது அரசு
கட்டவிழ்த்துவிட்ட இனவெறி அழிப்பு ஐரோப்பியர்களை
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது மனித உரிமை மீறல்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, புலிகளை
பலவீனமான அமைப்பாகச் சித்தரிக்க முனைவதையும் அவதானத்தில் கொள்ளல் வேண்டும்.
ஆடு நனைவதற்கு ஓநாய் கவலை கொள்வது போன்று சிறுவர் படை சேர்ப்புப்
பற்றியதாக கவலைப்படும் சிறிலங்கா அரசின் வேடத்தை வெளிப்படுத்த பாலியல்
தொழிலில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்களின் நிலை குறித்த புள்ளி விவரங்களோடு
சர்வதேசத்தின் முன் எமது தரப்பு எதிர்வினை விளக்கங்களைக் கூறலாம்.
விமர்சனம் என்பது ஒரு கருத்துநிலை என்பதற்கும் அப்பால் அதற்கு ஒரு சமூக
நோக்கும் மக்கள் வயப்பட்ட சிந்தனையும் இருக்க வேண்டும். இயங்கியல்
வரலாற்றுப் போக்கினைத் துல்லியமாக எடைபோடும் விஞ்ஞானப்பூர்வமான
அணுகுமுறையும் வேண்டும். எமது வேரோடு இணைந்திருக்கும் முற்போக்கான சமூக
விழுமியங்களை முன்னிலைப்படுத்தும் உணர்ச்சி மேலீட்டுத் தளமற்ற சிந்தனையின்
எமது சமூகப் பார்வையாக அமைந்தால் சிந்தனை வறட்சியற்ற ஆரோக்கிய சமுதாயத்தை
எமது எழுத்து உருவாக்கும்.
போராட்ட களத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய பரிமாண வளர்ச்சிப்
போக்கு புலத்திலும் தோற்றம் பெறுதல் தற்போது மிகவும் அவசியமாக உள்ளது.
இங்கு நடைபெறும் நிகழ்வுகள் வரலாறாகும். அதில் என் முகம் தெரியும், குரல்
ஒலிக்கும் என்கிற சுயதிருப்திக்கும் அப்பால் உருவாகும் புதிய வரலாற்றில்
அதன் முற்போக்கான ஆளுமை உருவாக்கத்தின் ஊக்கிகளில் நானுமொருவன் என்பதே
பெருமை தரும்.
ஊடகமென்பது பரப்புரைச் சாதனமாக வேண்டும்.
ஊடகமென்பது பரபரப்புரைச் சாதனமாக மாறக்கூடாது.
|